Tamil Bayan Points

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

Last Updated on November 3, 2023 by Trichy Farook

பின் தொடர்ந்தவர்களா? பின்பற்றியவர்களா?

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை

இஸ்லாத்தின் அடிப்படை ‘வஹீ’ எனும் இறைச் செய்தி மட்டும்தான். வஹீ அல்லாத எந்த ஒன்றும் இஸ்லாத்தின் அடிப்படையாக ஆகாது. இதனை திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் மிகத் தெளிவாக, கடுகளவும் சந்தேகத்திற்கிடமின்றி எடுத்துரைக்கின்றன.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.

(அல்குர்ஆன்: 7:3)

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

(அல்குர்ஆன்: 6:106)

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 43:43,44)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (இறைவனை) மறுப்பவர்கள்.

(அல்குர்ஆன்: 5:44)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன்: 5:45)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

(அல்குர்ஆன்: 5:47)

மேற்கண்ட இறைவசனங்களும், இன்னும் நூற்றுக் கணக்கான இறைவசனங்களும், நபிமொழிகளும் இறைச் செய்தி மட்டும்தான் மார்க்கம் என்ற தூய கொள்கையைப் பறைசாற்றுகின்றன.

நபி (ஸல்) எந்த அடிப்படையை மிக உறுதியாக வழிகாட்டிச் சென்றார்களோ அந்த சத்தியக் கொள்கையை விட்டும் மக்களை வழிகெடுக்கும் பல்வேறு வழிகெட்டக் கொள்கைகள் நபி (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பிறகு இஸ்லாமிய மக்களிடத்தில் ஊடுருவின. வஹீச் செய்தி அருளப்படும் காலத்தில் அல்லாஹ்வின் தூதரும் அவர்களின் அருமைத் தோழர்களும் எந்தக் கொள்கையில் இருந்தார்களோ அந்த சத்தியக் கொள்கையிலிருந்து மக்களை சிறுகச் சிறுக வழிகெடுத்து அவர்களை இணைவைப்புக் கொள்கையில் தள்ளும் வேலைகளை அந்த வழிகெட்ட கொள்கைக்குச் சொந்தக்காரர்கள் கன கச்சிதமாகச் செய்தார்கள்.

அப்படிப்பட்ட வழிகெட்டக் கொள்கைகளில் ஒன்று தான் ‘‘நவீன ஸலபிக் கொள்கை” ஆகும். இதனை நாம் ‘‘நவீன ஸலபிக் கொள்கை” என்று கூறுவதற்குத் தகுந்த காரணம் உள்ளது. ஸலபிகள் என்றால் முன்னோர்கள் என்று பொருள். அந்த ஸலபிகளில் முதலாமவர்கள் நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் அவர்களோடு வாழ்ந்த அருமை ஸஹாபாக்கள் தான்.

நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் நபித்தோழர்கள் வஹீச் செய்தியை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற சத்தியக் கொள்கையில் மட்டுமே இருந்தனர்.

ஸஹாபாக்கள் திருமறைக் குர்ஆனின் விளக்கத்தைப் பிற வசனங்களின் துணை கொண்டும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தும், விளக்கத்திலிருந்தும் புரிந்து கொண்டனர்; அதன்படியே செயல்பட்டனர். இதுவே சத்தியக் கொள்கை ஆகும்.

ஆனால் ‘நவீன’ ஸலபிக் கொள்கைக்குச் சொந்தக்காரர்கள், இறைத்தூதர் காலத்தில் அருமை ஸஹாபாக்கள் திருமறைக் குர்ஆனை எவ்வாறு புரிந்தார்களோ அதற்கு நேர் மாற்றமாக முன்னோர்களின் விளக்கத்திலிருந்து திருமறைக் குர்ஆனையும், ஹதீஸ்களையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என வாதிக்கின்றனர். அதையே கொள்கையாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். இது திருமறைக் குர்ஆனுக்கு எதிரான வழிகேடு என்பதில் கடுகளவும் ஐயமில்லை.

ஒவ்வொரு குர்ஆன் வசனத்தின் விளக்கத்தையும், ஒவ்வொரு ஹதீஸின் விளக்கத்தையும் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த நேரடி விளக்கத்திலிருந்தும், பிற வசனங்கள் மற்றும் ஹதீஸ்களின் துணை கொண்டும், இறைத்தூதர் காலத்தில் அந்த இறைச் செய்தி அருளப்பட்ட சூழ்நிலைகளை அறிவதிலிருந்து  மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையைத் தான் திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

(அல்குர்ஆன்: 16:44)

மேற்கண்ட வசனத்தில் வஹியை நாம் புரிந்து கொள்வதற்கு இரண்டு வழிமுறைகளை அல்லாஹ் கூறுகின்றான்.

