Tamil Bayan Points

முஸ்லிம்களே தளர்ந்து விடாதீர்கள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 30, 2023 by Trichy Farook

முஸ்லிம்களே தளர்ந்து விடாதீர்கள்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!

இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களை இறைவன் படைத்திருக்கின்றான். ஒவ்வொரு சாராரும் ஒரு குறிப்பிட்ட மதங்களையும், சித்தாந்தங்களையும் பின்பற்றி வாழ்ந்து வருகின்றார்கள். பெரும்பான்மையான மக்கள் பல கடவுள் கொள்கையிலும், அல்லாஹ்வின் தூதர் ஈஸா (அலை) அவர்களை கடவுளாகக் கொண்டு ஒரு பெருங்கூட்டமும், கடவுளே இல்லை என்று ஒரு கூட்டமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இத்தனை கோடி மனிதர்களுக்கு மத்தியில், அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும், அடியாராகவும் இருக்கின்றார்கள் என்றும் உறுதியாக நம்பிக்கை வைத்து இஸ்லாமியர்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

உலகத்தில் எந்த மதத்துக்கும், சித்தாந்தத்திற்கும், கடவுள் கோட்பாடுகளுக்கும் இல்லாத அளவுக்கு எதிர்ப்புக் கணைகள், சொல்லெணா துன்பங்கள், வேதனைகள், சோதனைகள், பொருளாதாரத்தில் பின்னடைவு என இதுபோன்ற ஏராளமான கஷ்டங்களை முஸ்லிம்கள் இந்த உலகத்தில் அனுபவித்து வருகின்றார்கள்.

முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள், ஒரு கடவுள் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் என்பதைத் தெரிந்த மாத்திரத்திலே உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒருசில விஷக்கிருமிகளின் பார்வையும் செயல்பாடுகளும் தனித்து தெரிவதைப் பார்க்கின்றோம். அதாவது இந்த அடையாளங்களில் பயணிப்பவர்களை உலகத்தில் வாழ விடக் கூடாது என்ற வெறித்தனத்திலும் சிலர் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

மேலும், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துவிட ஒரு கூட்டம் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் சதி வலைகளையெல்லாம் கீறி கிழித்துக் கொண்டு இஸ்லாம் எனும் சத்திய ஜோதி அகிலமெங்கும் பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றது. பாறைகளைத் தகர்த்து பாதைகள் அமைத்து இஸ்லாமிய ஜோதி பயணித்துக் கொண்டிருக்கின்றது. தடைக் கற்களையும் படிக்கற்களாக மாற்றி சத்தியம் உயர்ந்து கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய மார்க்கத்தை மட்டும் அழித்தொழிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த உலகமும் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றார்களே! ஏன்? மற்ற மதத்தைச் சார்ந்த மக்கள் அவர்கள் விரும்பி தத்தமது மதங்களைப் பின்பற்றுவது போல், இஸ்லாமிய மார்க்கத்தையும் முஸ்லிம்கள் விரும்பி உள்ளங்களில் ஆழப்பதிய வைத்துக் கொண்டு பின்பற்றுகின்றார்கள்.

இதில் மற்றவர்களுக்கு ஏன் வலிக்கின்றது? கசக்கின்றது? இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களைப் பார்த்து இவர்களுக்கு வயிறு எரிகின்ற காரணம் என்ன? இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று ஏன் நினைக்கின்றார்கள்? இஸ்லாம் உலகத்திற்குச் சொல்கின்ற செய்தி என்ன? இஸ்லாமிய மார்க்கத்தைப் போன்ற சிறந்த மதம், மார்க்கம் வேறேதேனும் இருக்கின்றதா? என்பது போன்ற ஏராளமான கேள்விகள் பார்ப்போரின் உள்ளங்களில் எழுவதைப் பார்க்கின்றோம்.

உண்மையில் சொல்வதாக இருந்தால் உலகளாவிய அளவில் எதிர்க்கப்படுவதில் முன்னணியில் இருக்கின்ற மார்க்கம் இஸ்லாமிய மார்க்கமாக இருக்கின்றது. அதே வேளையில் உலகிலேயே அசுர வேகத்தில் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்ற மார்க்கமும் இஸ்லாமே!

