Tamil Bayan Points

பாபர் மஸ்ஜித் சர்ச்சை: கடந்து வந்த பாதை

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on December 31, 2019 by

பாபர் மஸ்ஜித் சர்ச்சை: கடந்து வந்த பாதை

கவர்னர் இப்ராஹிம் லோதியின் மேற்பார்வையில் முகலாய மன்னர் பாபர், உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் பாபர் மசூதியை கடந்த 1526 ஆம் ஆண்டு கட்டினார்.

1949

மசூதியின் உள்ளே, ராமர், சீதை சிலைகள் இரவோடு இரவாக வைக்கப்பட, பிரச்சனை ஆரம்பமாகிறது. சிலைகள் தானாக உருவாகி விட்டன, தமது ஜென்மஸ்தானத்தில் ராமர் அவதரித்து விட்டார் என்பதாக புரளிகள் கிளப்பப்பட, மதக் கலவரத்திற்கான முதல் வித்து அங்கே தூவப்படுகிறது. பள்ளிவாசல் பூட்டப்படுகிறது..! சிலைகளை உடனடியாக அப்புறப்படுத்தும் ப டி ஜவஹர்லால் நேரு உத்தரவிடுகிறார். இருப்பினும், அப்போதைய உள்ளூர் அதிகாரியாக இருந்த கே.கே. நாயர், சிலைகளை அப்புறப்படுத்தினால் மதக்கலவரம் வெடிக்கும் என காரணம் கூறி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

1950

ராமர் சிலைகள் இருக்கும் அந்த பள்ளிவாசலில் ஹிந்து மத வழிபாடுகளை நடத்த அனுமதி கோரி கோபால் சிம்லா விஷாரத் என்பவர் மனு ஒன்றினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அதே போல், பரமஹன்சா ராமசந்திரா என்பவரும், சிலை வழிபாட்டிற்காக அனுமதி கோரி மனுதாக்கல் செய்கிறார். அனுமதி வழங்கப் படுகிறது..!

1959

நிர்மோஹி அகாரா எனும் ஹிந்து அமைப்பு பாபர் மசூதி அமைந்திருக்கும் நிலத்திற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் முதன்முதலாக வழக்கு தொடுக்கிறது.

1961

மத்திய சுன்னி வக்ஃப் போர்ட், பாபர் மசூதியின் உள்ளே சிலைகள் வைக்கப்பட்டதை கண்டித்தும், அந்த நிலத்திற்கான உண்மையான உரிமையாளர்கள் தாங்கள் தான் எனவும் மனு ஒன்றினை தாக்கல் செய்கின்றனர்.

1984

பாரதிய ஜனதாவை சார்ந்த அத்வானி, விஷ்வ ஹிந்து பரிஷத் கட்சியினருடன் இணைந்து, ராமர் கோவில் கட்ட ரத யாத்திரை மேற்கொள்கிறார்.

1986

ஹரி ஷங்கர் துபே என்பவர் தாக்கல் செய்த மனுவை ஏற்று, மாவட்ட நீதிமன்றம், பூட்டப்பட்டிருந்த பாபர் மசுதியை ஹிந்துக்களின் வழிபாட்டிற்காக திறந்து விட உத்தரவிட்டது. முஸ்லிம் வஃக்ப் போர்டின் மனு நிலுவையில் இருக்கும் போது ஹிந்துக்களுக்காக பள்ளிவாசல் வளாகத்தை திறப்பது சட்ட விரோதம் என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, ஒரு மணி நேரத்திலேயே திறக்கப்பட்ட வளாகம் மீண்டும் பூட்டப்பட்டது.

1989

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அப்போதைய துணை தலைவராக இருந்த தியோக்கி நந்தன் அகர்வாலா என்பவர், பாபர் மசூதி அமைந்திருக்கும் நிலம் தங்களுக்கே சொந்தம் எனக் கூறி அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

1989

பாபர் மசூதி சர்ச்சை தொடர்பான வழக்குகள், மனுக்கள் அனைத்துமே அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வின் கீழ் கொண்டு வரப்படுகிறது. அதே ஆண்டில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், பலத்த எதிர்ப்புகளையும் மீறி, சர்ச்சைக்குரிய நிலத்திற்கு அருகாமையில் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்கின்றனர்.

