Tamil Bayan Points

போரில் நபிகளார் பொய் சொல்வார்களா?

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

Last Updated on March 21, 2021 by

போரில் நபிகளார் பொய் சொல்வார்களா?

குழப்பவாதிகளுக்குப் பதில்

புகாரியில் இடம்பெறும் ஹதீஸ்:

கஅப் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச்) செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். “தபூக் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தான் பின்தங்கி விட்ட கால கட்டத்தைக் குறித்து என் தந்தை கஅப் இப்னு மாலிக் (ரலி) விவரித்தபோது இதை அவர்கள் கூற கேட்டேன்” என்று கஅப் (ரலி) முதிய வயதடைந்து கண்பார்வையிழந்து விட்ட போது அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த – அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு கஅப் (ரஹ்) அறிவித்தார்.

நூல்: புகாரி-2947

இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள கவனிக்கத்தக்க வாசகம் நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச்) செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். நபியவர்கள் எந்தப் போருக்குச் செல்வதாக இருந்தாலும் பாசாங்கு செய்வார்கள் என்று இதில் இடம்பெறத்தானே செய்கிறது? பாசாங்கு என்றால் பொய் தானே! என்று நாம் வாதம் வைத்திருந்தோம்.

இதற்கு பதிலளிக்க ஓடோடி வந்த ஒரு ஸலபி, “இவர்கள் குறிப்பிடும் புகாரி ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் போரில் பொய் சொன்னார்கள் என்று இல்லை. மாறாக தவ்ரியத் செய்வார்கள் அதாவது மறைப்பார்கள் என்று தான் இடம்பெறுகிறது” என்கிறார்.

மறைத்தல் என்பது பொய்யில் அடங்காது, உதாரணமாக ஒருவர் திருநெல்வேலி செல்வதை இலக்காக நிர்ணயிக்கிறார். ஆனால் பிறரை திசைதிருப்ப வேண்டி அவர் சென்னையைப் பற்றி விசாரிக்கிறார். இறுதியில் திருநெல்வேலிக்கே செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதில் பொய் எங்கிருந்து வருகிறது? உண்மையை மறைத்தல் தானே இதில் உள்ளது. இதுபோன்று தான் நபி (ஸல்) அவர்கள் போரின் போது நடந்து கொள்வார்கள்.

இலக்கு ஒன்றாக இருக்க வேறு எங்கோ செல்வதைப் போன்று காட்டிக் கொள்வார்கள். இறுதியில் இலக்கு எதுவோ அதை நோக்கிப் பயணிப்பார்கள். எனவே இந்த ஹதீஸில் நபி பொய் சொன்னார்கள் என்ற இவர்களது கருத்திற்கு ஆதாரமில்லை என்கிறார்.

நபி பொய் சொன்னார்கள் என்றால் அது அவர்களின் கண்ணியத்தைப் பாதிக்கும் என்பது தான் இந்த வாதத்தின் அடிப்படையாக உள்ளது. பொய் என்ற வார்த்தைக்குப் பதிலாக பாசாங்கு செய்தார்கள் என்று சொன்னால் கன்னியத்தைப் பாதிக்காதாம். என்னே அறிவு!

தவ்ரியத்தில் பொய் அடங்காதா?

நபி (ஸல்) அவர்கள் எந்தப் போருக்குச் சென்றாலும் வேறெங்கோ செல்வதைப் போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள் என்று ஹதீஸில் வருகிறது. பாசாங்கு செய்து மறைப்பார்கள் என்று மட்டுமே வருகிறது. எப்படி என்ற மேலதிக விபரம் எதுவும் அந்த ஹதீஸில் இல்லை.

நபியவர்கள் இலக்காக இல்லாத வேறொரு ஊரைப்பற்றி விசாரித்து விட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊருக்குச் செல்வார்கள் அவ்வளவு தான் என்று இந்தக் குறைமதியாளர்  கூறுகிறார். வேறொரு ஊரைப் பற்றி விசாரிப்பார்கள் என்று சாதாரணமாக இஷ்டத்துக்கு விளக்கம் தருகிறார்.

வேறொரு ஊரைப் பற்றி சும்மா விசாரித்து விட்டு, திட்டமிட்ட ஊருக்குப் போவதில் இரண்டுமே தனித்தனி செயல்களாகி விட்டன. இதில் மறைத்தல் பாசாங்கு செய்தல் எதுவும் இல்லை. பாசாங்கு என்று எப்போது சொல்வோம்? வேறு ஒரு ஊரைக் கொண்டு மறைப்பார்கள் என்று எப்போது சொல்வோம்?