  • ஒன்று: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம்.
  • இரண்டு: நாம் சிந்திக்க வேண்டும்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் என்பது  ஒரு வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய நேரடி விளக்கம் ஆகும்.

நாம் சிந்திக்க வேண்டும் என்பது திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் நாம் சிந்திக்கும் போது ஒரு திருக்குர்ஆன் வசனத்தின் விளக்கத்தை இன்னொரு வசனம் தரும். அல்லது நபி மொழிகள் தரும். அது போன்று ஒரு ஹதீஸின் விளக்கத்தை திருக்குர்ஆன் வசனத்திலிருந்தும், பிற ஹதீஸ்களிலிருந்தும் நாம் சிந்தித்து விளங்கிக் கொள்ளலாம்.

இந்த இரண்டு அடிப்படைகளைத் தாண்டி மூன்றாவது விளக்கத்திற்குச் செல்லும் போது நிச்சயமாக அந்த விளக்கம் நம்மை வழிகேட்டிலோ, அல்லது இணைவைப்பிலோ கொண்டு போய் சேர்த்துவிடும்.

நவீன ஸலபிக் கொள்கையைச் சார்ந்தவர்கள் திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் மனிதர்களின் சுய கருத்திலிருந்து விளங்கிய காரணத்தினால் அவர்கள் பல்வேறு குர்ஆன் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும் வழிகெட்ட விளக்கத்தையும், இணைவைப்பில் தள்ளும் விளக்கத்தையும் கொடுத்து வழிகேட்டில் விழுந்துள்ளனர். இதற்குரிய சில சான்றுகளை நாம் காண்போம்.

திருக்குர்ஆன் ஸஹாபாக்களை பின்பற்றச் சொல்கிறதா?

இறைச் செய்தியை மட்டும் தான் திருக்குர்ஆன் பின்பற்றச் சொல்கிறது என்பதற்குப் பல்வேறு வசனங்களைச் சான்றாக இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ளோம்.

ஆனால் நவீன வழிகெட்ட ஸலஃபிக் கொள்கையைச் சார்ந்தவர்கள் திருக்குர்ஆன் ஸஹாபாக்களைப் பின்பற்றச் சொல்வதாகக் கூறி அதற்கு சில வசனங்களையும் முன்வைக்கின்றனர்.

9வது அத்தியாயம் 100வது வசனத்தில் ஆரம்ப கால அன்சாரி ஸஹாபாக்கள் மற்றும் முஹாஜிர் ஸஹாபாக்கள் ஆகியோரைப் பற்றிக் கூறிவிட்டு

وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ

(வல்லதீன இத்தபஊஹும் பி இஹ்சான்) என்று குறிப்பிட்டுள்ளான்.

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘‘இத்தபஊ” என்ற சொல்லிற்கு ‘‘பின்பற்றியவர்கள்” என்ற பொருளை ஸலஃபிகள் கொடுக்கின்றனர்.

‘‘பின்பற்றியவர்கள்” என்று பொருள் செய்வதன் மூலம் இவ்வசனம் ஸஹாபாக்களைப் பின்பற்றச் சொல்வதாக நவீன வழிகெட்ட ஸலஃபிகள் வாதிக்கின்றனர்.

‘‘இத்தபஅ” என்ற வார்த்தைக்கு ‘‘பின்பற்றினான்” என்று பொருள் இருப்பதைப் போன்று ‘‘பின் தொடர்ந்தான்”, ‘‘அடுத்து வந்தான்” என்ற பொருளும் உள்ளது.

அதாவது ஒருவரின் கருத்தைப் பின்பற்றுவதற்கு ‘‘இத்தபஅ” என்ற சொல் பயன்படுத்தப்படுவதைப் போன்று ஒருவர் முன்னால் செல்ல மற்றொருவர் அவருக்குப் பின்னால் செல்வதைக் குறிக்கவும் ‘‘இத்தபஅ” என்ற அரபிச் சொல் பயன்படுத்தப்படும்.

