Tamil Bayan Points

மாற்றம் தரும் மாமறை

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

Last Updated on October 15, 2023 by Trichy Farook

மாற்றம் தரும் மாமறை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயக்கம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் இறைவேத வசனங்ளின் மூலம் அவ்வப்போது நபிகளார் அதிகமாக போதித்து வந்தார்கள். அப்படி போதித்த  தருணத்தில் அந்த சஹாபாக்கள் இறைவசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்ட போதனைகளை அப்படியே கேட்டு நடைமுறைபடுத்தினார்கள். அந்த இறைவசனம் அவர்களை மாற்றியது. எவ்வாறு அவர்களை மாற்றியது என்பதை நபிகளார் காலத்திலும் சஹாபாக்கள் காலத்திலும்  நடந்த சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்..

எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்

ஏகன் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் எனும் ஓரிறைக் கொள்கையை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக இறைவனால் ஏராளமான தூதர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அத்தூதர்களுடன் மக்களுக்கு வழிகாட்டும் நெறியாகப் பல வேதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இறைவனால் இறுதித் தூதராக நியமனம் செய்யப்பட்டவர்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

அவர்களுடன் இறுதி வேதமான திருக்குர்ஆன் அகில மக்கள் யாவருக்கும் ஒரு பொதுமறையாக அருளப்பட்டுள்ளது. 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَا مِنَ الأَنْبِيَاءِ نَبِيٌّ إِلَّا أُعْطِيَ مَا مِثْلهُ آمَنَ عَلَيْهِ البَشَرُ، وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَيَّ، فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ القِيَامَةِ»

‘‘ஒவ்வொரு இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய (திருக்குர்ஆன் எனும்) வேத அறிவிப்பு தான்.

ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-4981 

திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்றும், திருக்குர்ஆனால் அதிக மக்கள் இந்த ஏகத்துவத்தின் பக்கம் வந்த வண்ணம் இருப்பார்கள் என்றும் இந்தச் செய்தி நமக்கு எடுத்துரைக்கின்றது. இந்த அற்புதத்தை நாம் கண்கூடாக இன்று கண்டு கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் இஸ்லாத்தை நோக்கி மக்கள் வருகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

உலக அரங்கில் ஒவ்வொரு சாராரும் தங்கள் கொள்கையைச் சார்ந்த புனித நூல் என்று சில நூற்களைச் சமர்ப்பிக்கின்ற பொழுது, அவற்றில் உள்ள முரண்பாடான விஷயங்களையும், ஒழுக்கமற்ற பல செய்திகளையும், உலக இயற்கைக்கு ஒவ்வாத பல கருத்துக்களையும் சிந்திக்கின்ற மக்கள் கண்டுகொள்கின்றனர்.

அதே சமயம் படித்தவர் முதல் பாமரர் வரை யார் குர்ஆனை எடுத்து வாசித்தாலும் அதில் அடங்கியுள்ள உண்மைகளையும், ஒழுக்கத்தைப் போதிக்கும் பல செய்திகளையும், உலக பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் கண்டு “இதுவே உண்மையான இறைவேதம்” என விளங்கி இஸ்லாத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆன் ஓதப்படுவதைச் செவிமடுத்து, அதை உண்மையென விளங்கிப் பலர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இஸ்லாத்திற்கு மக்களின் வருகை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. ஏக இறைவனை மறுப்போரின் கூடாரம் காலியாகத் துவங்கின.

அதனால், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில், “இந்தக் குர்ஆனை யாரும் செவிமடுக்காதீர்கள்” என்று காஃபிர்கள் பிரச்சாரம் செய்தனர்.

 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِيْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ‏

“இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!’’ என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 41:26)

ஆனால், இவர்களின் இந்தப் பிரச்சாரத்தினால் துளியளவும் இஸ்லாத்திற்குப் பங்கம் ஏற்படவில்லை. இஸ்லாம் ஆல விருட்சமாகப் பரந்து விரிந்தது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் குர்ஆனைச் செவிமடுத்ததினால் இஸ்லாம் மிகப் பெரிய வளர்ச்சியடைந்ததற்கு ஏராளமான சான்றுகள் இருந்தாலும் இங்கே ஒன்றைக் குறிப்பிடுவதே போதுமானதாகும்.