நாம் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகப் பயணிக்க உள்ளோம் என்று மக்களுக்குச் சொல்லி விட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக புறப்பட்டால் அதில் தான் பாசாங்கு உள்ளது. வேறு ஒன்றாக மறைத்தல் உள்ளது.

திருச்சியில் மாம்பழம் கிடைக்குமா என்று மக்களிடம் விசாரித்து விட்டு தஞ்சாவூருக்குப் போனால் அதில் மறைத்தல் ஒன்றும் இல்லை. பாசாங்கு ஒன்றும் இல்லை.

இதில் இருந்து தெரிவது என்ன? ஹதீஸில் சொல்லப்பட்டதற்கு எதிராக தனது மனோ இச்சைப்படி உளறியுள்ளார் என்பதுதான் தெரிகிறது.

இந்த ஹதீஸில் மறைப்பார்கள் என்று மட்டும் இருந்தால், போகும் ஊரைச் சொல்ல மாட்டார்கள் என்ற கருத்து வரும். அது பொய்யில் சேராது. ஆனால் மறைத்தார்கள் என்ற சொல்லுடன் வேறு ஒன்றைக் கொண்டு போகும் ஊரை அல்லது இலக்கை மறைப்பார்கள் என்று தான் மூலத்தில் உள்ளது. பிகைரிஹா என்றால் வேறு ஒன்றைக் கொண்டு என்று பொருள். இவர் வேறு ஒன்றைக் கொண்டு என்ற சொல்லை அர்த்தமற்றதாக்கி இருப்பதை இதிலிருந்து அறியலாம்.

அதாவது, சென்னை நோக்கி போருக்குச் செல்வதாக இருந்தால் திருநெல்வேலிக்குச் செல்லவிருக் கிறேன் என்று சொல்வார்கள். இந்த தகவலே எதிரிகளிடம் பரவும். இறுதியில் நாம் சென்னைக்கு செல்வோம் என்பார்கள். இதுதான் வேறு ஒன்றாக மறைத்தல் ஆகும்.

இங்கே நாம் கேட்பது சென்னைக்குச் செல்லவிருக்கும் ஒருவர் திருநெல்வேலிக்குச் செல்ல விருப்பதாகச் சொல்வது பொய் இல்லையா?

இதனடிப்படையில் போரில் நபி பொய் சொல்லியுள்ளார்கள் எனும் கருத்தை இந்த ஹதீஸ் தாங்கியே நிற்கிறது. நபி (ஸல்) அவர்கள் போரில் பொய் சொல்லியுள்ளார்கள் என்பது ஹதீஸில் இல்லாத கருத்து என்பதை போன்று இவர்கள் மூளை வறண்டு வறட்டு வாதம் செய்கின்றனர்.

தவ்ரியத் என்பதும் பொய் தானே?

உள்ளத்தில் ஒரு கருத்தை நினைத்துக் கொண்டு எதிராளி வேறொன்றைப் புரிந்து கொள்ளும் படி எதைச் செய்தாலும் பேசினாலும் அதுவும் பொய் என்ற பட்டியலில் தான் இடம் பெறும்.

ஒருவர் ஆயிரம் ரூபாய் இருந்தால் கடனாகத் தாருங்கள் என்கிறார்.

இன்னொருவர் தவ்ரியத் – மறைத்தல் அடிப்படையில் என்னிடம் நூறு ரூபாய் கூட இல்லை என்கிறார். உண்மையில் அப்போது அவரிடம் எந்த நூறு ரூபாய் நோட்டும் இல்லை, ஆனால் பல ஆயிரம் ரூபாய்கள் அவரிடம் உள்ளன. இந்நிலையில் இவர் பேசியது தவ்ரியத் தான். இதில் குற்றமில்லை என்பார்களா?

தவ்ரியத் – மறைத்துப் பேசுதல்- பொதுவாகவே அனுமதி என்றால் எல்லா இடங்களிலும் இவ்வாறு பேசலாமா?

நீதிபதி கொலையாளி ஒருவனிடம் இன்னாரை நீ கொலை செய்தாயா? என்கிறார். குற்றவாளியோ கூலிப் படையை ஏவி கொலை செய்துள்ள நிலையில் அதை மறைத்து நான் சம்பவ இடத்திற்குச் செல்லவே இல்லையே என்கிறான்.