இதனைப் பின்வரும் சான்றுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ إِيمَانًا وَاحْتِسَابًا ، وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّى عَلَيْهَا وَيَفْرُغَ مِنْ دَفْنِهَا ، فَإِنَّهُ يَرْجِعُ  مِنَ الأَجْرِ بِقِيرَاطَيْنِ كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ تُدْفَنَ ، فَإِنَّهُ يَرْجِعُ بِقِيرَاطٍ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் ஒருவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமுடைய ஜனாசாவைப் பின்தொடர்ந்து சென்று அதற்காக தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தாரோ நிச்சயமாக அவர் இரண்டு ‘கீராத்’ நன்மையுடன் திரும்புகிறார். ஒவ்வொரு கீராத்தும் உஹுத் மலை போன்றதாகும். எவர் அதற்காகப் (பிரார்த்தனைத்) தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பிவிடுகிறாரோ அவர் ஒரு ‘கீராத்’ நன்மையுடன் திரும்புகிறார்.

அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி)

நூல்: புகாரி (47)

மேற்கண்ட ஹதீஸில்  ‘‘ஜனாசாவைப் பின்தொடர்தல்” என்பதைக் குறிக்க ‘‘இத்தபஅ” என்ற வார்த்தை வந்துள்ளது.

 இங்கே ‘‘இத்தபஅ” என்பதற்கு ‘‘ஜனாசாவைப் பின்பற்றுதல்” என்று பொருள் செய்து ஒருவர் ஜனாசாவின் கருத்துக்களையும் மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும் என வாதிட்டால் அதனை நாம் மடமைத்தனம் என்றும், வழிகேடு என்றுமே கூறுவோம். ஜனாசா என்பதே உயிரற்றது. அது எந்தக் கருத்துக்களையும் கூறாது. அப்படி இருக்கையில் இங்கே ‘‘ஜனாஸாவைப் பின்பற்றுதல்” என்று பொருள் செய்ய இயலாது. மாறாக ‘‘ஜனாசாவைப் பின் தொடர்தல்” ‘‘ஜனாசாவிற்குப் பின்னால் செல்லுதல்” என்ற பொருளைத்தான் செய்ய முடியும்.

இதிலிருந்து ‘‘இத்தபஅ” என்ற சொல்லுக்குப் ‘‘பின் தொடர்தல்” என்ற பொருளும் உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

நபியவர்கள் முன்னால் செல்ல அவர்களைப் பின்தொடர்ந்து தான் சென்றதைப் பற்றி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிடும் போது ‘‘இத்தபஃதுன் நபிய்ய” – ‘‘நான் நபியைப் பின்தொடர்ந்து சென்றேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க புகாரி 155)

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் தண்ணீர் நிரம்பிய தோல் பையுடன் நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள் என்பதைக் குறிப்பிடும் போது ‘‘ஃபத்தபஅஹுல் முகீரா” – ‘‘முகீரா அவரைப் பின்தொடர்ந்து சென்றார்” என்றே குறிப்பிட்டுள்ளார்கள் . (பார்க்க புகாரி 203)

”இத்தபஅ” என்ற சொல்லுக்கு ‘‘பின்னால் வந்தான்”, ‘‘பின்னால் சென்றான்” என்ற பொருளும் உள்ளது என்பதை மேற்கண்ட வாசகங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இப்பொழுது 9:100வது வசனத்திற்கு ஆரம்பகால ஸஹாபாக்களைப் பின்தொடர்ந்தவர்கள் என்று பொருள் செய்வது சரியா? அல்லது ஆரம்பகால ஸஹாபாக்களின் கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றியவர்கள் என்று பொருள் செய்வது சரியா? என்பதைக் காண்போம்.

நவீன வழிகெட்ட ஸலபிகள் செய்வதைப் போன்று ‘‘ஆரம்பகால ஸஹாபாக்களை மார்க்கமாகப் பின்பற்றியவர்கள்” என்று பொருள் செய்தால் அது இணைவைப்புக் கொள்கையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். ஏனெனில் வஹியைத் தவிர வேறு எதையும் பின்பற்றக் கூடாது என திருமறைக் குர்ஆனின் ஏராளமான வசனங்கள் குறிப்பிடுவதை நாம் குறிப்பிட்டோம்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்

(அல்குர்ஆன்: 7:3)

இறைவன் அல்லாத வேறு யாருடைய கருத்தையும் பின்பற்றக் கூடாது என திருக்குர்ஆன் 7:3வது வசனம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

மார்க்க விஷயத்தில் இறைவன் அல்லாதவர்களின் கருத்துக்களைப் பின்பற்றுவது இணைவைத்தல் என்பதையும் மேற்கண்ட வசனத்தில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஏனெனில் இறைவன் தன்னுடைய வஹியை மட்டுமே பின்பற்ற வேண்டும் வேறு யாருடைய கருத்தையும் பின்பற்றக் கூடாது என்று கூறிய பிறகு நாம் இறைவன் அல்லாத மனிதர்களின் கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றினால் அது இணைவைப்பாகும்.

