Tamil Bayan Points

30) பெண்களும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளுதல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

Last Updated on October 29, 2023 by

அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.

அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ்

நூல்: ஹாகிம் 1/519

பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளக்கூடாது என்றால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பாக்ள்

ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல் அவர்களது அறையின் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் தொழுகை நடத்தினார்கள். ‘ஜனாஸாவைப் பள்ளிக்குள் கொண்டு வரும் வழக்கம் (நபியின் காலத்தில்) இருந்ததில்லை’ என்று மக்கள் பேசிக் கொண்டனர். இதை மக்கள் குறை கூறுவது நபிகள் நாயகத்தின் மனைவியருக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் கிடைத்தது. உடனே அவர்கள் ‘தங்களுக்கு அறிவு இல்லாத விஷயத்தைக் குறை கூற மக்கள் என்னே அவசரம் காட்டுகிறார்கள்? பள்ளிவாசலுக்குள் ஜனாஸாவைக் கொண்டு சென்றதற்காக எங்களைக் குறை கூறுகின்றனர். ஸுஹைல் பின் பைளா அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் தான் தொழுகை நடத்தினார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1616, 1615, 1617

பெண்கள் எப்படி ஜனாஸா தொழுகையில் சேரலாம் என்று நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்யவில்லை. ஜனாஸாவை எப்படி பள்ளிவாசலுக்குள் கொண்டு வரலாம் என்று தான் நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்ததாக இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே பெண்கள் ஜனாஸா தொழுகையில் பங்கெடுப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததன் காரணமாகவே நபித்தோழர்கள் இதை ஆட்சேபிக்கவில்லை என்று அறியலாம்.

ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாத நேரங்கள்

1. சூரியன் உதிக்கும் நேரம். 2. சூரியன் உச்சிக்கு வரும் நேரம். 3. சூரியன் மறையும் நேரம் ஆகிய மூன்று நேரங்களில் தொழுவதையும், இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1373

மேற்கண்ட நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதால் அதில் ஜனாஸா தொழுகையும் அடங்கும். மேலும் இறந்தவர்களை அந்த நேரங்களில் அடக்கம் செய்யக் கூடாது என்று இணைத்துக் கூறியிருப்பது மேலும் இக்கருத்தை வலுப்படுத்துகின்றது.