Tamil Bayan Points

1) முன்னுரை

நூல்கள்: அர்த்தமுள்ள இஸ்லாம்

Last Updated on April 15, 2023 by

உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம மிகச் சிறந்த மார்க்கமாகத் திகழ்கிறது.

ஆனால் இந்த மார்க்கம் எப்படிச் சிறந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் திகழ்கிறது என்பதை முஸ்லிமல்லாதவர்களூம் முஸ்லிம்களில் பலரும் அறியாமல் உள்ளனர்.

கடவுளின் பெயரால் மனிதன் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதும்

கடவுளின் பெயரால் பொருளாதாரத்தைச் சீரழிப்பதும்

கடவுளின் பெயரைச் சொல்லி மனிதர்களைக் கொடுமைப்படுத்துவதும்

கடவுளுக்கும் மனிதனுக்குமிடையில் இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்வதும்

கடவுளின் பெயரால் மனிதனின் சுய மரியாதைக்கு வேட்டு வைப்பதும்

கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்டுவதும்

மனிதனைக் கடவுளாக்குவதும்

இன்னும் இது போன்ற காரணங்களால் தான் மதங்கள் வெறுக்கப்படுகின்றன.

ஆனால் இஸ்லாம் இந்த விமர்சானங்களுக்கு எவ்வாறு அப்பாற்பட்டு விளங்குகிறது? என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிவழியில் தெளிவு படுத்துவ்துடன் அறிவுப்பூர்வமான் வாதங்களையும் எடுத்து வைக்கும் சிறந்த நூல்.

முஸ்லிம் அல்லாத நண்பர்களுக்கு இஸ்லாத்தை எளிதில் புரிய வைக்கும் நூல்

அர்த்தமுள்ள இஸ்லாம்

உலகில் உள்ள எல்லா மதங்களும் அர்த்தமுள்ள தத்துவங்கள் என்றே தம்மைப் பற்றிக் கூறிக் கொள்கின்றன.

ஆனால், சிந்தனையாளர்களின் பார்வையில் எல்லா மதங்களும் அர்த்தமற்றவையாகத் தோற்றமளிக்கின்றன.

மதங்கள் யாவும் அர்த்தமற்றவை’ என்று கூறும் சிந்தனையாளர்கள் அறிவுப்பூர்வமான சில வாதங்களை முன் வைத்து வாதிடுகின்றனர்.

இந்த நிலையில் ஒரு மதம் அர்த்தமுள்ளதா? அல்லவா?’ என்பதை முடிவு செய்ய வேண்டுமானால் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வாதத்துக்கும் அறிவுப்பூர்வமான மறுப்பை அந்த மதம் எடுத்து வைக்க வேண்டும்.

மேலும் வலிமையான வாதங்களை முன் வைத்து தன்னிடம் அர்த்தமுள்ளது என்பதையும் அந்த மதம் நிரூபிக்க வேண்டும்.

வலிமையான வாதங்களையும் முன் வைக்காமல், மாற்றுக் கருத்துடையோரின் வலுவான சான்றுகளையும் மறுக்காமல் தன்னை அர்த்தமுள்ள தத்துவமாக ஒரு மதம் கூறிக் கொண்டால் அதில் உண்மை இல்லை எனக் கண்டு கொள்ளலாம்.

அரிசி மாவில் கோலம் போடுவதால் எறும்புகளுக்கு அது உணவாக அமையும்.

நெற்றியில் விபூதி பூசினால் தலையில் உள்ள நீரை அது உறிஞ்சும்

என்பது போன்ற பதில்களால் சிந்தனையாளர்களின் வலிமையான கேள்வியில் உள்ள நியாயத்தை மறைத்து விட முடியாது.

அஸ்திவாரம் இல்லாமல் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது’ என்று விமர்சனம் செய்யும் போது சுவற்றுக்கு அடிக்கப்பட்ட வண்ணம் எவ்வளவு அழகாக இருக்கிறது?’ என்று பதில் கூற முடியாது. விழுந்து விடக் கூடிய கட்டத்தின் சுவர் எந்த வண்ணத்தில் இருந்தாலும் பயன் இல்லை என்றே சிந்தனையாளர்கள் நினைப்பார்கள்.

மதங்கள் அர்த்தமற்றவை’ எனக் கூறுவோர் அஸ்திவாரம் பற்றியும், அடிப்படைக் கொள்கைகள் பற்றியும் தான் கேள்வி எழுப்புகிறார்கள்.

எனவே ஒரு மதம் தன்னை அர்த்தமுள்ள தத்துவம் என்று கருதினால் எழுப்பப்படும் எதிர்க் கேள்விகளை உரிய முறையில் எதிர்கொள்வது அவசியம்.

நாமறிந்த வரை இஸ்லாம் தவிர எந்த மதமும் எதிர்க் கேள்விகளை உரிய விதத்தில் அணுகவில்லை. மதங்கள் அர்த்தமற்றவை’ எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் நியாயமான அனைத்துக் கேள்விகளுக்கும் அதை விட நியாயமான விடையை இஸ்லாம் அளிக்கின்றது.

நூல் ஆசிரியர் : பீ.ஜெய்னுல் ஆபிதீன்