எவ்வளவு தான் உலகமே சேர்ந்து இஸ்லாமிய மார்க்கத்தையும், இஸ்லாமியர்களையும் எதிர்த்தாலும், வேதனைகள் கொடுத்தாலும் இஸ்லாமியர்களாகிய நாம் மனம் தளர்ந்து விடக் கூடாது. கவலையில் மூழ்கி விடக் கூடாது. உறுதியோடு இருக்க வேண்டும்.

இறைவன் தன்னுடைய வார்த்தையின் மூலமாகவும், நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாழ்க்கையின் மூலமாகவும் இந்த உலக முஸ்லிம்களுக்கு சொல்லித் தரும் செய்தி என்னவென்றால், இஸ்லாமிய மார்க்கமும், இஸ்லாமிய மார்க்கத்தில் அங்கம் வகிப்பவர்களும் பலதரப்பட்ட புறங்களிலிருந்தும், பல்வேறு நபர்களிடமிருந்தும் உலகம் அழிகின்ற நாள்வரை எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டே தான் இருப்பார்கள் என்பதை ஆணித்தரமாகப் பதிய வைக்கின்றார்கள்.

ஆனால் முஸ்லிம்களுக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும், நாலா புறத்திலிருந்தும் எதிர்ப்புக் கணைகள் பாய்ந்தாலும், உயிர் போகின்ற அளவுக்குத் துன்பங்கள் கொடுக்கப்பட்டாலும், பொருட்கள் சேதப்படுத்தப்பட்டாலும், பள்ளிவாசல்கள் அடித்து நொறுக்கப்பட்டாலும், ஊரை விட்டு அடித்து விரட்டப்பட்டாலும், தீவிரவாதிகள் என்ற கோரமான பட்டத்தைச் சுமத்தினாலும், உயிரை எடுத்து இரத்தத்தைக் குடித்தாலும் நாம் ஏற்று இருக்கின்ற இஸ்லாமிய மார்க்கத்தில் மாத்திரம் உறுதியாகப் பயணித்து விட்டால் இறைவனின் பேருதவியின் மூலமாக அனைத்து எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கி விடலாம்.

இறைவன் முஸ்லிம்களுக்கு சொல்லித் தருகின்ற, ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் உள்ளங்களை பலப்படுத்துகின்ற அற்புதமான செய்தி,

وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏

தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.

(அல்குர்ஆன்: 3:139)

மேலும் இறைவன் கூறும்போது;

وَكَاَيِّنْ مِّنْ نَّبِىٍّ قٰتَلَ ۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌ ۚ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ‏

அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்திடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

(அல்குர்ஆன்: 3:146)

இந்த வசனத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள்! படைத்த இறைவனிடமிருந்து ஏராளமான துன்பங்கள் ஏற்படும். துன்பங்கள் ஏற்படும் நேரத்தில் ஒரு முஸ்லிம் மூன்று விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு கடைப்பிடித்தால் கட்டாயம் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை, தடம் தெரியாமல் துடைத்தெறிந்து விடலாம் என்றும் இறைவன் அறிவுரை கூறுகின்றான்.

அதாவது ஒரு இஸ்லாமியனுக்கு துன்பம் ஏற்படும்போது, தளர்ந்தும் விடக் கூடாது; பலவீனமாகவும் ஆகி விடக்கூடாது; எதிரிகளுக்குப் பணிந்து விடவும் கூடாது; மாறாக சகித்துக் கொள்ள வேண்டும் என்றும், சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகின்றான் என்றும் இறைவன் ஆழப் பதிய வைக்கின்றான்.

அல்லாஹ்வின் ஜோதியை ஊதி அணைக்க முடியாது.

