Tamil Bayan Points

மாமறை செயல்படுத்திய மதுவிலக்குத் திட்டம்

பயான் குறிப்புகள்: கொள்கை உறுதி

Last Updated on August 19, 2020 by

மாமறை செயல்படுத்திய  மதுவிலக்குத் திட்டம்

மனிதனின் அறிவுக்குத் திரை போட்டு, பாவமான காரியங்களில் ஈடுபடச் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது மதுவாகும். இந்த மதுப் பழக்கம் அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை இருந்து வருகிறது. மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களில் சிலர் பொருளாதாரத்தை இழக்கிறார்கள். சிலர் குடும்பத்தை இழக்கிறார்கள். சிலர் கற்பை இழக்கிறார்கள். சிலர் இவையனைத்தையும் இழக்கிறார்கள். சிலர் உயிரை இழக்கின்றார்கள்.

இந்த மோசமான பழக்கத்தை இஸ்லாம் முற்றிலும் ஒழிக்க, பல கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மதுப் பழக்கத்தில் இருந்தவர்களை படிப்படியாக நிறுத்தி, முற்றிலுமாக மதுவை ஒழித்தது. மதுவை படிப்படியாக தடுத்த திருக்குர்ஆன்

2:219 يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ‌ؕ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَاِثْمُهُمَآ اَکْبَرُ مِنْ نَّفْعِهِمَا ؕ 

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது’’ எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்:2:219.)

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!

(அல்குர்ஆன்:4:43.)

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்குர்ஆன்:5:90,91.)

நான், அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் சிலர் இருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அவர்கள், “வாரும்! நாங்கள் உமக்கு உண்பதற்கு உணவும் பருகுவதற்கு மதுவும் தருகிறோம்‘’ என்று கூறினர். இது மது தடை செய்யப்படுவதற்கு முன் நடைபெற்ற நிகழ்வாகும். அவ்வாறே நான் ஒரு தோட்டத்திற்கு அவர்களிடம் சென்றேன். அங்கு அவர்களுக்கு அருகில் பொரிக்கப்பட்ட ஒட்டக இறைச்சியும் ஒரு தோல் பையில் மதுவும் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து நான் அந்த இறைச்சியை உண்டேன்; (மதுவைப்) பருகினேன்.

அப்போது அவர்களிடையே முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிக(ளின் சிறப்புக)ள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது நான் “அன்சாரிகளை விட முஹாஜிர்களே சிறந்தவர்கள்’’ என்று சொன்னேன். அப்போது ஒருவர் ஒட்டகத்தின் தாடையெலும்பு ஒன்றை எடுத்து என்னை அடித்துவிட்டார்; எனது மூக்கில் காயமேற்படுத்திவிட்டார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன்.

அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் என் விஷயத்தில் மது தொடர்பாக “நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும்’’ (5:90) என்று தொடங்கும் வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (4789)

அல்பகரா (2ஆவது) அத்தியாயத்தின் கடைசி வசனம் இறங்கிய போது அதை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்து மக்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பின்னர் மதுபான வியாபாரத்திற்குத் தடைவிதித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரி (2084), முஸ்லிம் (3221)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பல வகை மதுக்கள் பழக்கத்திலிருந்தன. எனவே அதை ஒழிக்க மது தொடர்பாகப் பல எச்சரிக்கைகளையும் தண்டனைகளையும் சொல்லி மக்களை மதுவிலிருந்து தடுத்தார்கள்.

