Tamil Bayan Points

பாவங்கள் மன்னிக்கப்பட எளிய வழிகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

Last Updated on October 16, 2023 by Trichy Farook

பாவங்கள் மன்னிக்கப்பட எளிய வழிகள்

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

கனிவும் மாண்பும் மிகுந்த ஏக இறைவன், படைப்பினங்களில் மிக உயர்ந்த படைப்பாக மனித குலத்தைத் தேர்வு செய்திருக்கிறான். எந்த உயிரினத்திற்கும் வழங்காத பகுத்தறிவை மனித இனத்திற்கு வழங்கி, எதுவெல்லாம் நன்மை, எதுவெல்லாம் தீமை என்பதை பிரித்துக் காட்டியுள்ளான். நன்மை செய்தால் கிடைக்கும் வெகுமதியைப் பற்றியும், தீமை செய்வதால் கிடைக்கும் தண்டனைகளைப் பற்றியும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளான்.

وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ

(நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?

(அல்குர்ஆன்: 90:10)

இவ்வாறு நன்மை, தீமை என இரு வழிப்பாதையும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தாலும் மனிதனின் உள்ளம் நன்மையின்பால் ஈர்க்கப்படுவதைக் காட்டிலும் தீமையின்பால் தான் அதிகம் ஈர்க்கப்படுகின்றது.

அறிந்து, அறியாமல், மறதியாக, தடுமாறி என நாள்தோறும் மனிதனின் பாவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பொழுதும் தவறிழைப்பது நமது இயல்பான குணாதிசயமாகவே உள்ளது. இதன் காரணமாகத் தான் மனிதனின் இயல்புநிலையைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழகாகக் கூறினார்கள்.

 كُلُّ بَنِي آدَمَ يُخْطِئُ بِاللَّيْلِ وَالنَّهَارِ ثُمَّ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرُ لَهُ وَلَا أُبَالِي

“ஆதமுடைய சந்ததியினர் ஒவ்வொருவரும் இரவிலும் பகலிலும் பாவம் செய்கின்றான். என்னிடம் பாவமன்னிப்புத் தேடுகின்றான். நான் அவனுக்கு மன்னிப்பளிக்கிறேன்” என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத்-21420 

இத்தகைய குணத்தோடு நம்மைப் படைத்த இறைவன், நம்மீது கருணை காட்டும் விதமாக, தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக, நம்முடைய பாவத்திற்காக பாவமன்னிப்புத் தேடுவதை விதியாக ஆக்கியுள்ளான். அவ்வாறு மனிதன் பாவமன்னிப்புத் தேடும் போது அவனது கோரிக்கையை ஏற்று, அவனுக்கு மன்னிப்பு வழங்குவதையும் தன் மீது இறைவன் விதியாக ஆக்கியுள்ளான். அவ்வாறு அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்கும் முறைகளைப் பற்றியும் அதன் எளிய வழிகளைப் பற்றியும் இந்த உரையில் காண்போம்..   

இரவின் கடைசி பகுதியில் 

يَتَنَزَّلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ، يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ، مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுபிட்சமும் உயர்வும் உடைய நம் இறைவன் ஒவ்வோர் இரவும் கீழ் வானிற்கு இறங்கி இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரின் பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால், பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-6321 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ لَمْ تُذْنِبُوا لَذَهَبَ اللهُ بِكُمْ، وَلَجَاءَ بِقَوْمٍ يُذْنِبُونَ، فَيَسْتَغْفِرُونَ اللهَ فَيَغْفِرُ لَهُمْ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-5304 

மகிழ்ச்சி அடையும் அல்லாஹ் 

மனிதர்களாகிய நாம் மனம் திருந்தி, வருந்தி பாவமன்னிப்புத் தேடும் போது அந்த மன்னாதி மன்னன் எல்லையில்லா மகிழ்ச்சியடைகின்றான். அம்மகிழ்வின் வெளிப்பாட்டை ஏந்தல் நபியவர்கள் சிலாகித்துக் கூறுவதைக் கேளுங்கள்.

لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ، مِنْ أَحَدِكُمْ كَانَ عَلَى رَاحِلَتِهِ بِأَرْضِ فَلَاةٍ، فَانْفَلَتَتْ مِنْهُ وَعَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ، فَأَيِسَ مِنْهَا، فَأَتَى شَجَرَةً، فَاضْطَجَعَ فِي ظِلِّهَا، قَدْ أَيِسَ مِنْ رَاحِلَتِهِ، فَبَيْنَا هُوَ كَذَلِكَ إِذَا هُوَ بِهَا، قَائِمَةً عِنْدَهُ، فَأَخَذَ بِخِطَامِهَا، ثُمَّ قَالَ مِنْ شِدَّةِ الْفَرَحِ: اللهُمَّ أَنْتَ عَبْدِي وَأَنَا رَبُّكَ، أَخْطَأَ مِنْ شِدَّةِ الْفَرَحِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வறண்ட பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டார். (அவர் ஓரிடத்தில் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது) அவரது ஒட்டகம் தப்பியோடி விட்டது. அதன் மீதே அவரது உணவும் பானமும் இருந்தன. அவர் (தமது ஒட்டகத்தைத் தேடியலைந்து அதைக் கண்டுபிடிக்க முடியாமல்) நம்பிக்கையிழந்து, ஒரு மரத்திற்கு அருகில் வந்து, அதன் நிழலில் படுத்திருந்தார்.

தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அதே நிலையில் அவர் நிராசையுடன் இருந்தபோது, அந்த ஒட்டகம் (வந்து) தமக்கு அருகில் நிற்பதை அவர் கண்டார். உடனே அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டார். பிறகு மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், (“இறைவா! நீ என் இறைவன்; நான் உன் அடிமை” என்று சொல்வதற்குப் பதிலாக) “இறைவா! நீ என் அடிமை; நான் உன் இறைவன்” என்று தவறுதலாகச் சொல்லிவிட்டார். இந்த மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம்-5300 

பாவமன்னிப்புத் தேடுவதால் நமக்குக் கிடைக்கும் வெகுமதியையும், தனது அடியார்களுக்கு அருளாளன் பொழியும் அருள் மழையையும் ஓரிரு வரிகளில், வார்த்தைகளில் வரையறுத்து விடமுடியாது என்று சொல்லும் அளவிற்கு அல்லாஹ் அளவில்லா நன்மைகளை வாரி வழங்குகின்றான்.

எனினும் மனிதனோ பாவம் செய்வதில் காட்டும் முனைப்பையும் ஈடுபாட்டையும் பாவமன்னிப்புத் தேடுவதில் காட்டுவதில்லை. அசட்டையாகவும் அலட்சியப் போக்கு உடையவனாகவும் இருக்கிறான். மனிதனின் இந்த பலவீனத்தை அறிந்து வைத்திருக்கும் இறைவன், நமக்கு மாற்று ஏற்பாடாக மற்றொரு வாய்ப்பையும் வழங்குகிறான்.

ஆம்! படைப்பினங்களுக்கு உதவி செய்வதன் மூலமும், சில குறிப்பிட்ட நல்லமல்களைச் செய்வதன் மூலமும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என மார்க்கம் வழிகாட்டுகின்றது.

தர்மம் செய்தல்

إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ ۖ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ ۚ وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (அல்லாஹ் இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:271)

لَئِنْ أَقَمْتُمُ الصَّلَاةَ وَآتَيْتُمُ الزَّكَاةَ وَآمَنْتُمْ بِرُسُلِي وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ اللَّهَ قَرْضًا حَسَنًا لَأُكَفِّرَنَّ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ

நீங்கள் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பி, அவர்களுக்கு உதவியாக இருந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனையும் கொடுப்பீர்களானால் உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழிப்பேன். உங்களைச் சொர்க்கச் சோலைகளிலும் நுழையச் செய்வேன்.

(அல்குர்ஆன்: 5:12)

தர்மம் செய்வது குறித்து நமது மார்க்கம் அதிகமதிகம் வலியுறுத்துகின்றது. அதற்காகப் பல்வேறு வெகுமதிகளை இறைவன் வழங்குகின்றான். அந்த வெகுமதிகளில் ஒன்று பாவங்கள் அழிக்கப்படுவதாகும்.