இந்த உலகத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களை எப்படியாவது அழித்தொழிக்க வேண்டும் என்றும், இஸ்லாத்தை உலக அளவில் பரவ விடாமல் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்றும் ஒரு பெருங்கூட்டமே மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இவர்கள் என்னதான் முனகினாலும், கத்தினாலும், போராடினாலும், இரகசியமாகக் காய் நகர்த்தினாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் இந்தச் செய்தியை அப்படியே நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைப்படுத்துகின்றது.

அதாவது கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு (இன்னசென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்) என்ற பெயரில் நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தியும் இழிவுபடுத்தியும் அமெரிக்க ஏகாதிபத்திய அயோக்கியர்கள் ஒரு படம் ஒன்றை வெளியிட்டார்கள்.

அந்தப் படம் வெளிவந்ததும் இதுவரைக்கும் உலகம் சந்தித்திராத அளவுக்கு ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பலைகளையும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் உலகம் சந்தித்தது. ஆனால் அந்தப் படத்தை உருவாக்கியவர் மனம் திருந்தி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதாகச் செய்திகள் கூறுகின்றன.

கடந்த பத்து வருடங்களில் அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவும் மார்க்கமாக இஸ்லாம் திகழ்கின்றது. 2000ஆம் ஆண்டில் ஒரு மில்லியனாக (பத்து இலட்சமாக) இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2012ஆம் ஆண்டில் 2.6 மில்லியனாக (அதாவது, இருபத்தி ஆறு இலட்சமாக) மாறியுள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளதாக நியூயார்க் டெய்லி நியூஸ் குறிப்பிட்டுள்ளது. அதாவது பத்து வருடங்களுக்குள் 150% வளர்ச்சியைக் கண்டுள்ளதை இது எடுத்துக் காட்டுகின்றது.

திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் மற்றும் இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் அளவுக்கதிகமாக அமெரிக்காவில் விற்றுத் தீர்ந்தன. கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டிருக்கின்றது. ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றது என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என் (CNN) குறிப்பிடுகின்றது.

‘2027இல் பிரான்ஸில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார் என்றும், இன்னும் 39 வருடங்களுக்குள் பிரான்ஸில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருப்பார்கள்’ என்றும் கூறுகின்றது. நெதர்லாந்தில் தற்போது பிறக்கும் குழந்தைகளில் 50% முஸ்லிம்கள் என்றும் இன்னும் 15 வருடங்களுக்குள் நெதர்லாந்தில் முஸ்லிம்கள் 50% சதவிகிதமாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறிப்பிட்ட 15 வருடங்களில், சுமார் ஏழு வருடங்கள் கடந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ரஷ்யாவில் ஐந்து பேரில் ஒருவர் முஸ்லிமாக இருப்பதாகவும், அந்த அறிக்கை கூறுகின்றது. பெல்ஜியத்தில் 2025ல் பிறக்கும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை முஸ்லிமாக இருக்கும் என்றும் 2050ல் ஜெர்மன் முஸ்லிம் நாடாக மாறும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

அது மட்டுமன்றி தற்போது ஐரோப்பாவில் 52 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாகவும் இன்னும் 20 வருடங்களுக்குள் இது இரு மடங்காக மாறும். (அதாவது, 104 மில்லியனாகும்) எனவும் ஜெர்மன் அரசே அறிவித்துள்ளது.

இதுபோன்ற ஏராளமான புள்ளி விவரங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்ற செய்தி என்னவென்றால், இஸ்லாமிய மார்க்கம் எந்த அளவுக்கு எதிர்க்கப்படுகின்றதோ, அந்த அளவுக்கு வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

ஏனென்றால் இது படைத்த இறைவனின் மார்க்கம்; இது அல்லாஹ்வின் ஜோதி; அல்லாஹ்வின் ஜோதியை எவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றவனாலும் ஊதி அணைக்கவே முடியாது. அவ்வாறு ஊதி அணைக்க நினைத்தாலும் அல்லாஹ் தனது ஜோதியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். இது உலகம் அழிகின்ற நாள் வரை எந்தக் கொம்பனாலும் நிறைவேற்றவே முடியாத சவாலாகும்.

يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـــٴُـــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ‏

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்.

