Tamil Bayan Points

5) நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா?

நூல்கள்: சுப்ஹான மவ்லித் ஓர் ஆய்வு

Last Updated on December 17, 2019 by Trichy Farook

நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா?

اَلسَّلاَمُ عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

‘நோய் நீக்குபவரே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்’

وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا

لَدَيْهِ بُرْءُ السَّقَامِ
‘நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் அவரிடமே (நபியிடமே உள்ளது’

وَمَرِيْضًا اَنْتَ عَائِدُهُ

قَدْ اَتَاهُ اللّهُ بِالْفَرَجِ

‘(நபியே நீங்கள் எந்த நோயாளியை விசாரிக்கச் சென்றாலும் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் வழங்கி விடுவான்!’ என்றெல்லாம் ஸுப்ஹான மவ்லிதில் கூறப்பட்டுள்ளது.

மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்துபவனும், அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இதில் நபிமார்கள் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்கான சான்றுகளை ஏராளமாக நாம் காணலாம்.

இப்ராஹீம் (அலை அவர்கள் மிகச் சிறந்த இறைத்தூதராவார்கள். திருக்குர்ஆனில் அவர்களைப் பல இடங்களில் இறைவன் புகழ்ந்து பேசுகிறான். அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுவதிலிருந்து அவர்களின் மதிப்பு எத்தகையது என்று நாம் உணர முடியும்.

இப்ராஹீம் (அலை அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த போது இறைவனின் இலக்கணத்தைப் பின்வருமாறு விளக்கினார்கள்.

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.

(அல்குர்ஆன் 26 :80)

நோய்களை நீக்கும் அதிகாரம் இறைவனுக்குரியது என இப்ராஹீம் (அலை அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

அய்யூப் நபியவர்கள் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட போது தமது நோயை தாமே நீக்கிக் கொள்ளவில்லை. மாறாக இறைவனிடம் தான் அவர்கள் முறையிட்டனர். இறைவன் விரும்பிய போது அவர்களின் நோயைக் குணமாக்கினான்.

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

(அல்குர்ஆன் 21:83)

துன்பங்களையும், நோய்களையும் நீக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கும் இல்லை. அது இறைவனின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 6:17)

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்

(அல்குர்ஆன் 10:49)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 10:107)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 39:38)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல போர்களைச் சந்தித்தார்கள். எதிரிகளைச் சந்திக்க வேண்டிய இந்த இக்கட்டான நேரத்தில் பல நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டுப் போரில் பங்கெடுக்க முடியாத நிலையில் இருந்தார்கள். நபியவர்களுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் இருந்திருந்தால் இந்த நெருக்கடியான நேரத்தில் நோயுற்ற நபித்தோழர்களுக்கு நிவாரணம் அளித்திருப்பார்கள். அவர்களையும் போரில் பங்கெடுக்கச் செய்திருப்பார்கள். படை வீரர்கள் பற்றாக்குறையாக இருந்த இந்தக் கட்டத்தில் கூட அவ்வாறு செய்யவில்லை என்பதைப் பல ஹதீஸ்களிலிருந்து நாம் அறியலாம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தோம். அப்போது அவர்கள், ‘நிச்சயமாக மதீனாவில் சில மக்கள் உள்ளனர். நீங்கள் சம தரையையோ, பள்ளத்தாக்கையோ கடந்து சென்றால் அவர்களும் (கூலி பெறுவதில் உங்களுடன் உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களைத் தடுத்து விட்டது’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி நூல்: புகாரி 2839, 4423

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நோய்களுக்கு ஆளானதுண்டு. நோயிலிருந்து தாமே அவர்கள் நிவாரணம் பெற்றதில்லை. நோய் நீக்கும் ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்களே நோய்க்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது அவர்களிடம் சென்றேன். ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளீர்களா’ என்று கூறினேன். அதற்கவர்கள் ‘ஆம் உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் அளவுக்கு எனக்கு ஏற்பட்டுள்ளது’ என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி நூல்: புகாரி 5648, 5660, 5667

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும் நோய் வாய்ப்பட்டனர். அவர்களில் யாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நோய் நிவாரணம் தேடவில்லை. நான் குணப்படுத்துகிறேன் என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. இறைவன் மட்டுமே நோய் தீர்க்கும் அதிகாரம் படைத்தவன் என்பதை அவர்கள் அப்போது கூறிய வார்த்தை ஐயமற விளக்குகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்றனர். தமது வலது கரத்தால் தடவிவிட்டு (அல்லாஹும்ம ரப்பன்னாஸ் அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபி அன்தஷ்ஷாஃபி, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபா அன் லா யுகாதிரு ஸகமன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி நூல்: புகாரி 5675, 5742, 5743, 5750

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள்:

‘இறைவா! மனிதர்களின் இரட்சகனே! இந்நோயை நீக்குவாயாக! நீ நிவாரணம் அளிப்பாயாக! நீயே நிவாரணம் அளிப்பவன்! உனது நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் ஏதுமில்லை. நோயை விட்டு வைக்காத வகையில் நிவாரணம் வழங்கு!’

நோய் தீர்ப்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுத்தம் திருத்தமாக இதன் மூலம் அறிவித்து விட்டனர்.

ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி அவர்களை நோய் விசாரிக்கச் சென்ற போது ‘இறைவா! ஸஃதுக்கு நோய் நிவாரணம் வழங்கு’ என்றே மும்முறை பிரார்த்தனை செய்தார்கள். இதை ஸஃது அவர்களே தெரிவிக்கிறார்கள். நூல்: புகாரி 5659

அல்லாஹ் ஒருவன் மட்டுமே நோய்களை நீக்கக் கூடியவன் என்பதையே அவர்கள் மக்களுக்குப் போதனை செய்தார்கள். அல்லாஹ் அனுமதிக்கும் போது மிக மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் அற்புதம் என்ற அடிப்படையில் அல்லாஹ்விடமே கோரி நிவாரணம் பெற்றுத் தந்துள்ளனர்.

அல்லாஹ் அனுமதிக்காத பல நூறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். தாமே நோய் தீர்க்க வல்லவர் என்று சொன்னதே இல்லை.

அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நேரில் சந்தித்து நோய் விலகிட இறைவனிடம் துஆச் செய்யுமாறு பல நபித்தோழர்கள் கேட்டதுண்டு. ஆனால் நீங்களே குணப்படுத்துங்கள் என்று கேட்டதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு மகள், தமது மகன் மரணத்தை நெருங்கிவிட்டதாகவும் உடனே வரவேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லியனுப்பினார்… நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அக்குழந்தை கொடுக்கப்பட்டது. அக்குழந்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மடியில் கிடத்தினார்கள். அதன் உயிர் மூச்சு தடுமாறியது. இதைக் கண்டு அவர்களின் கண்கள் கண்ணீர் சொரிந்தன. நூல்: புகாரி 1248

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்ட போது கண்ணீர் தான் விட முடிந்தது. நோயைத் நீக்க முடியவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணாக அமைந்த இந்த மவ்லிதைப் பாடுவது நன்மை தருமா? பாவத்தில் தள்ளுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்!