Tamil Bayan Points

3) மவ்லிதின் பிறப்பிடம், எழுதியவர்

நூல்கள்: சுப்ஹான மவ்லித் ஓர் ஆய்வு

Last Updated on December 17, 2019 by Trichy Farook

மவ்லிதின் பிறப்பிடம்

உலகத்தில் முஸ்லிம்கள் இல்லாத நாடுகளே இல்லை என்ற அளவுக்கு இஸ்லாம் இன்று வளர்ந்துள்ளது. மவ்லிதுகள் மார்க்கத்தில் உள்ளதாக இருந்தால் உலக முஸ்லிம்கள் அனைவரிடமும் மவ்லிது ஓதும் வழக்கம் இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறந்த சவூதி அரபியாவிலும் மவ்லிதைப் பாடும் போதே அதன் பொருளை விளங்கிடக் கூடிய மக்கள் வாழும் மற்ற அரபு நாடுகளிலும் மவ்லிதுகள் எதுவுமே இல்லை. இல்லை என்பது மட்டுமல்ல. மவ்லிது நூலுடன் யாரேனும் அரபு நாட்டுக்குள் நுழைந்தால் மவ்லிது நூலைப் பிடுங்கி அங்குள்ள அரசாங்கம் குப்பையில் வீசி விடுகிறது. அதில் அமைந்துள்ள மோசமான கொள்கைகளும், உளறல்களுமே இதற்குக் காரணம்.

அரபு நாடுகளை விட்டு விடுவோம். உலகில் உள்ள வேறு எந்த நாட்டு முஸ்லிம்களாவது இந்த மவ்லிதை ஓதுகிறார்களா? நிச்சயமாக இல்லை. இல்லை என்பது மட்டுமல்ல. மவ்லிதைப் பற்றி நாம் அவர்களிடம் கேட்டால் ‘மவ்லிது என்றால் என்ன?’ என்று நம்மிடமே அவர்கள் திருப்பிக் கேட்கிறார்கள்.

நமது நாட்டில் கூட கேரளாவிலும் தமிழகத்திலும் வாழும் முஸ்லிம் கள் தான் இந்த மவ்லிதுகளை அறிந்துள்ளனர். வேறு மாநில மக்களுக்கு ஸுப்ஹான மவ்லிது என்றால் என்ன என்பதே தெரியாது.

நமது தமிழக முஸ்லிம்கள் பிழைப்புத் தேடிச் சென்ற இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் இதை அரங்கேற்றி வருகின்றனர்.

இதிலிருந்து தெரிய வருவது என்ன?

இது மார்க்கத்தில் உள்ளதாக இருந்திருந்தால் உலகின் பல பகுதி களில் வாழும் முஸ்லிம்கள் இதைக் கடைப்பிடித்து ஒழுகியிருப்பார்கள்.

யாரோ சில மார்க்க அறிவு இல்லாதவர்கள் நமது பகுதிகளில் தோன்றி இதைப் பரப்பி விட்டனர். இதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

எழுதியவர் யார்?

மவ்லிதின் முகப்பு அட்டையில் ‘இது கஸ்ஸாலி எழுதியது. கதீப் அவர்கள் எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது’ என்று எழுதி வைத்துள்ளனர்.

இவர் தான் எழுதினார் என்று கூட குறிப்பிட எந்தக் குறிப்பும் இல்லை. கஸ்ஸாலியோ, கதீபோ எழுதியிருந்தால் உலகம் முழுவதும் உள்ள அவர்களின் அபிமானிகள் இதை அறிந்திருக்க வேண்டும்.

தாங்களாகவே இதை எழுதிக் கொண்ட சில வழிகேடர்கள் தங்கள் பெயரில் இதைப் பரப்பினால் மக்களிடம் எடுபடாது என்று கருதினார்கள். மக்களிடம் யாருக்கு நல்ல அறிமுகம் உள்ளதோ அவர்கள் பெயரைப் பயன்படுத்துவோம் என்ற திட்டத்துடன் தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கண்ட இருவரது நூல்களின் பட்டியலில் ஸுப்ஹான மவ்லிது என்பது இடம் பெறவே இல்லை. அவர்களே எழுதியிருந்தாலும் அதனால் அது மார்க்கமாக ஆகாது என்பது தனி விஷயம்.