அபீசீனியாவிற்கு சில நபித்தோழர்கள் அடைக்கலம் தேடி ஹிஜ்ரத் செய்து செல்கின்றனர். அங்கே நஜ்ஜாஷி என்பவர் மன்னராக இருக்கிறார். அவரிடம் இஸ்லாத்தைப் பற்றியும், இஸ்லாமியர்களைப் பற்றியும் மக்கத்து இணை வைப்பாளர்கள் தவறாகக் கூறி இஸ்லாமியர்களை அபீசீனியாவை விட்டு வெளியேற்றக் கோரிக்கை வைத்தனர்.

அப்போது, இஸ்லாமியர்கள் சார்பாக ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) மன்னரிடம் உரை நிகழ்த்திவிட்டு, குர்ஆன் வசனத்தையும் வாசித்துக் காட்டுகிறார். நஜ்ஜாஷி மன்னர் அதைக் கேட்டதும் கடுமையாக அழுகிறார். இதுவே அவர் இஸ்லாத்தை ஏற்பதற்குக் காரணமாக அமைகிறது. இந்த நிகழ்வு அஹ்மதில் நீண்ட செய்தியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

நஜ்ஜாஷி மன்னரிடம் மக்கா காஃபிர்கள், ‘‘நீங்கள் நம்பும் ஈஸாவைப் பற்றி இவர்களிடம் விசாரியுங்கள்’’ என்று கேட்டுக் கொள்கிறார்கள். அது போன்றே ‘‘ஈஸாவைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’ என்று மன்னர் நஜ்ஜாஷி நபித்தோழர்களிடம் கேட்டதற்குப் பின்வருமாறு பதில் கூறினார்கள்.

ஈஸா என்பவர் அல்லாஹ்வின் தூதர்,

அல்லாஹ்வின் மகனாக அவர் இல்லை,

அல்லாஹ்வின் வார்த்தையினால் உருவானவர்,

அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்.

உடனே நஜ்ஜாஷி மன்னர், ‘‘உங்கள் நபி முஹம்மதுக்கு இறைவனிடமிருந்து வேதம் வருவதாகச் சொன்னீர்களே, அதை வாசித்துக் காட்ட முடியுமா?’’ என்று கேட்கிறார்.

அப்போது ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள், ‘‘காஃப், ஹா, யா, ஐன், ஸாத். (இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்!’’ என்ற சூரத்துல் மர்யம் (19வது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுகிறார்.

அதைக் கேட்டதும் மன்னர் நஜ்ஜாஷி அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகின்றது. ‘‘இது மூஸா நபிக்கு யாரிடமிருந்து வந்ததோ அவனிடமிருந்தே இவருக்கும் வந்ததைப் போன்றுள்ளது’’ என்று கூறிவிடுகிறார். மேலும், ‘‘நீங்கள் எங்களது நாட்டில் அடைக்கலம் பெற்று விட்டீர்கள். உங்களது மார்க்கத்தின் பிரகாரம் இங்கே நடந்து கொள்ளலாம்’’ என்றும் அனுமதியளித்து விடுகிறார்.

நூல்: அஹ்மத்-1740 (1742)

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆனைச் செவிமடுத்து விளங்கி இஸ்லாத்திற்குள் வந்துள்ளனர்.

இன்றைக்கும் பல தெய்வ வழிபாட்டில் அல்லது நாத்திகத்தில் இருந்த பெரும் இசையமைப்பாளர்கள், சினிமா நடிகர்கள், வட்டி, மது, சூது, விபச்சாரம் போன்ற காரியங்களில் மூழ்கித் திளைத்தவர்கள் கூட, குர்ஆனைப் படித்து, சிந்தித்துத் தங்கள் வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டு இஸ்லாத்திற்குள் வந்து தூய வாழ்க்கை வாழ்ந்து வருவதைப் பார்க்கின்றோம்.

