Tamil Bayan Points

புறக்கணிப்பு ஒரு போர்க் கவசம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on October 4, 2023 by Trichy Farook

புறக்கணிப்பு ஒரு போர்க் கவசம்

  1. பிரச்சாரத்தின் வழியே வாழ்க்கையாக
  2. புறக்கணிப்பின் பூரண பலன்கள்
  3. கடவுளான காளை மாடு
  4. எதிரிகள் திருந்துதல்
  5. மறுமையில் இது ஒரு காவல் அரண்

முன்னுரை

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபி அவர்களுடைய சமுதாயத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்களது புறக்கணிப்பு என்ற வியூகத்தில் முன்மாதிரி இருக்கின்றது என்று பாராட்டிச் சொல்கின்றான்.

 قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗ‌ۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ لَاَسْتَغْفِرَنَّ لَـكَ وَمَاۤ اَمْلِكُ لَـكَ مِنَ اللّٰهِ مِنْ شَىْءٍ ‌ؕ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏

“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

(அல்குர்ஆன்: 60:4)

தமிழகத்தில் வரதட்சணைக்கு எதிரான தவ்ஹீத் பிரச்சாரத்தில் போட்டியாக சுன்னத் ஜமாஅத் ஆலிம்களும் குரல் கொடுத்தனர். ஆங்காங்கே பல்வேறு ஊர்களில் வரதட்சணை ஒழிப்பு இயக்கங்கள் செயல்பட்டன. பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், கண்டனக் கூட்டங்கள் என்று பல்முனைப் போர்கள் வரதட்சணைக்கு எதிராக நடந்தன.

அவை அனைத்தும் தடயம் தெரியாமல் அழிந்து போயின. கால நீரோட்ட வெள்ளத்தில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டு விட்டன. என்ன காரணம்? போர்க்குரல் எழுப்பிய சுன்னத் வல் ஜமாஅத் போன இடமே தெரியவில்லை. ஏன்? அவர்கள் தாங்கள் சொன்னபடி நடக்கவில்லை.

வரதட்சணைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் தாங்கள் திருமணம் முடிக்கும் போதோ அல்லது தங்களது குடும்பத்தில் தங்கள் மகன்களுக்கோ, சகோதரர்களுக்கோ திருமணம் நடக்கும் போதோ தங்களின் பிரச்சாரத்திற்கு நேர்மாற்றமாக நடந்தனர். வரதட்சணை வாங்குகின்ற, கொடுக்கின்ற திருமணங்களில், அது எளிய திருமணமாக இருந்தாலும் சரி, ஆடம்பரத் திருமணமாக இருந்தாலும் சரி அதில் கலந்து கொண்டு, அங்கு நடைபெறுகின்ற விருந்துகளில் எந்தவித உறுத்தலும், குற்ற உணர்வும் இல்லாமல் பங்கெடுத்தனர்.

இது அந்தக் குற்றத்தைப் பற்றிய பார்வையை மழுங்கவும் மறக்கடிக்கவும் செய்தது. நெருப்பாக இருந்தவர்களை நீறு பூக்க வைத்தது. அதனால் அவர்களது முயற்சிகள், உழைப்புகள் அனைத்தும் விழலுக்கு இழைத்த நீராயிரன. இன்று தப்லீக் இயக்கத்தினர் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியைத் தாங்கள் தான் ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்தது போன்று பேசுவார்கள்.

இதற்கு அவர்கள் தான் தனி ஏஜெண்டுகள் போல் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் வரதட்சணை திருமணங்களில், விருந்துகளில் போய் சர்வ சாதாரணமாகக் கலந்து கொள்வார்கள். அதனால் அவர்களாலும் இந்தத் தீமையை ஒழிக்க முடியவில்லை. ஆனால் தவ்ஹீத் பிரச்சாரம் மூலம் இறைவனின் அருளால் இந்த வரதட்சணை ஒழிப்பில் சாதனை படைத்து வருகின்றது. இதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?

பிரச்சாரத்தின் வழியே வாழ்க்கையாக

 وَمَاۤ اُرِيْدُ اَنْ اُخَالِفَكُمْ اِلٰى مَاۤ اَنْهٰٮكُمْ عَنْهُ‌ ؕ اِنْ اُرِيْدُ اِلَّا الْاِصْلَاحَ مَا اسْتَطَعْتُ‌ ؕ وَمَا تَوْفِيْقِىْۤ اِلَّا بِاللّٰهِ‌ ؕ عَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ اُنِيْبُ‏

“எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே மீளுகிறேன்” என்று (ஷுஐப்) கூறினார்.

