Tamil Bayan Points

மார்க்கம் அறிவோம்! மறுமை வெல்வோம்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

Last Updated on October 15, 2023 by Trichy Farook

மார்க்கம் அறிவோம்! மறுமை வெல்வோம்!

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

எந்தவொரு கொள்கையும் கோட்பாடும் கூறாத அளவுக்கு இஸ்லாம் கல்வியைக் குறித்து அதிகம் போதித்துள்ளது. கல்வி என்று நாம் பொதுவாகச் சொன்னாலும், அதிலுள்ள அடிப்படைத் தன்மைகள், அம்சங்களைக் கவனித்து, அதைப் பல வகைகளாகப் பிரிக்க இயலும். அவற்றுள் முக்கிய ஒன்றான, மார்க்கக் கல்வி பற்றிய சில தகவல்களை இந்த உரையில் பார்ப்போம்.

பொறாமை கொள்ள அனுமதிக்கப்பட்ட இரண்டு விஷயங்கள் 

ஈருலகிலும் வெற்றி பெறுவதற்கு ஏக இறைவனால் தரப்பட்ட வாழ்க்கை முறையே இஸ்லாம். அதன் முக்கிய அடிப்படைகளை அனைத்து முஸ்லிம்களும் அறிந்திருப்பது கட்டாயம். ஆகவேதான், எதிலும் பிறரைப் பார்த்து பேராசையோ பொறாமையோ கொள்ளக் கூடாதெனக் கூறும் மார்க்கம், இந்த விஷயத்திற்கு விதிவிலக்கு வழங்கி இருக்கிறது. இதன் மூலம் மார்க்கம் அறிவதின் அவசியத்தை அறியலாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
لاَ تَحَاسُدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللَّهُ القُرْآنَ فَهُوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، فَهُوَ يَقُولُ: لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ هَذَا لَفَعَلْتُ كَمَا يَفْعَلُ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَهُوَ يُنْفِقُهُ فِي حَقِّهِ، فَيَقُولُ: لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ عَمِلْتُ فِيهِ مِثْلَ مَا يَعْمَلُ

இரண்டு விஷயங்களில் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், ‘இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கு வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே!’ என்று (ஆதங்கத்துடன்) கூறினார். 

2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர் உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர், ‘இவருக்கு வழங்கப்பட்ட (செல்வத்)தைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்’ என்கிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-7528 

கற்றது கையளவு; கல்லாதது உலகளவு என்பார்கள். எல்லோருக்கும் எல்லாமும் தெரியாது. மார்க்கத்தை முழுவதும் அறிந்தவர் எவருமில்லை. எனவே, நமக்குத் தேவையான, தெரியாத மார்க்க செய்திகளைப் பிறரிடம் கேட்டுத் தெளிவு பெறும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொன்னான போதனை பின்வரும் செய்திகளில் பொதிந்துள்ளது.

ஞானத்தைப் பெறுவதற்கு முயற்ச்சித்த மூஸா நபி

فَوَجَدَا عَبْدًا مِنْ عِبَادِنَا آتَيْنَاهُ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَعَلَّمْنَاهُ مِنْ لَدُنَّا عِلْمًا
قَالَ لَهُ مُوسَىٰ هَلْ أَتَّبِعُكَ عَلَىٰ أَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا

(அங்கே மூஸா நபியும் அவருடன் இருந்தவரும்) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம். “உமக்குக் கற்றுத் தரப்பட்டவற்றில் நல்லதை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின் தொடரலாமா?’’ என்று அவரிடம் மூஸா கேட்டார்.

(அல்குர்ஆன்: 18:65,66)

தம்மை விட அதிகம் அறிந்துள்ள நல்லடியார் ஹிழ்ரு (அலை) அவர்களைச் சந்தித்து அவரிடம் ஞானத்தைப் பெறுவதற்கு மூஸா நபி பெரிதும் முயற்சித்தார்கள்; நெடும் பயணம் மேற்கொண்டார்கள்.

பேராவல் கொண்ட நபிகளார்

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«أَقْرَأَنِي جِبْرِيلُ عَلَى حَرْفٍ، فَلَمْ أَزَلْ أَسْتَزِيدُهُ حَتَّى انْتَهَى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ»

ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

(நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது. இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி-3219 

அதுபோன்று, தமக்கு அருளப்படும் திருக்குர்ஆனைப் பல வட்டார வழக்குகளில் ஓதுவதற்கு நபிகளார் பேராவல் கொண்டார்கள்; ஜிப்ரீலிடம் வலியுறுத்திக் கேட்டார்கள்.

அவர்களிடம் இருந்த ஆர்வத்தில் ஒரு சதவீதம் கூட இன்று பல மக்களுக்கு இல்லை. இவர்கள் அருள்மறையை எவரிடமும் ஓதக் கற்றுக் கொள்ளாமல் காலத்தைக் கழிப்பதே இதற்குப் போதுமான சான்று.