அதே சமயம், இஸ்லாத்திற்குள்ளே இருக்கின்ற முஸ்லிம்கள் பலர் இந்தக் குர்ஆனை அணுகாததினால், சிந்திக்காததினால் தங்கள் வாழ்க்கையில் பாவத்திற்கு மேல் பாவம் புரிந்துகொண்டு நல்வழியை நோக்கிய எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கின்றோம்.

மக்கள் சிந்திப்பதற்காகவும், அதை விளங்கி அவர்கள் செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் தான் இறைவன் குர்ஆனை வழங்கியுள்ளான். ஆனால், இன்று அந்த நோக்கத்தை மறந்த மக்கள் தங்களுக்கு மத்தியில் மோதல் ஏற்படும் போது சத்தியம் செய்வதற்காகவும், இறந்த வீட்டில் ஓதுவதற்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

இறைவன் வழங்கிய வேதத்தை வைத்துப் பயனடைந்து, படிப்பினை பெறுவதற்குப் பதிலாக இறைவன் தடுத்த பித்அத்தான, ஷிர்க்கான பாவங்களைச் செய்து வருகின்றனர்.

பாவங்களிலிருந்து காக்கும் பலமான கேடயம்

திருக்குர்ஆனை எடுத்துப் படித்துணர்கின்ற போது அதில் குறிப்பிடப்படும் இறைவனின் ஆற்றல், அதிகாரம், பாவங்களுக்கான தண்டனைகள் அனைத்தும் நம் மனதில் ஆழப்பதியும். ஆழப்பதிந்த அந்த விஷயங்கள் நம் உள்ளத்தில் இறையச்சத்தை வார்த்தெடுக்கும். அந்த இறையச்சம் ஷைத்தானின் வலைகளில் நாம் விழுந்துவிடாமல் நம்மைத் தடுக்கும் கேடயமாக மாறுகின்றது.

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ۖ ‌ۚ‏
الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَؕ‏
اُولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ‌ؕ لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‌ۚ‏

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள்.

அவர்கள் தாம், உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

(அல்குர்ஆன்: 8:2,3,4)

الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَالصّٰبِرِيْنَ عَلٰى مَاۤ اَصَابَهُمْ وَالْمُقِيْمِى الصَّلٰوةِ ۙ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ‏

அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலை நாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுவர்.

(அல்குர்ஆன்: 22:35)

وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰٓى اَعْيُنَهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَـقِّ‌ۚ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!’’ என அவர்கள் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 5:83)

اَللّٰهُ نَزَّلَ اَحْسَنَ الْحَدِيْثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِىَ ‌ۖ  تَقْشَعِرُّ مِنْهُ جُلُوْدُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ‌ۚ ثُمَّ تَلِيْنُ جُلُوْدُهُمْ وَقُلُوْبُهُمْ اِلٰى ذِكْرِ اللّٰهِ‌ ؕ ذٰ لِكَ هُدَى اللّٰهِ يَهْدِىْ بِهٖ مَنْ يَّشَآءُ‌ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ‏

அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.

(அல்குர்ஆன்: 39:23)

لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ‌ؕ وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.

(அல்குர்ஆன்: 59:21)

மேற்கண்ட வசனங்கள் யாவும் குர்ஆன் நம் வாழ்வில் தரும் மாற்றங்களைப் பற்றி எடுத்துரைக்கிறது.

குர்ஆனைப் படிக்கும் போதும், செவிமடுக்கும் போதும் அல்லாஹ்வின் அச்சம் ஏற்படும்.

உள்ளங்கள் நடுங்கும்.

கண்ணீர் மழை பொழியும்.

உடலும், உள்ளமும் அல்லாஹ்வை நினைக்க விரையும்.

சிந்தனையற்ற, உயிரற்ற ஜடமான மலையின் மீது குர்ஆன் அருளப்பட்டிருந்தால் கூட அது அல்லாஹ்வுக்குப் பணிந்திருக்கும்.