இது தவ்ரியத் – மறைத்துப் பேசுதல் தான். இவ்வாறு செய்யலாம் இது பொய் அல்ல என்று இந்த ஸலபுக் கும்பல் வாதிடுமா?

கண்ணை மூடிய நிலையில் ஒரு பொருளைத் திருடி, அபகரித்து, அதை விற்றும் விட்ட ஒருவனிடம் “இந்தப் பொருளை நீ தான் திருடினாயா?’ என்று கேட்கும் போது “அதை நான் பார்க்கவே இல்லையே’ என்று சொன்னால் அது பொய் அல்ல என்று சொல்வார்களா? இது பொய்     அல்ல, அவர் தூய உண்மையைப் பேசி விட்டார், பொய் எனும் குற்றத்திலிருந்து தப்பித்து விட்டார் என்பார்களா?

எனவே தவ்ரியத் எனும் மறைத்து பேசுதல் பொய்யில் தான் சேரும். மார்க்கம் அனுமதித்த இடங்களில் இதுபோன்று பேசினால் அது குற்றமல்ல; அதுவல்லாத இடங்களில் இவ்வாறு பேசுவது குற்றம் என்பதே சரியான கருத்தாகும்.

எங்கேயும் எப்போதும்

உள்ளத்தில் ஒன்றை நினைத்துக் கொண்டு எதிராளி இன்னொன்றைப் புரிந்து கொள்ளும் படி எங்கேயும், எப்போதும் பேசலாம், அது பொய்யல்ல என்று கூறும் இந்த ஸலபுக் கும்பல் மார்க்க விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் தவ்ரியத் செய்ய மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்?

இவர்கள் சூனியம் இல்லை என்று உள்ளத்தில் நினைத்துக் கொண்டு, கேட்பவனுக்கு இருக்கிறது எனும் தோற்றத்தை ஏற்படுத்தும் படி பேசலாம் தானே?

ஸஹாபாக்களைப் பின்பற்றக் கூடாது என்று உள்ளத்தில் நினைத்துக் கொண்டு, பின்பற்றலாம் என மக்கள் விளங்கும் படி மார்க்கம் பேசுவார்கள் தானே!

தர்கா வழிபாடு, மத்ஹபுகள் கூடாது என்று உள்ளத்தில் நினைத்துக் கொண்டு இவைகளில் எந்தத் தவறும் இல்லை என சிலேடையாக, எதிராளி புரிந்து கொள்ளும் படி இவர்கள் பேசுவர்கள் தானே!

எங்கேயும் எப்போதும் மறைத்துப் பேசலாம் அது பொய்யல்ல, அல்லாஹ் அதற்காகத் தண்டிக்க மாட்டான் என்று கூறும் இத்தகையவர்களை மார்க்க விஷயங்களில் எப்படி நம்ப இயலும்?

மக்கள் இவர்கள் விஷயத்தில் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துக் கொள்கிறோம்.

பொய் சொல்வது நபியின் கண்ணியத்தைப் பாதிக்காதா?

அடுத்து இன்னொரு விஷயம் உள்ளது.

நபி பொய் சொன்னால் அது அவர்களின் கண்ணியத்தைப் பாதிக்காதா என்று கேட்பதில் இவர்கள் உண்மையாளர்களாக இல்லை.

ஏனெனில் மூன்று சந்தர்ப்பங்களில் பொய் சொல்ல நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள். அதை இந்த கள்ள சலபுக் கும்பல் ஏற்றுக் கொள்கிறது. அப்படியானால் நபியவர்கள் தனது சமுதாயத்துக்கு பொய் சொல்லக் கற்றுக் கொடுத்து விட்டார் என்று ஆகுமே? பொய் சொல்வது எப்படி கண்ணியத்தைப் பாதிக்குமோ அது போல் பொய் சொல்ல வழிகாட்டுவதும் கண்ணியத்தைப் பாதிக்குமே?

போரில் பொய் சொல்வது பொய்யாக ஆகாது என்று நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தி விட்டார்கள்.

உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்” என்று கூறுவதை நான் கேட்டேன்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கள் பொய் என்று சொல்லக் கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப் படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

  1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).
  2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.
  3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.