(அல்குர்ஆன்: 11:88)

இது, தீமையை ஒழிப்பதற்கு இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்கள் கூறுகின்ற இலக்கணமாகும்.

தான் செய்யாத ஒன்றை மக்களுக்கு ஏவுவதை அல்லாஹ் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றான்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ‏
كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.

(அல்குர்ஆன்: 61:2,3)

இந்தப் பிரச்சாரத்தில் தவ்ஹீத்வாதிகள் நிலைத்து நிற்பதற்கு அடுத்த காரணம், இதுபோன்ற தீமைகளை இப்ராஹீம் (அலை) அவர்களின் பாணியில் புறக்கணித்தது.

வரதட்சணை எனும் கொடிய தீமை நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று தவ்ஹீத்வாதிகள் மிக வலிமையாகப் போதிப்பதாலும், இந்தத் திருமணங்களைப் புறக்கணிப்பதாலும் வரதட்சணை ஒழிப்பில் சாதனை படைத்து வருகின்றது.

புறக்கணிப்பின் பூரண பலன்கள்

பொதுவாக ஒரு தீமையைப் புறக்கணிக்கும் போது அதில் மிகப் பெரிய பலன்கள் உள்ளன. நாம் அந்தத் தீமைக்குப் பலியாகாமல் இருப்பது அதில் முதலாவதாகும். தடுக்கப்பட்ட ஒரு தீமையில் பங்கெடுப்பது அந்தத் தீமையின் கடுமையை நம்மிடம் குறைத்து விடும். கடைசியில் நாமும் அந்தத் தீமையைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

பனூ இஸ்ரவேலர்களிடம் இது தான் நடந்தது. அதனால் அவர்கள் இறைத்தூதர்களின் சாபத்திற்கு ஆளாயினர்.

 لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ‌ ؕ ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ‏

كَانُوْا لَا يَتَـنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ‌ؕ لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ‏

“தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏக இறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம். அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது.

(அல்குர்ஆன்: 5:78,79)

தீமையான காரியங்களில், குறிப்பாக இணை வைப்பு என்ற கொடிய தீமையில் ஒரு கவர்ச்சியும், கவிழ்த்து விடும் தன்மையும் உள்ளது. பனூ இஸ்ரவேலர்கள் இந்தக் கவர்ச்சிக்குப் பலியானதை அல்லாஹ் இரண்டு இடங்களில் கூறுகின்றான்.

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். “மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!” என்று கேட்டனர். “நீங்கள் அறிவு கெட்ட கூட்டமாகவே இருக்கின்றீர்கள்” என்று அவர் கூறினார்.

وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَاۤءِيْلَ الْبَحْرَ فَاَ تَوْا عَلٰى قَوْمٍ يَّعْكُفُوْنَ عَلٰٓى اَصْنَامٍ لَّهُمْ‌ ۚ قَالُوْا يٰمُوْسَى اجْعَلْ لَّـنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ‌  ؕ قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ‏

اِنَّ هٰٓؤُلَۤاءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِيْهِ وَبٰطِلٌ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏

قَالَ اَغَيْرَ اللّٰهِ اَبْغِيْكُمْ اِلٰهًا وَّهُوَ فَضَّلَـكُمْ عَلَى الْعٰلَمِيْنَ‏

“அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியக் கூடியது. அவர்கள் செய்து வந்தவையும் வீணானது.”

“அல்லாஹ் அல்லாதவர்களையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்? அவனே உங்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருக்கிறான்” என்று (மூஸா) கூறினார்.

(அல்குர்ஆன்: 7:138-140)

பிளந்த கடல் சேர்ந்து, காய்ந்த இடம் கூட நனைந்திருக்காது. ஆனால் அதற்குள் அவர்களுடைய நிலை அவ்வளவு பெரிய பாவத்தை நோக்கி விரைகின்றது. ஏதோ சிறு குழந்தைகள் பொம்மைகளை வாங்கிக் கேட்பது போன்று சிலைகளைத் தங்களுக்கு ஏற்படுத்தித் தருமாறு கேட்கின்றனர்.