(அல்குர்ஆன்: 9:32)

يُرِيْدُوْنَ لِيُطْفِـــٴُــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ‏
هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.

(அல்குர்ஆன்: 61:8,9)

உலகமே வெறுத்தாலும், துன்பங்களைக் கொடுத்தாலும் அல்லாஹ் அனைத்து மார்க்கங்களை விட இஸ்லாமிய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன கச்சிதமாகச் செய்து வைத்திருக்கின்றான் என்பதை இறைவனின் வார்த்தை தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுகின்றது.

இதுபோன்ற செய்திகள் நமக்கு ஒரு உண்மையை ஆழமாகப் பதிய வைக்கின்றது. அது என்னவென்றால் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, மனம் தளர்ந்து விடாமல் படைத்த இறைவனை உளமாற நம்புபவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான். அவர்களுக்கு அறியாப் புறத்திலிருந்து தன்னுடைய உதவியை இறக்குவான் என்பதாகும்.

அல்லாஹ்வின் அற்புதமான உதவியை, அல்லாஹ்வை உளமாற ஏற்றுக் கொண்டு, மனம் தளராமல் பயணிக்கின்ற ஏராளமான நபிமார்களுக்கும் நல்லவர்களுக்கும் வழங்கி இருக்கின்றான் என்பதே நமது கண்களுக்கு முன்னால் கொட்டிக் கிடக்கின்ற நிதர்சனமான சான்று.

நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்ட இப்ராஹீம் நபி

அல்லாஹ் மனிதர்களில் ஒருவரைத் தன்னுடைய உற்ற நண்பனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றால் அந்த மாமனிதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மட்டும் தான். இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள்; ஓரிறைக் கொள்கையை வாழ்க்கை நெறியாக ஏற்று நடக்கின்றார்கள்; பல கடவுள் கொள்கையை எதிர்த்து நிற்கின்றார்கள்.

பல கடவுள் கொள்கைக்கு ஆதரவாக நிற்கின்ற நபர்களையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்கின்றார்கள்; இதுபோன்ற ஏராளமான காரியங்களை தனி ஒருவராக நின்று ஒரு கூட்டமைப்புக்கு நிகரான வேலைகளைச் செய்து முடிக்கின்றார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் மனம் தளராத பிரச்சாரத்தைக் கண்டு, கடுமையான வேதனையைத் தயார் செய்து இப்ராஹீம் (அலை) அவர்களை அந்த வேதனையில் எதிரிகள் உட்படுத்துகின்றார்கள்.

اُفٍّ لَّـكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
 قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْۤا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ‏
 قُلْنَا يٰنَارُ كُوْنِىْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰٓى اِبْرٰهِيْمَۙ‏
 وَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِيْنَ‌ۚ‏

“அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?’’ (என்றும் கேட்டார்.) “நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!’’ என்றனர்.

“நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு’’ என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நட்டமடைந்தோராக ஆக்கினோம்.

(அல்குர்ஆன்: 21:67-70)

இப்ராஹீம் நபி அவர்கள் மனம் தளராமல் தன்னந்தனியாக நின்று ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றியதாலும், ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொன்ன காரணத்தினாலும் அவருக்குக் கொடூரமான தண்டனையாக, தயவு தாட்சண்யமின்றி நெருப்பைத் தயார் செய்து அதில் வீசி எறிகின்றார்கள். ஆனால் அல்லாஹ்வின் மகத்தான உதவியாலும், இப்ராஹீம் நபியின் தளராத உள்ளத்தினாலும் அல்லாஹ் நெருப்பின் தன்மையை மாற்றி குளிரூட்டுகின்ற தன்மையாக மாற்றி விடுகின்றான்.

மனம் தளராத இப்ராஹீம் நபிக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் தவிடு பொடியாக்கி, எதிரிகளை நஷ்டமடைய வைக்கின்றான். இதுபோன்று முஸ்லிம்கள் மனம் தளராமல் அல்லாஹ்வின் மீது உறுதியாக நம்பிக்கை வைத்தால் நமக்கும் அல்லாஹ்வின் மறைமுகமான உதவி நிச்சயம் கிடைக்கும்.