நூல்: முஸ்லிம்-5079

மார்க்கம் எதைப் பொய்யல்ல என்று சொல்லிவிட்டதோ அதைச் செய்வதால் எப்படி நபியின் கண்ணியம் பாதிக்கப்படும்? மார்க்கத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் பொய் சொல்பவர் அல்லாஹ்வின் பார்வையில், மார்க்கத்தின் பார்வையில் பொய்யராக, பொய் சொன்னவராக ஆக மாட்டார்.

இதனடிப்படையில் போரில் நபி பொய் சொல்வதால் நபியின் கண்ணியத்திற்கு எந்த இழுக்கும் வருவதில்லை. நபி பொய் சொன்னவராக ஆக மாட்டார்கள். இந்தச் சாதாரண அறிவு கூட மூளை மழுங்கிப் போன இவர்களுக்கு இல்லை.

மார்க்கம் ஒன்றை அனுமதித்த பிறகு அதைச் செய்வதால் நபியின் கண்ணியம் பாதிக்கப்படும் என்ற வாதத்தை மனோ இச்சைவாதிகளே வைப்பார்கள். இறைவனின் வார்த்தைகளிலும், தூதரின் வார்த்தைகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை இல்லாதவர்களே இப்படிப் பேசுவார்கள். இதிலிருந்து ஹதீஸ் களின் பாதுகாவலர் என்ற இவர்களது முகமூடி கிழிந்து தொங்குவதைக் காணலாம்.

இன்னும் சொல்லப்போனால் போரில் உண்மையை அப்படியே பேசினால் தான் கண்ணியம் பாதிக்கப்படும். நபியவர்கள் ஒரு போருக்குச் செல்லும் போது என்னிடம் 200 படை வீரர்களூம், ஐம்பது வாட்களும், 50 குதிரைகளும் தான் உள்ளன. வேறு ஒன்றும் இல்லை என்று கூறினார்கள் என்று வைத்துக் கொள்வோம். தனது மக்களைக் காக்க கடமைப்பட்ட இவர், எதிரிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தி நாட்டைக் காக்க கடமைப்பட்ட இவர் இப்படி உள்ளதைச் சொல்லி, எதிரிகளுக்குச் சாதகமாக நடக்கிறாரே என்று அறிவுடைய மக்கள் நினைத்தால் அது தான் அவர்களின் கண்ணியத்தைப் பாதிக்கும்.

சில இடங்களில் உண்மையைப் பேசுவதும் கண்ணியத்தைப் பாதிக்கும் என்பது கூட இவருக்குப் புரியவில்லை.

சவூதி அரசாங்கம் ஏமனில் தனது படைகளை இறக்கி போருக்கு வருகிறது. அது குறித்து சவூதி அரசாங்கம் உண்மையைத் தவிர வேறு எதையும் கூறக் கூடாது என்று மேற்படியார் பத்வா கொடுப்பாரா? சவூதி என்பதை இணைத்து இக்கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். அப்போது பத்வா மாறிவிடும்.

இமாம்களின் தலைப்பு இஸ்லாமாகுமா?

ஒரு ஹதீஸிற்கு, அல்லது வார்த்தைக்கு அர்த்தம் செய்யும் போது இமாம்களின் தலைப்பையும் பார்க்க வேண்டும் என்ற கருத்தை தன் பேச்சினிடையே விதைக்கின்றார்.

இமாம்கள் எப்படி தலைப்பிட்டு உள்ளார்களோ அதற்கேற்பவே நாம் சிந்திக்க வேண்டும், அதற்கேற்பவே பொருள் செய்ய வேண்டும், அதற்கேற்பவே நாம் நமது கொள்கையை வகுக்க வேண்டும் என்ற கருத்தைச் சொல்லாமல் சொல்கிறார் என்றல்ல. அப்படியே அச்சரம் பிசகாமல் சொல்கிறார்.

வஹீயை மட்டுமே அடிப்படை யாகக் கொண்டு கொள்கையை வகுக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் பிரச்சாரம் செய்தவர் இன்றைக்கு மத்ஹபினரை விடவும் மோசமாக இமாம்களின் தலைப்பை வைத்தே இஸ்லாத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்ற பாரதூரமான கருத்தைப் பதிய வைக்கின்றார் எனில் இவரது கொள்கை ரீதியிலான பின்னோக்கிய நகர்வை என்னவென்பது?