1990

அத்வானி தலைமையில் மீண்டும் புறப்பட்ட ரத யாத்திரை அயோத்திக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டு, அத்வானி கைது செய்யப்படுகிறார். இந்நிலையில், வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், பாபர் மசூதியை தகர்க்கப் போகிறோம் என அறிவித்து, பள்ளிவாசலின் சில பாகங்களில் சேதாரத்தையும் ஏற்படுத்தினர். பலத்த கொந்தளிப்பை இச்செயல் உருவாக்கியது. அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த சந்திரசேகர், இந்த சர்ச்சை தொடர்பாக பலகட்ட நடவடிக்கைகளுக்கும் , பரஸ்பர பேச்சுவார்த்தையுடன் மூலமான சுமூக தீர்வுக்கும் முயன்று தோல்வியுற்றார்.

1991

உ த்திரப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. பாபர் மசூதி அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள இடங்களை ஆக்கிரமிப்பு செய்த பாஜக அரசு, ஹிந்துக்களின் வழிபாட்டுக்கு அப்பகுதியை திறந்து விட்டது.

1992

டிச. 6 நாட்டையே உலுக்கிய அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஹிந்து பயங்கரவாதிகள், கரசேவகர்கள் துணை கொண்டும், விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா, பாரதிய ஜனதா போன்ற கட்சிகளின் உதவியுடன் பாபர் மசூதியை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கினர். நாட்டின் பல பாகங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பலகட்ட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம் உயிர்கள் சூறையாடப்பட்டன. இரண்டு எஃப் ஐ ஆர்கள் பதிவு செய்யப்பட்டன. முதலாவது, குற்றப் பிரிவு 197 இன் கீழ் பள்ளிவாசல் இடிப்பை கண்டித்தும், இரண்டாவது, குற்றப் பிரிவு 198 இன் கீழ், அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் வன்முறையை தூண்டும் விதத்திலான பேச்சுக்களுக்கு எதிராகவும். 1992 டிச.16 இது தொடர்பாக விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி திரு. எம். எஸ். லிபரஹான் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றினை அப்போதைய காங்கிரஸ் ஆட்சி நியமிக்கிறது.

1993

சர்ச்சைக்குரிய நிலத்தை சுற்றி 67 ஏக்கர் நிலத்தை ஆளும் பாஜக அரசு கையகப்படுத்துகிறது.

1996

அலஹாபாத் உயர்நீதி மன்றம், இது தொடர்பான அனைத்து சிவில் மனுக்களையும் ஒரே குடையின் கீழ் தொகுக்கிறது.

2001

சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். கே. ஷுக்லா, அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்கிறது.

2002

அயோத்தியாவிலிருந்து புறப்பட்ட கோத்ரா ரயில் எரிக்கப்பட்டு 58 பேர் கொல்லப்படுகின்றனர். அதை காரணம் காட்டி குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்ததோடு, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் படுகின்றனர். 2002 பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் கோவில் இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அலஹாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.2002 பாபர் மசூதி நில உரிமை தொடர்பாக அலஹாபாத் உயர் நீதிமன்றம் தமது முதல் விசாரணையை அதிகா  ப்பூர்வமாக துவங்கியது.

2003

தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம், நீதிமன்றத்தில் தமது ஆராய்ச்சி முடிவினை சமர்ப்பிக்கிறது. அதில், மசூதி இருந்த பகுதி தோண்டப்பட்டதி ல் , சிதிலமடைந்த பாறைகள், தூண்கள் போன்றவை கிடைக்கப் பெற்றதாகவும், அவை ஹிந்து, ஜைன மதம் அல்லது புத்த மதத்தின் அடையாளங்களாக இருக்கக் கூடும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டது.

2003

முஸ்லிம் வக்ஃப் போர்ட் மற்றும் ஏனைய இஸ்லாமிய அமைப்புகள் தொல்லியல் துறையின் இந்த அறிக்கைக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தன. எந்த நிலம் தோண்டப்பட்டாலும் இது போன்ற சிதிலமடைந்த பாகங்கள் கிடைக்கவே செய்யும் எனவும், யூகங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது எனவும் கண்டனம் தெரிவித்தன.

2009

முதல் திருப்புமுனையாக, நீதிபதி லிபரஹான் தலைமையிலான விசாரணை கமிஷன் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்கிறது. அதில், பாரதிய ஜனதாவை சார்ந்த அத்வானி, உமா பாரதி உள்ளிட்ட தலைவர்களின் நேரடி உத்தரவின் பேரில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என சான்றுகளுடன் தெரிவித்தது.