மூஸா நபியைக் காப்பாற்றிய இறைவன்

மூஸா (அலை) அவர்கள், கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் அட்டூழியம் தாங்க முடியாமல் தானும், தன்னோடு ஈமான் கொண்ட மக்களும் ஃபிர்அவ்னின் அடாவடித்தனத்திலிருந்து தப்பித்துச் செல்கின்றார்கள்.

வெகுதூரப் பயண ஓட்டத்திற்குப் பிறகு இறுதியாக, சுற்றும் சூழ்ந்த கடலுக்கு முன்னால் வந்து மாட்டிக் கொள்கின்றார்கள். கூடி இருக்கின்ற, நம்பி வந்த அத்தனை மக்களும் ‘மூஸாவே! கண்டிப்பாக நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்! வசமாக மாட்டிக் கொண்டோம்’ என்று சொன்ன போது, மூஸா (அலை) அவர்கள் மன உறுதியோடு அந்த நேரத்தில் சொன்ன வார்த்தை ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களுக்கும் பாடம் கற்றுக் கொடுக்கின்ற வார்த்தையாக இருக்கின்றது.

இதோ! அந்த அற்புத வார்த்தையின் செய்திகள்:

فَاَ تْبَعُوْهُمْ مُّشْرِقِيْنَ
فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ
قَالَ كَلَّا‌‌ ۚ اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ‏
فَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ‌ؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيْمِ‌ۚ‏
 وَاَزْلَـفْنَا ثَمَّ الْاٰخَرِيْنَ‌ۚ‏
وَاَنْجَيْنَا مُوْسٰى وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِيْنَ‌ۚ‏

ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ‌ؕ‏

اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً ‌ ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ

காலையில் (ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்) அவர்களைப் பின்தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டபோது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்’’ என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். “அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்’’ என்று அவர் கூறினார்.

“உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக’’ என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 26:60-68)

மூஸா (அலை) அவர்கள் எந்த அளவுக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும், மனம் தளராத உள்ளமும் கொண்டிருந்தால் இந்த வார்த்தையைச் சொல்லியிருக்க முடியும். வசமாக மாட்டிக் கொண்டோம் என்று தெரிந்த பிறகும் கூட, ‘இல்லை! இல்லை! என்னுடன் என் இறைவன் இருக்கின்றான்’ என்று சொன்ன வார்த்தையைக் கேட்டு குழுமி இருந்த அத்தனை நபர்களும் ஆச்சர்யத்திலேயே மூழ்கித் திளைத்திருப்பார்கள்.

அதேபோன்று அவரின் மன உறுதிக்கு, கடலைப் பிளந்து அல்லாஹ் உதவி செய்கின்றான்.
இதுபோன்ற மன உறுதி, ஆழ்ந்த நம்பிக்கை, தடுமாறாத உள்ளம் ஆகியவற்றை முஸ்லிம்களாகிய நாமும் பெறுவதற்கு முயற்சி செய்தால் எத்தனை பெரிய பிரச்சனைகளிலிருந்தும் படைத்த இறைவன் நிச்சயம் காப்பாற்றுவான்.

யூனுஸ் நபியைக் காப்பாற்றிய இறைவன்

யூனுஸ் (அலை) அவர்கள் தன்னைப் படைத்த இறைவனிடத்தில் ஒரு காரியத்துக்காகக் கோபித்துச் செல்கின்றார்கள். அதற்கு இறைவன் யூனுஸ் (அலை) அவர்களுக்கு நடத்திய பாடமும், எவ்வளவு சிரமமான சூழலில் இருந்தாலும், தான் செய்த தவறை வருந்தி இறைவனின் மீது ஆழ்ந்த நம்பிக்கை, மன உறுதி கொண்டதும் ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்கு அற்புதமான பாடமாக இருக்கின்றது.