இதை திருமறைக்குர்ஆன் மற்றொரு வசனத்தில் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (இறைவனை) மறுப்பவர்கள்.

(அல்குர்ஆன்: 5:44)

மார்க்க விஷயத்தில் அல்லாஹ்வுடைய சொல்லை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதையும், இறைவனல்லாத மற்றவர்களின் கருத்துக்களை மார்க்கமாக்குவது இணைவைப்பு என்பதையும் திருமறை வசனங்களிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

9:100வது வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘‘இத்தபஅ” என்ற சொல்லிற்கு நவீன வழிகெட்ட ஸலபிகள் பொருள் செய்வதைப் போன்ற ‘‘ஸஹாபாக்களைப் பின்பற்றுதல்” எனப் பொருள் செய்தால் குர்ஆனிலே நேர் முரண்பாடு ஏற்படுகிறது. 7வது அத்தியாயம் 3வது வசனம் இறைச் செய்தியை மட்டுமே மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும் என்கிறது.

இதற்கு நேர் மாற்றமாக 9:100வது வசனம் ஸஹாபாக்களின் கருத்துக்களையும் மார்க்கமாகப் பின்பற்றலாம் என்ற கருத்தைத் தருகிறது. 7:3 வசனத்தின் படி இறைவன் அல்லாதவர்களின் கருத்துக்களை மார்க்கமாக்குதல் இணைவைப்பு.

9:100வது வசனத்தின் படி ஸஹாபாக்களின் கருத்தை மார்க்கமாக்கலாம். அது இணைவைப்பு அல்ல என்ற கருத்து வருகிறது. ஸலஃபுகளின் செய்கின்ற பொருள் இணைவைப்பில் கொண்டு போய் தள்ளுகிறது என்பது மிகத் தெளிவாகிறது. அப்படியென்றால் 9:100 வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘‘இத்தபிஊ” என்ற சொல்லின் சரியான பொருளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபித்தோழர்களில் இரு பிரிவு

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன்: 9:100)

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘‘இத்தபிஊ” என்ற சொல்லின் சரியான பொருள் ‘‘பின் தொடர்ந்தவர்கள்” என்பதே ஆகும். இது நபித்தோழர்களில் காலத்தால் முந்திய மற்றும் பிந்திய இரு சாராரைப் பற்றிப் பேசுகிறது.  இதற்கான சான்றுகளைக் காண்போம்.

திருமறைக் குர்ஆன் நபித்தோழர்களை ஆரம்ப கால நபித்தோழர்கள், பிற்கால நபித்தோழர்கள் என இரு பிரிவாகப் பிரிக்கின்றது.

முதலாவது சாரார்: இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்திலேயே இஸ்லாத்தை ஏற்று, ஹிஜ்ரத் செய்து, போர்களில் கலந்து கொண்ட முஹாஜிர் ஸஹாபாக்கள் மற்றும் இஸ்லாத்தை ஏற்றும், ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, போர்களிலும் கலந்து கொண்ட அன்சாரி ஸஹாபாக்கள்.

இரண்டாவது சாரார்: மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்று, ஹிஜ்ரத் செய்து, போர்களிலும் கலந்து கொண்ட ஸஹாபாக்கள்.

இவ்வாறு ஸஹாபாக்களை இரு பிரிவாக திருமறைக் குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகிறது. பின்வரும் வசனங்கள் அதற்குச் சான்றாக உள்ளன.

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 57:10)

மேற்கண்ட வசனத்தில் மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்று போரிட்ட ஸஹாபாக்களை விட மக்கா வெற்றிக்கு முன் இஸ்லாத்தை ஏற்று போரிட்ட ஸஹாபாக்களை அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகிறான்.