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு 14 நூற்றாண்டுகள் சென்று விட்டன. இந்த மவ்லிதுகள் சுமார் முன்னூறு ஆண்டுகளாகத்தான் தமிழகம் மற்றும் கேரளாவில் நடைமுறையில் உள்ளது.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலம் முதல் ஆயிரம் வருடங்கள் வரை வாழ்ந்த நபித்தோழர்கள், தாபியீன்கள், நாற்பெரும் இமாம்கள் உள்ளிட்ட எண்ணற்ற மார்க்க அறிஞர்கள் எவருமே இந்த மவ்லிதுகளைப் பாடியதில்லை. கேள்விப்பட்டதுமில்லை.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட எந்த நூலிலும் இதுபற்றி எந்தக் குறிப்பும் இல்லை. எனவே இது பிற்காலத்தில் கற்பனை செய்து புணையப்பட்டவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்தக் காரணத்துக்காகவே மவ்லிதைத் தூக்கி எறிந்து விட வேண்டும் என்றாலும் இன்னும் ஏராளமான நியாயமான காரணங்கள் உள்ளன. அவற்றையும் அறிந்து கொண்டால் இந்த மவ்லிதுகளின் பக்கம் எந்த முஸ்லிமும் தலைவைத்துப் படுக்க மாட்டார்.

மவ்லிது அபிமானிகள் மவ்லிதை நியாயப்படுத்திட சில ஆதாரங்களைக் காட்டுவார்கள். அவற்றை அறிந்துவிட்டு மவ்லிதைத் தூக்கி எறிவதற்குரிய காரணங்களை நாம் பார்ப்போம்.

நபியைப் புகழுதல்

ஸுப்ஹான மவ்லிது என்பது நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்ந்து பாராட்டுவதற்காகத் தான் இயற்றப்பட்டது. அந்த நோக்கத்தில் தான் நாங்களும் பாடுகிறோம். சில நபித்தோழர்கள் புகழ்ந்து கவி பாடியதை நபிகள் நாயகம் ஸல் அவர்களே அங்கீகரித்துள்ளனர். உண்மையான எந்த முஸ்லிமும் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வதற்குத் தடை சொல்ல மாட்டான்.

மவ்லிது அபிமானிகள் மவ்லிதை நியாயப்படுத்திடக் கூறும் ஆதாரங்கள் இவை.

நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வது அல்ல பிரச்சனை.

நமது முழு வாழ்நாளையும் அவர்களைப் புகழ்வதற்காகப் பயன்படுத்தலாம். நல்லொழுக்கம், வீரம், நேர்மை போன்ற எத்தனையோ நற்குணங்களை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பெற்றிருந்தனர். அவற்றையெல்லாம் உலகறிய உரைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால் மவ்லிது இந்தப் பணியைத் தான் செய்கிறதா?

நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்கிறோம் என்று கூறும் இவர்களிடம் போய் ‘என்ன சொல்லிப் புகழ்ந்தீர்கள்? நபிகள் நாயகத்தின் எந்தப் பண்பைப் புகழ்ந்தீர்கள்?’ என்று கேட்டுப் பாருங்கள்! கூலிக்குப் பாடியவர்களில் பலருக்கும் தெரியாது. அவர்களை அழைத்துப் பாடச் செய்தவர்களுக்கும் தெரியாது.

மவ்லிதைச் செவிமடுத்த மக்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் எந்தச் சிறப்பை அறிந்து கொண்டனர்? எதுவுமே இல்லை.

புகழுதல் என்ற போர்வையில் ஒரு வணக்கம் தான் நடக்கின்றது.

அல்லாஹ்வின் வேதத்தை அர்த்தம் தெரியாமல் ஒதினாலும் ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் கிடைக்கும் என்று மார்க்கம் கூறுகிறது.

மவ்லிதையும் இது போன்ற நம்பிக்கையில் தான் பாடியும் கேட்டும் வருகின்றனர். யாரோ ஒரு மனிதனின் கற்பனையில் உதித்த சொற்களைப் பொருள் தெரியாமல் வாசித்தாலும் நன்மை உண்டு என நினைப்பது தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழுதலா?