கடவுளான காளை மாடு

மூஸா (அலை) அவர்கள் இறைவனிடத்தில் வேதம் பெறுவதற்காகச் செல்கின்றார்கள். அதற்குள்ளாக சாமிரி என்பவன் அந்தச் சமுதாயத்திற்குள் ஒரு விளையாட்டை விளையாடி விட்டான். இதை அல்லாஹ் மிகவும் சுவையாக விவரிக்கின்றான்.

وَمَاۤ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ يٰمُوْسٰى‏

قَالَ هُمْ اُولَاۤءِ عَلٰٓى اَثَرِىْ وَ عَجِلْتُ اِلَيْكَ رَبِّ لِتَرْضٰى‏

 قَالَ فَاِنَّا قَدْ فَتَـنَّا قَوْمَكَ مِنْۢ بَعْدِكَ وَاَضَلَّهُمُ السَّامِرِىُّ‏

 فَرَجَعَ مُوْسَىٰۤ اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ يٰقَوْمِ اَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ۙ اَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ اَمْ اَرَدْتُّمْ اَنْ يَّحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِّنْ رَّبِّكُمْ فَاَخْلَفْتُمْ مَّوْعِدِىْ‏

 قَالُوْا مَاۤ اَخْلَـفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلٰـكِنَّا حُمِّلْنَاۤ اَوْزَارًا مِّنْ زِيْنَةِ الْقَوْمِ فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَى السَّامِرِىُّ ۙ‏

 فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَاۤ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰى فَنَسِىَ‏

 اَفَلَا يَرَوْنَ اَلَّا يَرْجِعُ اِلَيْهِمْ قَوْلًا ۙ وَّلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّا وَّلَا نَفْعًا

 وَلَـقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ يٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖ‌ۚ وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِىْ وَاَطِيْعُوْۤا اَمْرِىْ‏

 قَالُوْا لَنْ نَّبْرَحَ عَلَيْهِ عٰكِفِيْنَ حَتّٰى يَرْجِعَ اِلَيْنَا مُوْسٰى‏

قَالَ يٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَيْتَهُمْ ضَلُّوْٓا ۙ‏

 اَلَّا تَتَّبِعَنِ‌ؕ اَفَعَصَيْتَ اَمْرِىْ‏

قَالَ يَابْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْيَتِىْ وَلَا بِرَاْسِىْ‌ۚ اِنِّىْ خَشِيْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَيْنَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِىْ‏

 قَالَ فَمَا خَطْبُكَ يٰسَامِرِىُّ‏

قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَـبْصُرُوْا بِهٖ فَقَبَـضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِىْ نَفْسِى‏

قَالَ فَاذْهَبْ فَاِنَّ لَـكَ فِى الْحَيٰوةِ اَنْ تَقُوْلَ لَا مِسَاسَ‌ وَاِنَّ لَـكَ مَوْعِدًا لَّنْ تُخْلَفَهٗ‌ ۚ وَانْظُرْ اِلٰٓى اِلٰهِكَ الَّذِىْ ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا‌ ؕ لَّـنُحَرِّقَنَّهٗ ثُمَّ لَـنَنْسِفَنَّهٗ فِى الْيَمِّ نَسْفًا‏

“மூஸாவே! உமது சமுதாயத்தை விட்டு விட்டு அவசரமாக வந்தது ஏன்?” (என்று இறைவன் கேட்டான்.)

“அவர்கள் இதோ எனக்குப் பின்னால் வருகின்றனர். என் இறைவா! நீ திருப்திப்படுவதற்காக உன்னிடம் விரைந்து வந்தேன்” என்று அவர் கூறினார்.

“உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்து விட்டான்” என்று (இறைவன்) கூறினான்.

உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார். “என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா? அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகி விட்டதா? அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா?” என்று கேட்டார்.

“நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறு செய்யவில்லை. மாறாக அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே ஸாமிரியும் வீசினான்.

அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவர்க(ளில் அறிவீனர்க)ள் “இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்” என்றனர்.

அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

“என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!” என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.

“மூஸா, எங்களிடம் திரும்பி வரும் வரை இதிலேயே நீடிப்போம்” என்று அவர்கள் கூறினர்.