இஸ்லாத்தை ஏற்பதும், போரிடுவதும் நல்ல காரியங்கள் தான் என்றாலும் சிரமமான கால கட்டத்தில் இஸ்லாத்தை ஏற்று, மார்க்கத்திற்காகப் போரிட்டவர்கள் சிரமம் குறைந்த பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுப் போரிட்டவர்களை விடச் சிறந்தவர்கள் என்பதைத்தான் மேற்கண்ட வசனம் எடுத்துரைக்கிறது.

இதிலிருந்து திருமறைக்குர்ஆன் ஸஹாபாக்களை ஆரம்ப கால ஸஹாபாக்கள், பிற்கால ஸஹாபாக்கள் என இரண்டு பிரிவாகப் பிரிக்கின்றது என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இதனை மற்றொரு வசனமும் விளக்குகிறது.

  1. தமது வீடுகளையும், சொத்துக்களையும் விட்டு வெளியேற்றப்பட்ட ஹிஜ்ரத் செய்த ஏழைகளுக்கும் (உரியது). அவர்கள் அல்லாஹ்விடமிருந்து அருளையும், திருப்தியையும் எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவுகின்றனர். அவர்களே உண்மையாளர்கள்.
  2. அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.
  3. அவர்களுக்குப் பின் வந்தோர் “எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 59:8,9,10)

59வது அத்தியாயத்தின் 8, 9, 10 ஆகிய மூன்று வசனங்களையும் கவனமாகப் படித்தால் ஸஹாபாக்களை இரு பிரிவாக திருக்குர்ஆன் வகைப்படுத்திக் கூறுவதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

59:8 வசனத்தில் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்று, சொத்துக்களையெல்லாம் இழந்து, மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்களைப் பற்றி பேசுகிறது.

59:9வது வசனம் மதீனா என்ற சொந்த பூமியில் இருந்து இஸ்லாத்தை ஏற்று, ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அன்சாரி ஸஹாபாக்களைப் பற்றி பேசுகிறது.

59:10வது வசனம் பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஸஹாபாக்களைப் பற்றிப் பேசுகிறது. ‘‘அவர்களுக்குப் பின் வந்தோர்” என்று அல்லாஹ் குறிப்பிட்டுக் கூறுவதிலிருந்து இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட வசனங்களிலிருந்தும் ஆரம்ப காலத்தவர்கள், பிற்காலத்தவர்கள் என்று ஸஹாபாக்களை திருக்குர்ஆன் இரு பிரிவாகப் பிரிக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

பின்வரும் வசனமும் ஸஹாபாக்களை ஆரம்ப காலம், பிற்காலம் என இரண்டாகப் பிரிக்கிறது.

  1. நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவியோருமே உண்மையாக நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
  2. இதன் பின்னர் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, உங்களுடன் இணைந்து போரிட்டோரே உங்களைச் சேர்ந்தவர்கள். இரத்த பந்தமுடையோர் ஒருவர் மற்றவருக்கு அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி நெருக்கமானவர்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 8:74,75)

8:74வது வசனம் ஆரம்பகால முஹாஜிர் மற்றும் அன்சாரி ஸஹாபாக்களைப் பற்றிப் பேசுகிறது.

8:75வது வசனம் பிற்கால ஸஹாபாக்களைப் பற்றிப் பேசுகிறது.

8:74வது வசனத்தில் ஆரம்பகால ஸஹாபாக்கள் செய்த பிரதான நற்காரியங்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

ஈமான் கொண்டு, ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல் மற்றும் அடைக்கலம் தருதல் ஆகியவையே ஆரம்ப கால ஸஹாபாக்கள் செய்த பிரதான நற்காரியம்.

பிற்கால ஸஹாபாக்கள் செய்த நற்காரியங்களும் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, போரிடுதல் ஆகியவை தான் என்பதை 8:75வது வசனம் குறிப்பிடுகிறது.

அதாவது ஆரம்பகால ஸஹாபாக்களைத் தொடர்ந்து அடுத்து வந்த பிற்கால ஸஹாபாக்களும் அவர்களைப் போன்று ஈமான் கொண்டு, ஹிஜ்ரத் செய்து, போரிட்டார்கள் எனபதை நாம் மேற்கொண்ட வசனங்களிலிருந்து தெளிவாகப் புரிந்து கொண்டோம்.

இந்த இரண்டு சாராரைப் பற்றித்தான் 9:100 வசனமும் பேசுகிறது.

