Tamil Bayan Points

ஸஜ்தாவில் குர்ஆனை ஓதலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on January 31, 2017 by Trichy Farook

ஸஜ்தாவில் குர்ஆனை ஓதலாமா?
? தொழுகையில் ருகூவு மற்றும் ஸஜ்தாவில் குர்ஆன் ஓதுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக, “உமது இரட்சகனின் பெயரைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக” என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூவில் ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ளதே, விளக்கவும்.

பதில்

மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக (அல்குர்ஆன் 56 : 96 பஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அளீம்) என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூஃவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உய்ர்ந்த உனது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 87 : 1 ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்அஃலா) என்ற வசனம் இறங்கியதும் இதை உங்களுடைய சுஜூதில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி),

நூல் : அபூதாவூத் 836

ருகூவில் அந்த வசனத்தை ஓதுங்கள் என்று இங்கு கூறப்படவில்லை. மாறாக இதை உங்கள் ருகூவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்தவசனத்தை ருகூவில் செயல்படுத்துங்கள் என்பது தான் இதன் பொருள்.

அதனால் தான் ருகூவில், குர்ஆன் வசனத்தை அப்படியே ஓதாமல், சுப்ஹான ரப்பியல் அளீம் என்று ஓதுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். எனவே ருகூவில் குர்ஆன் ஓதக்கூடாது என்று இடம் பெறும் அறிவிப்புக்கு இது முரண்பாடானதல்ல.