Tamil Bayan Points

17) பிறருக்காக ஹஜ் – மதீனாவுக்கு செல்வது

நூல்கள்: நபி வழியில் நம் ஹஜ்

Last Updated on April 15, 2023 by

பிறருக்காக ஹஜ் செய்தல்

ஒவ்வொருவரும் தத்தமது செயலுக்குப் பொறுப்பாளியாவார்; ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க முடியாதுஎன்பது இஸ்லாத்தின் அடிப்படை. என்றாலும் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

ஹஸ்அம்கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத முதிய வயதுடையவராக இருக்கும் போது ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை ஏற்பட்டு விட்டதுஎன்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவருக்காக நீ ஹஜ் செய்என்று அவரிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரி 1513, 1854, 1855, 4399, 6228

உயிருடன் இருப்பவர் ஹஜ் செய்ய இயலாத நிலையில் இருந்தால் அவர் சார்பாக அவரது வாரிசுகள் ஹஜ் செய்யலாம். அது அவர் சார்பாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.

ஜுஹைனாஎனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார்; மரணிக்கும் வரை அவர் ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய்! உன் தாயார் மீது கடனிருந்தால் அதனை நீ தானே நிறைவேற்றுவாய்! அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள்! அல்லாஹ்வின் கடனே நிறைவேற்ற அதிக தகுதியுடையதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6699

ஹஜ் கடமையானவர் மரணித்து விட்டால் அவர் சார்பாக அவரது வாரிசுகள் ஹஜ் செய்யலாம் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. மேலும் அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட ஹஜ் போலவே, தனக்குத் தானே கடமையாக்கிக் கொண்ட ஹஜ்ஜையும் அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம் என்பதையும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

இந்த ஹதீஸ்களிலிருந்து ஒருவரது பிள்ளைகள் அவருக்காக ஹஜ் செய்யலாம் என்பதை நாம் அறிகிறோம். உன் தந்தையின் கடனை யார் நிறைவேற்றக் கடமைப்பட்டவர்? என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கேள்வியும் சிந்திக்கத்தக்கது. பிள்ளைகள் தான் பெற்றோர் சார்பாக ஹஜ் செய்யலாம் என்பதை இந்தக் கேள்வியிலிருந்து விளங்க முடியும்.

ஒருவரது பிள்ளைகள் தவிர மற்ற உறவினர்களும் அவருக்காக ஹஜ் செய்யலாம். ஆயினும் தனக்காக அவர் ஹஜ் செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு மனிதர் லப்பைக்க அன் ஷுப்ருமா(ஷுப்ருமாவுக்காக இஹ்ராம் கட்டுகிறேன்) என்று கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷுப்ருமா என்பவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கவர், என் சகோதரர் என்றோ என் நெருங்கிய உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். அதற்கவர் இல்லைஎன்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் உனக்காக ஹஜ் செய்! பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1546, இப்னுமாஜா 2894

பெற்றோர் அல்லாத மற்ற உறவினருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தமக்காக ஹஜ் செய்ய வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

ஒருவருடன் எந்த விதமான உறவும் இல்லாத அன்னியர்கள் அவருக்காக ஹஜ் செய்ய எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை.

அல்லாஹ்வுக்காக இக்லாஸுடன் செய்ய வேண்டிய கடமை இன்று பத்லீ ஹஜ்என்ற பெயரால் வியாபாரமாக்கப்பட்டுள்ளது. பணம் படைத்தவர்களிடம் சில மவ்லவிமார்கள் அவர்களுக்காக ஹஜ் செய்வதாக வசூலில் இறங்கியுள்ளனர். இவர்கள் உறவினராக இல்லாததுடன், இதில் இக்லாஸும் அடிபட்டுப் போகின்றது.

கொடுக்கப்படுகின்ற கூலிக்காகவே இது நிறைவேற்றப் படுகின்றது. இவை யாவும் ஏமாற்று வேலையாகும்.

ஒருவருக்கு வசதி இருந்து பயணம் செய்ய வாரிசுகள் இல்லாவிட்டால் அவரிடம் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான்.

இது போன்ற ஏமாற்று வேலைகளில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஒருவருக்காக அவரது உறவினர்கள் ஹஜ் செய்வதற்குத் தான் ஆதாரங்கள் காண முடிகின்றது. ஒருவருக்காக இன்னொருவர் உம்ராவை நிறைவேற்ற எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை.

 

மதீனாவுக்குச் செல்வது

ஹஜ்ஜின் கிரியைகளை இது வரை நாம் விளங்கினோம். இவ்வாறு ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டு மதீனாவுக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்தாலே ஹஜ் முழுமை பெறும்என்று பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றனர். உண்மை என்னவென்றால் மதீனாவுக்குச் சென்று ஸியாரத் செய்வதற்கும் ஹஜ்ஜுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.

மதீனாவுக்குச் சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ, அல்லது சுன்னத்தாகவோ, அல்லது விரும்பத்தக்கதாகவோ எந்த ஒரு ஹதீஸிலும் கூறப்படவில்லை.

ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்று மினாவில் மூன்று நாட்கள் கல்லெறிந்து முடிப்பதுடன் ஹஜ் நிறைவு பெறுகிறது. அந்த மூன்று நாட்களில் கூட இரண்டு நாட்களோடு விரைந்து ஒருவர் புறப்பட்டு தாயகம் திரும்பி விட்டால் அவரது ஹஜ்ஜில் எந்தக் குறைவும் ஏற்படாது என்று இறைவன் கூறுகிறான்.

ஹஜ்ஜுடன் சம்பந்தப்பட்ட மூன்று நாட்களில் ஒரு நாளைக் குறைத்துக் கொண்டு புறப்பட இறைவன் அனுமதிக்கும் போது, அதன் பிறகு மதீனா செல்வது எப்படி ஹஜ்ஜுடன் சம்பந்தப்பட முடியும்? இதை ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் கவனத்தில் வைக்க வேண்டும்.

மதீனாவுக்குச் செல்வது பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்வது பற்றியும் ஓரளவு நாம் அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாகும்.

வணக்கமாகக் கருதி அதிக நன்மைகளை நாடி மூன்றே மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பிரயாணம் செய்ய அனுமதி உண்டு; இது சம்பந்தமான ஹதீஸை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோம்.

இந்த ஹதீஸினடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் உட்பட எந்த அடக்கத்தலத்துக்கும் பிரயாணம் செய்யக் கூடாது என்று அறிய முடியும்.

ஹஜ்ஜை முடித்து மதீனா செல்வது ஹஜ்ஜின் ஒரு அங்கமில்லை என்ற உணர்வுடன் ஒருவர் மதீனாவுக்குச் செல்லலாம். அவ்வாறு செல்பவர்களின் குறிக்கோள் ஸியாரத்தாக இருக்கக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளி வாசல் ஒன்று அங்கே உள்ளது. பிரயாணம் செய்து அதிக நன்மையை நாடும் மூன்று பள்ளிகளில் ஒன்றாக அது அமைந்துள்ளது. அங்கே தொழுவது ஏனைய பள்ளிகளில் (மஸ்ஜிதுல் ஹராம் நீங்கலாக) தொழுவதை விட ஆயிரம் மடங்கு உயர்வானது என்ற நோக்கத்திற்காக மதீனாவுக்குச் செல்லலாம். ஹஜ்ஜுக்குச் சென்றவர்களும் மதீனா செல்லலாம்.

சொந்த ஊரிலிருந்தே அப்பள்ளியில் தொழுவதற்காகவே தனிப் பிரயாணமும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு மதீனாவுக்குச் சென்றவர்கள் அப்பள்ளியில் இயன்ற அளவு தொழ வேண்டும். அதன் பிறகு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தையும், மற்ற அடக்கத்தலங்களையும் ஸியாரத் செய்யலாம்.

மீண்டும ஒரு வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது மதீனா பயணத்தின் நோக்கம் ஸியாரத் செய்வதாக இருக்கக் கூடாது. மஸ்ஜிதே நபவியில் தொழுவது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதற்காக நாம் மதீனா வந்து விட்டதால் வந்த இடத்தில் ஸியாரத்தையும் செய்கிறோம். ஸியாரத்துக்காக பயணத்தை மேற்கொள்ளவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வது பற்றி ஒரே ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூட இல்லை. பொதுவாக கப்ருகளை ஸியாரத் செய்வது பற்றிக் கூறப்படும் ஹதீஸ்களின் அடிப்படையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரையும் நாம் ஸியாரத் செய்கிறோம் என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.

இவ்வாறு ஸியாரத் செய்பவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எச்சரிக்கைகள் வருமாறு:

தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கத்தலங்களாக ஆக்கிய யூத, கிருத்தவர்களை அல்லாஹ் லஃனத் செய்கிறான்
இந்த எச்சரிக்கை எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். நமக்கு முந்தைய சமுதாயங்கள் எதனால் லஃனதுக்குரியவர்கள் ஆனார்களோ அதைச் செய்து விடாதவாறு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஸஜ்தாச் செய்வது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே துஆச் செய்வது போன்றவற்றைச் செய்தால் அதை வணங்குமிடமாக ஆக்கிய குற்றம் நம்மைச் சேரும்.

எனது கப்ரைத் திருவிழா நடக்கும் இடமாக – திருநாளாக – ஆக்காதீர்கள்என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக கல்லால் அடிக்கப்பட்டார்களோ, ஒதுக்கி வைக்கப்பட்டார்களோ, ஊரை விட்டு விரட்டப்பட்டார்களோ, பல போர்க்களங்களைச் சந்தித்தார்களோ அந்த ஏகத்துவக் கொள்கைக்கு அவர்களின் அடக்கத்தலத்திலேயே பங்கம் விளைவிக்கக் கூடாது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே ஸியாரத் செய்ய வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வதை மட்டும் சிறப்பித்துக் கூறும் எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை என்பதை முன் குறிப்பிட்டோம். பொதுவாக ஸியாரத் செய்வது பற்றிக் கூறும் ஹதீஸ்களின் அடிப்படையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரும் ஸியாரத் செய்யப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டோம்.
இது போன்ற தவறுகள் நடக்காமல் நபிவழியில் அமைய வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக.