Tamil Bayan Points

பிறர்நலம் நாடும் இஸ்லாம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on October 4, 2023 by Trichy Farook

பிறர்நலம் நாடும் இஸ்லாம்

  1. பிறர்நலம் நாடுவதே இஸ்லாம்
  2. இறை நம்பிக்கையின் அடையாளம்
  3. இறையச்சத்தின் வெளிப்பாடு
  4. பிறர் நலம் நாடிய நபிகளார்
  5. பிறர் நலம் நாடும் உறுதிமொழி
  6. அனைவரும், அனைவருக்கும் நலம் நாடுதல்
  7. பிறர் நலம் நாடுவோரும், கெடுப்போரும்

முன்னுரை 

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான அனைத்து விதமான அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றது.

சமுதாய நலனைச் சீர்குலைக்கும் அனைத்து விதமான இடையூறுகளையும், பிரச்சனைகளையும் அடையாளம் காட்டுவதோடு, அவற்றை முழுமையாகக் களைவதற்கான ஆலோசனைகளை அளிக்கின்றது. ஒவ்வொருவரும் பிறர் நலத்தை நாட வேண்டும், பேண வேண்டும் என்பது அவற்றுள் முக்கியமான முதன்மையான ஒன்றாகும். இது குறித்து இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்கும் செய்திகளைப் இந்த உரையில் பார்ப்போம்.

பிறர்நலம் நாடுவதே இஸ்லாம்

உலகில் பல்வேறு கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் இருக்கின்றன. அவற்றை உருவாக்கியவர்கள், பின்பற்றுபவர்கள் என்று பலரும் அவை ஒவ்வொன்றுக்கும் பல்வேறு வகையில் விளக்கங்களை, வரையறைகளைக் குறிப்பிடுகிறார்கள்.

இஸ்லாம் என்பதற்கும் அதன் அடிப்படையை அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் முக்கியமான ஒன்று, பிறர் நலம் நாடுதல் என்பதாகும். இதன் மூலம் இஸ்லாம் எந்தளவிற்கு அடுத்தவர்களின் நலனில் அக்கறை கொள்கிறது; ஆர்வம் காட்டுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«الدِّينُ النَّصِيحَةُ»

“மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது‘ தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத்தாரீ (ரலி)
நூல்: முஸ்லிம்-95 

பொதுநலனுக்குப் பங்கம் விளைவிக்கும் கருத்துக்களை இஸ்லாம் கூறுவதாக எவராலும் எந்தவொரு சட்டத்தையும் சுட்டிக் காட்ட இயலாது. இஸ்லாம் கூறும் பொதுநலம் சம்பந்தமான கருத்துக்களைக் குறித்து சுட்டிக் காட்டாமல் இஸ்லாத்தை ஒருவருக்கு முழுமையாக எடுத்துச் சொல்ல இயலாது எனும் அளவிற்கு இஸ்லாம் அது பற்றி அதிகம் அதிகமாகப் பேசுகிறது என்பதே உண்மை.

أَنَّ هِرَقْلَ قَالَ لَهُ: سَأَلْتُكَ مَاذَا يَأْمُرُكُمْ؟ فَزَعَمْتَ: «أَنَّهُ أَمَرَكُمْ بِالصَّلاَةِ، وَالصِّدْقِ، وَالعَفَافِ، وَالوَفَاءِ بِالعَهْدِ، وَأَدَاءِ الأَمَانَةِ»، قَالَ: وَهَذِهِ صِفَةُ نَبِيٍّ

(ரோம மன்னர்) ஹிராக்ளியஸ் என்னிடம் கூறியதாவது:
“அவர் (முஹம்மது – (ஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்?’ என்று உம்மிடம் நான் கேட்டேன். அதற்கு நீர், “அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும், நல்லொழுக்கத்தையும் கைக்கொள்ளும்படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்‘ என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்.

அறிவிப்பவர்: அபூசுஃப்யான் (ரலி)
நூல்: புகாரி-2681 

முஸ்லிம்களுக்கும் இறைமறுப்பளர்களுக்கும் இடையே ஹுதைபிய்யா உடன்படிக்கையின் ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்த காலகட்டத்தின் போது, அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அப்போது அவரிடம் ஹிராக்ளியஸ் மன்னர், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எதைப் போதிக்கிறார் என்று இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கிறார்.

அப்போது அதற்கு அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் அளிக்கும் பதிலில் இருந்து, இஸ்லாம் என்பது பிறர் நலத்தைப் பற்றி போதிக்கும் மார்க்கம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இதுதான் இறைத்தூதரின் பண்பாகும் என ஹிராக்ளியஸ் மன்னரே ஒப்புக் கொள்வது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

இறை நம்பிக்கையின் அடையாளம்

இறை நம்பிக்கையாளராக இருக்கும் ஒருவர், இஸ்லாம் கூறும் அனைத்து செய்திகளையும் நம்பியவராக இருந்தால் மட்டும் போதாது. அந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்பாடுகளும் அவரிடம் அவசியம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர், உண்மையாக நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

அந்த வகையில் ஈமான் கொண்டவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளுள் முக்கிய ஒன்றாக, பிறருக்கு நலம் நாடும் பண்பு இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. பிறர் நலத்தைக் கெடுக்கும் காரியம் எதுவாயினும் அதனைச் செய்வது இறைநம்பிக்கைக்கு எதிரானது என்பதையும் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

 عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«المُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا» وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ

முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரி-2446 

 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«تَرَى المُؤْمِنِينَ فِي تَرَاحُمِهِمْ وَتَوَادِّهِمْ وَتَعَاطُفِهِمْ، كَمَثَلِ الجَسَدِ، إِذَا اشْتَكَى عُضْوًا تَدَاعَى لَهُ سَائِرُ جَسَدِهِ بِالسَّهَرِ وَالحُمَّى»

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி-6011 

 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ

நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும் போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-2682 

சமுதாயத்தில் ஒரு சிலர் தீமையான காரியங்களைச் செய்கிறார்கள். அந்த மோசமான செயல்கள் காரணமாக மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் ஒருவர், எந்தளவிற்கு முனைப்போடு அந்தத் தீய காரியங்களைக் களைவதற்கு களத்தில் இறங்குகிறோரோ அதைப் பொறுத்து அவரது நம்பிக்கையின் வீரியம் வெளிப்படுகிறது. இவ்வாறு, மக்களுக்குத் துன்பம் தரும் காரியங்களைத் தடுத்து, அதன் தாக்கத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதும் இறை நம்பிக்கையின் அடையாளம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது.

«مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ»

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம்-78

இறையச்சத்தின் வெளிப்பாடு

நமக்குச் கொடுத்திருக்கும் அனைத்து அருட்கொடைகளைப் பற்றியும் இறைவன் மறுமையில் நம்மை விசாரிப்பான். அப்போது அதற்குரிய சரியான பதில் நம்மிடம் இருந்தால் மட்டுமே நாம் முழுமையாக வெற்றி பெற்றவர்களாக இருக்க முடியும்.

ஆகவே, அல்லாஹ்விற்குப் பயந்து அவன் அருளியிருக்கும் அருட்கொடைகளைக் கொண்டு அடுத்தவர்களுக்கு நலம் நாடுபவர்களாக, நன்மை செய்பவர்களாக நாம் இருக்க வேண்டும். இவ்வாறு பிறருக்கு நன்மை செய்யும் வகையில் நற்காரியங்களைச் செய்வது; தீய காரியங்களை விட்டும் விலகியிருப்பது என்பது இறைச்சத்தின் வெளிப்பாடு என்பதைப் பின்வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ‌ۚ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِ‌ۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ‌ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதிநாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

(அல்குர்ஆன்: 2:177)

 وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏
الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‌ۚ‏

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அல்குர்ஆன்: 3:133,134)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَا تَحَاسَدُوا، وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ، وَلَا يَحْقِرُهُ التَّقْوَى هَاهُنَا» وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ «بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهُ، وَمَالُهُ، وَعِرْضُهُ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம்-5010

பிறர் நலம் நாடிய நபிகளார்

பிறருக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்று போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். அண்ணலாரின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் பிறருக்கு நன்மை நாடும் வகையில் அமைந்து இருந்தன.

நீதி, நேர்மை, தர்மம், பெருந்தன்மை, மன்னித்தல், உதவி செய்தல், பிறருக்கு துஆ செய்தல் போன்ற மக்களுக்கு நலம் தரும் எல்லா விதமான நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தார்கள். இந்த மாபெரும் மகத்தான உண்மையை நபிகளாரின் வாழ்க்கையைப் படிப்பவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வார்கள். இதற்குரிய சில சான்றுகளை மட்டும் இப்போது பார்ப்போம்.

(நபியவர்கள் ஹிரா குகையில் இருந்த போது அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்தித்தார்கள். 96 அத்தியாயத்தின் 1-5 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன) பிறகு (அச்சத்தால்) அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து “எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்றார்கள்.

அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு “எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், “அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்;

(சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி-3 

مَا يَسُرُّنِي أَنَّ لِي أُحُدًا ذَهَبًا، تَأْتِي عَلَيَّ ثَالِثَةٌ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ، إِلَّا دِينَارٌ أَرْصُدُهُ لِدَيْنٍ عَلَيَّ

உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் (அதை மக்கள் நலனுக்காகச் செலவிடாமல்) மூன்று இரவுகள்கூட கழிந்துசெல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும் பொற்காசைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-1810 

صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ العَصْرَ، فَسَلَّمَ، ثُمَّ قَامَ مُسْرِعًا، فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ حُجَرِ نِسَائِهِ، فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ، فَخَرَجَ عَلَيْهِمْ، فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ، فَقَالَ: «ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا، فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي، فَأَمَرْتُ بِقِسْمَتِهِ

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) அஸ்ர் தொழுகை தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டிக் கொண்டு தம் துணைவியரில் ஒருவரது இல்லம் நோக்கி விரைந்து சென்றார்கள். அவர்களது விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர்.  உடனே நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வந்தபோது தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்புற்று இருப்பதைக் கண்டார்கள்.

எனவே, “எங்களிடம் இருந்த (ஸகாத் நிதியான) தங்கக்கட்டி ஒன்று (தொழுது கொண்டிருக்கும்போது) என் நினைவுக்கு வந்தது. அது (பற்றிய சிந்தனை தொழுகையில் கவனம் செலுத்த விடாமல்) என்னைத் தடுத்துவிடுவதை நான் வெறுத்தேன். ஆகவே நான் (சென்று) அதைப் பங்கிட்டுவிடுமாறு பணித்(து வந்)தேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி)
நூல்: புகாரி-851

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி-6 

مَا سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْإِسْلَامِ شَيْئًا إِلَّا أَعْطَاهُ، قَالَ: فَجَاءَهُ رَجُلٌ فَأَعْطَاهُ غَنَمًا بَيْنَ جَبَلَيْنِ، فَرَجَعَ إِلَى قَوْمِهِ، فَقَالَ: يَا قَوْمِ أَسْلِمُوا، فَإِنَّ مُحَمَّدًا يُعْطِي عَطَاءً لَا يَخْشَى الْفَاقَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப்பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை. இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள்.

அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, “என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்” என்று சொன்னார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்-4629 

إِنِّي لَأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ

நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுதுகொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)
நூல்: புகாரி-707 

أَعْتَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالعِشَاءِ، فَخَرَجَ عُمَرُ فَقَالَ: الصَّلاَةَ يَا رَسُولَ اللَّهِ، رَقَدَ النِّسَاءُ وَالصِّبْيَانُ، فَخَرَجَ وَرَأْسُهُ يَقْطُرُ يَقُولُ: «لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي – أَوْ عَلَى النَّاسِ وَقَالَ سُفْيَانُ أَيْضًا عَلَى أُمَّتِي – لَأَمَرْتُهُمْ بِالصَّلاَةِ هَذِهِ السَّاعَةَ»

நபி (ஸல்) அவர்கள் இந்த (இஷா)த் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பெண்களும் குழந்தைகளும் தூங்கிவிட்டார்கள் என்று சொல்ல, நபி (ஸல்) அவர்கள் தமது விலாவிலிருந்து வழியும் தண்ணீரைத் துடைத்தபடி, “என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (இஷாத் தொழுகைக்கு) இதுதான் சரியான நேரம் (என்று சொல்லியிருப்பேன்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி-7239 

அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சில விஷயங்களைப் பற்றிக் கேட்பதற்காக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?” என்று கேட்டார்கள். நான், “எகிப்தியரில் ஒருவன்” என்று பதிலளித்தேன். அவர்கள், “உங்கள் ஆட்சியாளர் இந்தப் போரில் உங்களிடம் எப்படி நடந்துகொண்டார்?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “வெறுக்கத் தக்க அம்சங்கள் எதையும் நாங்கள் அவரிடம் காணவில்லை. எங்களில் ஒருவரது ஒட்டகம் செத்துவிட்டால், அவருக்கு அவர் ஒட்டகம் வழங்கினார். அடிமை இறந்துவிட்டால், அவருக்கு அடிமை தந்தார். செலவுக்குப் பணம் தேவைப்பட்டால் பணம் தந்தார்” என்று விடையளித்தேன்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அவர் என் சகோதரர் முஹம்மத் பின் அபீபக்ர் விஷயத்தில் நடந்துகொண்ட விதம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியைக் கூறவிடாமல் என்னைத் தடுக்காது” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, “இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்கு உள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

நூல்: முஸ்லிம்-3732 

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலகட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது “அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.

ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். “கர்னுஸ் ஸஆலிப்‘ என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன்.

அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, “முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)”  என்று கூறினார்.

அதற்கு நான், “(வேண்டாம் ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)” என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி-3231 

பிறர் நலம் நாடும் உறுதிமொழி

இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், தமது காலத்தில் வாழ்ந்த மக்களுக்குப் பல்வேறு போதனைகளை போதித்து அதன்படி வாழும்படி அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். நபித்தோழர்களும் நபித்தோழியரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தார்கள்.

பிறருக்கு நலம் நாடும் வகையில் இருக்கும் பல்வேறு காரியங்கள் அந்த உறுதிமொழியில் பிரதானமாக இடம் பெற்றிருந்தன.  இதன் மூலம் பிறருக்கு நலம் நாடுதல் எனும் உயர்ந்த உன்னதமான பண்பினை, நபிகளார் அவர்கள் எந்தளவிற்கு அழுத்தமாக வலியுறுத்தி இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

بَايَعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நாட்டுவதாகவும், ஸகாத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி-57 , (58), (2714)

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்க மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறுசெய்ய மாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்!

உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டு விட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார்.

அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலிலி)
நூல்: புகாரி-18 , (3893), (6073)

அனைவரும், அனைவருக்கும் நலம் நாடுதல்

சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும், பிறருக்கு நலம் நாடுபவராக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. நலம் நாடும் செயல்களை இவர்கள் தான் செய்ய வேண்டும்; அவர்கள் தான் நன்மையான காரியங்களைச் செய்ய வேண்டும் என்று எவரும் ஒதுங்கிக் கொள்ளாமல், அனைவரும் பிறருக்கு நலம் நாடி செயல்பட வேண்டும்.

இந்தப் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டு எல்லோரும் தமது பொறுப்பின் கீழ் இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக நலம் நாட வேண்டும்; நன்மை செய்ய வேண்டும். இது குறித்தும் இறைவன் நம்மை விசாரிப்பான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

«كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ، فَالإِمَامُ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ، وَالمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ زَوْجِهَا وَهِيَ مَسْئُولَةٌ، وَالعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ»

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும்  (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் (தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள்.

அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் (உங்கள்து பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி-5188 

பிறர் நலம் எனும் பட்டியலில் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணை, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டினர், ஊர்மக்கள் என்று அனைத்து மக்களும் அடங்குவர். எனவே அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதோடு அதற்குரிய காரியங்களைச் செய்ய வேண்டும்.

 وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 4:36)

 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْٓ اِسْرَآءِيْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰکِيْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ ؕ ثُمَّ تَوَلَّيْتُمْ اِلَّا قَلِيْلًا مِّنْکُمْ وَاَنْـتُمْ مُّعْرِضُوْنَ‏

“அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்” என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.

(அல்குர்ஆன்: 2:83)

 يَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ؕ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 2:215)

«الدِّينُ النَّصِيحَةُ» قُلْنَا: لِمَنْ؟ قَالَ: «لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ

நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது‘ தான்” என்று கூறினார்கள். நாங்கள், “யாருக்கு (நலம் நாடுவது)?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத் தாரீ (ரலி)
நூல்: முஸ்லிம்-95 

மற்றவர்களின் நலம் நாட வேண்டும் என்று சொல்வதோடு ஒதுங்கிக் கொள்ளாமல், அதை எந்தளவிற்குக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்குரிய பல்வேறு போதனைகளை இஸ்லாம் முன்வைக்கிறது. அவற்றுள் மிக முக்கியமான சிலவற்றை மட்டும் இப்போது பார்ப்போம்.

