Tamil Bayan Points

17) பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?

நூல்கள்: இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா

Last Updated on December 11, 2019 by

பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாக சிலர் நினைக்கின்றனர்.

இது முற்றிலும் தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு தினமும் வந்து தொழுகையில் பங்கெடுத்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்த ஒன்றை யாரும் தடை செய்ய முடியாது.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களின் அறியாமை காரணமாக பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இஸ்லாம் இதை அனுமதிக்கின்றது.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்’

என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 900, 873, 5238.

பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: புகாரி 865, 899.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

நூல்: புகாரி 578, 372, 867, 872

.’நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்டு விட்டால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். (தொழுகையில் கலந்து கொண்ட) அக்குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 707, 862, 708, 709, 710, 868.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவுத் தொழுகையைத் தாமதமாகத் தொழுதனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று ‘பெண்களும் சிறுவர்களும் உறங்குகின்றனர்’ என்று தெரிவித்தார்கள்.

நூல்: புகாரி 866, 569, 862, 864.

தொழுகை முடிந்தவுடன் பெண்கள் முதலில் வெளியே செல்லும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மற்ற ஆண்களும் தமது இடத்திலேயே அமர்ந்திருப்பது வழக்கம்.

நூல்: புகாரி 875, 837, 866

பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து வழிபடலாம். கூட்டுத் தொழுகையில் பங்கேற்கலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
அரபு நாடுகளிலும், மலேசியாவிலும் பெண்கள் இன்றளவும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்துகின்றனர்.

முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் முதலிடம் மக்காவில் உள்ள பள்ளிவாசலுக்கு உண்டு. அங்கே ஆண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது போல் பெண்களும் நிறைவேற்றுகின்றனர். தொழுகின்றனர்.

மார்க்கம் அறியாத சில பேர் சில பகுதிகளில் பெண்களைத் தடுத்தாலும் அது சிறிது சிறிதாக மாறி வருகிறது.