Tamil Bayan Points

16) புர்தா படிக்கலாமா?

நூல்கள்: கொள்கை விளக்கம்

Last Updated on December 11, 2019 by

புர்தா படிக்கலாமா?

புர்தா என்பது ஒரு கவிஞன் எழுதிய பாடல் தொகுப்பு. மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல்.

இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

வாழ்க்கையில் வளம் பெற

மனநோய் விலக

காணாமல் போன பெருட்கள் கிடைக்க

மற்றும் இன்ன பிற நோக்கங்கள் நிறைவேற

வீடுகளில் இதைப் பாடி வருகின்றனர். அதுவும் கூலிக்கு ஆள் பிடித்துப் பாடச் செய்து வருகின்றனர்.

ஒரு மனிதனுடைய வார்த்தைகளைப் பாடுவதால் இத்தகைய பயன்கள் கிடைக்கும் என நம்புவது அந்த மனிதனுக்கு இறைத் தன்மை வழங்குவதாகும்.

நம்மைப் போன்ற ஒரு மனிதன் எழுதிய பாடலுக்கு இந்தச் சக்தி எப்படி வந்தது? அதை யார் வழங்கியது? அதற்கு ஆதாரம் என்ன? என்றெல்லாம் இந்தச் சமுதாயம் சிந்திக்க மறந்ததால் புர்தாவைப் புனிதமாகக் கருதி வருகின்றனர்.

புர்தா என்பது முழுக்க முழுக்க நல்ல கருத்துக்கள் நிறைந்த கவிதை என்று வைத்துக் கொண்டால் கூட அதை ரசிக்கலாமே தவிர அதற்கு தெய்வீகத் தன்மை இருப்பதாக ஒப்புக் கொள்ள முடியாது.

ஆனால் புர்தா என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளையே தகர்க்கக் கூடிய நச்சுக் கருத்துக் கொண்ட பாடலாக இருப்பதால் அதைப் பாடுவதே குற்றமாகும்.

லவ்ஹுல் மஹ்ஃபூல்’ என்னும் ஏட்டைப் பற்றி நாம் அறிவோம். நடந்தவை, நடக்கவிருப்பவை அனைத்தும் ஒன்று விடாமல் அந்த ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு இலை கீழே விழுந்தாலும் அந்த ஏட்டில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே விழுகின்றன.

وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

அல்குர்ஆன் 6:59

லவ்ஹுல் மஹ்ஃபூல்’ என்பது அனைத்து ஞானங்களின் மொத்தத் தொகுப்பு என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஆனால் புர்தா என்ன சொல்கின்றது தெரியுமா?

(நபியே!) இவ்வுலகமும் மறு உலகமும் உங்களின் அருட்கொடையாகும். லவ்ஹுல் மஹ்ஃபூலில் உள்ள ஞானம் உங்கள் ஞானத்தில் சிறு பகுதி தான்.

அல்லாஹ்வின் ஞானத்தை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஞானம் அதிகம் எனக் கூறும் இந்த நச்சுக் கருத்தைப் பாடியவனும், நம்புபவனும் முஸ்லிமாக இருக்க முடியுமா?

அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும், எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை.

1535 – حدثنا قتيبة حدثنا أبو خالد الأحمر عن الحسن بن عبيد الله عن سعد بن عبيد
أن ابن عمر سمع رجلا يقول : لا والكعبة فقال ابن عمر لا يحلف بغير الله فإني سمعت رسول الله صلى الله عليه و سلم يقول من حلف بغير الله فقد كفر أو أشرك
قال ابو عيسى هذا حديث حسن وفسر هذا الحديث عند بعض أهل العلم أن قوله فقد كفر أو أشرك على التغليظ والحجة في ذلك حديث ابن عمر أن النبي صلى الله عليه و سلم سمع عمر يقول و أبي أبي فقال ألا إن الله ينهاكم أن تحلفوا بآبائكم وحديث ابي هريرة عن النبي صلى الله عليه و سلم أنه قال من قال في حلفه واللات والعزى فليقل لا إله إلا الله
قال أبو عيسى هذا مثل ما روي عن صلى الله عليه و سلم أنه قال إن الرياء شرك وقد فسر بعض أهل العلم هذه الآية من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا الآية قال لا يرائي
قال أبو عيسى هذا حديث حسن
قال الشيخ الألباني : صحيح

