Tamil Bayan Points

23) போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

Last Updated on October 29, 2023 by

அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் நடத்தும் போரில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டுமா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

இது பற்றி முரண்பட்ட இரண்டு அறிவிப்புகள் வந்துள்ளதே கருத்து வேறுபாட்டுக்குக் காரணம்.

உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 1343, 1348, 4080

ஒரு கிராமவாசி நபிகள் நாயகத்தைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார். அவர் போரில் கொல்லப்பட்டார். அவரை தமது குளிராடையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபனிட்டார்கள். பின்னர் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: ஷத்தாத் (ரலி)

நூல்: நஸயீ 1927

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தும் விஷயத்தில் முரண்பட்ட இரண்டு அறிவிப்புகள் உள்ளதால் இதில் கருத்து வேறுபாடு உள்ளது.

ஆயினும் வீரமரணம் அடைந்தவர்களுக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்பதே சரியாகும்.

உயிருடன் உள்ளவர்களிடமும், இறந்தவர்களிடமும் விடைபெறுபவர் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின் தொழுகை நடத்தினார்கள். பின்னர் மிம்பர் (மேடை) மீது ஏறினார்கள். ‘நான் உங்களுக்கு முன்னே செல்கிறேன். நான் உங்கள் மீது சாட்சி கூறுபவனாக இருக்கிறேன். ஹவ்ல் (கவ்ஸர்) தான் உங்களை நான் சந்திக்கும் இடம். நான் இந்த இடத்திலிருந்து கொண்டே அதைக் (கவ்ஸரை) காண்கிறேன். நீங்கள் இணை வைப்பீர்கள் என்பது பற்றி (நபித் தோழர்களாகிய) உங்கள் விஷயத்தில் நான் அஞ்சவில்லை. மாறாக இவ்வுலகம் பற்றியே அதில் மூழ்கி விடுவீர்கள் என்று அஞ்சுகிறேன்’ எனக் கூறினார்கள். அது தான் நபிகள் நாயகத்தை நான் இறுதியாகப் பார்த்ததாகும்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: புகாரி 4042

இறந்தவர்களுக்குத் தொழுகை நடத்துவது போல் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள் என்று சில அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

(புகாரி 1344, 3596, 4085, 6426, 6590)

உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு உடணடியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை என்றாலும் தாம் மரணிப்பதற்குச் சில நாட்களுக்கு முன், உஹதுப் போர் நடந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள் என்றால் இதைத் தான் நாம் சான்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உஹதுப் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நாம் தொழுகை நடத்தவில்லையே என்று எண்ணி நாம் மரணிப்பதற்குள் எப்படியும் தொழுகை நடத்திவிட வேண்டும் என்று முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஏற்கனவே விட்ட ஜனாஸா தொழுகையை இப்போது தொழுதிருக்கும் போது இதில் கருத்து வேறுபாட்டுக்கு எந்த நியாயமும் இல்லை.