Tamil Bayan Points

1) முன்னுரை

நூல்கள்: பேய் பிசாசு உண்டா?

Last Updated on April 15, 2023 by

நூல் ஆசிரியர் : பீ.ஜெய்னுல் ஆபிதீன்

முன்னுரை : 

மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது.

வணக்க வழிபாடுகளை மாத்திரம் சொல்லித் தருவதே இஸ்லாம் என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மாத்திரமே இஸ்லாம் சொல்லித் தருகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். புறச்செயல்களை மாத்திரம் ஒழுங்குபடுத்தும் மார்க்கம் என்பர் வேறு சிலர். புறச்செயல்களைப் புறம் தள்ளிவிட்டு அகத்தை மட்டும் சுத்தம் செய்வதே இஸ்லாம் என்பர் இன்னும் சிலர். வெளிப்படையாக இவ்வாறு இவர்கள் கூறாவிடினும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் இவ்வாறு பிரகடனப்படுத்தி வருகின்றனர்.

பலரும் பலவிதமாக இஸ்லாத்திற்கு வடிவம் கொடுக்க முயன்றாலும், மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளிலும் தலையிட்டு தக்க தீர்வை வழங்குவதே இஸ்லாம். மனிதனது செயல்களில் மட்டுமன்றி அவனது நம்பிக்கையிலும், எண்ணத்திலும் கூட இஸ்லாம் தலையிடுகிறது.

எவற்றைச் செய்யலாம்; எவற்றைச் செய்யலாகாது என்பதை இஸ்லாம் விளக்குவது போலவே, எவற்றை நம்பலாம்; எவற்றை நம்பலாகாது என்பதையும் இஸ்லாம் விளக்கமாக எடுத்துரைக்கின்றது. செயல்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிகமாக எண்ணத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது.

செய்ய வேண்டியவைகளைச் செய்யாமலிருப்பதும், செய்யக் கூடாதவைகளைச் செய்வதும் எப்படிக் குற்றமோ அது போலவே நம்ப வேண்டியவைகளை நம்பாமலிருப்பதும் நம்பக் கூடாதவற்றை நம்புவதும் குற்றமே.

இதன் காரணமாகவே பேய் பிசாசுகள் என்று மக்களால் நம்பப்படும் விசித்திரமான படைப்பைப் பற்றி இஸ்லாமிய அடிப்படையில் நாம் ஆராயும் அவசியம் ஏற்படுகிறது.

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

பெண் என்றால் பேயும் இரங்கும்

நோய்க்கும் பார்க்க வேண்டும்; பேய்க்கும் பார்க்க வேண்டும்

என்றெல்லாம் தமிழகத்தில் வழங்கும் பழமொழிகள், தமிழர்களின் உள்ளங்களில் பேய்களுக்கு இருக்கும் இடத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

உலகின் பல பகுதிகளில் பேய்கள் நடமாடுவதாக மக்கள் நம்பினாலும் தமிழகத்தில் இந்த நம்பிக்கை மிக அதிகம். எண்ணிலடங்காத பேய்களைக் கற்பனை செய்து அவற்றின் பெயர்களும், தன்மைகளும் மிகத்துல்லியமாக வித்தியாசப்பட்டுள்ளதை தமிழகத்தில் காண முடியும்.

நள்ளிரவில் கதவைத் தட்டும் பேய்கள் உள்ளன. வீடுகளில் கல்லெறிந்து விட்டு மாயமாய் மறைந்திடும் பேய்கள் உள்ளன. பழிவாங்கும் பேய்கள், இரத்தம் குடிக்கும் பேய்கள், இளைஞர்களை மாத்திரமே தப்பு செய்வதற்காக அழைக்கும் மோகினிப் பேய்கள், வேண்டியவர்களுக்கு உதவி செய்யும் பேய்கள் என்றெல்லாம் பேய்களில் பல வகைகள் உள்ளன. இல்லறத்தில் தோல்வியடைந்து இலக்கின்றி அலையும் பேய்களும் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் மீது மேலாடுகின்ற மகாசக்தி படைத்த பேய்களும் உள்ளன.

பிசாசுகள், மோகினி, இரத்தக் காட்டேரி, கொள்ளிவாய்ப் பிசாசு என்பது போன்ற செல்லப் பெயர்களும் பேய்களுக்கு உள்ளன. பேய்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வெல்வாக்குக்கு இவை சான்றுகள்.

பேய் வீடு, பேய் மாளிகை என்றெல்லாம் பேய்களைக் கதாநாயகர்களாக்கி பி.டி. சாமி போன்றவர்கள் தமிழகத்தில் பிழைப்பு நடத்த முடிகின்றதென்றால், பேய் பற்றி கற்பனைக் கதைகளை வெளியிட்டு தமிழகப் பத்திரிகைகள் பல சமூகத் தொண்டாற்ற (?) முடிகிறது என்றால் பேய்களின் ஆதிக்கத்தை அளவிட வேறு அளவுகோல் எதுவும் தேவையில்லை.

“அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; வஞ்சனைப் பேய்களென்பர்; துஞ்சுது முகட்டிலென்பார்; அந்த மரத்திலென்பார்; இந்தக் குளத்திலென்பார் என்று நெஞ்சு பொறுக்காமல் சில பேர் குமுறினாலும் சில சுயமரியாதையுள்ள பெரியார்கள் பேய்களுக்கெதிராக கடும் பிரச்சாரம் செய்தாலும் பேய் விசுவாசிகளின் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை.

மற்றவர்கள் பேய்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் நம்பிவிட்டுப் போகட்டும்! முஸ்லிம்கள் இதுபற்றி எத்தகைய முடிவுக்கு வரவேண்டும் என்பதையும், பேய்களை நம்புவதனால் ஏற்படும் சாதக பாதகங்களையும் அவற்றை மறுப்பதால் ஏற்படும் சாதக பாதகங்களையும் திருக்குர்ஆன் வெளிச்சத்திலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் துணையுடனும் ஆராய்வோம்.