Tamil Bayan Points

பெருநாளின் போது தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் என்று கூறலாமா

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on October 26, 2022 by

பெருநாளின் போது தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் என்று கூறலாமா

இரண்டு பெருநாட்களின் போதும் “தகப்பல்லாஹூ மின்னா வமின்கும்” என்று கூறும் பழக்கம் அரபு தேசத்து மக்களிடையே காணப்படுகிறது. அவர்களிடமிருந்து பிர தேசத்து முஸ்லிம்களும் அவ்வாறு கூறுவதை பின்பற்றி வருகின்றனர். பெருநாளின் போது “தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்” என்று கூறலாம் என வரும் செய்திகள் அனைத்தும் மிக மிகப் பலவீனமானவையாக உள்ளன. பலவீனத்துடன் அவை ஒன்றுக் கொன்று முரணாகவும் உள்ளன.

ஒரு செய்தியில் நபியவர்கள் அவ்வாறு சொன்னார்கள் என்றும் மற்றொரு செய்தியில் அவ்வாறு கூறுவது யூதக் கலாச்சாரம் என்றும் நபியவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. அந்த அறிவிப்புகளையும் அவை எவ்வகையில் பலவீனமானது என்பதையும் சுருக்கமாகக் காண்போம்.

முதலாவது அறிவிப்பு

ஹாலித் பின் மஃதான் என்பார் அறிவிக்கின்றார் : நான் பெருநாள் அன்று வாஸிலா இப்னு அஸ்கஃ (ரலி) அவர்களைச் சந்தித்து தகப்பலல்லாஹு மின்னா வமின்க” (அல்லாஹ் உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறினேன்.

அதற்கவர்கள் ஆம் ! தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறினார்கள். பிறகு அவர்கள் சொன்னார்கள் ”நான் பெருநாள் அன்று நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ”நஅம் (ஆமாம்) தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று பதிலுரைத்தார்கள் என்று கூறினார்.

நூல் : சுனன் அல்பைஹகில் குப்ரா (6088)

இந்தச் செய்தியில் நான்கு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

1. பகிய்யா இப்னுல் வலீத் . இவர் முதல்லிஸ் ஆவார். அதாவது தான் செவியேற்காதவர்களிடமிருந்து செவியேற்றதைப் போன்று அறிவிப்பவர். இவர்கள் தெளிவாகச் செவியேற்றதற்குரிய வார்த்தையைப் பயன்படுத்தி அறிவித்தால் மட்டுமே அந்த அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படும். இந்தச் செய்தியில் இவர் ”அன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியே அறிவிக்கின்றார். முதல்லிஸ் இவ்வாறு அறிவித்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது.

2. இஸ்ஹாக் இப்னு இப்ராஹிம் இப்னு சுஃப்யான் என்ற அறிவிப்பாளர் இந்த செய்தியில் இடம் பெற்றுள்ளார். இவர் மஜ்ஹூலுல் ஹால் ஆவார். அதாவது யாரென்றே அறியப்படாதவர் ஆவார். இந்த அடிப்படையிலும் இந்தச் செய்தி பலவீனமாகின்றது.

3. அஹ்மத் இப்னுல் ஃபர்ஜ் என்ற அறிவிப்பாளர் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளார். இவரைப் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.

4. முஹம்மத் பின் இப்ராஹிம் அஸ்ஸாமீ என்ற அறிவிப்பாளர் இச்செய்தியில் இடம் பெற்றுள்ளார். இவர் ”மத்ரூகுல் ஹதீஸ்” ”ஹதீஸ்களில் கைவிடப்பட்டவர்” ஆவார். இவரைப் பல அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேற்கண்ட செய்தியில் நான்கு பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ள காரணத்தினால் இது இட்டுக் கட்டப்பதற்கு நெருக்கமான மிகமிகப் பலவீனமான செய்தியாகும்.

இரண்டாவது அறிவிப்பு

سنن البيهقي الكبرى (3/ 319)

6091 – أخبرناه أبو الحسين بن بشران ببغداد أنبأ أبو جعفر محمد بن عمرو الرزاز ثنا محمد بن الهيثم بن حماد ثنا نعيم بن حماد ثنا عبد الخالق بن زيد بن واقد الدمشقي عن أبيه عن مكحول عن عبادة بن الصامت رضي الله عنه قال : سألت رسول الله صلى الله عليه و سلم عن قول الناس في العيدين تقبل الله منا ومنكم قال ذلك فعل أهل الكتابين وكرهه عبد الخالق بن زيد منكر الحديث قاله البخاري

عبد الخالق بن زيد الدمشقي متروك الحديث

உப்பாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு பெருநாட்களிலும் மக்கள் ”தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்” என்று கூறுவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இது வேதக்காரர்களான (யகூதி நஸாராக்களின்) கலாச்சாரமாகும் என்று கூறி அவ்வாறு கூறுவதை வெறுத்தார்கள்.

நூல் : சுனன் அல்பைஹகி அல்குப்ரா (6091)

இந்தச் செய்தியும் பலவீனமானதாகும்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் ”அப்துல் ஹாலிக் இப்னு ஸைத் அத்திமிஸ்கி” என்பார் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் புகாரி ”முன்கருல் ஹதீஸ்” (நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவிப்பவர்) என்று விமர்சித்துள்ளார். மேலும் பல அறிஞர்களும் இவரை விமர்சித்துள்ளனர். எனவே இது பலவீனமான செய்தியாகும்.

இன்னும் சொல்லப் போனால் செய்தியின் தரத்தினை வைத்துப் பார்க்கும் போது ”தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்” என்று கூறலாம் என்று வரும் மிகப் பலவீனமான செய்தியை விட அவ்வாறு கூறுவது யகூதி நஸாரா கலாச்சாரம் என்று வரும் பலவீனமான செய்திதான் ஒப்பீட்டளவில் குறைவான பலவீனம் உடையதாகும்.

எனவே இது தொடர்பான செய்திகள் பலவீனமாக இருக்கின்ற காரணத்தினால் இதனை மார்க்கமாகக் கருதி பின்பற்றுவது கூடாது. இது நபியவர்களின் காலத்திற்கு பிறகு உருவாகிய கலாச்சாரமாக இருக்கின்ற காரணத்தினால் இதற்கு மார்க்கச் சாயம் பூசுவது பித்அத் என்னும் நரகத்தில் தள்ளும் வழிகேடாகும்.