இந்த மாற்றங்கள் நமக்கு ஏற்பட வேண்டுமெனில் குர்ஆனைப் பொருளுணர்ந்து படித்தால் மட்டுமே சாத்தியம். இன்று குர்ஆனின் போதனைகளை, வசனங்களைப் படிக்க, செவிமடுக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

புத்தக வடிவில் குர்ஆனை வைத்துள்ளோம். கைபேசிகளில் குர்ஆன் மொழிப்பெயர்ப்புகளை வைத்திருக்கின்றோம். சொற்பொழிவுகளின் வாயிலாகக் குர்ஆனின் அறிவுரைகளைக் கேட்கலாம். இவ்வாறு இன்று ஏராளமான வாய்ப்புகள் நம் முன்னால் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அவற்றில் எதையும் நாம் சரியான முறையில் பயன்படுத்தாத காரணத்தினால் தான் மேற்சொன்ன மாற்றங்களை நம்மில் பலர் உணராமல் இருக்கின்றோம்.

ஜும்ஆ போன்ற கடமையான சொற்பொழிவுகளின் போது கூட அதில் கூறப்படும் குர்ஆன் வசனங்களைக் கேட்கின்ற போது கண்களில் கண்ணீர் வருவதற்குப் பதிலாக நித்திரை மேலாடுகிறது.

நமது ஆர்வமின்மையும், அலட்சியத் தன்மையும் தான் நம்மிடையே குர்ஆன் தரும் மாற்றங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கிறது. ஆனால், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அறியாமைக் கால சமூகம் எனும் பெயரெடுத்தவர்கள், இஸ்லாத்தை ஏற்றதும் பெரும் மாற்றத்தைக் கண்டார்களே அதற்குக் காரணம் என்ன?

அவர்கள் இக்குர்ஆனை ஆர்வத்தோடு அணுகியதே அவர்களின் வாழ்வில் மிகப்பெரும் மாற்றங்களைச் சந்தித்ததற்குக் காரணமாக இருந்தது. அவற்றில் சில உதாரணங்களை இங்கு காணலாம்.

பகைவருக்கும் பணவுதவி செய்த அபூபக்ர் (ரலி)

அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கையிலேயே கொடை வள்ளல் தன்மை கொண்டவர்களாக இருந்தார்கள். இஸ்லாத்திற்குப் பிறகு இன்னும் சிறப்பாக அக்காரியத்தைச் செய்து வந்தார்கள்.

பொதுவாக, எவ்வளவு பெரிய கொடை வள்ளலாக இருப்பினும், தன் மூலம் உதவி பெறும் ஒருவர், தனக்கோ தனது குடும்பத்திற்கோ கேடு விளைவிக்கிறார் எனில் அவர் மீது கடும் கோபம் கொள்வார்; தனது உதவிகளை நிறுத்திக்கொள்வார்.

அதே போன்றுதான் அபூபக்ர் (ரலி) அவர்கள், தனது அன்பு மகளாரும் முஃமின்களின் தாயாருமான ஆயிஷா (ரலி) அவர்களின் கற்பொழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கும் அவதூறு பரப்பப்பட்ட போது அந்த அவதூறைப் பரப்பியவர்களில் தன்னிடம் உதவிபெறும் மிஸ்தஹ் என்பாரும் ஒருவர் என்று அறிந்து, அவருக்குச் செய்து வந்த உதவிகளை நிறுத்திக் கொண்டார்கள்.

உடனே இறைவன் திருக்குர்ஆனில், ‘உதவிகளை நிறுத்த வேண்டாம்’ என்று கட்டளை பிறப்பித்ததும், தனிப்பட்ட கோபம் எவ்வளவு இருப்பினும் இறை வசனத்துக்குப் பணிந்தார்கள். உள்ளத்தில் குடிகொண்ட குரோதமும், பகைமையும் அகன்றது.

