Tamil Bayan Points

ஹாகிம் என்று பெயர் சூட்டலாமா?

கேள்வி-பதில்: குழந்தை வளர்ப்பு

Last Updated on November 22, 2016 by Trichy Farook

ஹாகிம் என்று பெயர் சூட்டலாமா?

வஅலைக்குமுஸ்ஸலாம்.

ஹாகிம் என்றால் நீதி வழங்குபவன் அதாவது நீதிபதி என்பது இதன் பொருளாகும். நீதிவழங்கும் அதிகாரத்தை அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருப்பதால் இந்தப் பெயரை மனிதர்களுக்கு சூட்டுவதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை.

இவ்வுலகில் தீர்ப்பு வழங்கும் மனிதரைக் குறிக்க நபி (ஸல்) அவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள்.

7352حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ الْمَكِّيُّ حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.

இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி (7352)

இந்த செய்தியில் நீதிபதி என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் ஹாகிம் என்ற வார்த்தையை நபியவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். ஹாகிம் என்பவர் சரியாகவும் தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது. தவறாகவும் தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது என்பதை நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்திவிட்டார்கள். இறைத்தன்மை எதுவும் இப்பெயரில் இல்லை என்பதால் இதை ஆண் குழந்தைக்கு பெயராக சூட்டுவது தவறல்ல.

ஹாகிம் என்பது இறைவனுக்குரிய பெயராக திருக்குர்ஆனிலோ நபிமொழிகளிலோ நாம் அறிந்தவரை பயன்படுத்தப்படவில்லை. எனவே அப்துல் ஹாகிம் என்று பெயர் வைக்காமல் ஹாகிம் என்று மட்டுமே பெயர் சூட்டிக்கொள்ளலாம்.

அதே நேரத்தில் ஹகம் என்ற பெயரை சூட்டவேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ஹகம் என்றால் யாருடைய தீர்ப்பு மறுக்கப்படக்கூடாதோ அப்படிப்பட்டவருக்கு சொல்லப்படும். அதாவது தவறில்லாத தீர்ப்பு வழங்குபவர் என்பது இதன் பொருள். இப்பெயரில் இறைத்தன்மை இருப்பதால் இதை சூட்டக்கூடாது என நபியவர்கள் தடுத்தார்கள்.

4304حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ نَافِعٍ عَنْ يَزِيدَ يَعْنِي ابْنَ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ هَانِئٍ أَنَّهُ لَمَّا وَفَدَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ قَوْمِهِ سَمِعَهُمْ يَكْنُونَهُ بِأَبِي الْحَكَمِ فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ اللَّهَ هُوَ الْحَكَمُ وَإِلَيْهِ الْحُكْمُ فَلِمَ تُكْنَى أَبَا الْحَكَمِ فَقَالَ إِنَّ قَوْمِي إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَتَوْنِي فَحَكَمْتُ بَيْنَهُمْ فَرَضِيَ كِلَا الْفَرِيقَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحْسَنَ هَذَا فَمَا لَكَ مِنْ الْوَلَدِ قَالَ لِي شُرَيْحٌ وَمُسْلِمٌ وَعَبْدُ اللَّهِ قَالَ فَمَنْ أَكْبَرُهُمْ قُلْتُ شُرَيْحٌ قَالَ فَأَنْتَ أَبُو شُرَيْحٍ قَالَ أَبُو دَاوُد شُرَيْحٌ هَذَا هُوَ الَّذِي كَسَرَ السِّلْسِلَةَ وَهُوَ مِمَّنْ دَخَلَ تُسْتَرَ قَالَ أَبُو دَاوُد وَبَلَغَنِي أَنَّ شُرَيْحًا كَسَرَ بَابَ تُسْتَرَ وَذَلِك أَنْهُ دَخَلَ مِنْ سِرْبٍ رواه أبو داود

ஹானிஉ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் எனது கூட்டத்தாருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். எனது கூட்டத்தினர் என்னை அபுல் ஹகம் என்ற குறிப்புப் பெயரால் அழைப்பதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். எனவே என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அல்லாஹ்வே ஹகம் (தவறில்லாமல் தீர்ப்பளிப்பவன்) ஆவான். (தவறிழைக்காமல்) தீர்ப்பளிப்பது அவனிடமே உள்ளது. அவ்வாறிருக்க நீ என் அபுல் ஹகம் (தவறிழைக்காமல் தீர்ப்பளிப்பவனின் தந்தை) என குறிப்புப் பெயர் வைக்கப்பட்டிருக்கின்றாய்? எனக் கேட்டார்கள். அதற்கு நான் எனது கூட்டத்தினர் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக்கொண்டால் என்னிடம் வருவர். அவர்களுக்கிடையே நான் தீர்ப்பு வழங்குவேன். இருபிரிவினரும் (அத்திர்ப்பை) பொறுந்திக்கொள்வர் (எனவே இவ்வாறு எனக்கு இவர்கள் பெயர் வைத்தனர்) என்று கூறினார். இவ்வாறு தீர்ப்பு வழங்குவது எவ்வளவு அழகாக உள்ளது? என்று கூறிவிட்டு உனக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டார்கள். நான் ஷுரைஹ் முஸ்லிம் மற்றும் அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் என்றேன். இவர்களில் மூத்தவர் யார்? என்று கேட்டார்கள். நான் ஷுரைஹ் என்றேன். அதற்கு அவர்கள் (இனிமேல்) நீ அபூ ஷுரைஹ் (ஷுரைஹ்வுடைய தந்தை என்பதே உனது குறிப்புப் பெயர்) என்று கூறினார்கள்.

அபூதாவுத் (4304)