Tamil Bayan Points

19) பதிவுத் திருமணம்

நூல்கள்: நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

Last Updated on March 5, 2022 by

இந்தியாவில் நடைமுறையிலுள்ள பதிவுத் திருமணச் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் பதிவுத் திருமணம் செய்யலாகாது.

முஸ்லிம் தனியார் சட்ட’ப்படி முஸ்லிம்களுக்குத் தனித் திருமணச் சட்டங்கள் இந்த நாட்டில் உள்ளன. தலாக், மஹர், வாரிசுரிமை, பலதார மணம் போன்ற பல விஷயங்கள் இவற்றில் அடங்கும். இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தால் மட்டுமே இந்த உரிமைகளை முஸ்லிம்கள் பெற முடியும்.

முஸ்லிம்களேயானாலும் அவர்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் இந்த விஷயத்தில் பொது சிவில் சட்டத்தின் கீழ் அவர்கள் வந்து விடுவார்கள். மேற்கண்ட உரிமைகளைப் பெற முடியாது.

அதாவது பதிவுத் திருமணம் செய்பவர் தனக்கு முஸ்லிம் தனியார் சட்டம் தேவையில்லை என்று வாக்கு மூலம் தருகிறார். நேரடியாக இப்படி அவர் கூறாவிட்டாலும் அதன் விளைவு இது தான். எனவே பதிவுத் திருமணம் என்ற மாய வலையில் முஸ்லிம்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது.

முஸ்லிம் தனியார் சட்டத்திற்கெதிராக கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயமாகிறது.

மேலும் இஸ்லாமியத் திருமணம் பெண்ணின் பரிபூரண சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் செய்து வைக்க வேண்டும். பொறுப்பாளர் இன்றி தானாக ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள முடியாது.

பதிவுத் திருமணம் என்பது ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கெள்வதை நிபந்தனையாக்குகின்றது. அவளது தந்தையே அந்த இடத்தில் இருந்தாலும் அவர் சாட்சியாக மட்டும் தான் கருதப்படுவாரேயன்றி திருமணத்தை நடத்தி வைப்பராக ஆக முடியாது. இதுவும் பதிவுத் திருமணம் கூடாது என்பதற்கான மற்றொரு காரணம்.