Tamil Bayan Points

பார்வைப் புலனும் பகுத்தறிவும்

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

Last Updated on October 11, 2016 by Trichy Farook

சின்னஞ்சிறிய கண்கள்

சில நுண்ணிய புழுப் பூச்சியினங்களுக்கு, மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே காணத்தக்க சின்னஞ்சிறிய கண்கள் இருக்கின்றன. அந்தக் கண்களின் ஆற்றலையும் வரம்பையும் நம்மால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியாது. பருந்து, கழுகு போன்ற பறவைகளுக்கு, தொலைநோக்கி (டெலஸ்கோப்) போன்று ஒரு பொருளை அண்மையிலும், உருப் பெருக்கியும் காட்டும் கண்கள் இருக்கின்றன.

குதிரையின் திறன்

மிக வயதான கிழட்டுக் குதிரையை இருட்டு நேரத்தில் எங்காவது கொண்டு போய் விட்டு விட்டு நாம் மட்டும் திரும்பி வந்து விடுவோமானால், வழியில் எவ்வளவு கும்மிருட்டு நிலவிய போதும் அது வழியை அறிந்து நமது வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுகின்றது.

எவ்வளவு வெளிச்சமற்ற நிலையிலும் அதனால் பார்க்க முடிகின்றது. வெளிச்சமே இல்லாவிட்டாலும் பாதையிலும், அதன் இரு மருங்கிலும் காணப்படும் வெப்ப அளவின் மாற்றத்தை அது அனுமானித்துக் கொள்கின்றது. வழியில் காணப்படும் மிகக் கடினமான வெப்பத்தின் ஒளிக்கதிர்களால் மிகக் குறைந்த அளவுக்கே உணர்ச்சிக்கு ஆளாகும் தனது கண்களால் அது எப்படியோ வழியை அறிந்து, வந்து சேர்ந்து விடுகின்றது.

ஆந்தையின் பார்வை

அது போன்று எவ்வளவு இருட்டாக இருந்தாலும், எங்கோ செடி கொடிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கின்ற எலியின் உடலில் காணப்படும் கதகதப்பான வெப்பத்தை அறிந்து ஆந்தை, எலியை வேட்டையாடி விடுகின்றது. மனிதர்களாகிய நாம் இருட்டில் ஒரு பொருளைக் காண்பதற்கு ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தாலும் நமது பகுத்தறிவால் கண்டுபிடித்த மின்சார விளக்குகள் மூலம் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி இரவையே பகலாக்கி விடுகின்றோம்.

ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது. பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. facial diskகள், கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன.

மனிதனின் பகுத்தறிவு

மனிதனுக்கு இறைவன் பகுத்தறிவை கொடுத்துள்ளான். இங்கேயும் தனது இயந்திர சாதனங்களால் மனிதன் அவற்றை மிகைத்து விடுவதைப் பார்க்க முடிகின்றது. அவனுக்கு இருக்கின்ற பார்க்கும் சக்தியைப் போன்று இருபது லட்சம் மடங்கு அதிகமான சக்தி இருந்தால் மட்டுமே பார்க்க முடியும் அளவுக்குத் தொலைவில் இருக்கின்ற நட்சத்திரங்களைக் கூட டெலஸ்கோப் மூலம் அவனால் பார்க்க முடிகின்றது. மேலும் அவன் தனது மின்னியல் நுண்ணோக்காடி மூலம் சாதாரணமாகப் பார்க்க முடியாத நுண்ணிய பாக்டீரியாக்களையும் பார்க்கிறான்.