Tamil Bayan Points

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் முரண்பாடுகள்

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on December 31, 2019 by

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் முரண்பாடுகள்

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருப்பதைக் காணமுடியும். பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் அந்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ள ஆலோசனைகளுக்கு எதிராக அதே தீர்ப்பில் அந்த நீதிபதியே முரண்படுகின்றார் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை!

தீர்ப்பை வழங்குவதற்கு முன்னாள் பேசிய நீதிபதி ரஞ்சன் கோகாய், மதச்சார்பின்மையே அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பண்புகளாகும் நீதிமன்றம் நடுநிலையைக் காக்கும் பொறுப்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வாசித்த தீர்ப்பில் நடுநிலை என்பதே இல்லை என்பதும் முழுக்க முழுக்க ஒரு பக்கச் சார்பாக தீர்ப்பு அமைந்துள்ளதும் மிகப்பெரிய முரண் பாடாகும்.

• அயோத்தியில் சர்ச்சைக் குரிய 2.7 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கொண்டாடும் நிர்மோகி அஹோரா என்ற அமைப்பு ஆதாரங்களை காட்டவில்லை என்று தெரிவித்துள்ள உச்சநீதி மன்றம், இந்த விவகாரத்தில் துளியும் தொடர்பு இல்லாத ராம்லல்லா அமைப்பிற்கு பாபர் மசூதி நிலத்தை முழுமையாக வழங்கி யுள்ளது. ராம்லல்லா அதன்பிற்கு குழந்தை ராமர் என்ற பாத்திரத்தை முன் வைத்து வழக்கின் உள்ளே வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

• நிர்மோகி அஹோரா என்ற அமைப்பினாரால் காட்ட முடியாத எந்த ஆதாரத்தை ராம் லல்லா அமைப்பினர் காட்டினார்கள் என்று மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. ஆக ஒரு தரப்பை வெளியேற்றி நடுநிலையாக செயல்படுவது போலக் காட்டிக் கொண்டு அதே கொள்கையையுடைய மற்றொரு அமைப்பிற்கு நிலத்தை வழங்கியுள்ளது இந்தத் தீர்ப்பில் வெளிப் படையாகத் தெரியும் பெரிய முரண்பாடாகும்.

• பாபரின் தளபதி மிர் பாகி என்பவர்தான் அயோத்தில் பாபர் மசூதியைக் கட்டினார் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் 1857-ம் ஆண்டுக்கு முன்பு வரை அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்துக்கள் வழிபடுவதற்கு எந்த தடையும் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

• பாபர் மசூதி கட்டப்பட்டது 1828 ஆம் ஆண்டு என்று வரலாறு சொல்கின்றது. ஆனால் 1857 ஆம் ஆண்டு வரை அதற்குள் சென்று இந்துக்கள் வழிபட்டார்கள் என்று சொல்வது மிகப்பெரிய முரண்பாடாகும். பல ஆண்டுகளாக மசூதியாக செயல்பட்டு வரும் இடத்திற்குள் இந்துக்களும் சென்று வணங்கினார்கள் என்று சொல்வதை சிறுபிள்ளை கூட ஏற்றுக் கொள்ளாது.

• அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி மூன்று அமைப்புகளும் நிலத்தை சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தீர்ப்பை தவறு என்று சொல்கிறது உச்சநீதிமன்றம். காரணம் 3 அமைப்புகளுமே அந்த நிலம் தங்களுக்குச் சொந்தம் என்பதற்கான சரியான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று அதே தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மூன்றில் ஒரு பாகமே கொடுத்தது தவறு! என்று கூறி விட்டு அதே அமைப்பிற்கு முழு நிலமும் சொந்தம் என்று அதே தீர்ப்பில் கூறியிருப்பது மிகப்பெரிய முரண்பாடாகும்.

• 1992-ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப் பட்டது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயலாகும் என்றும் அதை ஒரு போதும் ஏற்க இயலாது என்றும் இந்தத் தீர்ப்பில் கூறியுள்ள உச்சநீதிமன்றம், எந்த அடிப்படையில் அதை இடித்தவர்களிடம் நிலத்தை ஒப்படைத்தது என்ற கேள்வி அனைவருக்கும் எழாமல் இல்லை!

• அயோத்தியில் சர்ச்சைக் குரிய நிலம் மத்திய அரசுக்கு உரிமை உடையதாகும். அந்த நிலத்தின் உரிமையும், பராமரிப்பு உரிமையும் மத்திய அரசு வசமே இருக்கும் என்று கூறும் உச்சநீதிமன்றம், அதற்குப் பின் அந்த இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

• மதச்சார்பின்மை பேச வேண்டும் என்று ஆரம்பத்தில் கூறும் நீதிபதி, அடுத்த சில நிமிடங்களில் 3 மாதங்களுக்குள் ராமர்கோவில் கட்டுவதற்கு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறியிருப்பது மிகப்பெரிய முரண்பாடாகும்.

• சட்டத்தின் அடிப்படை யிலேயே தீர்ப்பளிக்க வேண்டும், நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிக் கூடாது என்று கூறி விட்டு அதிகமான மக்கள் அந்த இடத்தில் ராமர் பிறந்ததாக நம்புகின்றார்கள், எனவே அதை அவர்களுக்கு வழங்குவதுதான் சரி! என்று தீர்ப்பளித்திருப்பது முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது.

இன்னும் எத்தனை எத்தனையோ முரண்பாடுகள் இந்தத் தீர்ப்பிற்குள் ஒழிந்துள்ளது. அத்துனை முரண்பாடுகளையும் எடுத்துப் பார்த்தால் இந்தத் தீர்ப்பு உச்சநீதிமன்ற நீதிபதிகளால் உருவாக்கப்பட்டதா? அல்லது காவி அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வி இயற்கையாக எழுந்து விடும்.

நாட்டின் இறையாண்மையையும் மதச் சார்பின்மையையும் பாதுகாக்க வேண்டும் என்று துவக்கத்தில் கூறிவிட்டு முழுக்க முழுக்க இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை அள்ளித் தெளித்துள்ளது இந்தத் தீர்ப்பு.

Source: unarvu (15/11/19)