Tamil Bayan Points

3) ஷைத்தான் தான் பேயா?

நூல்கள்: பேய் பிசாசு உண்டா?

Last Updated on April 15, 2023 by

“இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் இத்தகையவர்கள் இரண்டையும் மறுக்காமல் புதிய விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். பேய்களுக்குப் புதியதொரு இலக்கணத்தை உருவாக்கி வித்தியாசமான கோணத்தில் பேய்களை அறிமுகப்படுத்துகின்றார்கள்.

பேய்களுக்கு இவர்கள் கூறும் புதிய இலக்கணத்தையும் அலசி ஆராய்ந்து அவர்களுக்கு விளக்கமளிப்பது நமக்கு அவசியமாகி விடுகின்றது.

இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பவும் வர முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். திருக்குர்ஆனும், நபிமொழிகளும் அவ்வாறு கூறுவதால் அதை நாங்கள் மறுக்க மாட்டோம். ஆயினும் இறந்தவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்று நாங்கள் சொல்லவில்லை.

ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு வானவரும், ஒரு ஷைத்தானும் உள்ளனர். மனிதன் இறந்த பின் அவனுடன் இருந்த ஷைத்தான் அவனை விட்டு வெளியேறி சுற்றிக் கொண்டிருக்கிறான். அந்த ஷைத்தான் தான் உயிருடன் உள்ளவன் மேல் ஏறி அமர்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றான். இதைத்தான் பேய் என்கிறோம் என்று கூறுகின்றனர்.

இது தான் இவர்கள் பேய்களுக்கு அளிக்கும் புதிய இலக்கணம். தங்களின் நம்பிக்கைக்குச் சான்றாக இவர்கள் குர்ஆன் ஹதீஸையே முன்வைக்கிறார்கள்.

“ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஒரு ஆதிக்கம் உண்டு. அது போலவே வானவருக்கும் ஒரு ஆதிக்கம் உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி). நூல் திர்மிதீ

இந்தக் கருத்தில் இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. மனிதனுக்குள் ஷைத்தானின் ஆதிக்கம் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன என்று இவர்கள் கூறுகின்றனர்.

இது பற்றி குர்ஆனும் பின்வருமாறு கூறுகிறது.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். திருக்குர்ஆன் 2:275

இந்த வசனமும், மேற்கண்ட நபிமொழிகளும் மனிதனிடமும் ஷைத்தான்கள் ஊடுருவியுள்ளனர் என்பதற்கும், அந்த ஷைத்தான்கள் இறந்தவனிடமிருந்து வெளிப்பட்டு உயிருடன் உள்ளவனைப் பிடித்துக் கொள்கின்றனர் என்பதற்கும் சான்றுகளாக உள்ளன என்று இவர்கள் கூறுகின்றனர்.

பேய்க்கு இவ்வாறு விளக்கம் கூறும் போது இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்கு வரமுடியாது என்பதை மறுக்கும் நிலை ஏற்படாது எனவும் கூறுகின்றனர்.

இவர்களின் வாதங்களும் அந்த வாதங்களை நிலைநாட்டுவதற்காக அவர்கள் எடுத்து வைக்கும் சான்றுகளும் சரியானவை தாமா? இதனை நாம் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.

“ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு ஷைத்தானும் ஒரு வானவரும் இருக்கின்றார்கள் என்று இவர்கள் எடுத்து வைத்த நபிமொழி நம்பகமானது தான். ஆனால் இந்த நபிமொழியிலிருந்து அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் சரியானதல்ல.

ஒவ்வொரு மனிதனிலும் ஒரு ஷைத்தானும், ஒரு வானவரும் இருப்பதை மட்டுமே இந்த நபிமொழி கூறுகிறது. ஒருவரிடம் இருந்த ஷைத்தான், அவரது மரணத்திற்குப் பிறகு இன்னொருவரிடமும் சென்று விடுவான் என்பதற்கு இதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஆதாரமும் இல்லை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இந்த நபிமொழியைச் சிந்திக்கும் போது இவர்களது நம்பிக்கைக்கே இது எதிராக அமைந்துள்ளதையும் நாம் உணர முடியும்.

ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு ஷைத்தான் இருக்கிறான் என்று அந்த நபிமொழி கூறுகிறது. பேய் பிடித்துவிட்டதாக இவர்களால் நம்பப்படுகின்றவர்களிடம் மட்டும் (இவர்களது வாதத்தின் படி) இரண்டு ஷைத்தான்கள் இருக்கின்றனர் என்று ஆகின்றது.

பிறக்கும் போதே இருந்த ஷைத்தானுடன் புதிதாகக் குடியேறிவிட்ட ஷைத்தானையும் சேர்த்து பேய்பிடித்தவனிடம் இரண்டு ஷைத்தான்கள் இருப்பதாக ஆகிறது. ஒவ்வொருவரிடமும் ஒரு ஷைத்தான் இருப்பதாகக் கூறுகின்ற நபிமொழிக்கு இது முரண்படுகின்றது.

பேய்கள் என்பது ஷைத்தான்கள் தான் என்று இவர்கள் கண்டுபிடித்த புதிய இலக்கணமும் சரியானது அல்ல என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

ஷைத்தான் என்றொரு படைப்பு இருப்பதாகக் கூறும் இஸ்லாம் ஷைத்தானுடைய அலுவல்கள் யாவை என்பதையும் சொல்லித் தருகின்றது.

ஷைத்தானுடைய அலுவல்கள் யாவை? என இறைவனும், அவனது தூதரும் சொன்னார்களோ அந்த அலுவல்களையே அவன் செய்வான். ஒரு மனிதனது அறிவை முற்றாக நீக்கி அவன் மீது முழு ஆதிக்கம் செய்வது அவனது அலுவல்களில் ஒன்றல்ல.

இவர்கள் தங்கள் கருத்துக்குச் சான்றாக எடுத்து வைத்த நபிமொழியே ஷைத்தானுடைய அலுவலை விளக்கிடப் போதுமானதாக அமைந்துள்ளது.

நம் அனைவரிடமும் ஷைத்தான் இருக்கின்ற காரணத்தினால் நாம் நமது அறிவை முற்றிலும் இழந்து விடுவது கிடையாது. நாம் செய்கின்ற காரியம் யாவை? என்பது நமக்கே தெரியாமல் போவது கிடையாது.

நம்மோடு ஒரு ஷைத்தான் இருந்தாலும் நாம் நாமாகவே இருக்கின்றோம். நாம் ஷைத்தானாகவே ஆகிவிடுவதுமில்லை.

அப்படியானால் நம்முடன் ஒரு ஷைத்தானும், ஒரு வானவரும் இருக்கின்றார்கள் என்பதன் அர்த்தம் என்ன?

ஷைத்தான் தீய காரியம் செய்யுமாறு தூண்டுகிறான். அந்த மனிதன் சுய சிந்தனையுடன், தன்னுணர்வுடன் அவனுக்குக் கட்டுப்படுகின்றான். வானவர் நன்மைகளைச் செய்யுமாறு தூண்டுகிறார். அந்த மனிதன் சுய சிந்தனையுடனும் விருப்பத்துடனும் அதனைச் செய்கிறான்.

இதிலிருந்து ஷைத்தானுடைய அதிகபட்ச ஆதிக்கம் என்னவென்பது தெளிவாகவே தெரிகின்றது. மனிதர்களைத் தவறான பாதையில் நடக்கத் தூண்டி அதைச் சரியானது என நம்ப வைப்பது தான் ஷைத்தானுடைய அதிகபட்சமான ஆதிக்கமாகும்.

ஒரு மனிதன் நன்மையான எந்தக் காரியமும் செய்யாமல் முழுக்க முழுக்க தீமைகளையே செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இத்தகைய மனிதன் தன்னுடனிருக்கின்ற வானவருக்குக் கட்டுப்படாது முற்றிலும் ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு விட்டான் என்று கூறலாம்.

ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு விட்ட இந்த மனிதன் தன் அறிவையும், சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து விடுவதில்லை. பைத்தியமாகி விடுவதில்லை.

இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு இவர்கள் எடுத்து வைக்கும் வாதத்தை நாம் அலசுவோம்.

பேய் பிடித்தவனிடம் இரு ஷைத்தான்கள் உள்ளனர் என்று கூறுவோரின் நம்பிக்கைப் பிரகாரம் இரண்டு ஷைத்தான்களைத் தன்னகத்தே கொண்டவன் இரண்டு மடங்கு தீமைகளைச் செய்ய வேண்டும். ஆனால் பேய் பிடித்தவர்கள் (?) இரண்டு மடங்கு தவறுகள் செய்வது கிடையாது.

