Tamil Bayan Points

நீதியே! உன் விலை என்ன?

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on January 29, 2020 by

நீதியே! உன் விலை என்ன?

இந்தியாவில் மட்டும் நீதிமன்றம் என்பதை ‘கூட்டுமனசாட்சி மன்றம்’ என்றோ ‘நம்பிக்கைமன்றம்’ என்றோ பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என சொல்லத்தக்க வகையில், நீதியை நிலை நாட்ட வேண்டிய மன்றங்கள் அனைத்தும் ஏதோவொரு சாராருக்கு சார்பு நிலை எடுக்கின்ற அவல நிலையை மேற்கொள்கின்றன.

சான்றுகளுடனும் ஆதாரங்களுடனும் நிறுவப்பட வேண்டிய நீதியானது, பெரும் பான்மையினரின் விருப்பம், கூட்டு மனசாட்சி, குறிப்பிட்ட சாராரின் நம்பிக்கை எனும் குறுகிய வட்டத்திற்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகி வருகின்றது.

அப்சல் குரு, யாகூப் மேமன் போன்றோருக்கு எதிராக எவ்வாறு இந்த நீதி தன் விகார முகத்தை காட்டியது என்பதை நாம் அறிவோம். ஓர் ஜனநாயக தேசத்தில், சட்டங்களும் நீதிமன்றங்களும் பெரும்பான்மையினருக்கான ஒன்றல்ல. பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் பாதிக்கப்படும் போது பாதிக்கப்பட்ட இடங்களில் இருப்போரை காக்கவே சட்டங்கள் அனைத்தும். சான்றுகளை முன் வைக்காமல், ஆவணங்கள் எதனையும் சமர்ப்பிக்காமல், தமக்கிருக்கும் ஆதிக்க சக்தி எனும் பின்புலத்தை பயன்படுத்தி சிறுபான்மை யினரை ஒருவர் நசுக்கு கின்ற போது, பெரும்பான்மை யினரின் நம்பிக்கை அது தானே? என அவர்களை திருப்திப் படுத்தும் போக்கினை கையாள்வதற்கு ஒரு நீதிமன்றமோ சட்டமோ அவசியமில்லை.

காரணம், அவைகள் இல்லாதிருந்தாலும், அந்த முடிவு தான் அங்கே எட்டப்படும். அப்படியானால், எவரையும் திருப்திப்படுத்தும் நோக்கத்தை கொள்ளாது, சமர்ப்பிக்கப் படுகின்ற சான்றுகளின் படித்தரங்களில் நின்று நீதியை நிலை நாட்டுவது தான் நீதிமன்றங்களின் ஒரே இலக்காக இருக்க வேண்டும். இதனை பறைசாட்டும் முகமாக தான் ஒவ்வொரு நீதிமன்ற அவைகளிலும், துணியினால் கண்கள் கட்டப்பட்ட ‘நீதி தேவதை’ நிறுத்தப்படுகிறாள்..!

ஆனால், சிலைக்கு கண்கள் கட்டப்பட்டிருந்தால் என்ன, திறந்திருந்தால் தான் என்ன, இந்தியாவில், தீர்ப்பு வழங்கும் நீதியரசர்களின் கண்கள் எப்போதும் “திறந்தே” தான் இருக்கின்றன..! இந்தியாவில், சட்டங்களும் நீதித் துறைகளும் காவிமயமாகி விட்டதை சமீபத்திய பல நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.

அரசாங்கத்தின் மெத்தனப் போக்கை எவரேனும் கண்டித்துப் பேசி விட்டால் அவர் மீது அவசரகதியில் வழக்குப்பதிவு செய்கின்ற சட்டமானது, தேசத்தின் இறையாண்மைக்கே எதிரான கருத்துக்களை பெரும்பான்மை இனத்தவர்கள் உதிர்க்கின்ற போது அதற்கு மௌன சாட்சியாக இருந்து கொள்கிறது. காந்தியை கொலை செய்தது சரி தான், தாமதமாக கோட்சே அதனை செய்து விட்டார் என்று ஒரு பார்ப்பன பெண் பேசியிருக்கிறார். அவர் மீது எவ்வித வழக்கும் இல்லை.

கோட்சே தேசபக்தராக இன்று பலரால் சித்தரிக்கப் பட்டும் அதற்கெதிராக எவ்வித நடவடிக்கையும் இல்லை. சமீபத்தில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அடித்த தீட்சிதர் தர்ஷன் இதுவரை கைது செய்யப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகை காயத்ரி ரகுராம் கைது செய்யப்படவில்லை.

சற்று பின்னோக்கி சென்றால், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி எனும் பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அடிப்படையுமின்றி முஸ்லிம்கள் மீது அவதூறு பேசிய சினிமா நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கைது செய்யப்படவில்லை. பெண் பத்திரிக்கை யாளர்களை கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆண்மையற்றவர் என்று சொன்ன துக்ளக் ஆசியர் குருமூர்த்தி மீது எவ்வித வழக்கும் பதியப்படவில்லை.

ஹைகோர்ட்டாவது மயிராவது என்று பேசி இந்தியாவின் நீதித் துறையையே இழிவு செய்த ஹெச்.ராஜா மீது எவ்வித வழக்கும் இல்லை. ஏன்? ஏனென்றால் இவர்கள் அனைவரும் பாஜக மற்றும் சங்பரிவார கூட்டத்தாரோடு தொடர்பு கொண்ட பார்ப்பன சமுதாயத்தை சேர்ந்தவர்கள்..!  இதே பாஜக, ஆர்.எஸ். எஸ்-சுடன் தொடர்புடைய பார்ப்பனரல்லாத கல்யாண ராமன்களையெல்லாம் மிக எளிதாக கைது செய்ய இயன்ற அரசு இயந்திரத்திற்கு, ஒரு பார்ப்பன சமுதாயத்தை சேர்ந்தவரை கைது செய்ய இயலாமல் போவது எதை குறிக்கிறது?

இந்தியாவும் அதன் நீதித் துறைகளும் யாருக்கானது? இந்த உண்மைகளை வெகுஜன மக்களான நாம் உணர்ந்து கொள்வது ஒரு பக்கமிருக்க, இவர்களால் பாதிக்கப்படுவது ஹிந்து மதத்தை சார்ந்த பார்ப்பனரல்லாத மக்களும் கூட தான் எனும் உண்மையை சமூகம் என்றைக்கு உணரப் போகிறதோ.

Sourece: unarvu (29/11/2019)