“ஹாரூனே! அவர்கள் வழி கெட்டதை நீர் பார்த்த போது என்னை நீர் பின்பற்றாதிருக்க உமக்கு என்ன தடை? எனது கட்டளையை மீறி விட்டீரே!” என்று (மூஸா) கேட்டார்.

“என் தாயின் மகனே! எனது தாடியையும், எனது தலையையும் பிடிக்காதீர்! எனது வார்த்தைக்காக காத்திராமல் இஸ்ராயீலின் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர் என்று கூறுவீரோ என அஞ்சினேன்” என்று (ஹாரூன்) கூறினார்.

“ஸாமிரியே! உனது விஷயமென்ன?” என்று (மூஸா) கேட்டார்.

“அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது” என்றான்.

“நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் “தீண்டாதே‘ என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்” என்று (மூஸா) கூறினார்.

(அல்குர்ஆன்: 20:83-97)

மூஸா (அலை) அவர்கள் தனது சகோதரர் ஹாரூனைக் கண்காணிக்கும்படிச் செய்து விட்டு, சில நாட்கள் இறைவனிடம் வேதம் பெறுவதற்காகச் சென்று திரும்புவதற்குள்ளாக இவ்வளவு பெரிய விளையாட்டை சாமிரி என்பவன் விளையாடித் தள்ளிவிட்டான். இத்தனைக்கும் ஹாரூன் என்ற இறைத்தூதர் ஊரில் இருக்கின்றார். அப்படியாயின் இந்த இணை வைப்பு என்ற விஷம் எப்படிப்பட்டது? அதன் வீரியமும் கவர்ச்சியும் எப்படிப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இன்று இந்துக்களிடம் உள்ள பொங்கல் பண்டிகையை எடுத்துக் கொள்வோம். இது சூரியனைக் கடவுளாக வழிபடுகின்ற ஒரு பண்டிகையாகும். அந்தப் பண்டிகைக்கு நம்மை அழைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாம் இதில் போய் கலந்து கொள்வோம் என்றால் இந்தப் பாவத்தின் வீரியம் நம்மிடமிருந்து எடுபட்டுப் போய் நாளடைவில் நாமும் சமத்துவப் பொங்கல் கொண்டாட ஆரம்பித்து விடுவோம்.

இங்கு தான் இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பு நமக்குக் கைகொடுக்கின்றது. நம்மை நரகத்திலிருந்து காப்பாற்றி விடுகின்றது. கலாச்சாரக் கலப்பு என்ற பெயரில் இணை வைப்பில் வீழ்ந்து விடாமல் நம்மையும் நம்முடைய சந்ததிகளையும் இந்தப் புறக்கணிப்பு காப்பாற்றுகின்றது.

எதிரிகள் திருந்துதல்

 وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ لِاَبِيْهِ وَقَوْمِهٖۤ اِنَّنِىْ بَرَآءٌ مِّمَّا تَعْبُدُوْنَۙ‏

 اِلَّا الَّذِىْ فَطَرَنِىْ فَاِنَّهٗ سَيَهْدِيْنِ‏

وَ جَعَلَهَا كَلِمَةًۢ بَاقِيَةً فِىْ عَقِبِهٖ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏

என்னைப் படைத்தவனைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நான் விலகியவன். அவன் எனக்கு நேர் வழி காட்டுவான் என்று இப்ராஹீம் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கூறியதை நினைவூட்டுவீராக!

இதையே அவரது வழித்தோன்றல்களிலும் நிலைத்திருக்கும் கொள்கையாக்கினான். இதனால் அவர்கள் திருந்தக்கூடும்

(அல்குர்ஆன்: 43:26-28)

இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பில் முன்மாதிரி இருக்கின்றது என்று (அல்குர்ஆன்: 60:4) வசனத்தில் சொன்ன அல்லாஹ், இந்தக் கொள்கைப் பிரகடனத்தைப் பிந்தைய சமுதாயத்திற்குத் தொடரும் கொள்கையாக ஆக்கியிருப்பதாகக் கூறுகின்றான். ஏகத்துவக் கொள்கை எங்கெல்லாம் உதயமாகியிருக்கின்றதோ அங்கு இந்தப் புறக்கணிப்பு தொடரும் என்று கூறுகின்றான். இதன் மூலம் மக்கள் இந்தக் கொள்கைக்குத் திரும்புவார்கள் என்றும் கூறுகின்றான். ஆம்! இந்தப் புறக்கணிப்பின் மூலம் மக்கள் திருந்துவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

