Tamil Bayan Points

13) ஹஜ்ஜுக்காக மூன்று வகையான இஹ்ராம்

நூல்கள்: நபி வழியில் நம் ஹஜ்

Last Updated on April 15, 2023 by

ஹஜ்ஜுக்காக மூன்று வகையாக இஹ்ராம் கட்டுதல்

1. தமத்துவ்

ஹஜ்ஜுக்காக மூன்று வகையாக இஹ்ராம் கட்டலாம். அதில் முதல் வகை தமத்துவ் எனப்படும்.

ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் ஹஜ்ஜுடைய மாதங்கள் என்பதை முன்பே நாம் அறிந்தோம்.

ஹஜ்ஜுடைய இந்த மாதங்களில் இஹ்ராம் கட்டுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளில் முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.

இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றி விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். இஹ்ராம் இல்லாமல் அவர் மக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மீண்டும் ஒரு தடவை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டும். அதன் பிறகு ஹஜ்ஜுடைய கிரியைகளை நிறைவேற்றி முடிக்க வேண்டும். இதற்கு தமத்துவ் என்று கூறப்படுகின்றது.

உம்ராவுக்கு இஹ்ராம் கட்டும் போது லப்பைக்க உம்ரதன்என்றும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும் போது லப்பைக்க ஹஜ்ஜன்என்றும் கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.

 

2. கிரான்

கிரான்என்றால் சேர்த்துச் செய்தல் என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டிய இடத்தில் ஒருவர் இஹ்ராம் கட்டும் போது ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் சேர்த்து இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்என்று கூறுவதன் மூலம் இவ்வாறு இஹ்ராம் கட்டலாம்.

ஒரு இஹ்ராமில் உம்ராவையும், ஹஜ்ஜையும் நிறைவேற்றுவதால் இது கிரான் (உம்ராவையும், ஹஜ்ஜையும் சேர்த்துச் செய்தல்) எனப்படுகின்றது. இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் உம்ரா என்று எதையும் தனியாகச் செய்வதில்லை.

தவாஃபுல் குதூம் செய்து விட்டு, இஹ்ராமைக் களையாமல் எட்டாம் நாளில் இருந்து ஹஜ்ஜின் கிரியைகளை அவர் செய்ய வேண்டும். ஹஜ் செய்பவர் எவற்றைச் செய்வாரோ அவற்றை மட்டும் செய்ய வேண்டும். ஆனாலும் இவர் ஹஜ்ஜும், உம்ராவும் செய்தவராகக் கருதப்படுவார்.

 

3. இஃப்ராத்

இஃப்ராத்என்றால் தனித்துச் செய்தல்என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமிடத்தில் ஹஜ்ஜுக்காக மட்டும் லப்பைக்க ஹஜ்ஜன்என்று கூறி இஹ்ராம் கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்ற வேண்டும். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பிறகு விரும்பினால் உம்ராச் செய்யலாம்.

இவ்வாறு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டியவர்கள் குர்பானி எதனையும் கொடுக்க வேண்டியதில்லை.

குர்பானி கொடுப்பது. இஹ்ராம் கட்டும் போது நிய்யத் செய்வது ஆகிய இரண்டு விஷயத்தைத் தவிர இஃப்ராத் என்பதற்கும் கிரான் என்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஆயினும், கிரான் என்று நிய்யத் செய்தவர் ஹஜ், உம்ரா இரண்டையும் செய்த நன்மையை அடைகிறார். இஃப்ராத் என்று நிய்யத் செய்தவர் ஹஜ் மட்டும் செய்தவராக ஆகின்றார்.

மக்காவில் வசிப்பவர்கள் இந்த வகையான இஹ்ராம் மட்டுமே கட்டி ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். மற்றவர்கள் இந்த மூன்று வகைகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இவற்றுக்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம், உங்களில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டுபவர் அவ்வாறே செய்யட்டும். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டுபவர் அவ்வாறே செய்யட்டும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். அவர்களுடன் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். மற்றும் சிலர் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டினார்கள். இன்னும் சிலர் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டினார்கள். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரி 317, 1562

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் உங்களில் கையோடு குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தவர் ஹஜ்ஜை நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபட முடியாது. உங்களில் குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர் கஃபாவைத் தவாஃப் செய்து, ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி முடியைக் குறைத்து (உம்ராவை முடித்தவராக) இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்; பிறகு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, (ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்) குர்பானி கொடுக்கட்டும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 319

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக ஆரம்பத்தில் இஹ்ராம் கட்டினாலும், பிறகு இறைவனது கட்டளைப் பிரகாரம் அதற்குள் உம்ராவையும் சேர்த்துக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகீக்எனும் பள்ளத்தாக்கை அடைந்த போது என் இறைவனிடமிருந்து ஒரு (வான)வர் என்னிடம் வந்தார். இந்தப் பாக்கியம் நிறைந்த பள்ளத்தாக்கில் தொழுவீராக! உம்ரதுன் பீஹஜ்ஜதின்(ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்க்கிறேன்.) என்று கூறுவீராக என்று கூறினார்எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 1534, 2337, 7343

ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்த்துச் செய்வதாக முடிவு செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியாக உம்ராச் செய்யவில்லை. ஆரம்பமாக நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களில் இருந்து இதை நாம் அறியலாம்.
கையோடு குர்பானிப் பிராணியைக் கொண்டு சென்றவர் கிரான்அடிப்படையில் இஹ்ராம் கட்டுவதே சிறந்தது. அவ்வாறு கொண்டு செல்லாதவர்கள் தமத்துவ்அடிப்படையில் இஹ்ராம் கட்டுவது சிறந்ததாகும்.

மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸிலிருந்தும் பின்வரும் ஹதீஸிலிருந்தும் இதை நாம் அறியலாம்.

மக்களெல்லாம் உம்ராவை முடித்து, இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே ஏன்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் குர்பானிப் பிராணியைக் கையோடு கொண்டு வந்து விட்டேன். எனவே ஹஜ்ஜை முடிக்காமல் நான் இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி)

நூல்கள்: புகாரி 1568