Tamil Bayan Points

பள்ளிவாசலில் உறங்கலாமா?

கேள்வி-பதில்: மற்ற கேள்விகள்

Last Updated on February 11, 2022 by Trichy Farook

பள்ளிவாசலில் உறங்கலாமா? குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும்.

பள்ளியில் உறங்குவது தவறான காரியமல்ல. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளியில் உறங்கியுள்ளனர். இதை நபியவர்கள் தடை செய்யவில்லை.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

மணமாகாத, குடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்த போது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் (தங்கி) நான் உறங்கிக் கொண்டிருந்தேன்.

நூல்: புகாரி-440 

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வியர் ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்த போது (மருமகனான) அலீ (ரலி) அவர்கள் வீட்டில் காணவில்லை. ஆகவே, “உன் (தந்தையின்) பெரிய தந்தையின் புதல்வர் எங்கே?” என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “எனக்கும் அவருக்கும் இடையே சிறிய  மனஸ்தாபம் ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக்கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டிலிருந்து) சென்றுவிட்டார் (அவர் பள்ளிவாசலுக்குள் இருக்கலாம்)” என்று கூறினார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “அவர் எங்கே என்று பாருங்கள்” என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, “அவர் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்தபோது அவருடைய மேலங்கி அவரது முதுகிலிருந்து (தரையில்) விழுந்து விட்டிருக்க அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப் படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே “எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!!” என்று கூறலானார்கள்.

நூல்: புகாரி-441 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினர்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். (பள்ளியில் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர்.

நூல்: புகாரி-571