Tamil Bayan Points

வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on January 21, 2017 by Trichy Farook

வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாமா?

ஃபர்ஸான்

பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்தாகத் தொழ முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் ஜமாஅத்தாக தொழலாம். கடமையான தொழுகையையும் வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலில் காயம் ஏற்பட்ட போது ஒரு மாத காலம் பள்ளிவாசலுக்கு வரவில்லை. அவர்களை நோய் விசாரிக்க நபித்தோழர்கள் வீட்டுக்கு வந்த போது வீட்டில் அமர்ந்த நிலையில் இமாமாக இருந்து தொழுகை நடத்தினார்கள்.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்து கொண்டிருந்த போது) தமது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது கணைக் கால்’ அல்லது தோள்பட்டை’ கிழிந்து விட்டது. மேலும் (இந்தக் காலகட்டத்தில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களை ஒரு மாத காலத்திற்கு நெருங்க மாட்டேன்’ என்றும் சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி அமர்ந்தார்கள். அதனுடைய ஏணி பேரீச்சங்கட்டையினால் அமைந்திருந்தது. ஆகவே அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல்நலம் விசாரிக்க வந்த போது (அந்த அறைக்குள்ளேயே) அமர்ந்தவாறே அவர்களுக்குத் தொழுவித்தார்கள்; சலாம் கொடுத்து முடித்த போது, பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ருகூஉ செய்தால் ருகூஉ செய்யுங்கள்; அவர் சஜ்தாச் செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவராகத் தொழுங்கள்என்று சொன்னார்கள்.

(அந்த அறையிலிருந்து) அவர்கள் இருபத்தொன்பதாம் நாள் இறங்கி வந்தார்கள். அப்போது மக்கள், ஒரு மாத காலம் தங்கள் மனைவிமார்களை நெருங்க மாட்டேன் என தாங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்த மாதத்திற்கு இருத்தொன்பது நாட்கள் தாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் புகாரி 378