Tamil Bayan Points

ஹாத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on January 1, 2021 by

ஹாத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: எலும்பு உடைக்கப்பட்டு

நாக்கு அறுக்கப்பட்ட பெண் மரணம் – என்ன நடந்தது?

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது பட்டியலின பெண் கூட்டுப்பாலியலுக்கு ஆளாகி கடுமையான காயங்களுடன் (செப்டம்பர்-14-ம் தேதி 2020) செவ்வாய்க்கிழமை உயிரிழந்த சம்பவத்தில், அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களில் வெளியானதகவல்களில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விவரித்தது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தது ஆகியவை தொடர்பாகவும், அந்த பெண்ணின் சடலத்தை அதிகாலை 3 மணியளவில் தகனம் செய்ய உறவினர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறப்ப்டடிருந்தது.

இந்த சம்பவங்கள் மிகவும் வலியைத் தருபவையாக உள்ளன என்று கூறியுள்ள மனித உரிமைகள் ஆணையம், மிகவும் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு அந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதை உணர முடிகிறது என்றும், இதில் ஈடுபட்ட நபர்களின் செயல் சட்டத்தைக் கண்டு அஞ்சாதவர்களாக அவர்கள் இருந்தனர் என்றும் அறிய முடிகிறது என்று கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் காவல்துறை தலைமை இயக்குநர் இந்த வழக்கில் தனி கவனம் செலுத்தி விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் மாநில அரசு பதில் அனுப்ப வேண்டும் என்றும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இரண்டு வாரங்களாக உயிருக்குப் போராடிய அந்த பெண் பிறகு மரணம் அடைந்தார். இந்த நிலையில், அவரது உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் நள்ளிரவில் அப்பெண்ணின் உடல் வலுக்கட்டாயமாக குடும்பத்தினரிடம் இருந்து பறிக்கப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டதாக அந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.

மூன்று மணிக்கு இறுதி சடங்கு

பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய அந்த பெண்ணின் சகோதரர், “போலீஸார் வலுக்கட்டாயமாக உடலை பறித்து கொண்டனர். என் தந்தையையும் அவர்களுடன் அழைத்து சென்றனர்,” என்று கூறி உள்ளார்

நள்ளிரவில் ஹாத்ரஸ் கிராமத்திற்கு உடல் எடுத்து செல்லப்பட்டு, புதன்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு இறுதி சடங்கு நடந்துள்ளது.

அந்த பெண்ணின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்து செல்ல விரும்பியதாகவும், ஆனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இறுதி சடங்கு நடத்த கோரியதாகவும் கூறுகின்றனர் கிராம மக்கள்.

என்ன நடந்தது?

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, வயல்வெளியில் புல் வெட்ட தனது தாய் மற்றும் சகோதரருடன் அந்த பெண் சென்றிருந்தார். அப்போது உயர் ஜாதியைச் சேர்ந்த நான்கு பேர் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கூட்டுப்பாலியல் செய்து பிறகு கடுமையாகத் தாக்கியதில் பலத்த காயங்களுடன் அவர் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பிபிசியிடம் பேசும்போது, செப்டம்பர் 14ஆம் தேதி எனது சகோதரி, தாய், மூத்த சகோதரர் புல் வெட்ட சென்றோம். பிறகு சகோரர் கைநிறைய புல்லுடன் திரும்பினார். எனது தாயார் முன்பகுதியில் புல் வெட்டச்சென்றார். அப்போது அங்கு நான்கு பேரும் எனது சகோதரியை கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்தனர் என்று தெரிவித்தார்.

சுயநினைவிழந்த நிலையில், அருகே உள்ள உள்ளூர் சமுதாய மருத்துவ நிலையத்துக்கு அந்த பெண்னை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பிறகு அங்கிருந்து அவர் அலிகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த 13 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு திங்கட்கிழமை அவர் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், அவரது உயிர் செவ்வாய்க்கிழமை காலை பிரிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தனது சகோதரிக்கு நேர்ந்த துயரத்தை பகிர்ந்து கொண்ட அவரது சகோதரர், “எனது சகோதரியின் முதுகெலும்பு உடைந்திருந்தது. அவரது நாக்கு வெட்டப்பட்டிருந்தது. அவரது கையை அசைக்கக்கூட முடியவில்லை. செய்கை மூலம் வலியைத் தாங்கிக் கொண்டு அவர் பேச முற்பட்டார்” என்று தெரிவித்தார்.

Source: https://www.bbc.com/tamil/india-54351613