Tamil Bayan Points

41) முஸ்லிமல்லாதவருக்கும் கலிமா சொல்லிக் கொடுத்தல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

Last Updated on October 29, 2023 by

மரணத்தை நெருங்கியவர் முஸ்லிமல்லாதவராக இருந்தால் நாம் சொல்லிக் கொடுப்பதால் கடைசி நேரத்தில் அவர் ஏகத்துவக் கொள்கையை ஏற்றவராக மரணிக்கக்கூடும் என்று நாம் நம்பினால் அவர்களுக்கும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை அதன் பொருளுடன் சொல்லிக் கொடுப்பது சிறந்ததாகும்; நபிவழியுமாகும்.

யூத இளைஞர் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்தார். அவர் நோயுற்ற போது அவரை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றனர். அவரது தலைக்கு அருகில் அமர்ந்து, நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் தனது தந்தையைப் பார்த்தார். நபிகள் நாயகம் (ஸல்) கூறுவதைக் கேள் என்று அவரது தந்தை கூறினார். உடனே அந்த இளைஞர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவரை நரகத்திலிருந்து விடுவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறிக் கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1356, 5657

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தனர். அங்கே அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா ஆகியோர் இருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையை மொழியுங்கள். அதை வைத்து அல்லாஹ்விடம் உங்களுக்கு சாட்சி கூறுகின்றேன் என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா இருவரும் அபூ தாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை நீ புறக்கணிக்கப் போகிறாயா? என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவ்விருவரும் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். முடிவில் நான் அப்துல் முத்தலிபின் வழியில் தான் இருப்பேன் என்று அபூ தாலிப் கூறி விட்டார். லாயிலாஹ இல்லல்லாஹ் கூற மறுத்து விட்டார்.

அறிவிப்பவர்: முஸய்யிப் (ரலி)

நூல்: புகாரி 1360, 3884, 4675, 4772

முஸ்லிமல்லாதவர்கள் நம்மோடு பழகியவர்களாக இருந்தால் அவர்களுக்குக் கடைசி நேரத்திலாவது இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல முயல வேண்டும் என்பதற்கு மேற்கண்ட நபிமொழிகள் சான்றுகளாகவுள்ளன.