பேய் பிடித்தவன்(?) விபச்சாரம் செய்வதில்லை; திருடுவதில்லை; எத்தனையோ தீமைகளை அவன் செய்வதில்லை. பேய் பிடித்ததாகச் சொல்லப்படுபவனின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது அவனிடம் இரு ஷைத்தான்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக இருக்கின்ற ஒரு ஷைத்தானே செயலிழந்து விட்டதாகத் தான் தெரிகிறது.

மேலும் எல்லாத் தீமைகளையும் அவன் செய்தாலும் இஸ்லாமியப் பார்வையில் அவன் குற்றவாளி ஆக மாட்டான். ஷைத்தானால் வழிகெடுக்கப்பட்டவனாக மாட்டான். சுயசிந்தனையுடன் வேண்டுமென்றே செய்யும் தவறுகளுக்காக மட்டுமே மனிதன் விசாரிக்கப்படுவான். என்ன செய்கிறான் என்றே தெரியாமல் செய்யும் காரியங்கள் மற்றவர்களின் பார்வைக்கு தவறு என்று தென்பட்டாலும் அதைச் செய்தவன் குற்றவாளியாக ஆவதில்லை. பைத்தியக்காரன் தொழாவிட்டாலோ, நோன்பு நோற்காவிட்டாலோ இன்ன பிற கடமைகளிலிருந்து தவறி விட்டாலோ அதற்காக அவன் தண்டிக்கப்பட மாட்டான்.

இந்த வகையில் ஷைத்தான் அந்த மனிதனுக்கு நன்மையே செய்துள்ளான். அனைவரையும் நரகவாசிகளாக ஆக்கும் ஷைத்தான் பேய் பிடித்தவனை மட்டும் சொர்க்கவாசியாக ஆக்கிவிடுகிறான்.

இது ஷைத்தானுடைய அலுவலுக்கே மாற்றமில்லையா? இது ஷைத்தானுக்கு நஷ்டமில்லையா?

இறந்தவர்களின் ஆவியே பேய் என்று சொன்னாலும் அதுவும் சரியானதல்ல. இறந்தவர்களிடம் இருக்கும் ஷைத்தான்கள் வந்து மேலாடுகிறார்கள் என்றாலும் அதுவும் சரியானதல்ல. இரண்டு விளக்கங்களுமே குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமானதாகும்.

பேய் என்பது இறந்தவர்களுடைய ஆவிகளின் ஆதிக்கமன்று. மாறாக இறந்தவர்களிடம் குடிகொண்டிருந்த சாத்தான்கள் உயிருடனுள்ளவர்கள் மீது செலுத்தும் ஆதிக்கமே என்ற கருத்துடையவர்கள் தங்களின் வலுவான ஆதாரமாக 2:275 வது வசனத்தை முன்வைக்கின்றனர்.

வட்டி உண்போர் ஷைத்தான் பீடிக்கப்பட்டவன் எழுவது போலவே மறுமையில் எழுவார்கள் என இவ்வசனம் கூறுகிறது. மனிதன் ஷைத்தானால் பீடிக்கப்படுவான் என்பது பேய் பிடிப்பதையே கூறுகிறது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இவர்களின் இந்த வாதம் பல காரணங்களால் நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

ஷைத்தானால் பீடிக்கப்படுவதாக இவ்வசனம் கூறுவது உண்மை தான். ஷைத்தான்களால் மனிதர்கள் பீடிக்கப்படுகிறார்கள் என்பதும் நிச்சயமான ஒன்று தான். இதில் நமக்கு மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது.

ஷைத்தானால் பீடிக்கப்படுவது என்பதற்கு இவர்கள் வழங்கும் அர்த்தம் ஏற்கத்தக்கதல்ல.

ஷைத்தானால் பீடிக்கப்படுவது என்பதன் பொருளை அறிந்து கொள்ள திருக்குர்ஆனின் ஏனைய வசனங்களையும் நாம் ஆராயும் போது அதன் சரியான பொருள் தெரிய வருகின்றது.

