Tamil Bayan Points

6) புரோகிதமும் சுரண்டலும்

நூல்கள்: அர்த்தமுள்ள இஸ்லாம்

Last Updated on April 15, 2023 by

5. புரோகிதமும் சுரண்டலும்

மதங்கள் யாவும் அர்த்தமற்றவை’ என்று கூறுவோர் மதங்களின் பெயரால் நடக்கும் புரோகிதத்தையும், சுரண்டலையும் மற்றொரு சான்றாக முன் வைக்கின்றனர்.

கடவுளை வழிபடுவதாக இருந்தாலும் திருமணம், அடிக்கல் நாட்டுதல், தொழில் துவங்குதல், புதுமனைப் புகுதல், காது குத்துதல், கருமாதி செய்தல் உள்ளிட்ட எந்தக் காரியமானாலும் அதில் மத குருமார்கள் குறுக்கிடுகின்றனர்.

அவர்கள் மூலமாகத் தான் இந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று விதி செய்து வைத்துள்ளனர்.

மேலும் பேய், பிசாசு, மாயம், மந்திரம், பில்லி சூனியம், தாயத்து, தட்டு என்று பல வகைகளிலும் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்களும் மதத்தின் பெயரால் தான் இவற்றைச் செய்கின்றனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும் சிந்தனையாளர்கள் ‘தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக மத குருமார்கள் உருவாக்கியவை தாம் மதங்கள்’ என்று திட்டவட்டமான முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

ஆனால் இஸ்லாத்துக்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது.

ஏனெனில் புரோகிதத்தை வேரோடு பிடுங்கி எறிந்த மார்க்கம் இஸ்லாம்.

ஒவ்வொரு மனிதனும், ஆணும் பெண்ணும், நல்லவனும், கெட்டவனும், படித்தவனும், படிக்காதவனும் நேரடியாகவே இறைவனிடம் தனது தேவைகளைக் கேட்க வேண்டும். தனக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் கேட்கலாம். ஏனெனில் இறைவனுக்கு எல்லா மொழியும் தெரியும் என்று இஸ்லாம் கூறுகிறது.

மேலும் ‘மனிதனின் தனிப்பட்ட வாழ்விலும் புரோகிதர்களுக்கு வேலை இல்லை’ என இஸ்லாம் அறிவிக்கிறது.

நபிகள் நாயகம் காலத்தில் அப்துர் ரஹ்மான் என்ற செல்வந்தர் இருந்தார். நபிகள் நாயகத்தின் தலை சிறந்த பத்து தோழர்களில் இவரும் ஒருவர். இவர் ஒரு நாள் நறுமணம் பூசியவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘ஏன் நறுமணம் பூசியுள்ளீர்கள்?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். ‘நேற்று எனக்குத் திருமணம் ஆகி விட்டது’ என்று அவர் விடையளித்தார். ‘அப்படியானால் ஒரு ஆட்டை அறுத்து விருந்து அளிப்பீராக’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 2048, 2049, 3781, 3937, 5072, 5153,

‘நான் மதகுரு இருக்கும் போது என்னை அழைக்காமல், எனக்குச் சொல்லாமல் எப்படி நீர் திருமணம் செய்யலாம்?’ என்று அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) கேட்கவில்லை. என்னை அழைக்காததால் திருமணம் செல்லாது எனவும் கூறவில்லை.

‘திருமணத்தை நடத்தி வைக்க மதகுரு அவசியம் இல்லை’ என்பதை இதிலிருந்து அறியலாம்.

‘என் மகளை அவளது சம்மதத்துடன் உனக்கு மணமுடித்துத் தருகிறேன்’ என்று பெண்ணைப் பெற்றவர் (அல்லது வேறு பொறுப்பாளர்) கேட்க, ‘நான் இதை மனமாற ஒப்புக் கொள்கிறேன்’ என்று மணமகன் கூறினால் திருமணம் முடிந்து விட்டது.

நாளைக்குப் பிரச்சினைகள் வந்தால் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்ல குறைந்தது இரண்டு சாட்சிகள். மணமகன் மணமகளுக்கு மஹர் எனும் மணக் கொடை அளித்தல் ஆகியவை தான் இஸ்லாமியத் திருமணம்.

மந்திரங்களோ, வேறு எந்தச் சடங்குகளோ இல்லை.

அது போல் குழந்தைக்குப் பெயர் சூட்டுதல், வீடு கட்டுதல் போன்ற காரியங்களிலும் புரோகிதருக்கு வேலை இல்லை.

இறந்தவருக்காக அவரது நெருங்கிய உறவினர் தான் பிரார்த்தனையை முன்னின்று நடத்த வேண்டும். இங்கேயும் புரோகிதருக்கு வேலையில்லை.

வியாபாரமோ, தொழிலோ, வீடோ எதை ஆரம்பித்தாலும் ‘இறைவா! எனது இந்தக் காரியத்தைச் சிறப்பாக்கி வை!’ என்று ஒவ்வொருவரும் உளமுருகி இறைவனை வேண்டி விட்டு ஆரம்பிக்கலாம். மதகுருமார்கள் யாரையும் அழைக்கத் தேவையில்லை என்று தான் இஸ்லாம் கூறுகிறது.

மேலும் பேய், பிசாசு, பில்லி சூனியம், மாயம் மந்திரம், சாஸ்திரம், சகுணம், சோதிடம், ஜாதகம், நல்ல நாள், கெட்ட நாள் என்று புரோகிதர்களின் வருமானத்திற்காக உருவாக்கப்பட்ட காரியங்கள் அனைத்தையும் அறவே இஸ்லாம் மறுக்கிறது.

எந்த நாளிலும், எந்த நேரத்திலும் எந்தக் காரியத்தையும் செய்யலாம் என்பது தான் இஸ்லாம் காட்டும் நெறி.

எனவே அர்த்தமற்ற தத்துவம் ஏதும் இஸ்லாத்தில் இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.