Tamil Bayan Points

மரண சாசனம் – வஸிய்யத் என்றால் என்ன?

முக்கிய குறிப்புகள்: வாரிசுரிமைச் சட்டங்கள்

Last Updated on October 5, 2016 by Trichy Farook

வஸிய்யத் என்றால் இறந்தவர் இறக்கும் முன் அல்லது இறக்கும் தருவாயில் சொத்துரிமைப் பங்கீடு பெறாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு அல்லது மத்ரஸா, பள்ளிவாசல், அறக்கட்டளை போன்றவற்றிற்கு தனது சொத்தை சாஸனம் செய்தல் ஆகும்.

வாரிசுரிமைப் பங்கு பெற்றவர்களுக்கு அறவே வஸிய்யத் செய்யலாகாது. பங்கு பெறாதவர்களுக்கு வஸிய்யத் செய்யலாம்.

வாரிசுதாரர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது:

(மரண சாஸனத்தின் மூலம் வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது என அல்லாஹ் குறிப்பிடுகிறான். (அல்குர் ஆன் 4:12) எனவே வாரிசுகளுக்குக் கிடைக்க வேண்டிய பாகத்தில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாதவாறு வஸிய்யத்து செய்ய வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அதை எப்படி செய்வது?

நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் நான் நோய் வாய்ப்பட்டிருந்த போது, என்னை நோய் வினவுவதற்காக ரஸுல் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டு விட்டேன் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். எனக்கு ஏராளமான பொருட் செல்வம் உள்ளது. எனக்கு ஒரே ஒரு மகள் மட்டும் தான் வாரிசு. எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானமாக வழங்கிடட்டுமா? எனக் கேட்க, “வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் பாதியை தானமாகக் கொடுத்து விடவா?” எனக் கேட்க அதற்கும் மறுத்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்து விடவா? என நான் மீண்டும் கேட்க, “மூன்றில் ஒரு பங்கு என்பது அதிகம்”, என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள் “மக்களிடம் கையேந்திப் பிழைக்கும் ஏழைகளாக உமது சந்ததியினரை விட்டுச் செல்வதை விட பணக்காரர்களாக விட்டுச் செல்வது மிக நல்லது” என நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்.

புகாரி: 3936, 4409, 5668, 6373

எனவே வஸிய்யத்து செய்யும் போது மூன்றில் ஒரு பங்கை விட அதிகம் வஸிய்யத்து செய்து சொத்துரிமை உள்ளவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாகாது. மூன்றில் ஒரு பங்குக்கு மேல் வஸிய்யத்து செய்திருந்தால் அது செல்லாது எனவும் அறிய முடிகிறது. மேலும் சொத்துரிமை பெறத்தக்கவர்களுக்கும் வஸிய்யத் செய்திருந்தால் அதுவும் செல்லாது என்று அறியலாம்.

 

செத்துப் பங்கீடு செய்வதற்கு முன் வஸிய்யத்தையும், கடனையும் நிறைவேற்ற வேண்டும்.

இறந்தவர் ஏதேனும் வஸிய்யத் எனும் மரண சாசனம் செய்திருந்தால் அதை சொத்து பங்கீடு செய்வதற்கு முன் நிறைவேற்றிட வேண்டும்.

இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.

அல்குர்ஆன் 4 11

 

சுருக்கமாக

மரணசாசனத்திற்கு நில நிபந்தனைகள் உண்டு. இறந்தவர்  (சொத்துரிமைப் பங்கீடு பெறாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு தரவேண்டும் என்று) செய்த வஸிய்யத் மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாகி விடக்கூடாது.

  • அவ்வாறு அதிகமாகி இருந்தால் அந்த வஸிய்யத் செல்லாது.
  • செய்திருப்பினும், மூன்றில் ஒரு பங்கு என்ற அளவே செல்லுபடியாகும்.
  • மேலும் இறந்தவரின் சொத்தில் யார் பங்குதாரர்களாக வாரிசுதாரர்களாக வருகிறார்களோ அவர்களுக்கு வஸிய்யத் செய்திருந்தால் அதுவும் செல்லாது.
  • அவர்கள் தங்களுக்குரிய பங்கின் அளவை மட்டுமே பெற்றுக் கொள்வார்கள்.