إِنَّهُ خُلِقَ كُلُّ إِنْسَانٍ مِنْ بَنِي آدَمَ عَلَى سِتِّينَ وَثَلَاثِمِائَةِ مَفْصِلٍ، فَمَنْ كَبَّرَ اللهَ، وَحَمِدَ اللهَ، وَهَلَّلَ اللهَ، وَسَبَّحَ اللهَ، وَاسْتَغْفَرَ اللهَ، وَعَزَلَ حَجَرًا عَنْ طَرِيقِ النَّاسِ، أَوْ شَوْكَةً أَوْ عَظْمًا عَنْ طَرِيقِ النَّاسِ، وَأَمَرَ بِمَعْرُوفٍ أَوْ نَهَى عَنْ مُنْكَرٍ، عَدَدَ تِلْكَ السِّتِّينَ وَالثَّلَاثِمِائَةِ السُّلَامَى، فَإِنَّهُ يَمْشِي يَوْمَئِذٍ وَقَدْ زَحْزَحَ نَفْسَهُ عَنِ النَّارِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடை பாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது  எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்-1833 

اتَّقُوا اللَّعَّانَيْنِ» قَالُوا: وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ، أَوْ فِي ظِلِّهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு, “மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-448 

إِيَّاكُمْ وَالجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ»، فَقَالُوا: مَا لَنَا بُدٌّ، إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا، قَالَ: «فَإِذَا أَبَيْتُمْ إِلَّا المَجَالِسَ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا»، قَالُوا: وَمَا حَقُّ الطَّرِيقِ؟ قَالَ: «غَضُّ البَصَرِ، وَكَفُّ الأَذَى، وَرَدُّ السَّلاَمِ، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ، وَنَهْيٌ عَنِ المُنْكَرِ

“நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள்.  நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

மக்கள், “பாதையின் உரிமை என்ன?” என்று கேட்டார்கள்.  நபி (ஸல்) அவர்கள், “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்குச்  சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி-2465 

أَنَّ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ حُوصِرَ أَشْرَفَ عَلَيْهِمْ، وَقَالَ: أَنْشُدُكُمُ اللَّهَ، وَلاَ أَنْشُدُ إِلَّا أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَفَرَ رُومَةَ فَلَهُ الجَنَّةُ»؟ فَحَفَرْتُهَا، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ قَالَ: «مَنْ جَهَّزَ جَيْشَ العُسْرَةِ فَلَهُ الجَنَّةُ»؟ فَجَهَّزْتُهُمْ، قَالَ: فَصَدَّقُوهُ بِمَا قَالَ

(கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள், (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டார்கள். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் மேற்புறத்தில் நின்று கொண்டு, “அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி (ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். “யார் “ரூமா‘ என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்‘ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி(வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? 

நபி (ஸல்) அவர்கள் “எவர் பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவி செய்து) தயார்படுத்துகின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்‘ என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா?” என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றுக் கொண்டனர்.

அறிவிப்பவர்: அபூஅப்திர் ரஹ்மான் (ரலி)
நூல்: புகாரி-2778 

قُلْتُ: يَا نَبِيَّ اللهِ عَلِّمْنِي شَيْئًا أَنْتَفِعُ بِهِ، قَالَ: «اعْزِلِ الْأَذَى، عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ»

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் நபியே! நான் பயனடையக்கூடிய (நற்செயல்) ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிம்கள் (மக்கள்) நடமாடும் பாதையிலிருந்து தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவீராக” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூபர்ஸா (ரலி)
நூல்: முஸ்லிம்-5109 

பிறர் நலம் நாடுவோரும், கெடுப்போரும்

சமுதாயத்தில் பிறர் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக மனமுவந்து உழைப்பவர்கள் இருக்கிறார்கள். இதற்காகப் பல்வேறு சிரமங்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். பொதுநலன் சார்ந்த பணிகளில் அயராது ஈடுபடுகிறார்கள். இத்தகைய மக்களுக்கு இறைவனின் உதவி இம்மையிலும் மறுமையிலும் இருக்கும். மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று தூய சிந்தனையோடு செயல்படும் இவர்களுக்கு அல்லாஹ் அளவற்ற நன்மைகளை அள்ளி வழங்குவான்.