وَاِنَّ يُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏

اِذْ اَبَقَ اِلَى الْفُلْكِ الْمَشْحُوْنِۙ‏

فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِيْنَ‌ۚ‏

فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِيْمٌ‏

فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِيْنَۙ‏

لَلَبِثَ فِىْ بَطْنِهٖۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‌ۚ‏

فَنَبَذْنٰهُ بِالْعَرَآءِ وَهُوَ سَقِيْمٌ‌ۚ‏

وَاَنْۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّنْ يَّقْطِيْنٍ‌ۚ‏

யூனுஸ் தூதர்களில் ஒருவர்.
நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடியபோது, அவர்கள் (கப்பலில் இருந்து யாரை வெளியேற்றுவது என்று) சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார்.
இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. அவர் (நம்மை) துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.
அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம்.

(அல்குர்ஆன்: 37:139-146)

அல்லாஹ்வின் மீது கோபித்துக் கொண்டு மீன் வயிற்றில் கிடத்தப்பட்டாலும், இறைவனின் மீது கொண்ட ஆழமான மன உறுதியினால் யூனுஸ் (அலை) அவர்களை மீன் வயிற்றிலிருந்து காப்பாற்றி அல்லாஹ் அருள் புரிகின்றான்.

எனவே இத்தனை காலமாக அல்லாஹ்வின் கட்டளைகளை மீறி கட்டுப்படாமல் வாழ்ந்திருந்தாலும், அல்லாஹ்வின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தால், உள்ளம் தளராமல் உறுதியாக இருந்தால் எத்தனை பெரிய சிரமங்களிலிருந்தும் சோதனைகளிலிருந்தும் நிச்சயம் அல்லாஹ் முஸ்லிம்களைக் காப்பாற்றுவான்.

நபி (ஸல்) அவர்களை காப்பாற்றிய இறைவன்

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவ மார்க்கத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்த நாள் முதல் கடும் துன்பத்தையும் துயரத்தையும் எதிரிகளும், துரோகிகளும் கொடுத்தார்கள்.

சில நேரங்களில் ஊரை விட்டு விரட்டினார்கள். கழுத்தை நெரித்துக் கொலை செய்வதற்கு முற்பட்டார்கள். முஹம்மதின் தலையைக் கொய்து வருபவருக்குப் பரிசுத்தொகை அறிவித்தார்கள். இழிவாகப் பேசினார்கள். சூனியக்காரர் என்றார்கள். பைத்தியக்காரர் என்றார்கள்.

அத்தனை ஏச்சுப் பேச்சுக்களையும் சகித்துக் கொண்டு, உள்ளம் உறுதி கொண்டவர்களாக அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிரிகளால் கொடுக்கப்பட்ட துன்பத்தை ஹதீஸ்கள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

(ஹிஜ்ரி-7ஆம் ஆண்டில்) கைபர் வெற்றி கொள்ளப்பட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இங்குள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்’’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்று திரட்டப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள்.

அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப்போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள் “சரி (உண்மையைச் சொல்கிறோம்), அபுல்காசிம் முஹம்மது (ஸல்) அவர்களே!’’ என்று பதிலளித்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தந்தை யார்?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “எங்கள் தந்தை இன்னார்’’ என்று பதிலளித்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார்தாம்’’ என்று கூறினார்கள். யூதர்கள், “நீங்கள் உண்மை சொன்னீர்கள்; நல்லதையும் சொன்னீர்கள்’’ என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “ நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?’’ என்று (மறுபடியும்) கேட்டார்கள். அதற்கவர்கள், “சரி, அபுல் காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்துகொண்டதைப் போன்றே இதையும் அறிந்துகொள்வீர்கள்’’ என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நரகவாசிகள் யார்?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் அந்த நரகத்தில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு எங்களுக்குப் பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள்’’ என்று பதிலளித்தார்கள்.

(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர்களிடம், “அதில் நீங்கள் தாம் இழிவடைவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்கு பதிலாக ஒரு போதும் புகமாட்டோம்‘’ என்று கூறிவிட்டுப் பிறகு அவர்களிடம், “நான் (இன்னும்) ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?’’ என்று கேட்டார்கள். யூதர்கள், “சரி’’ என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?’’ என்று கேட்டார்கள். அவர்கள், “ஆம் (கலந்திருக்கிறோம்)’’ என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஏன் இப்படிச் செய்தீர்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நீங்கள் பொய்யராக இருந்(து, விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் ஆனந்தமடைவோம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கிழைக்காது” என்று பதிலளித்தார்கள்.

