Tamil Bayan Points

மறுமையில் தனிநபர் விசாரணை

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on October 2, 2023 by

மறுமையில் தனிநபர் விசாரணை

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

மறுமையில் ஆதம் (அலை) முதல் கியாம நாள் வரை வரக்கூடிய எல்லா மனிதர்களையும் மஹ்ஷரில் மைதானத்தில் ஒன்று திரட்டி அனைவரையும் அல்லாஹ் விசாரிப்பான். அவ்வாறு அல்லாஹ் மறுமையில் விசாரிக்கும் சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம். 

கேள்வி கணக்குக்காக அல்லாஹ்விடம் நிற்பர்

وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا

அனைவரும் அல்லாஹ்வின் முன்னே நிற்பார்கள்.

(அல்குர்ஆன்: 14:21)

அபூபக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி) அறிவித்தார்:
‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆம்ராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ‘முளர்’ குலத்தாரின் ரஜப் மாதமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஹஜ்ஜத்துல் வதாவின்போது, துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ‘இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ எனக் கேட்டார்கள். நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்’ என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, ‘இது துல்ஹஜ் இல்லையா?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘ஆம்’ என்றோம். (பிறகு,) ‘இது எந்த நகரம்?’ எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்’ என்றோம்.

அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, ‘இது (புனிதமிக்க) நகரமல்லவா? எனக் கேட்க, நாங்கள், ‘ஆம்’ என்றோம். மேலும், ‘இது எந்த நாள்?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்’ என்றோம். அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, ‘இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?’ எனக் கேட்க, நாங்கள், ‘ஆம்’ என்றோம்.

(பிறகு,) ‘உங்களின் புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் – உங்கள் மானமும் – உங்களுக்குப் புனிதமானவையாகும்.

وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ، فَسَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ

நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்.

இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இச்செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன் (ரஹ்) இதை அறிவிக்கும்போது, ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மை கூறினார்கள்’ என்று கூறுவார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள், ‘நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?’ என்று இரண்டு முறை கேட்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன் (ரஹ்) கூறினார். ‘உங்கள் மானமும்’ என்பதையும் சேர்த்தே அபூபக்ரா (ரலி) கூறினார் என எண்ணுகிறேன்.

புகாரி-4406

விசாரணைக்காக கொண்டு வந்தால் அழிவுதான்

حَدَّثَتْنِي عَائِشَةُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ يَوْمَ القِيَامَةِ إِلَّا هَلَكَ» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَيْسَ قَدْ قَالَ اللَّهُ تَعَالَى: {فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8] فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكِ العَرْضُ، وَلَيْسَ أَحَدٌ يُنَاقَشُ الحِسَابَ يَوْمَ القِيَامَةِ إِلَّا عُذِّبَ

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தேபோய் விடுவார்” என்று கூறினார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் தூதரே! “எவரது வினைப் பதிவுச் சீட்டு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ என்றல்லவா அல்லாஹ் கூறுகின்றான்?” (அல்குர்ஆன்: 84:8) என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். மறுமையில் துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை செய்யப்படாமலிருப்பதில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி-6537 

தனித்தனியாக விசாரிப்பான்

«مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ اللهُ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلَا يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்விற்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் தமது வலப்பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கனவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதையும் அங்கு அவர் காணமாட்டார்.

பின்னர் அவர் தமது இடப் பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கெனவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதையும் அங்கும் அவர் காணமாட்டார். மேலும், அவர் தமக்கு முன்னால் பார்ப்பார். தமது முகத்துக் கெதிரே நரக நெருப்பையே அவர் காண்பார். ஆகவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அதீ பின் ஹா(த்)திம் (ரலி)
நூல்: முஸ்லிம்-1846 

முதல் விசாரணை

أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ بِالدِّمَاءِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான்.

இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி-6533 

مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ، فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ اليَوْمَ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ، إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ»

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும்.

தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.

அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

நூல்: புகாரி-2449 

சிறிய பாவம் எடுத்து காட்டப்படும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும், நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார்.

அப்போது, “இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரைவிட்டு நீக்கிவிடுங்கள்” என்று கூறப்படும். அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, “நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன (பாவத்)தைச் செய்துள்ளாய்; இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன பாவத்தைச் செய்துள்ளாய்’ என்று கூறப்படும். அவரும் “ஆம்’ என்று (ஒப்புதல்) கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் புரிந்துவிட்டிருக்கும் பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சிக்கொண்டிருப்பார்.

இந்நிலையில் அவரிடம், “நீ செய்த ஒவ்வொரு (சிறு) தவறுகளுக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு” என்று கூறப்படும். அப்போது அவர், “இறைவா! நான் இன்னும் பல (பெரும் பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!” என்று கேட்பார். (இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) அவர்கள்
நூல்: முஸ்லிம்-314 

வாய்க்கு முத்திரையிடப்படும், நமக்கு எதிராக கண் காது சதை சாட்சி சொல்லும்

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மறுமை நாளில் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகமூட்டமில்லாத நண்பகல் நேரத்தில் சூரியனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை’ என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகமூட்டமில்லாத பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள்.

