Tamil Bayan Points

06) புகாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானதா?

நூல்கள்: ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

Last Updated on October 30, 2023 by

06) புகாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட அனைத்து

ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானதா?

புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவை என்று இன்றைக்குப் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்ரஸாக்களில் படித்த மார்க்க அறிஞர்களும் இவர்களைப் போன்றே நினைக்கிறார்கள்.

இதனால் தான் புகாரி முஸ்லிமில் இடம் பெற்ற ஹதீஸ்களை நாம் விமர்சிக்கும் போது சொல்லப்படுகின்ற விமர்சனம் சரியா? தவறா? என்று பார்க்காமல் புகாரியில் பதிவு செய்யப்பட்டு விட்டாலே அதை விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள்.

புகாரி முஸ்லிமில் உள்ள ஹதீஸ்களைப் பற்றிய முழுமையான அறிவுள்ளவர்கள் யாரும் இவ்வாறு கூற மாட்டார்கள். மாபெரும் அறிஞரான இமாம் தாரகுத்னீ அவர்கள் புகாரி இமாம் பதிவு செய்த பல ஹதீஸ்களை விமர்சனம் செய்துள்ளார்கள்.

புகாரிக்கு விரிவுரை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இந்த விமர்சனங்களுக்கு சரியான பதிலைக் கூறினாலும் சில இடங்களில் சொல்லப்பட்ட குறையை ஏற்றுக் கொள்கிறார். அந்தக் குறைகளுக்கு பதில் இல்லை என்றும் ஒத்துக் கொள்கிறார்.

சில நேரத்தில் புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறிவிப்பாளரை அறிஞர்கள் விமர்சனம் செய்யும் போது அந்த விமர்சனத்திற்கு முறையான பதில் ஏதும் இப்னு ஹஜர் அவர்களால் சொல்ல முடிவதில்லை. இந்த இடத்தில் இவரிடம் இமாம் புகாரி அவர்கள் குறைவாகத் தான் ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளார்கள் என்பதை மட்டும் தான் இப்னு ஹஜர் பதிலாகக் கூறுகிறார்.

 புகாரிக்கு மாபெரும் தொண்டாற்றிய மாபெரும் மேதை இப்னு ஹஜர் அவர்களே புகாரியில் உள்ள அனைத்தும் ஆதாரப்பூர்வமானது என்று ஒத்துக் கொள்ளாத போது இவர்கள் புகாரியில் உள்ள அனைத்தும் சரி என்று இவர்கள் வாதிடுவது தான் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இப்னு ஹஜரின் விளக்கம்

இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு எழுதிய விரிவுரையின் முன்னுரையை முறையாகப் படித்தவர்கள் புகாரியில் உள்ள அனைத்துச் செய்தியும் சரியானது என்றக் கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

فتح الباري – ا

وقوله في شرح مسلم وقد أجيب عن ذلك أو أكثره هو الصواب فإن منها ما الجواب عنه غير منتهض

 

இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார் : புகாரியில் சொல்லப்பட்ட விமர்சனங்களில் அதிகமானவைகளுக்கு பதில் தரப்பட்டு விட்டது என்று முஸ்லிமுடைய விரிவுரையில் முஹ்யித்தீன் என்பவர் கூறியது தான் சரியானதாகும். ஏனென்றால் இந்த விமர்சனங்களில் சிலவற்றிற்கு பதில் (இன்னும்) கிடைக்கவில்லை.

நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 346

فتح الباري – ا

وقد تشتد المخالفة أو يضعف الحفظ فيحكم على ما يخالف فيه بكونه منكرا وهذا ليس في الصحيح منه الا نزر يسير

இப்னு ஹஜர் கூறுகிறார் : சில வேளை அறிவிப்பாளர்கள் மிகவும் மோசமாக முரண்பட்டு அறிவிப்பார்கள். அ;ல்லது (அவர்களின்) மனனத்தன்மை பலவீனமாகி விடும். இந்நேரத்தில் (தன்னை விட வலிமையானவர்களுக்கு) மாற்றமாக அறிவிக்கப்படும் செய்திக்கு முன்கர் (மறுக்கப்பட வேண்டியது) என்று முடிவு கட்டப்படும். இது போன்ற செய்தி புகாரியில் குறைவாக தவிர (அதிகமாக) இல்லை.

நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 385

فتح الباري – ا

 وقد تعرض لذلك بن الصلاح في قوله إلا مواضع يسيرة انتقدها عليه الدارقطني وغيره وقال في مقدمة شرح مسلم له ما أخذ عليهما يعني على البخاري ومسلم وقدح فيه معتمد من الحفاظ فهو مستثنى مما ذكرناه لعدم الإجماع على تلقيه بالقبول انتهى وهو احتراز حسن

தாரகுத்னீ (புகாரியில்) விமர்சனம் செய்த சில இடங்களைத் தவிர (மற்ற செய்திகள் அனைத்திற்கும் அங்கீகாரம் உண்டு) என்ற கருத்தையே இப்னுஸ்ஸலாஹ் ஏற்றுள்ளார். அவர் முஸ்லிமுடைய விரிவுரையின் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார் : புகாரி மற்றும் முஸ்லிமில் நம்பத் தகுந்த அறிஞர் ஒருவர் குறை கூறினால் (அனைத்து சமூகத்தின் அங்கீகாரமும் புகாரிக்கு உண்டு என்று நாம் முன்பு) கூறியதிலிருந்து (குறைகூறப்பட்ட) இந்தச் செய்தி விதிவிலக்கானதாகும். ஏனெனன்றால் இந்த விமர்சிக்கப்பட்ட ஹதீஸில் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது.