ஆதாரம்: புகாரி-5777 

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரா? இல்லையா? என்பதைச் சோதிப்பதற்காக உணவை அன்பளிப்புச் செய்வது போன்று ஆட்டில் விஷத்தைத் தடவி, கொலை செய்வதற்கு முனைந்திருக்கின்றார்கள்.

ஆட்டில் விஷம் கலந்ததற்கான காரணம் என்ன? என்று யூதர்களிடம் கேட்கும் போது, “நீங்கள் இந்த விஷத்தின் மூலம் இறந்தால் நாங்கள் ஆனந்தமடைவோம்! நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அந்த விஷம் தீங்கிழைக்காது” என்றும் பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்களின் மன உறுதியினாலும், அல்லாஹ்வின் மீது அவர்கள் வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கையினாலும் விஷம் கலந்த உணவின் தீங்கை விட்டும் நபியை அல்லாஹ் காப்பாற்றி விட்டான். மனம் தளராமல் வாழ்ந்தால் முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் இதுபோன்ற மறைமுகமான பேருதவியினைச் செய்வான்.

இதுபோன்ற ஏராளமான சம்பவங்களில் இஸ்லாத்தையும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்த எதிரிகளை விட்டும், முஸ்லிம்கள் கொண்டிருந்த தளராத உள்ளத்தின் காரணமாக அல்லாஹ் காப்பாற்றி உள்ளான்.

இப்ராஹீம் நபியை நெருப்புக் குண்டத்திலிருந்து காப்பாற்றியது போன்று, மூஸா நபியைக் கடலில் மூழ்கடிப்பதிலிருந்து காப்பாற்றியது போன்று, யூனுஸ் நபியை மீன் வயிற்றிலிருந்து காப்பாற்றியது போன்று, நபி (ஸல்) அவர்களை விஷத்தின் தீங்கிலிருந்து காப்பாற்றியது போன்று இன்னும், இதுபோன்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஏராளமான மக்களை அல்லாஹ் காப்பாற்றி இருக்கின்றான்.

எத்தனை பெரிய சோதனைகளைக் கட்டவிழ்த்து விட்டாலும் ஏராளமான முஸ்லிம்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டாலும் பள்ளிவாசல்களை அடித்து நொறுக்கினாலும் குர்ஆனைக் கிழித்து எறிந்தாலும் ஊரை விட்டு அடித்து விரட்டினாலும் ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து இஸ்லாத்திற்கு எதிரான விரோதப் போக்கை கடைபிடித்தாலும் யாருக்கும் அஞ்சாமல் கொண்ட கொள்கையிலும், அல்லாஹ்வின் மீது வைத்த நம்பிக்கையிலும் ஆழமான உறுதியோடு இருந்தால் நிச்சயமாக வெற்றி நமதே!

முஸ்லிம்களே உயர்ந்தவர்கள்! எவ்வளவு பெரிய கொம்பனாலும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழித்து, வீழ்த்தி விட முடியாது என்பதை உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வோமாக!!!

இறுதியாக, இறைவன் மற்றும் இறைத்தூதரின் அற்புதமான போதனைகள்:

«الْمُؤْمِنُ الْقَوِيُّ، خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللهِ وَلَا تَعْجَزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ، فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ قَدَرُ اللهِ وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே.

ஆதாரம்: முஸ்லிம்-5178 (ஹதீஸ் சுருக்கம்)

قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا ۚ هُوَ مَوْلٰٮنَا ‌ ۚ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏

“அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்‘’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 9:51)

தன்னைச் சார்ந்திருப்போர் அனைவரையும் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்!!! முஸ்லிம்களைக் காப்பாற்ற அல்லாஹ் போதுமானவன்!!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.