Tamil Bayan Points

மனனம் செய்ய நாவை அசைக்காதீர்!

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

Last Updated on September 30, 2016 by Trichy Farook

மூசா பின் அபீ ஆயிஷா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், (நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) இறை வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: தம் மீது வஹீ (வேத அறிவிப்பு) அருளப்படும் போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு உதடுகளையும் அசைத்துக் கொண்டி ருந்தார்கள். ஆகவே, (அல்லாஹ்விடமிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படும் போது அவசர அவசரமாக உங்கள் நாவை அசைக்காதீர்கள் என்று உத்தரவிடப்பட்டது. (எங்கே தம் மீது அருளப்படும் வேத வசனங்கள் நினைவில் பதியாமல் மறதியில்,) தம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.

அதை ஒன்றுசேர்த்து, ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும் எனும் (75:17ஆவது) வசனத்திற்கு நாமே உங்களது நெஞ்சத்தில் அதனை(ப் பதியச் செய்து,) ஒன்று சேர்ப்போம். நீங்கள் அதனை ஓதும்படி செய்வோம் என்று பொருள்.

நாம் இதனை ஓதிவிட்டோமாயின்… எனும் (75:18ஆவது) வசனத்திற்கு, ஜிப்ரீல் மூலமாக உங்களுக்கு என் வசனங்கள் அருளப்பட்டுவிடுமாயின்… என்று பொருள்.

நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள். பின்னர் அ(தன் கருத்)தை விளக்குவதும் நமது பொறுப்பாகும் எனும் (75:19ஆவது) வசனத்திற்கு, உங்களுடைய நாவினால் பிறருக்கு விளக்கிக் கொடுக்கச் செய்வதும் எமது பொறுப்பேயாகும் என்று பொருள்.

(புகாரி 4928)