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன்: 9:100)

ஹிஜ்ரத் செய்த ஆரம்பகால ஸஹாபாக்கள், அவர்களுக்கு உதவி செய்த அன்சாரி ஸஹாபாக்கள், அது போன்று ஆரம்ப காலத்தவர்களைப் போன்றே ஈமான் கொள்ளுதல், ஹிஜ்ரத் செய்தல், போர் செய்தல் போன்ற நற்காரியங்களில் அவர்களைப் பின்தொடர்ந்த பிற்கால ஸஹாபாக்கள் இந்த இரண்டு சாராருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தை வாக்களித்துள்ளான் என்பதுதான் மேற்கண்ட வசனத்தின் விளக்கமாகும்.

மேற்கண்ட வசனம் ஸஹாபாக்களின் கருத்தை மார்க்கமாகப் பின்பற்றச் சொல்லவில்லை. மாறாக ஸஹாபாக்களின் இரு பிரிவினரின் தியாகத்தினால் அவர்களுக்கு இறைவன் வழங்கிய பாக்கியங்களைப் பற்றிப் பேசுகிறது.

ஆனால் நவீன வழிகெட்ட ஸலஃபிகளோ இவ்வசனத்திற்குத் தவறான பொருளைக் கொடுத்து மனிதக் கருத்தை மார்க்கமாக்கும் இணைவைப்புக் கொள்கைக்கு மக்களைக் கொண்டு செல்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களைப் பின்பற்றினார்களா?

இறைவசனங்களை நடைமுறைப்படுத்துவதில் முதல் நிலையில் உள்ளவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டாத எந்த ஒன்றும் இஸ்லாமாகக் கருதப்படாது.

நவீன வழிகெட்ட ஸலபிகளின் வாதப்படி 9:100வது வசனம் ஸஹாபாக்களின் கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றச் சொல்கிறது என்றால் நபி (ஸல்) அவர்கள் தான் அதனை முதலாவதாக நடைமுறைப் படுத்தியிருப்பார்கள்.

வஹியின் அனுமதி இல்லாமல் ஏதாவது ஒரு நபித்தோழரின் கருத்தை நபி (ஸல்) அவர்கள் மார்க்கமாக ஆக்கினார்கள்? என்று ஸலபிகள் ஆதாரம் காட்ட முடியுமா?

அப்படி ஒருவன் வாதிப்பான் என்று சொன்னால் அவன் இறைத்தூதர் மீது இட்டுக் கட்டிய பெரும்பாவி ஆவான். ஸலபிகள் கொடுக்கின்ற பொருள் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களின் கருத்தைத்தான் மார்க்கமாகப் பின்பற்றினார்கள் என்ற வழிகெட்ட கருத்து ஏற்படுகிறது.

இறைத்தூதரின் அந்தஸ்தைக் குறைவுபடுத்தி, நபித்தோழர்களை இறைத்தூதரை விடச் சிறப்பிக்கின்ற நிலை இதனால் ஏற்படுகிறது.

இதிலிருந்து இந்த வசனம் ஸஹாபாக்களைப் பின்பற்றச் சொல்கிறது என்ற வாதம் பெரும் அபத்தமான வாதம் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

தந்தையின் கருத்தை மார்க்கமாகப் பின்பற்றலாமா?

யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன்.

(திருக்குர்ஆன்:52:21)

9:100 வசனத்தை வழிகெட்ட ஸலபிகள்  விளங்கியது போல் இவ்வசனத்தையும் விளங்குவதாக இருந்தால் ஒவ்வொருவரும் தனது முஃமினான பெற்றோரைப் பின்பற்றலாம் என்ற கருத்து வரும். அதாவது ஸஹாபாக்களை மட்டும் பின்பற்றுவது அவசியம் இல்லை. தனது தாய் தந்தை எதை மார்க்கம் என்று கடைப்பிடித்தார்களோ அதையே நாமும் செய்ய வேண்டும் என்ற கருத்து வரும்.

பெற்றோரும் சரியான கொள்கையை நம்பிக்கை கொண்டு அது போல் அவர்களுக்கு அடுத்த வந்த பிள்ளைகளும் சரியான கொள்கையில் இருந்தால் அவர்களின் கூலியைக் குறைக்காது அளிப்போம் என்பது தான் இதன் சரியான பொருள்.

பெற்றோரின் எல்லா நடவடிக்கைகளையும் அப்படியே மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல என இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு வசனங்களுக்கு வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதிலிருந்து அவர்களின் வாதம் தவறு என்பதை அறியலாம்.