 …فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ عُصْبَةٌ مِنْكُمْ} الآيَاتِ، فَلَمَّا أَنْزَلَ اللَّهُ هَذَا فِي بَرَاءَتِي، قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ يُنْفِقُ عَلَى مِسْطَحِ بْنِ أُثَاثَةَ لِقَرَابَتِهِ مِنْهُ: وَاللَّهِ لاَ أُنْفِقُ عَلَى مِسْطَحٍ شَيْئًا أَبَدًا بَعْدَ مَا قَالَ لِعَائِشَةَ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {وَلاَ يَأْتَلِ أُولُو الفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا} إِلَى قَوْلِهِ {غَفُورٌ رَحِيمٌ} فَقَالَ أَبُو بَكْرٍ: بَلَى وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ أَنْ يَغْفِرَ اللَّهُ لِي، فَرَجَعَ إِلَى مِسْطَحٍ الَّذِي كَانَ يُجْرِي عَلَيْهِ…

அல்லாஹ், “அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்’’ என்று தொடங்கும் (அல்குர்ஆன்: 24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் செலவிட மாட்டேன்’’ என்று கூறினார்கள்… மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள்……

உடனே அல்லாஹ், “உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்’’ என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். ‘அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்’ என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்னும் (அல்குர்ஆன்: 24:22) இறைவசனத்தை அருளினான்.

அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி-2661 (ஹதீஸின் சுருக்கம்)

கோபத்தை மென்று விழுங்கிய உமர் (ரலி)

நபித்தோழர்களில் உமர் (ரலி) அதிகம் கோபம் கொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி. அந்தக் கோபத்தை அல்லாஹ்வின் வார்த்தையைக் கேட்டதும் விட்டொழிப்பவராக மாறியிருக்கிறார் உமர் (ரலி).

உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார்.

முதியவர்களோ, இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்களின் அவையினராகவும், ஆலோசகர்களாகவும் இருந்தனர்.

ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா’’ என்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்’’ என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.

உயைனா அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை’’ என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள்.

உடனே ஹுர்ரு அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!’’ (அல்குர்ஆன்: 7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்’’ என்று சொன்னார்.

அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக் கூடியவர்களாய் இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி-4642 

பெரும் செல்வத்தை வழங்கிய அபூதல்ஹா (ரலி)

عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ  سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ
كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ الأَنْصَارِ بِالْمَدِينَةِ مَالًا مِنْ نَخْلٍ، وَكَانَ أَحَبُّ أَمْوَالِهِ إِلَيْهِ بَيْرُحَاءَ، وَكَانَتْ مُسْتَقْبِلَةَ المَسْجِدِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ، قَالَ أَنَسٌ: فَلَمَّا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَيَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ، أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ، فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَخٍ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ، وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ» فَقَالَ أَبُو طَلْحَةَ: أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ

அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.

“நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்’’ என்ற (அல்குர்ஆன்: 3:92) இறை வசனம் இறங்கியதும், அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, “நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்’’ எனக் கூறுகிறான்.

என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (மறுமைக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே “அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ எனக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் “ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்’’ எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!’’ எனக் கூறிவிட்டு, அத்தோட்டத்தைத் தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி-1461

இதுபோன்று திருக்குர்ஆன், நபித்தோழர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களுக்கும், குர்ஆனைக் கேட்டதும் அதற்கு அதிகம் கட்டுப்படுபவர்களாக அவர்கள் இருந்துள்ளனர் என்பதற்கும் அதிகமான சான்றுகள் உள்ளன. இருப்பினும் அவை அனைத்தையும் இங்கு கொண்டு வந்தால் பக்கங்கள் போதாது.

இதுபோன்று திருக்குர்ஆன் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நம் வாழ்விலும் இடம்பெற வேண்டுமேயானால் குர்ஆனைப் பொருளுணர்ந்து ஆர்வத்துடன் அதிகம் அணுக வேண்டும்.

அனைத்து மக்களும் குர்ஆன் ஏவுகின்ற விஷயங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, தடுக்கின்ற விஷயங்களை விட்டும் தவிர்ந்து கொண்டு, நல்லதொரு மாற்றத்தைக் காண வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பினை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.