இதற்கு மாற்றமாக, தாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும்; அடுத்தவர்கள் எப்படி இருந்தால் நமக்கென்ன? என்று சுய நலத்தோடு இருப்பவர்களும் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் உலக ஆதாயங்களுக்காக  அடுத்தவர்களுக்குத் தீமை செய்வது, உரிமைகளைப் பறிப்பது என்று கல் நெஞ்சம் கொண்டவர்களாக, தீய காரியங்களைச் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

இத்தகையவர்கள் ஈருலகிலும் இறைவனின் அன்பையும் கருணையும் இழந்தவர்கள். அவனது எச்சரிக்கைக்கும் தண்டனைக்கும் உரித்தானவர்கள். இதை மனதில் கொண்டு நாம் எப்போதும் பிறர் நலம் நாடுவேராக இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் பிறர் நலம் கெடுப்போராக இருந்துவிடக் கூடாது.

مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا، سَتَرَهُ اللهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ، وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهَّلَ اللهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ، وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ، لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான்.

அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான். யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர்.

மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான். அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-5231 

مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ العِبَادُ فِيهِ، إِلَّا مَلَكَانِ يَنْزِلاَنِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!”  என்று கூறுவார். மற்றொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக்கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!”  என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-1442

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَاءَهُ السَّائِلُ أَوْ طُلِبَتْ إِلَيْهِ حَاجَةٌ قَالَ: «اشْفَعُوا تُؤْجَرُوا، وَيَقْضِي اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَاءَ»

நபி (ஸல்) அவர்களிடம் யாசகர் எவரேனும் வந்தால் அல்லது அவர்களிடம் (எவரேனும் தமது) தேவையை முறையிட்டால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவிசெய்யும்படி பிறரிடம்) பரிந்துரை(யாவது) செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்” என்று கூறுவார்கள். பிறகு “அல்லாஹ் தன் தூதருடைய நாவினால் தான் நாடியதை பூர்த்தி செய்கிறான்” என்பார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி-1432 

قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُوكِي فَيُوكَى عَلَيْكِ» حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ عَبْدَةَ، وَقَالَ: «لاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ»

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக்கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக்கொள்ளப்படும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
நூல்: புகாரி-1433 

إِنَّ شَجَرَةً كَانَتْ تُؤْذِي الْمُسْلِمِينَ، فَجَاءَ رَجُلٌ فَقَطَعَهَا، فَدَخَلَ الْجَنَّةَ

மக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த மரமொன்றை, ஒரு மனிதர் வந்து வெட்டி (அப்புறப்படுத்தி)னார். இ(ந்த நற்செயலைச் செய்த)தற்காக அவர் சொர்க்கத்திற்குள் நுழைந்தார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-5108 

தரீஃப் அபீதமீமா பின் முஜாலித் அல்ஹுஜைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள், ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் உபதேசம் செய்து கொண்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஸஃப்வானும் அவர்களுடைய தோழர்களும், “நீங்கள் அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (ஹதீஸ்) எதையேனும் செவியுற்றீர்களா?” என்று கேட்க ஜுன்துப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டேன் என்று சொன்னார்கள்:

مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ يَوْمَ القِيَامَةِ، قَالَ: وَمَنْ يُشَاقِقْ يَشْقُقِ اللَّهُ عَلَيْهِ يَوْمَ القِيَامَةِ

யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவரை (அவரது நோக்கத்தை) அல்லாஹ் மறுமை நாளில் விளம்பரப்படுத்துவான். யார் (மக்களைச்) சிரமப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் சிரமத்திற்குள்ளாக்குவான்.

நூல்: புகாரி-7152

பிறருக்கு நலம் தரும் காரியங்களைச் செய்யுங்கள்; நலத்தைக் கெடுக்கும் காரியங்களைச் செய்யாதீர்கள் என்று இஸ்லாம் போதிக்கிறது. இது தொடர்பாக இஸ்லாம் மேலோட்டமாக, பெயரளவிற்குப் பேசவில்லை. இதனைத் தனது கொள்கையின் அடிப்படையாக, அடிநாதமாக வைத்து உரக்கச் சொல்கிறது. பிறர் நலம் நாடுவது என்பது இறைநம்பிக்கை மற்றும் இறையச்சத்தின் பிரதிபலிப்பு, மறுமை வெற்றிக்கான மகத்தான வழிமுறை என்று பறைசாற்றுகிறது.

இத்தகைய இனிமையான இஸ்லாமிய மார்க்கம், மக்களுக்கு இன்னல்களை அளிக்கின்ற, பொதுமக்களை அழித்தொழிக்கின்ற தீவிரவாதத்தை ஆதரிக்குமா? என்று நெஞ்சின் மீது கைவைத்து யோசித்துப் பாருங்கள். இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்காது; எப்போதும் அதற்கு எதிரானது என்ற உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.