கடன் கொடுத்தல் மற்றும் அதைத் தள்ளுபடி செய்தல்

كَانَ الرَّجُلُ يُدَايِنُ النَّاسَ، فَكَانَ يَقُولُ لِفَتَاهُ: إِذَا أَتَيْتَ مُعْسِرًا فَتَجَاوَزْ عَنْهُ، لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا، قَالَ: فَلَقِيَ اللَّهَ فَتَجَاوَزَ عَنْهُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன் காலத்தில்) ஒருவர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தன்னுடைய (அலுவலரான) வாலிபரிடம், ‘(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக் கூடும்‘ என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவரின் பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-3480 

மக்களிடம் அரிதாகி விட்ட பண்பு கடன் கொடுப்பது. கடன் கொடுத்தால் திரும்பப் பெறுவது கஷ்டம் என்று எண்ணியே கடன் கொடுக்க யாரும் முன்வருவதில்லை. ஆனால் கடன் கொடுத்து அதற்காக அவகாசம் அளிக்கும் காலமெல்லாம் பெருமளவு நன்மையைச் சம்பாதிக்க முடியும்.

விலங்கினங்களின் மீது அன்பு செலுத்துதல்

بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، اشْتَدَّ عَلَيْهِ العَطَشُ، فَوَجَدَ بِئْرًا فَنَزَلَ فِيهَا، فَشَرِبَ ثُمَّ خَرَجَ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ، يَأْكُلُ الثَّرَى مِنَ العَطَشِ، فَقَالَ الرَّجُلُ: لَقَدْ بَلَغَ هَذَا الكَلْبَ مِنَ العَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَ بِي، فَنَزَلَ البِئْرَ فَمَلَأَ خُفَّهُ ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، فَسَقَى الكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ ” قَالُوا: يَا رَسُولَ اللَّهِ ، وَإِنَّ لَنَا فِي البَهَائِمِ أَجْرًا؟ فَقَالَ: «نَعَمْ، فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ»

‘ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார்.

அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) ‘எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்‘ என்று சொல்லிக்கொண்டார்.

உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதைச் செவியேற்ற) மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்‘ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-6009 

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«أَنَّ امْرَأَةً بَغِيًّا رَأَتْ كَلْبًا فِي يَوْمٍ حَارٍّ يُطِيفُ بِبِئْرٍ، قَدْ أَدْلَعَ لِسَانَهُ مِنَ الْعَطَشِ، فَنَزَعَتْ لَهُ بِمُوقِهَا فَغُفِرَ لَهَا»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரியான ஒரு பெண், கடும் வெப்பம் நிறைந்த ஒரு நாளில் நாயொன்று ஒரு கிணற்றைச் சுற்றி வந்துகொண்டிருப்பதைக் கண்டாள். அது தாகத்தால் தனது நாக்கை வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருந்தது. உடனே அப்பெண் தனது காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை நிரப்பி வந்து அதற்குப் புகட்டி)னாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-4517

விபச்சாரம் என்பது பெரும்பாவமாக இருந்தாலும் அப்பாவத்தை அழிக்கும் நல்லறமாக, விலங்கினங்களின் மீது அன்பு செலுத்துவதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இடையூறு தரும் பொருட்களை அகற்றுதல்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ، فَأَخَذَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-2472 

இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு, அது மனித இனமாயினும் பிற விலங்கினமாயினும் அந்த உயிரினங்களுக்கு உதவி செய்வதன் மூலம் அல்லாஹ் நமது பாவங்களை மன்னிக்கிறான் என்பதை மேற்கூறிய செய்திகள் விளக்குகின்றன.

இது மட்டுமல்லாமல் சில வணக்கங்களின் மூலமும் அல்லாஹ் நமது பாவத்தை அளித்து, மன்னிப்பிற்கு வாய்ப்பளிக்கின்றான்.

மார்க்க போதனைகளைக் கேட்டல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுவோரைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால், “உங்கள் தேவையைப் பூர்த்திசெய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர்.

பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகின்றவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம்வரை சூழ்ந்துகொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களுடைய இறைவன் “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?” என்று கேட்கின்றான். -அவ்வானவர்களைவிட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவன் ஆவான்.- “அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக்கொண்டும் இருக்கின்றனர்” என்று வானவர்கள் கூறுகின்றனர்.

அதற்கு இறைவன், “அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?” என்று கேட்பான். வானவர்கள், “உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்” என்று பதிலளிப்பார்கள்.

அதற்கு இறைவன், “என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகின்றார்கள்?” என்று (தனக்குத் தெரியாதது போலக்) கேட்பான். வானவர்கள், “அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்” என்பார்கள். அதற்கு இறைவன், “அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதைப் பார்த்ததில்லை” என்பர்.

அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அதை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்பான். வானவர்கள், “சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசை கொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்” என்று பதிலளிப்பார்கள்.

இறைவன், “அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?” என்று வினவுவான். வானவர்கள், “நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)” என்று பதிலளிப்பர். இறைவன், “அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதை அவர்கள் பார்த்ததில்லை” என்பர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?” என்று கேட்பான்.

வானவர்கள், “நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்” என்பர். அப்போது இறைவன், “ஆகவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்துவிட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்” என்று கூறுவான்.

அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், “(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகின்ற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்” என்பார். அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (நற்பேறு பெறுவானே தவிர,) நற்பேறற்றவனாக ஆகமாட்டான்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-6408 

உளு செய்தல்

 عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ جَسَدِهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِهِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான்(ரலி)
நூல்: முஸ்லிம்-413 

ஒவ்வொரு நேரத் தொழுகைக்காகவும் நாம் உளுச் செய்யும்  போது நமது பாவம் நம்மை விட்டும் வெளியேறிவிடுகின்றது.

தொழுகைக்காக பள்ளிவாசல் செல்லுதல்

« صَلاَةُ الجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ، وَصَلاَتِهِ فِي سُوقِهِ، خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ، وَأَتَى المَسْجِدَ، لاَ يُرِيدُ إِلَّا الصَّلاَةَ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ خَطِيئَةً، حَتَّى يَدْخُلَ المَسْجِدَ، وَإِذَا دَخَلَ المَسْجِدَ، كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ، وَتُصَلِّي – يَعْنِي عَلَيْهِ المَلاَئِكَةُ – مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ »

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒருவர் தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடை வீதியில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகிற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்குப் படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகிறான்.

ஒரு பாவத்தை அவரைவிட்டு நீக்குகிறான். தொழுகையை எதிர் பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும்போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்கத் தொல்லை அளிக்காத வரையில் ‘இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா இவருக்கு அருள் புரி!’ என்று வானவர்கள் கூறுகின்றனர்.’

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-477 

ஐவேளைத் தொழுகை

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
” أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا، مَا تَقُولُ: ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ ” قَالُوا: لاَ يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا، قَالَ: «فَذَلِكَ مِثْلُ الصَّلَوَاتِ الخَمْسِ، يَمْحُو اللَّهُ بِهِ الخَطَايَا»

‘உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்’ என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-528 

الصَّلَاةُ الْخَمْسُ، وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ، كَفَّارَةٌ لِمَا بَيْنَهُنَّ، مَا لَمْ تُغْشَ الْكَبَائِرُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-394 

இறைவனை நினைவு கூர்தல்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
مَنْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ، يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ إِلَّا رَجُلٌ عَمِلَ أَكْثَرَ مِنْهُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்

(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)’

என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும்.

மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-6403 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘சுப்ஹானல்லாஹ் வபிஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-6405 

ஆஷுரா நோன்பு மற்றும் அரஃபா நோன்பு

 قَالَ: وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ؟ فَقَالَ: «يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ» قَالَ: وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ؟ فَقَالَ: «يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, “முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்“ என்றார்கள். ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு “அது கடந்த ஆண்டின் பாவப்பரிகாரமாகும்“ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி)
நூல்: முஸ்லிம்-2152 

நன்மை செய்தல்

ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ السَّيِّئَةَ ۚ نَحْنُ أَعْلَمُ بِمَا يَصِفُونَ

நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.

(அல்குர்ஆன்: 23:96)

ஏக இறைவனாகிய கருணையாளன் நமது பலவீனத்தை உணர்ந்து நமக்கென்று வழங்கியிருக்கும் இத்தகைய வாய்ப்புகளைத் தவற விடாமல் நம்மால் இயன்ற வரை பாவத்தை அழிக்கக் கூடிய, பாவத்திற்குப் பரிகாரமாக அமையக்கூடிய அனைத்து நற்காரியங்களையும் செய்ய வேண்டும்.

மேலும் அளவற்ற  அருளாளனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்புத் தேடுவதுடன், பாவங்களிலிருந்து விலகியும் இருக்க வேண்டும். மறுமையில் நன்மையின் எடைத்தட்டு கனத்த நிலையில் இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பை வல்ல ரஹ்மான் தந்தருள்வானாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.