Tamil Bayan Points

22) வங்கி – வட்டி – லாபம்

நூல்கள்: நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

Last Updated on March 5, 2022 by

வங்கிகளில் தரக்கூடிய கூடுதல் பணம், போனஸ் போன்ற பெயர்களில் வழங்கப்பட்டாலும் நிச்சயமாக அது வட்டி தான்.

வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்திற்கும், வட்டிக்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

* வட்டி என்பது முன்னரே இவ்வளவு தான் என்று தீர்மானிக்கப்படுகிறது.

வியாபாரத்தில் லாபம் என்பது இவ்வளவு தான் என்று முன்னரே உறுதி செய்ய முடியாது.

* வட்டி என்பதில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வியாபாரத்தில் நஷ்டமும் ஏற்படலாம்.

வங்கியில் நாம் செலுத்தும் பணத்திற்கு வட்டி இவ்வளவு என்று செலுத்தும் போதே தெரிந்து விடுகிறது. வங்கி நஷ்டமடைந்தாலும் அந்தக் கூடுதல் பணம் வழங்கப்படுகிறது. கோடிக்கணக்கில் லாபம் அடைந்தாலும் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக வழங்குவதில்லை.

சுருங்கச் சொன்னால் லாப நஷ்டங்களைப் பொறுத்து முடிவு செய்தால் அது வியாபாரம். லாப நட்டம் பற்றியே சிந்திக்காமல் எந்த நிலையிலும் குறிப்பிட்ட அளவு வழங்கப்பட்டால் அது வட்டி. அது ஹராம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஹராம் என்று ஆகி விடும் போது, அது நம்முடைய பணம் இல்லை என்று ஆகி விடுகிறது. நம்முடைய பணம் இல்லை எனும் போது அதை வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதை வாங்காமலிருப்பது தான் கடமையாகும்.

நாம் வாங்காவிட்டால் தவறான வழிகளிலும், நமக்கு எதிரான வழிகளிலும் செலவிடுவார்களே என்றெல்லாம் காரணம் கற்பித்துக் கொண்டு அதை வாங்கிப் பிறருக்கு வழங்கலாம் என்பது ஏற்க முடியாதது ஆகும்.

இஸ்லாமிய அடிப்படையில் நமக்குச் சொந்தமில்லாத பணத்தை மற்றவர்கள் என்ன செய்தாலும் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஹராமான பணம் ஹராமான வழிக்குப் பயன்படுவது பற்றி பொருட்படுத்தத் தேவையில்லை.

அதை வாங்கி பிறருக்குக் கொடுக்கலாம் என்றால் அந்தப் பொருள் நம்முடையது என்று வாக்கு மூலம் தந்ததாகவே பொருள். வாங்கிய குற்றத்திற்குத் தண்டனை பெற வேண்டியது ஏற்படும்.

நாம் அந்தப் பணத்தை வாங்காவிட்டால் அந்தப் பணம் நமக்கு எதிராக நம்மை அழிப்போருக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தலாம். இந்த நிர்பந்தத்திற்காக அதை வாங்கி யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

நிர்பந்தமான நிலையில் தடை செய்யப்பட்டவை அனுமதிக்கப்படும் என்பது உண்மையே. அது நிர்ப்பந்தம் தானா என்பதை அவரவர் மனசாட்சியிடம் கேட்கட்டும். இது நிர்பந்தம் தான் என்று அவருக்குத் தோன்றினால் அவர் அவ்வாறு செய்வதை யாரும் தடுக்க முடியாது.