கஃபாவின் மேல் ஆணையாக என ஒரு மனிதர் கூறுவதை இப்னு உமர் (ரலி) செவியுற்ற போது, ‘அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யாதே! ஏனெனில் யார் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை வைத்து விட்டார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃது பின் உபைதா

நூல் : திர்மிதீ 1455

பிளவுண்ட சந்திரன் மேல் நான் சத்தியம் செய்கிறேன் என்று புர்தாவில் பூசிரி கூறுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதை இணை வைத்தல் என்று இனம் காட்டினார்களோ அதை நியாயப்படுத்தும் இந்தக் கவிதையை உண்மை முஸ்லிம்கள் நம்ப முடியுமா?

ஒருவர் இவ்வுலகில் எந்த அளவு நன்மையான காரியங்களைச் செய்கிறாரோ அதற்கேற்பவே மறுமை நாளில் இறைவனது அருளைப் பெறுவார். இது சாதாரண முஸ்லிமுக்கும் தெரிந்த உண்மையாகும். இந்தச் சாதாரண உண்மையையும் புர்தா மறுக்கின்றது. மனிதர்களைப் பாவம் செய்யத் தூண்டுகின்றது.

‘அல்லாஹ் தனது அருளைப் பங்கிடும் போது பாவங்களுக்குத் தக்கவாறு வழங்கக் கூடும்’.

ஒருவர் எந்த அளவுக்குப் பாவம் செய்கிறாரோ அந்த அளவுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் எனக் கூறும் இந்த உளறலை நம்ப முடியுமா?

ஒவ்வொரு மனிதனும் தத்தமது செயல்களுக்குத் தான் கூலி கொடுக்கப்படுவான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. ஒருவன் சிறந்த பெயர் சூட்டப்படுகிறான். இதில் பெயர் சூட்டப்பட்டவனுக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை. எத்தனையோ கயவர்களுக்கு அழகான பெயர்கள் அமைந்திருப்பதை நாம் காண்கிறோம். ஆனால் புர்தா என்ன சொல்கிறது தெரியுமா?

என் பெயர் முஹம்மத் என்றிருப்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு என் மீது பொறுப்பு உண்டு. படைப்புக்களிலேயே அவர்கள் தாம் பொறுப்புக்களைச் சிறப்பாக நிறைவேற்றக் கூடியவர்கள்.

முஹம்மத் என்ற பெயருள்ளவருக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா?

முஹம்மத் என்று பூசிரிக்குப் பெயர் சூட்டியது அவரது குடும்பத்தினர் தாம். இந்தப் பெயருக்கும், பூசிரிக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. இவரது பெயர் முஹம்மத் என்று இருப்பதால் இவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காப்பாற்றி விடுவார்களாம். இது எவ்வளவு அபத்தம் என்று சிந்தியுங்கள்.

முஹம்மத் எனும் பெயர் பெற்ற ஒருவர் இவர்களின் பொருட்களை அபகரித்துக் கொண்டால் பொறுத்துக் கொள்வார்களா? நிச்சயமாக பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கே நம்பிக்கை இல்லாத இந்த புர்தாவைப் புனிதமாகக் கருதுவதில் கடுகளவாவது நியாயம் உள்ளதா என்று சிந்தியுங்கள்.

இப்படி புர்தாவில் அனேகம் அபத்தங்கள்! சிந்தனையாளர்களுக்கு இந்த விபரங்களே போதுமாகும்.