இமாம்கள் எப்படிப் புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் மார்க்க விவகாரங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான சான்றுகளை வெளியிடுவாரா?

மறைத்து பேசுதல் – தவ்ரியத் – பாணியில் அல்லாமல் தெளிவாக, நேரடியாகச் சொல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

உலக அதிசயம்

பொய் சொல்வதை விட, பிறரை பொய் சொல்வதற்குத் தூண்டுவது தான் ஒரு மனிதரின் கண்ணியத்தைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாகும். அந்த அடிப்படையில் நபிகள் நாயகம் போரில் பொய் சொல்ல அனுமதி வழங்குவதன் மூலம் பிறரை பொய் சொல்லத் தூண்டியுள்ளார்கள். இது நபிகள் நாயகத்தின் கண்ணியத்தை பாதிப்பதாக இந்த மாலைக்கண் நோயுடைய கும்பலுக்கு தெரியவில்லை.

போர் என்பது தந்திரம் என்று கூறி பிறரை தந்திரக்காரர்களாக மாற்றியது இவர்களின் காமாலைக் கண்ணுக்குக் குற்றமாக, கண்ணியக் குறைவாகத் தெரியவில்லை. ஆனால் நபியவர்கள் போரில் பொய் சொல்லியுள்ளார்கள், தந்திரம் செய்துள்ளார்கள் என்று நாம் ஹதீஸ்களின் அடிப்படையில் சொல்லும் போது, நபியின் கண்ணியத்தைச் சீர்குலைத்து விட்டதாகத் துள்ளிக் குதிக்கிறார்கள்.

பொய் சொல்வதை விட பொய் சொல்லத் தூண்டுவது ஒரு மனிதரின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் பாரதூரமான விஷயமாகும். அந்த அடிப்படையில் நபியின் கண்ணியத்தைக் காக்க (?) புறப்பட்ட இந்தக் கள்ள ஸலபுக்கும்பல் நபியவர்கள் போரில் பொய் சொல்ல அனுமதி வழங்கியதையும் மறுப்பார்களா?

சஹாபாக்கள் எத்தகைய நல்லவர்கள், அவர்களை தந்திரக்காரர் களாகத் தூண்டும் படி நபி பேசுவது நபியின் கண்ணியத்தைக் குறைப் படுத்தாதா? என்று கூறி அந்த ஹதீஸுக்கு இது போல் அற்புத வியாக்கியானம் கொடுப்பார்களா?

நபி போரில் பொய் சொல்லியுள்ளார்கள் என்று சொல்வது நபியின் கண்ணியத்தைப் பாதிக்கும் என கூப்பாடு போடுபவர்கள், போரில் பொய் சொல்ல நபி அனுமதி வழங்கியது, தந்திரம் செய்யும் படி கூறியுள்ளது போன்றவைகளை அப்படியே ஏற்பதும், இதனால் நபியின் கண்ணியம் பாதிப்படைய வில்லையா? என்ற கேள்விக்கு எந்தச் சலனமும் இன்றி இவர்கள் மௌனம் காப்பதும் உலக அதிசயங்களில் ஒன்றாகும்.

பின்பாஸை விமர்சிக்கத் தயாரா?

சவூதி அறிஞரான இமாம் பின்பாஸ் அவர்கள் நபிகள் நாயகம் போரில் சொன்னது பொய்யின் வகையில் உள்ளது தான் என தெளிவாகக் கூறுகிறார்.

எங்கெல்லாம் பொய் சொல்ல அனுமதிக்கப்பட்டது என்று தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் புகாரியில் இடம்பெற்றுள்ள, “நபிகள் நாயகம் போருக்குச் செல்லும் போது வேறெங்கோ செல்வதைப் போன்று பாசாங்கு செய்து மறைப்பார்கள்’ எனும் செய்தியைக் குறிப்பிட்டு விட்டு,

“இந்தப் பொய்யில் எந்த மோசடியும் ஏமாற்று வேலையும் இல்லை. மாறாக முஸ்லிம்களின் நலனே நாடப்படுகிறது. எனவே போரில் இத்தகைய பொய்யினால் எந்த பிரச்சனையும் இல்லை’

என்று விளக்கம் அளிக்கிறார்.

இதிலிருந்து நபிகள் நாயகம் போரில் சொன்னது பொய் தான் என்று உறுதிப்படுத்துகிறார்.