இப்னு ஹஜர் கூறுகிறார் : இவ்வாறு விதிவிலக்கு கொடுப்பது அழகானதாகும்.

நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 346

فتح الباري – ا

وليست كلها قادحة بل أكثرها الجواب عنه ظاهر والقدح فيه مندفع وبعضها الجواب عنه محتمل واليسير منه في الجواب عنه تعسف

இப்னு ஹஜர் கூறுகிறார் : புகாரியில் சொல்லப்பட்ட அனைத்து விமர்சனங்களும் (புகாரியில்) குறை ஏற்படுத்தக் கூடியதாக இல்லை. மாறாக இந்த விமர்சனங்களில் அதிகமானவைகளுக்கு தெளிவாக பதில் உள்ளது. அந்த விமர்சனத்தில் குறை சொல்ல முடியாது. சில விமர்சனங்களுக்கு தெளிவற்ற விதத்தில் பதில் உள்ளது. சில விமர்சனங்களுக்கு பதில் சொல்வது கடினம்.

மேற்கண்ட வாசகங்களையெல்லாம் நன்கு கவனிக்க வேண்டும். புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு பதிலைத் தரும் முயற்சியில் இறங்கிய கல்வி மேதை இப்னு ஹஜர் அவர்களே சில விமர்சனங்களுக்குப் பதில் சொல்லமுடியவில்லை என்று ஒத்துக் கொண்டு அதைத் தன் நூலில் எழுதியிருக்கும் போது புகாரியில் உள்ள அனைத்துச் செய்தியும் சரியானது தான் என்று அறிவுள்ளவர்கள் எப்படிக் கூறுவார்கள்?

புகாரியில் நபி (ஸல்) அவர்களுடைய கூற்றுக்கள் மட்டும் பதிவு செய்யப்படவில்லை. நபித்தோழர்களின் கூற்று நபித்தோழர்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கூற்றுக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக பின்வரும் சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அம்ர் பின் மைமூன் என்பார் கூறியதாவது : அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.

அறிவிப்பவர் : அமர் பின் மைமூன்

நூல் : புகாரி (3849)

இது போன்ற சம்பவம் நடந்தது என்று அறிவுள்ளவர்கள் யாரும் கூற மாட்டார்கள்.

குரங்குகளுக்கு திருமணம் உட்பட எந்த பந்தமும் கிடையாது. மனிதர்களுக்கு சொல்லப்பட்ட வாழ்க்கை ஒழுங்கு நெறிகளைக் கடைப்பிடிக்குமாறு மிருகங்களுக்கு அல்லாஹ் கட்டளையிடவும் இல்லை. மனிதனுக்குச் சொல்லப்பட்ட சட்டத்தை குரங்குகள் நடைமுறைப்படுத்தியது என்பதை நியாயவான்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தெளிவாகப் பொய் என்று தெரியும் இந்தச் சம்வத்தை இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்தார்கள் என்பதற்காக நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஹதீஸ் தொகுப்பு நூற்களில் சிறந்த நூற்கள் என்று முதலாவதாக புகாரியையும் இரண்டாவதாக முஸ்லிமையும் கூறலாமே தவிர குர்ஆனைப் போன்று ஒரு தவறும் இல்லாத நூல் என்ற சிறப்பை இவைகளுக்குத் தர முடியாது. இச்சிறப்பை இறைவன் தன் வேதத்திற்கும் மட்டும உரியதாக்கியுள்ளான்.

புகாரி மற்றும் முஸ்லிமில் பலவீனமான அறிவிப்பாளர்களும் அறியப்படாதவர்களும் மிகக் குறைவாக இருக்கிறார்கள். மற்ற புத்தகங்களில் இருப்பதைப் போல் மோசமான கருத்தைக் கொண்ட செய்தியும் இவற்றில் குறைவாக இடம்பெற்றுள்ளது.

எனவே மற்ற புத்தகங்களில் இடம்பெற்ற செய்திகளை ஹதீஸ் கலைக்கு உட்பட்டு அனுகுவதைப் போல் புகாரி முஸ்லிமில் உள்ள செய்திகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். புகாரி இமாம் பதிவு செய்த ஹதீஸ்களை பல அறிஞர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அது சரியானதா? தவறானதா? என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இதற்குப் பல சான்றுகள் நம்மிடம் உள்ளன.