மார்க்க சட்டங்களை அறிந்த சஹாபிய பெண்மணிகள்  

மார்க்கம் அறியும் எண்ணம் இருக்கிறது; ஆனால் அடுத்தவர்களிடம் கேட்கக் கூச்சமாகவுள்ளது என்று சொல்கிறார்களா? அப்படியாயின், அவர்கள் உடனடியாகத் தங்களது மனநிலையை மாற்றிக் கொள்ளட்டும். ஏனெனில், இதுபோன்று முட்டுக்கட்டை போடும் சிந்தனைகளைத் தூக்கி எறியும் போதுதான் கற்றல் சிறக்கும்.

أَنَّ أَسْمَاءَ سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ غُسْلِ الْمَحِيضِ؟ فَقَالَ: «تَأْخُذُ إِحْدَاكُنَّ مَاءَهَا وَسِدْرَتَهَا، فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ، ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ دَلْكًا شَدِيدًا حَتَّى تَبْلُغَ شُؤُونَ رَأْسِهَا، ثُمَّ تَصُبُّ عَلَيْهَا الْمَاءَ، ثُمَّ تَأْخُذُ فِرْصَةً مُمَسَّكَةً فَتَطَهَّرُ بِهَا» فَقَالَتْ أَسْمَاءُ: وَكَيْفَ تَطَهَّرُ بِهَا؟ فَقَالَ: «سُبْحَانَ اللهِ، تَطَهَّرِينَ بِهَا» فَقَالَتْ عَائِشَةُ: كَأَنَّهَا تُخْفِي ذَلِكَ تَتَبَّعِينَ أَثَرَ الدَّمِ، وَسَأَلَتْهُ عَنْ غُسْلِ الْجَنَابَةِ؟ فَقَالَ: «تَأْخُذُ مَاءً فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ أَوْ تُبْلِغُ الطُّهُورَ، ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ حَتَّى تَبْلُغَ شُؤُونَ رَأْسِهَا، ثُمَّ تُفِيضُ عَلَيْهَا الْمَاءَ» فَقَالَتْ عَائِشَةُ: ” نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الْأَنْصَارِ لَمْ يَكُنْ يَمْنَعُهُنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியரிலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், “அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்து கொள்ளட்டும்” என்று (மீண்டும்) சொன்னார்கள்.

உடனே நான், “இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்’ என்று  பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன்னேன். மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், “தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!” என்றார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்-552 

எண்ணற்ற நபிமொழிகளை அறிந்து கொண்ட அபூஹுரைரா (ரலி)

இவ்வுலகில் எந்தவொன்றையும் சிரமப்படாமல் பெற்றுக் கொள்ளவே இயலாது. இந்த விதி கல்விக்கும் பொருந்தும். இதைப் புரிந்து மார்க்கத்தை அறிய முடிந்தளவு முனைய வேண்டும். அவ்வாறு நமக்கு முன்னால் வாழ்ந்த பல நன்மக்கள் உழைத்தார்கள்; தியாகம் செய்தார்கள். அதன் பலனாய் சத்தியக் கருத்துகள் நம் கரத்திற்கு எட்டியுள்ளது என்பதை நினைவில் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

إِنَّ النَّاسَ يَقُولُونَ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ، وَلَوْلاَ آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُ حَدِيثًا، ثُمَّ يَتْلُو {إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ البَيِّنَاتِ وَالهُدَى} [البقرة: 159] إِلَى قَوْلِهِ {الرَّحِيمُ} [البقرة: 160] إِنَّ إِخْوَانَنَا مِنَ المُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمُ الصَّفْقُ بِالأَسْوَاقِ، وَإِنَّ إِخْوَانَنَا مِنَ الأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمُ العَمَلُ فِي أَمْوَالِهِمْ، وَإِنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَلْزَمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشِبَعِ بَطْنِهِ، وَيَحْضُرُ مَا لاَ يَحْضُرُونَ، وَيَحْفَظُ مَا لاَ يَحْفَظُونَ “

‘அபூஹுரைரா (ரலி) அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரே என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மாத்திரம் இல்லையென்றால் நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன்’ என்று அபூஹுரைரா (ரலி) கூறிவிட்டு,

‘வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ (அல்குர்ஆன்: 2:159,-160) என்ற இரண்டு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.

மேலும் தொடர்ந்து ‘மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவில் இருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி (ஸல்) அவர்களுடனேயே இருந்தேன்.

மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றையெல்லாம் மனப்படாம் செய்து கொண்டிருந்தேன்’ என்று கூறினார்கள். இதை அஃரஜ் (ரஹ்) என்பவர் அறிவித்தார்.