இதோ அவர் அளித்துள்ள ஃபத்வா மற்றும் லிங்க்:

http://www.binbaz.org.sa/noor/835

இப்போது கள்ள ஸலபுக்கும்பல் என்ன சொல்லப் போகிறார்கள்?

இமாம் பின்பாஸ், நபிகள் நாயகம் போரில் பொய் சொன்னார்கள் என்று கூறி நபியின் கண்ணியத்தை அவமதித்து விட்டார் என்று சலபுக்கும்பல் கொதித்தெழுவார்களா? ஆர்ப்பரிப்பார்களா?

நாம் இந்தக் கருத்தைச் சொன்னதற்காக ஆளாளுக்கு இதர வேலையை விட்டு விட்டு இதையே முழு வேலையாக எண்ணி, அக்கினிக் குழம்பாக வெடித்துச் சிதறி, பல மணி நேரம் பேசி வீடியோ வெளியிட்ட இந்த ஸலபுக் கும்பல் பின்பாஸுக்கு எதிராகப் பொங்கி எழுவார்களா? வெடித்துச் சிதறு வார்களா? வீடியோ வெளியிடுவார் களா? அல்லது புஸ்வாணமாகிப் போவார்களா?

ஏனிந்த இரட்டை நிலை? ஏனிந்த இரட்டை நாக்கு?

நபிகள் நாயகம் போரில் பொய் சொல்லியுள்ளார்கள் என்று நாம் சொன்னால் போதும். இவர்கள் நபி மீது வைத்திருந்த (போலி) பாசம் கட்டுப்பாடற்று பொங்கி எழுந்து ஏதேதோ பேசுகிறார்கள்.

அதையே பின்பாஸ் சொல்லியுள்ளார் என்றால் அது தவறு தான் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுகிறார்கள். குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் விஷயத்திலும் இதையே தான் செய்தார்கள்.

ஆயிஷா (ரலி) குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற காரணத்தைச் சொல்லி சில ஹதீஸ்களை மறுத்தால் அது தவறு. அதையே தவ்ஹீத் ஜமாஅத் செய்தால் அது வழிகேடு, ஹதீஸ் மறுப்பு, குஃப்ரிய்யத் என்ற ஃபத்வா.

இது தான் உங்களது நடுநிலையா? உங்களது விமர்சனத்தில் நியாயம் உள்ளதா?

நபியின் கண்ணியம் பற்றிப் பேச கடுகளவும் தகுதி இல்லாத கும்பல்களில் கள்ள சலபுகளுக்கு முதலிடம் உள்ளது.

அன்னியப் பெண் வீட்டுக்கு நபியவர்கள் போவார்கள். அப்பெண் நபியவர்களுக்குப் பேன் பார்ப்பார். அங்கேயே படுத்து உறங்குவார்கள் என்று சொல்லப்படும் கட்டுக்கதையை ஹதீஸ் எனக் கூறி நியாயப்படுத்தி நபியின் கண்ணியத்தை அதிகம் குலைத்தவர்கள் இவர்கள்.

ஒரு பெண்ணிடம் “அன்னிய இளைஞனுக்கு நீ பாலூட்டு’ என்று நபி கூறினார்கள் என்ற கட்டுக் கதையை நியாயப்படுத்தும் இவர்கள் நபியின் கண்ணியம் பற்றிப் பேசலாமா?

தனக்குச் சாதகமாக பொய் சாட்சி சொன்னவரை நபியவர்கள் பாராட்டினார்கள் என்ற கட்டுக்கதையை ஹதீஸ் என இவர்கள் கூறுவதில் இருந்து நபியை எப்படி கண்ணியப்படுத்துகிறார்கள் என்பது தெரிகிறதா?

எள்ளளவுக்கும் மன நோய்க்கு ஆளாகாத அல்லாஹ்வின் தூதர் சூனியம் செய்யப்பட்டதால் மன  நோயாளியாகிப் போனார்கள் என்று கூறும் இவர்கள் நபியின் கண்ணியம் பற்றிப் பேசக் கடுகளவும் அருகதை அற்றவர்கள் என்பதையும் கூடுதல் தகவலாக சொல்லி வைக்கிறோம்.

இதிலிருந்து இவர்கள் இப்படிப் பேசியதற்குக் காரணம் மார்க்கப்பற்றோ, சரியானதை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற மார்க்க உணர்வோ அல்ல. மாறாக  காழ்ப்புணர்வே காரணம் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.