சாதாரண மனிதனின் சொற்களை வாசிப்பதால் – கேட்பதால் அங்கே அல்லாஹ்வின் அருள் மாரி இறங்கும் என்று நம்புவதற்குப் பெயர் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழுதலா?

இந்தப் பாடலைப் பாடியவுடன் அங்கே வைக்கப்பட்டிருந்த உணவுப் பதார்த்தங்களுக்குத் தனி மகத்துவம் வந்துவிட்டதாக நம்பப்படுகிறதே இதற்குப் பெயர் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழுதலா?

புகழுதல் என்பது போர்வை தான். உள்ளே நடப்பது யாவும் புதிதாக உருவாக்கப்பட்ட வணக்கம் தான்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வாழும் போது அவர்களை பல நபித்தோழர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். இதற்கு ஹதீஸ் நூல்களில் ஆதாரம் உள்ளது.

ஆனால் இந்தப் பாடல்களை நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு பிரதி வாங்கி வைத்துக் கொண்டு வீட்டில் ஓதிக் கொண்டிருந்தார்களா?

இப்போதும் கூட ஒருவர் விரும்பினால் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்ந்து * மேடையில் பேசலாம்!

* கட்டுரை எழுதலாம். * கவிதையும் இயற்றலாம்.

மார்க்கம் வகுத்துள்ள வரம்புக்குள் நின்று இவற்றைச் செய்யலாம். அது போல் மவ்லிது பாடக்கூடியவர்கள் தாங்களாக தினம் ஒரு கவிதையை இயற்றி அதன் பொருளை உணர்ந்து நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழட்டும்! இதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

எவரோ புகழ்ந்து பேசியதை, பாடியதை அச்சிட்டு வைத்துக் கொண்டு அதை உருப்போடும் போது தான் அது ஒரு போலி வணக்கமாகவும், மோசடியாகவும் ஆகிவிடுன்றது.

மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழவே இந்த மவ்லிதுகள் என்று இனியும் வாதிட்டார்கள் என்றால் அவர்கள் கூறுவது பொய் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.

நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வது நோக்கம் என்றால் வீடு வீடாகச் சென்று கூலி பெறுவது ஏன்?

நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வதற்கான கூலியை மறுமையில் தானே எதிர்பார்க்க வேண்டும்?

விடி மவ்லிது, நடை மவ்லிது என்று கொடுக்கப்படும் தட்சணைகளுக்கு ஏற்ப மவ்லிது விரிவதும், சுருங்குவதும் ஏன்?

பணம் படைத்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் பாரபட்சம் காட்டுவது தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழும் இலட்சணமா?

மார்க்க அறிஞர்களுக்கு எந்த வருமானமும் இல்லாத காலத்தில் அன்றைக்கு வாழ்ந்த அறிஞர்கள் இதை வருமானத்திற்காக உருவாக்கினார்கள்.

இதை இன்றைக்கும் நியாயப்படுத்துவது சரிதானா? என்பதை மார்க்க அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இல்லாத ஒரு வணக்கத்தை உருவாக்கிய குற்றத்தை மறுமையில் சுமக்க வேண்டுமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். புரோகிதர்கள் என்ற இழிவு மார்க்க அறிஞர்களுக்கு ஏற்பட இது தான் காரணம் என்பதை மார்க்க அறிஞர்கள் உணர்ந்தால் அவர்களின் மரியாதையும் உயரும்.

மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழலாம் என்றாலும் அதற்கு ஒரு வரம்பு உள்ளது.

‘கிறித்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்! அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் கூறுங்கள்’ என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலி

நூல்: புகாரி 3445, 6830

‘நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழவே இந்த மவ்லிதுகள்’ என்பதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டிய இந்த வரம்பை மீறியே புகழ்கிறார்கள். ஸுப்ஹான மவ்லிதில் நபிகள் நாயகம் ஸல் அவர்களை அல்லாஹ்வின் நிலையில் நிறுத்தக் கூடிய பாடல்கள் பல உள்ளன.

அவை பின்னர் விளக்கப்படவுள்ளது

எனவே இந்த வாதத்தின் மூலம் மவ்லிதைத் தூக்கிப் பிடிக்க முடியாது.

மவ்லிதினால் ஏற்பட்ட விளைவுகளின் காரணமாகவும் மவ்லிதை நாம் நிராகரித்தே ஆக வேண்டும்.