மக்கள் “இல்லை’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இவ்விரண்டில் ஒன்றைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படாததைப் போன்றே, உங்கள் இறைவனைக் காண்பதற்கும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள். இறைவன் அடியானைச் சந்தித்து, “இன்ன மனிதனே! உன்னை நான் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்குத் துணையை ஏற்படுத்தவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா?

உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச் செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரியதாக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “ஆம்’ என்பான். இறைவன், “நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லை’ என்பான். இறைவன், “அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்” என்பான்.

பிறகு மற்றோர் அடியானைச் சந்திக்கும் இறைவன், “இன்ன மனிதனே! உன்னைக் கண்ணியப் படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்கு(த் தகுந்த) துணையையும் நான் வழங்கவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச் செல்வத்தில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரிமையாக்கவில்லையா?” என்று கேட்பான்.

அதற்கு அந்த அடியான், “ஆம், என் இறைவா!” என்பான். இறைவன், “நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லை’ என்பான். இறைவன், “அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்” என்பான். பிறகு மூன்றாவது அடியானைச் சந்திக்கும் இறைவன், முன்பு கேட்டதைப் போன்றே அவனிடமும் கேட்பான். அதற்கு அந்த அடியான், “என் இறைவா! நான் உன்னையும் உன் வேதத்தையும் உன் தூதர்களையும் நம்பி, உன்னைத் தொழுது (உனக்காக) நோன்பு நோற்றேன். தானதர்மம் செய்தேன்” என்று கூறிவிட்டு, தன்னால் இயன்ற நல்ல வார்த்தைகளைக் கூறி இறைவனைப் புகழ்வான்.

அப்போது இறைவன், “நீ இங்கேயே நில்” என்று கூறுவான். பிறகு அவனிடம், “இப்போது உனக்கெதிரான நம்முடைய சாட்சியை நாம் எழுப்பப்போகிறோம்” என்று கூறுவான். அந்த மனிதன், தனக் கெதிராகச் சாட்சியம் சொல்பவர் யார் என்று யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனது தொடை, சதை, எலும்பு ஆகியவற்றைப் பார்த்து “பேசுங்கள்” என்று சொல்லப்படும். அப்போது அவனுடைய தொடை, சதை, எலும்பு ஆகியவை அவன் செய்தவை பற்றி எடுத்துரைக்கும். அவன் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிவிடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அவன்தான் நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். அவன்மீது இறைவன் கடும் கோபம் கொள்வான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-5678

وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا‏

உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

(அல்குர்ஆன்: 17:36)

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
மறுமை நாளில் இறை மறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டுவரப்பட்டு ‘உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாயல்லவா?’ என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ‘ஆம்’ என்று பதிலளிப்பான். அப்போது ‘இதைவிட சுலபமான ஒன்றே (-அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது. (ஆனால், அதை நீ ஏற்கவில்லை)’ என்று கூறப்படும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி வந்தார்கள்.

புகாரி-6538

ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 102:8)

فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ
عَمَّا كَانُوا يَعْمَلُونَ

உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.

(அல்குர்ஆன்: 15:92,93)

فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ

யாருக்குத் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.

(அல்குர்ஆன்: 7:6)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஒரு பகல்” அல்லது “ஓர் இரவு” (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!” என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது” என்று கூறிவிட்டு, “எழுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.

அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், “வாழ்த்துகள்! வருக” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்” என்று பதிலளித்தார்.

அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை” என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், “இதை உண்ணுங்கள்” என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்”என்று கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்” என்று கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “அபூபக்ர் (ரலி) அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, “இங்கு நீங்கள் இருவரும் அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும், “தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! பசிதான் எங்களை எங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது” என்று கூறினர்” என ஹதீஸ் துவங்குகிறது. மற்ற நிகழ்வுகள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

முஸ்லிம்-4143 

முதல் கேள்வி 

« إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلاَتُهُ فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ فَإِنِ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَىْءٌ قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ انْظُرُوا هَلْ لِعَبْدِى مِنْ تَطَوُّعٍ فَيُكَمَّلَ بِهَا مَا انْتَقَصَ مِنَ الْفَرِيضَةِ ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ »

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான்.

அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: திர்மிதீ-413 (378)

إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்? என்று கேட்பான்.

அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதை செய்ததாக கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான்.

அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-5021 

«كُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ فِي أَهْلِهِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَهِيَ مَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»، قَالَ: فَسَمِعْتُ هَؤُلاَءِ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَحْسِبُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالرَّجُلُ فِي مَالِ أَبِيهِ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. மேலும், உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தன் பிரஜைகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார்.

ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.

பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்கள், நான் இவற்றையெல்லாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், மனிதன் (மகன்), தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனது பொறுக்குட்பட்டவை குறித்து அவன் விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்று சொன்னதாக எண்ணுகிறேன் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-2558 

ஆகவே மறுமையில் அல்லாஹ்விற்கு முன் நிற்கும் நாளை அஞ்சி பயந்து இவ்வுலக வாழ்கையில் நல்லடியார்களாக வாழ்ந்து மறையும் பாக்கியமிக்கவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக.! 

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.