உதாரணத்திற்கு, பொங்கல் பண்டிகைக்காக அழைப்பவர்களிடம், “நாங்கள் ஒரே இறைவனை வணங்குபவர்கள்; அவன் அல்லாதவர்களுக்காகப் படைக்கப்பட்டதை நாங்கள் சாப்பிட மாட்டோம்’ என்று கூறும் போது அது அவர்களைச் சிந்திக்க வைக்கின்றது. இறுதியில் அவர்களை மனம் மாற வைக்கின்றது.

நம்முடைய தாய், தந்தை அல்லது பிள்ளைகள் போன்ற உறவினர்கள் இணை வைப்பில் இருந்தால் அவர்களிடம் இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பு என்ற போர் கவசத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

இப்படி நாம் இருக்கும் போது, நாம் அவர்களுடைய கொள்கையில் ஒருபோதும் இறங்கப் போவதில்லை. ஆனால் சத்தியவாதிகளைப் போன்று அசத்தியவாதிகளால் உறுதியாக இருக்க முடியாது. அவர்கள் பாசத்திற்குப் பலியாகி விடுவார்கள். அதன் மூலம் சத்தியத்திற்கு வந்து விடுவார்கள். இது புறக்கணிப்பின் மூலம் கிடைக்கும் மிகப் பெரும் வெற்றியாகும்.

மறுமையில் இது ஒரு காவல் அரண்

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், “(மேகமூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியத்துக்கொண்டு) சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை” என்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) விளக்கினார்கள்:

(மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், “ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று அழைப்புவிடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தமது கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக்(கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லவர்கள் அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொணரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும்.

அப்போது யூதர்களிடம், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை” என்று சொல்லப்படும். பிறகு அவர்களிடம், “இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கவர்கள், “எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!” என்பார்கள். அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு), “குடியுங்கள்” என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும்போது) அவர்கள் நரகத்தில் விழுந்துவிடுவார்கள்.

பின்னர் கிறிஸ்தவர்களிடம், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள்; அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை” என்று கூறப்பட்ட பின் “நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) “குடியுங்கள்!” என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்துவிடுவார்கள்.

இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லோர் அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் “மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றுவிட்டார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கப்படும்.

அதற்கு அவர்கள், “(உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர் “ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகவாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்துகொள்ளட்டும்‘ என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வணங்கிக் கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுவார்கள்.

அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணிவைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து, “நானே உங்கள் இறைவன்” என்று கூறுவான். அதற்கு இறைநம்பிக்கையாளர்கள், “நீயே எங்கள் இறைவன்” என்று சொல்வார்கள். அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, “அவனை இனங்கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?” என்று (ஒருவர்) கேட்பார்.

அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், “(இறைவனின்) கால் (பாதம்)தான்” என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தனது காலை வெளிப்படுத்துவான். இறை நம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்கு சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள்; அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால், அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிர வணக்கம் செய்ய முடியாது).

நூல்: புகாரி-7439 .

புகாரி-4581 வது எண்ணில் இடம் பெற்றுள்ள இதே அறிவிப்பில், “உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக்கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று பதிலளிப்பதாக இடம் பெற்றுள்ளது.

மறுமையில் இந்தப் பதில் நம்முடைய வாயிலிருந்து வர வேண்டும் என்றால் இந்த உலகில் புறக்கணிப்பு என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால் தான் வரும். இல்லையென்றால் இந்த வார்த்தை நம்மிடம் வராது.

இந்த அடிப்படையில் புறக்கணிப்பு என்பது இம்மையிலும் மறுமையிலும் நம்மைக் காக்கும் ஒரு கவசமாக அமைந்திருக்கின்றது. இப்ராஹீம் நபியின் தியாகங்களை நினைவுகூருகின்ற இந்த நாட்களில் அவர்களின் புறக்கணிப்பு என்ற போர்க்கவசத்தை நமது கொள்கையாகக் கொள்வோமாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.