Tamil Bayan Points

மதச்சார்பின்மைக்கு எதிரான பாபர் மசூதி தீர்ப்பு

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on December 31, 2019 by

மதச்சார்பின்மைக்கு எதிரான பாபர் மசூதி தீர்ப்பு

கடந்த 60 ஆண்டுகளாக பாபர் மசூதி நிலம் சம்பந்தமான வழக்கு நடைபெற்றது. உலகே எதிர்பார்த்த அதன் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடத்திற்கு உரிமை கோரி மூன்று பேர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் விசித்திரம் என்னவென்றால் குழந்தை இராமன் சிலை ஒரு மனுதாரராகவும், நிர்மோகி அகோரா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் மனுதாரர் ஆவார்கள்.

இந்த மூன்று தரப்பினர் களுக்கிடையே 2.77 ஏக்கர் நிலம் சம்பந்தமாக நடந்த வழக்கில் குழந்தை இராமன் சிலைக்கு ஆதரவாக 9.11.2019 அன்று உச்சநீதிமன்றம் ஒரு வேடிக்கையான தீர்ப்பை வழங்கியுள்ளது. 1949ஆம் ஆண்டு பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக இராமன் சிலை வைக்கப்பட்டது. 1959ல் பாபர் மசூதி இடத்தின் மீது உரிமை கோரி நிர்மோகி அகோரா சிவில் வழக்கு தொடுக்கிறது.

1961ஆம் ஆண்டு இதற்கு எதிராக சன்னி வக்ஃபு வாரியம் எதிர்மனு தாக்கல் செய்தது. 1989ல் பாபர் மசூதி நிலம் சம்பந்தமான வழக்கில் ஓய்வுபெற்ற அலகாபாத் நீதிமன்ற நீதிபதி தேவகிந்தன் அகர்வால் குழந்தை ராமனை (அதாவது தற்போது பத்திரிகையில் குறிப்பிடுவது போல் ராம்லல்லா) மனுதார்ராக்கி தன்னை குழந்தை ராமன் காப்பாளர் என்று மேற்கண்ட வழக்கில் இணைத்தார்.

அவர் மறைந்த பின் குழந்தை ராமன் சிலையின் காப்பாளராக திரிலோக்நாத் பாண்டே தன்னை வழக்கில் இணைத்துக் கொண்டார். உரிமையியல் சட்டவிதி 32ன் படி (order 21 of the civil procedure code) குழந்தை ராமன் சிலை சட்ட ரீதியான நபராகவும் அந்த சிலை மைனர் என்பதாலும் அதற்கு பேசும் ஆற்றல் இல்லாததாலும் காப்பாளர் மூலம் வழக்கு தொடுக்கும் உரிமையை குழந்தை ராமன் சிலை பெற்றது.

இன்று குழந்தை ராமன் சிலைக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். பாபர் மசூதி நிலம் சம்பந்தமாக உலகே எதிர்பார்த்த தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.ஏ. போப்டே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துந் நஸீர் இடம் பெற்றனர்.

இவர்கள் மனுதாரராக இருந்த குழந்தை ராமன் சிலைக்கு பாபர் மசூதி நிலம் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். பாபர் மசூதியின் வரலாற்றை ஆராய்ந்தால் அது முஸ்லிம்களின் மீது திட்டமிட்டு பழி வாங்கும் வரலாறாகவே உள்ளது. 1949ஆம் ஆண்டில் பாபர் மசூதிக்குள் குழந்தை ராமன் சிலை வைக்கப்பட்டது. முஸ்லிம்களின் வழிபாட்டு தளத்தில் சிலை வைத்ததை தடுக்க வேண்டிய நீதிமன்றம் 1986ல் வழிபாட்டுக்கு திறந்து விடும்படி முதல் தீயை கொளுத்திப் போட்டது.

அந்த அநீதியான தீர்ப்பை பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே வழங்கினார். தீர்ப்பில் குறிப்பிட்ட இடத்தில் பாபர் மசூதி உள் ராமன் பிறந்ததாக இந்துக்கள் நம்புவதால் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கினார். சிலை வைக்கப்பட்டதை ஒத்துக் கொண்ட நீதிபதி ஆதரவாகவே தீர்ப்பு கூறினார். நீதிபதி கேஎம். பாண்டே வழங்கிய தீர்ப்பிற்கு பின்னால் ராஜீவ் காந்தியின் ஆசிர்வாதம் இருந்தது.