நூல்: புகாரி-118 

திண்ணைத் தோழர்களில் ஒருவரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் தமது வறுமை நிலையிலும் எண்ணற்ற நபிமொழிகளை அறிந்து கொண்டார்கள்; அடுத்தவர்களுக்கு அறிவித்தார்கள். ஆனால் நாம் எப்படி இருக்கிறோம் என்று ஒப்பிட்டுப் பாருங்கள்.

திருக்குர்ஆன் உட்பட நபிமொழி நூல்கள் பல மொழிகளிலும் வந்துவிட்டன. எல்லா விதமான வசதி வாய்ப்புகள் இருந்தும் தொழுகை, நோன்பு போன்றவற்றின் அடிப்படை சட்டங்களை அறியாமல் பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்வதாயின், இறைநம்பிக்கை கொள்வதிலேயே கோட்டை விட்டுக் கிடக்கிறார்கள்.

இப்படி எதையும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு வேலைப் பளுவைக் காரணம் காட்டுகிறார்கள். நேரமே இல்லையென குமுறுகிறார்கள். இத்தகைய நபர்கள் கீழுள்ள செய்திகளை ஒன்றுக்குப் பலமுறை படித்து ஒரு கனம் யோசிக்கட்டும்.

மார்கத்தை அறிந்து கொள்ளவதில் ஆர்வம் கொண்ட சஹாபாக்கள் 

كُنْتُ أَنَا وَجَارٌ لِي مِنَ الأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ وَهِيَ مِنْ عَوَالِي المَدِينَةِ وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا، فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِخَبَرِ ذَلِكَ اليَوْمِ مِنَ الوَحْيِ وَغَيْرِهِ، وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ،…

‘நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான என்னுடைய அண்டை வீட்டுக்காரரும் உமய்யா இப்னு ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களின் அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன்.

நான் சென்று நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி-89 

قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ، فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ، فَكَانَ فِيمَا قَالَ لَهُنَّ: «مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلاَثَةً مِنْ وَلَدِهَا، إِلَّا كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ» فَقَالَتِ امْرَأَةٌ: وَاثْنَتَيْنِ؟ فَقَالَ: «وَاثْنَتَيْنِ»

‘(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்’ என்று பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி (ரலி)
நூல்: புகாரி-101 

كَانَ عَبْدُ اللهِ يُذَكِّرُ النَّاسَ فِي كُلِّ خَمِيسٍ ، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ ، لَوَدِدْتُ أَنَّكَ ذَكَّرْتَنَا كُلَّ يَوْمٍ؟ قَالَ : أَمَا إِنَّهُ يَمْنَعُنِي مِنْ ذَلِكَ أَنِّي أَكْرَهُ أَنْ أُمِلَّكُمْ ، وَإِنِّي أَتَخَوَّلُكُمْ بِالْمَوْعِظَةِ كَمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَوَّلُنَا بِهَا؛ مَخَافَةَ السَّآمَةِ عَلَيْنَا

‘அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் ‘அபூஅப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்’ என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது.

நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்’ என்றார்.

இதை அபூ வாயில் (ரஹ்) அறிவித்தார்.
நூல்: புகாரி-70 

தினமும் உலகியல் ரீதியாகப் பல்வேறு அலுவல்கள் நமக்கு இருக்கவே செய்யும். அதற்கு வேண்டி அதிலேயே ஒட்டுமொத்தமாக மூழ்கி விடக் கூடாது. இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரு சிறு பகுதியையாவது குர்ஆன், ஹதீஸைத் தெரிந்து கொள்ள ஒதுக்க வேண்டும்.

நாமிருக்கும் பகுதிகளில், பக்கத்து ஊர்களில் நடக்கும் மார்க்க நிகழ்ச்சிகளில் பங்குபெறும் பண்பு நம்மிடம் இருப்பது நல்லது. பயணங்கள் எளிதாகிவிட்ட இக்காலத்தில் இவ்வாறு சென்று வரத் தயங்கும் மக்களுக்குப் பின்வரும் செய்திகளில் தக்க பாடம் இருக்கிறது.

قَدِمَ وَفْدُ عَبْدِ القَيْسِ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذَا الحَيَّ مِنْ رَبِيعَةَ قَدْ حَالَتْ بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ مُضَرَ، وَلَسْنَا نَخْلُصُ إِلَيْكَ إِلَّا فِي الشَّهْرِ الحَرَامِ، فَمُرْنَا بِشَيْءٍ نَأْخُذُهُ عَنْكَ وَنَدْعُو إِلَيْهِ مَنْ وَرَاءَنَا، قَالَ: ” آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ: الإِيمَانِ بِاللَّهِ، وَشَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ – وَعَقَدَ بِيَدِهِ هَكَذَا – وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَأَنْ تُؤَدُّوا خُمُسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَاكُمْ عَنْ: الدُّبَّاءِ، وَالحَنْتَمِ، وَالنَّقِيرِ، وَالمُزَفَّتِ