ஷைத்தானால் தீண்டப்படுவது என்ற வாசகம் இந்த வசனத்தையும் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களில் திருக்குர்ஆனில் கையாளப்பட்டுள்ளது.

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! “ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்” என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, “உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!” (எனக் கூறினோம்). திருக்குர்ஆன் 38:41,42

2:575 வசனத்தில் இடம் பெற்ற மஸ் என்ற சொல்லே மேற்கண்ட வசனத்திலும் இடம் பெற்றுள்ளது. அய்யூப் நபியவர்கள் பேய் பிடிக்கப்பட்டிருந்தார்கள் என்று எவரும் இந்த இடத்தில் பொருள் கொண்டதில்லை.

(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள். திருக்குர்ஆன் 8:201

இந்த இடத்திலும் அதே மஸ் என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இறையச்சமுடையோருக்குப் பேய் பிடிக்கும் என்று எவரும் இதற்குப் பொருள் கொண்டதில்லை.

நம்மை தீமை அனைத்துமே இறைவனால் தான் ஏற்படுகின்றன என்றாலும் தீய மோசமான விளைவுகள் பற்றிக் கூறும் போது ஷைத்தான் தீண்டி விட்டான் எனக் கூறுவதுண்டு. அந்த அடிப்படையிலேயே அய்யூப் நபியவர்கள் தமக்கு ஏற்பட்ட பல சிரமங்களைக் குறிப்பிடும் போது ஷைத்தான் தீண்டி விட்டான் எனக் கூறியுள்ளார்கள். நல்லடியார்களுக்கு ஏதாவது தீய எண்ணம் தோன்றிவிடுவதை ஷைத்தான் தீண்டுவது என இறைவன் குறிப்பிடுவதும் அந்த அடிப்படையிலேயே.

ஆக தீமைகளையும், கேடுகளையும், துன்பங்களையும் குறிப்பிடும் போது ஷைத்தானுடைய தீண்டுதல் எனக் கூறப்படுவதுண்டு என்பதை இதிலிருந்து அறியலாம்.

கஷ்டத்தில் உழல்பவன், தீய காரியங்களில் ஈடுபடுபவன், பைத்தியம் பிடிப்பவன், பரட்டைத் தலையுடன் காட்சி தருபவன், மோசமான கவிதைகளை இயற்றுபவன் இவர்களைப் பற்றியெல்லாம் ஷைத்தான் எனவும் ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எனவும் கூறப்படும். குர்ஆனிலும் ஹதீஸிலும் இதற்கு ஆதாரம் உண்டு.

அந்த அடிப்படையிலேயே 2:275 வசனத்திற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

ஒருவனிடம் இருந்த ஷைத்தான் இன்னொருவனிடம் இடம் பெயர்கிறான் என்று பொருள் கொள்ள முடியாது. அப்படி பொருள் கொண்டால் இது வரை நாம் எடுத்துரைத்த குர்ஆன் வசனங்களுடனும், ஹதீஸ்களுடனும் அது முரண்படும் நிலை உருவாகும்.

எந்த வசனத்தைத் தங்களின் வலுவான ஆதாரமாக இவர்கள் எடுத்து வைக்கின்றார்களோ அந்த வசனத்தில் இவர்களின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஒருவனிடமிருந்த ஷைத்தான் இன்னொருவனுக்குள் புகுந்து கொள்கிறான் என்று இந்த வசனமும் கூறவில்லை. வேறு எந்த வசனமும் கூறவில்லை.

மனிதர்களுக்குப் பைத்தியம் பிடிக்க முடியும் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது. பைத்தியம் பிடிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. மாறாக பேய் பிடித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் சில பேர் பைத்தியங்களாக உள்ளனர். பல பேர் நடிப்பவர்களாகவே உள்ளனர் என்றே நாமும் கூறுகிறோம்.

பேய் இருப்பதாக ஈமான் கொள்பவர்கள், குர்ஆனையும் ஹதீஸையும் ஈமான் கொண்டவர்களாக ஆக முடியாது. குர்ஆனையும், ஹதீஸையும் மறுத்து விட்டுத்தான் பேய்களை நம்ப முடியும். இரண்டில் எதை நம்புவது? என்று சிந்தியுங்கள்.

பேய்கள் பற்றிய உண்மையான நிலையை இனி காண்போம்.