இந்துக்களின் ஓட்டினை காங்கிரஸ் அறுவடை செய்த நேரத்தில் அதை அத்வானி பா.ஜ.க.விற்கு சாதகமாக்கினார். அது பாஜகவை ஆட்சியில் அமர்த்தும் அளவிற்கு உயர்த்தியது. நீதிபதி கே.எம். பாண்டே வழங்கிய தீர்ப்பு இந்துத்துவா சக்திகளுக்கு உற்சாகம் ஊட்டியது. வழக்கில் பட்டா, பத்திர சான்றுகள் இல்லாமல் இந்துக்கள் நம்புவதாக தீர்ப்பு தந்தது அத்வானி போன்றோர்களை அரசியல் களத்தில் இறக்கியது.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி அத்வானி ரத யாத்திரை தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. பைசலாபாத்தில் வழங்கிய தீர்ப்பே இந்துக்களுக்கு ஒருதலைபட்சமாக வழங்கிய தீர்ப்பே பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்தது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி காவிக் கயவர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

அதன் பின் பாபர் மசூதி நிலம் சம்பந்தமான வழக்கில் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில் பாபர் மசூதி 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகோரா, குழந்தை ராமன் சிலைக்கு பிரித்து வழங்கியது. இந்த வழக்கின் போது முஸ்லிம் தரப்பு ஆவணங்கள் சான்றுகளை பரிசீலிக்க மறுத்தது.

500 ஆண்டுகளாக முஸ்லிம்கள் வழிபாடு நடத்தி வந்த பள்ளிவாசல் அலகாபாத் உ ய ர் நீ தி ம ன் ற நீதிபதிகள் சர்மா, கான், அகர்வால் மூலம் கூறுபோடப்பட்டது. அதே நேரம் தொல் பொருள் ஆய்வாளர்களும், பிரபல வரலாற்று ஆசிரியர்களான ரொமீலா தாப்பர், இர்பான்ஹபீப் ஆகியோர் இந்துக் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்படவில்லை. அதேபோல் 1992ல் பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய கொடூரத்தை விசாரணை நடத்தி சமர்பித்த லிபரான் கமிசன் அறிக்கைகளையும் நீதிமன்றம் மதிக்கவில்லை.

ராமன் பிறந்த இடம் பாபர் மசூதிதான் அதை நிரூபிக்க தேவையில்லை என்ற இந்துத்துவாவின் திமிரான வாதத்தை நீதிமன்றம் ஏற்றது. இதன் தொடர்சியாகவே தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாபர் மசூதிக்கு சொந்தமான இடத்தை 3 பேர் உரிமை கொண்டாடி வழக்கு தொடுத்தனர். என்பதை பார்த்தோம்.

சிவில் சம்பந்தமான இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம் ஒருதலை பட்சமாக வழக்கிற்கு சிறிதும் சம்பந்தபில்லாமல் ராமர் கோவில் கட்டுவதற்கு புதிய அறக்கட்டளை ஒன்றை மூன்று மாதத்தில் உருவாக்க வேண்டுமென்றும் அந்த அறக்கட்டளையிடம் 2.77 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு ஒப்படைக்க வேண்டுமென்று இந்துத்துவாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதே நேரம் போலி மதச்சார்பின்மை வேஷம் போட்டு நாட்டில் நீதியை நிலைநாட்ட ராமர் கோயில் கட்டுவதற்காக அங்கிருந்த பாபர் மசூதியை இந்து கரசேவகர்கள் இடித்தது தவறான செயல். அதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் பரிகாரமாக அயோத்தி நகரின் முக்கிய பகுதியில் முஸ்லிம் தரப்பினர் புதிய மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி தர வேண்டும் என வழக்கிற்கு சம்பந்தமில்லாமல் இந்திய அரசியல் சட்ட மதச்சார்பின்மைக்கு எதிராக நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பை தோலுரித்துக் காட்ட வேண்டிய பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகள் இந்த தீர்ப்பிற்கு ஆதரவாக அமைதி காத்து சொல்கின்றன. அறிவு சார்ந்த ஊடகத்துறை பாபர் மசூதியில் தொல்லியல் சான்றை பார்த்ததுபோல் பாபர் மசூதி இடத்தில் ராமன் பிறந்தான் என்ற சான்றை கேட்க தவறியது பாபர் மசூதி தீர்ப்பின் மூலம் நாட்டின் போலி மதச்சார்பின்மை முகத்திரை கி ழிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் எண்ண ஓட்டத்தை அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் உணரவில்லை எனத் தெரிகிறது. முஸ்லிம்களை அமைதி காக்கச் சொல்லி உரிமைகள் பறிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் முஸ்லிம்களாகிய நாம் வாழ்வுரிமை போராட்டக் களத்தில் வீரியமாக இறங்க வேண்டும். அப்பொழுதுதான் நமது உரிமையை நிலைநாட்ட முடியும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர வேண்டும்.

Source: unarvu (15/11/19)