அப்துல்கைஸ் கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ரபீஆ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கும் உங்களுக்குமிடையே இஸ்லாத்தை ஏற்காத முளர் கூட்டத்தினர் வசிக்கிறார்கள். எனவே, யுத்தம் தடைசெய்யப்பட்ட மாதங்களிலன்றி (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியாது. எனவே, எங்களுக்குச் சில கட்டளைகளைக் கூறுங்கள். நாங்களும் அதைப் பின்பற்றி எங்களுக்குப் பின்னால் தங்கிவிட்டவர்களுக்கும் அறிவிப்போம்‘ என்றார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு நான் நான்கு காரியங்களை ஏவுகிறேன்; நான்கு காரியங்களைத் தடை செய்கிறேன். அவை: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லையென்று உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் வழங்குதல், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை வழங்குதல்’ என்று விரலால் எண்ணிச் சொன்னார்கள்.

மேலும், ‘மது வைத்திருந்த மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகிய நான்கை உங்களுக்கு நான் தடை செய்கிறேன்’ என்று கூறினார்கள். (பின்னர் இத்தடை நீக்கப்பட்டது).

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி-1398 

أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عُزَيْزٍ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ، فَقَالَ لَهَا عُقْبَةُ: مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي، وَلاَ أَخْبَرْتِنِي، فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ فَسَأَلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ وَقَدْ قِيلَ» فَفَارَقَهَا عُقْبَةُ، وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ

நான் அபூஇஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, ‘நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்’ என்றார். அதற்கு நான் ‘நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே’ என்று கூறினேன்.

உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி (ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சனை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?’ என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாகரத்துச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்.

அறிவிப்பவர்: உக்பா இப்னு அல்ஹாரிஸ் (ரலி)
நூல்: புகாரி-88 

முந்தைய காலங்களில் தீன் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளப் பல தூரம் சென்றார்கள். ஆனால் இன்றோ அருகில் இருக்கும் இடங்களுக்குச் செல்வதற்கே சோம்பல் மிகைத்து விடுகிறது; அலட்சியம் ஆட்டிப் படைக்கிறது.

இப்படியிருக்க, வெளியூர் சென்று தங்கியிருந்து மார்க்கம் பயில்வதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மதரஸாக்களுக்குச் செல்வோர் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் இருக்கிறார்கள். இனியாவது இந்நிலை மாற வேண்டும். நபிகளார் காலத்தைப் போன்ற நிலை மீண்டும் மலர வேண்டும்.

இளைஞர்களுக்கும் மார்க்க வகுப்பு 

أَتَيْنَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ يَوْمًا وَلَيْلَةً، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا – أَوْ قَدِ اشْتَقْنَا – سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا، فَأَخْبَرْنَاهُ، قَالَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ، فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ – وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا – وَصَلُّوا  كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»

சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கினோம். நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்’ என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவில் இல்லை.

அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி)
நூல்: புகாரி-631 

நாம் மார்க்கத்தை அறிய செலவளிக்கும் ஒவ்வொரு நொடிக்கும் மறுமையில் நன்மை கிடைக்கும். ஆகையால் அதற்குக் கிடைக்கும் வாய்ப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள்; ஒதுக்கித் தள்ளாதீர்கள்.

இங்கு, ஒரு முக்கிய வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது அவசியம். இம்மையில் இன்பமாக வாழ்வதற்கு உலகக் கல்வியை கற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை. அவற்றை நல்வழியில் பயன்படுத்துவதற்கும் மறுமையில் நன்மை கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதே சமயம், இக்கல்வியை கற்றுக் கொள்ளாதவர் மறுமையில் குற்றவாளியாக நிற்க மாட்டார். இவற்றை ஏன் படிக்கவில்லை, தெரிந்து கொள்ளவில்லை என்று தண்டிக்கப்பட மாட்டார்கள். ஆனால், மார்க்கம் தொடர்பான கல்வி அப்படியல்ல. மார்க்கத்தை சரிவர அறியாமல் அலட்சியமாக வாழ்பவர் மறுமையில் மாட்டிக் கொள்வார்கள். தப்பும் தவறுமாக வாழ்ந்ததற்கு எந்தவொரு காரணத்தையும் கூற முடியாது.

எனவே, உலக விஷயங்களை அறிந்து கொள்வதோடு ஒதுங்கிக் கொள்ளும் குணத்தை இப்போதே கைவிடுங்கள். அது மட்டும் போதுமென்று முடங்கிக் கொள்ளாமல் சத்தியத்தை அறிய அதிக ஈடுபாடு காட்டுவோமாக! அதன்படி வாழ்ந்து ஈருலகிலும் வெல்வோமாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.