நபிகளார் காலத்து மதுவகைகள்

(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீது நின்று (இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்) ஐந்து வகைப் பொருட்களினால் மது தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. அவையாவன: திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை, வாற்கோதுமை. ஆக, அறிவுக்குத் திரையிடுவதெல்லாம் மதுவேயாகும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்: புகாரி (5581), முஸ்லிம் (5769)

அன்றைய தினம் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும், பேரீச்சம் பழத்திலிருந்தும் தயாரிக்கப்பட்டது தான்  மதுபானமாகும் என்றிருந்த நிலையில் மது தடை செய்யப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரி (5584), முஸ்லிம் (4010)

மது, ஐந்து பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

அவை: 1. உலர்ந்த திராட்சை 2. பேரீச்சம் பழம் 3. கோதுமை 4. வாற்கோதுமை 5. தேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்கள்: புகாரி (5589), முஸ்லிம் (5769)

போதை தரும் அனைத்தும் ஹராம்

எந்தப் பொருளிலிருந்து மது தயாரித்தாலும் அவை அனைத்தும் தடை என்று தெளிவான ஒரு கட்டளையை நபிகளார் பிறப்பித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘பித்உ’ குறித்துக் கேட்கப்பட்டது. -அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும்.- யமன் வாசிகள் அதை அருந்தி வந்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், போதை தரும் (மது) பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதேயாகும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரி (5586), முஸ்லிம் (4070)

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘பாதக்’ எனும் பானம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், (இவர்கள் மதுவுக்கு) ‘பாதக்’ எனும் புதுப் பெயரைச் சூட்டுவதற்கு முன்பே (மது அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும் என) முஹம்மத் (ஸல்) அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். ஆகவே, போதையூட்டும் எதுவாயினும் அது தடை செய்யப்பட்டது தான்  என்று பதிலளித்தார்கள்.

நான், (பாதக் எனும் கெட்டியாகக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாறு) அனுமதிக்கப்பட்ட நல்ல பானமாயிற்றே! என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அனுமதிக்கப்பட்ட நல்ல பொருளுக்கு அப்பால் தடை செய்யப்பட்ட கெட்ட பொருளைத் தவிர வேறெதுவும் இல்லை என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபுல் ஜுவைரிய்யா

நூல்: புகாரி (5598)

போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். யார் இவ்வுலகில் தொடர்ந்து மது அருந்தி, பாவமன்னிப்புத் தேடாமல் (திருந்தாமல்) குடிகாரராகவே இறந்துவிடுகிறாரோ அவர் மறுமையில் (சொர்க்க) மதுவை அருந்தமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (4076)

குறைவான மதுவும் தடையே!

அதிகமாக அருந்தினால் மட்டுமே போதை தரும் வகையில் தயாரிக்கப்பட்ட மதுவையும் நபிகளார் தடைசெய்தார்கள். அவற்றில் குறைவாக அருந்தினாலும் அது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதே என்று தெளிவுபடுத்தினார்கள்.

எந்தப் பொருள் அதிகமாக உட்கொள்ளும்போது போதை தருமோ அதில் குறைவாக உட்கொள்வதும் ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: திர்மிதீ (1788), நஸாயீ (5513), அபூதாவுத் (3156), இப்னுமாஜா (3383)

போதை தரும் அனைத்தும் ஹராமாகும். எது ஃபரக் அளவு (சுமார் 7.5 கிலோ) சாப்பிட்டால் போதை தருமோ அதில் கையளவும் ஹராமாகும் என்று நபி (ஸல்) கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: திர்மிதீ (1789), அஹ்மத் (23287)

மருந்தல்ல நோயே!

சிலர் மருத்துக்காக மதுவைப் பயன்படுத்தினர். நபிகளார் எந்த வகைக்கும் இந்த மதுவைப் பயன்படுத்தக்கூடாது என்று கட்டளையிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள்; அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், “மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்’’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது மருந்தல்ல; நோய்’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் (4015)

நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இல்லை (மாற்றக் கூடாது)’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (4014)

மதுவை அனுமதிக்கப்பட்டதாகக் கருதும் கூட்டம்

நபிகளார் காலத்தில் இல்லாத புதிய பெயர் சூட்டி மதுவை அருந்தினாலும் அதுவும் தடையே. எந்தப் பெயரில் எந்த வடிவத்தில் மது வந்தாலும் அது கூடாது என்று நபிகளார் மிகத் தெளிவாக விளக்கிச் சென்றுள்ளார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ அவர்கள் கூறியதாவது:

அபூஆமிர் (ரலி) அவர்கள் அல்லது அபூமா-க் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது:)

நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிகேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான்

நூல்கள்: புகாரி (5590), பைஹகீ (6100)

மதுவை அருந்தினால் இவ்வுலகில் கெடுதி ஏற்படுவது போல் மறுமையில் கடும் தண்டனையுண்டு என்றும் நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

மறுமை நாளின் அடையாளம்

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியைக் கேட்டுள்ளேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறியாமை வெளிப்படுவதும், கல்வி குறைந்துபோவதும், விபச்சாரம் வெளிப்படையாக நடப்பதும், மது அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரேயொரு ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் மிகுந்து விடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரி (5577), முஸ்லிம் (5186)

தண்டனைகள்

ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள ‘ஜைஷான்’ எனுமிடத்திலிருந்து வந்து, தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒரு வகை பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது போதையளிக்கக்கூடியதா?’’ என்று கேட்டார்கள். அவர் “ஆம்’’ என்று பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள், “போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) ‘தீனத்துல் கபாலை’ நிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்’’ என்று கூறினார்கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! ‘தீனத்துல் கபால்’ என்பது என்ன?’’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்’’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (4075)

ஈமான் போய்விடும்

விபச்சாரி, விபச்சாரம் புரியும் போது மூமினாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும் போது மூமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற பொழுது மூமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரது பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும் போது மூமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரி (2475), முஸ்லிம் (100)

பாவமன்னிப்பு

மது அருந்தும் பழக்கம் உள்ளவர் உடனடியாக நிறுத்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மறுமையில் சொர்க்கத்தில் மது அருந்தும் பாக்கியத்தை இழந்துவிடுவார்.

உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேறை இழந்துவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்: புகாரி (5575), முஸ்லிம் (4076)

மது தயாரிக்கப் பயன்படும் பாத்திரங்கள்

மது அருந்தப் பயன்படும் பாத்திரங்களை நபிகளார் ஆரம்பத்தில் எதையும் பயன்படுத்தக் கூடாது என்று தடுத்திருந்தார்கள். பின்னர் மது இல்லாத பாத்திரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கிவிட்டார்கள்.

தோல் பாத்திரங்களில் ஊற்றிவைக்கப்பட்ட பானங்களை(த் தவிர வேறெந்த பானத்தையும்) அருந்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி எல்லாப் பாத்திரங்களிலும் அருந்திக் கொள்ளுங்கள். எனினும், போதை தரக் கூடியதை அருந்தாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் (4068), நஸாயீ (2005), அபூதாவுத் (3212), அஹ்மத் (21880)

தடையை செயல்படுத்திய நபித்தோழர்கள்

அல்லாஹ் மதுவைத் தடை செய்தவுடன் நபித்தோழர்கள் மதுவை வீதியில் கொட்டி இறைக் கட்டளையை உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்தார்கள்.

அபூஉபைதா (ரலி), அபூதல்ஹா (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு நிறம் மாறிய பேரீச்சங்காய்களாலும் பேரீச்சங்கனிகளாலும் தயாரித்த மதுவை நான் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘மது தடை செய்யப்பட்டுவிட்டது’’ என்று சொன்னார். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘எழுந்திரு, அனஸே! இவற்றைக் கொட்டிவிடு’’ என்று சொன்னார்கள். நான் அவற்றைக் கொட்டிவிட்டேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரி (5582), முஸ்லிம் (4006)

நான் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவை(பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, (மக்களே!) மது தடை செய்யப்பட்டு விட்டது என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள்.

அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், வெளியே சென்று இதை ஊற்றிவிடு என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது. மக்களில் சிலர், ‘‘மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?)’’ என்று கேட்டார்கள். அப்போது தான், ‘‘நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை’’ (5:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரி (2464), முஸ்லிம் (4006)

மது இல்லாத உலகை, போதையற்ற சமுதாயத்தை உருவாக்கிட திருக்குர்ஆனும் அதற்குச் செயல்வடிவம் கொடுத்த நபியவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதலும் தான் தீர்வாக அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.