2010

லிபரஹான் கமிஷனின் அறிக்கை கிடப்பில் போடப்பட, அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை, விசாரணை மற்றும் தீர்ப்பினை ஒத்தி வைத்து விட்டு, அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறது. ஆனால், சமரச பேச்சுவார்த்தைக்கு எந்த தரப்பும் விருப்பம் தெரிவிக்கவில்லை.

2010

ஹிந்து அமைப்பை சார்ந்த ஆர். சி. திருப்பதி என்பவர், பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார். அந்த மனு நிராகரிக்கப்படுகிறது. மீண்டும், உச்சநீதி மன்றத்தை நாடி செல்கிறார். ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரு. அல்டாமஸ் கபீர் மற்றும் ஏ.கே. பட்னாயக் ஆகியோர் கொண்ட அமர்வு அதனையும் நிராகரிக்கிறது.

2010

இறுதியில், நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய தீர்ப்பினை அலஹாபாத் நீதிமன்றம் அளிக்கிறது. அதன்படி, சர்ச்சைக்குரிய நிலம் மூன்றாக பிரிக்கப்பட்டு, ஒரு பாகம் ஹிந்து மஹாசபையினரின் அங்கமான ராம் லல்லா அமைப்புக்கும், இன்னொரு பாகம் இஸ்லாமிய வக்ஃப் போர்டுக்கும், மூன்றாவது பாகம் நிர்மோகி அகாரா எனும் ஹிந்து அமைப்புக்கும் வழங்கி உத்தரவிடுகிறது.

2010

அதே ஆண்டில், அகில பாரத ஹிந்து மகா சபை மற்றும் இஸ்லாமிய வக்ஃப் போர்ட் ஆகியவை அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கின்றன.

2011

அலஹாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பையே உறுதி செய்வதாகவும் அதில் மாற்றம் ஏதும் செய்யலாகாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவிக்கிறது.

2014

முஸ்லிம்கள் தரப்பில் இவ்வழக்கில் துவக்கம் முதலே ஆஜராகி வந்த முஹம்மது ஃபாரூக் மரணமடைகிறார்.

2015

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டப்போவதாக பகிரங்க அறிவிப்பு செய்ததுடன், நாடெங்கிலும் இருந்து கற்களை கொண்டு வருமாறு கட்சியினரை அழைத்தனர். மேலும், மோடி ஆட்சியில் ராமர் கோவில் கட்ட பச்சைக் கொடி தரப்பட்டு விட்டதாகவும் அந்த அமைப்பை சார்ந்த மஹந்த் நிரித்யா கோபால் தாஸ் என்பவர் அறிவிக்கிறார்.

2015

இதனை கண்டித்த அப்போதைய உபி. முதல்வர் அகிலேஷ் யாதவ், ராமர் கோவில் கட்டுவதற்கோ, கற்கள் சுமந்து கொண்டு வரப்படுவதற்கோ தமது அரசு அனுமதியளிக்காது என பகிரங்கமாக அறிவிக்கிறார்.

2016

பாஜகவின் சுப்ரமணியன் சாமி, ராமர் கோவில் கட்ட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கிறார்.

2017

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்டோர் மீதான புகார் திரும்பப் பெறாது எனவும், அவ்வழக்கானது தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு செய்கிறது. அதே ஆண்டில், பாபர் மசூதி தொடர்பான இந்த சர்ச்சையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், உணர்ச்சிப்பூர்வமானதாகவும் அமைந்திருப்பதால் அவசரமாக தீர்ப்பு வழங்கிட இயலாது எனவும், சம்மந்தப்பட்ட அமைப்பினரே தங்களுக்குள் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு முன் வரவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.

2017

மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மீதான வழக்கினை விரைந்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அவர்கள் மீதான புகாரை தள்ளுபடி செய்வதற்கான எவ்வித காரணங்களும் இதுவரை சமர்ப்பிக்கப்படவிலலை எனவும் எனவே அவர்களுக்கெதிரான வழக்கானது தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் கூறுகிறது.

2017

டிச.5 நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையில், அஷோக் பூஷன், அப்துல் பசீர் ஆகியோர் கொண்ட அமர்வு, பாபர் மசூதி நிலம் தொடர்பான விசாரணையை துவங்கியது. வழக்கு விசாரணை பின்னர் 2018 க்கு மாற்றப்படுகிறது.

2018 2019

ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை காரணம் காட்டி அது முடிவது வரை விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

2019

ஆகஸ்ட் தற்போது இந்த விசாரணையை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

Source: unarvu (15/11/2019)