Tamil Bayan Points

12) “அஹ்லுல் குர்ஆன்”களின் வழியா?

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

Last Updated on May 24, 2022 by

12) “அஹ்லுல் குர்ஆன்”களின் வழியா?

அல்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறும் போது நம்மை எதிர்ப்பவர்கள் நம் மீது சுமத்தும் இன்னொரு குற்றச்சாட்டு “இவர்கள் ஹதீஸ்களை மறுத்த அஹ்லுல் குர்ஆன் என்ற வழிகெட்ட பிரிவினரின் கருத்துக்களைத் தான் முன் வைக்கின்றார்கள்” என்பதாகும். இவர்களின் இந்த விமர்சனத்திற்குரிய பதிலையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் தெளிவான மார்க்கம். உலகின் நவீனப் பிரச்சினைகள் அனைத்திற்கும் இந்த மார்க்கத்தில் தீர்வு உண்டு. விஞ்ஞானத்திற்கு முரண்படாத ஒரு மார்க்கம் இன்று உலகில் உண்டு என்றால் அது இஸ்லாம் தான். இருந்தாலும் இஸ்லாத்திற்குள்ளேயே பல பிரிவுகள் இருப்பதைப் பார்க்கிறோம். இஸ்லாத்தை அரைகுறையாகப் புரிந்து கொள்வதால் கொள்கையின் அடிப்படையில் பல பிரிவுகளாக முஸ்லிம்கள் பிரிந்துள்ளார்கள்.

உலக ஆதாயங்களுக்காகவும், சுயநலனுக்காகவும் கூட சிலர் இஸ்லாத்திற்குள் பிரிவினையை ஏற்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு பிரிவினரும் தங்களது கருத்துக்களை நிலைநாட்டுவதற்கு குர்ஆனிலிருந்து ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த ஆதாரங்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது அவர்களுடைய கருத்து நியாயமானதாகத் தோன்றினாலும் குர்ஆனை முழுமையாக முறைப்படி ஆராய்ந்தால் இஸ்லாத்தில் பிரிவுக்கு இடமில்லை என்பதை விளங்கலாம்.

“இஸ்லாத்தின் மூல ஆதாரம் குர்ஆன் மட்டுமே” என்ற கொள்கை இந்தப் பல்வேறு பிரிவுகளில் ஒன்றாகும். இஸ்லாமியக் குடியரசின் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்கள் தலைநகரமான மதீனாவில் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அலீ (ரலி) அவர்கள் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலான மக்களின் ஆதரவு அலீ (ரலி) அவர்களுக்கு இருந்தாலும் அவர்களை எதிர்ப்பவர்களும்  கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.

அலீ (ரலி) அவர்களை எதிர்த்தவர்கள் ஒரே நிலைபாட்டில் இருக்கவில்லை. உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்பும், ஒத்துழைப்பும் இருந்தது என்பது சிலரது நிலைபாடாக இருந்தது. “உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்போ, உடண்பாடோ இல்லை: ஆயினும் கொலையாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதில் அலீ (ரலி) தயக்கம் காட்டுகிறார்: கொலையாளிகளிடம் கருணையுடன் நடந்து கொள்கிறார்” என்பது மற்றும் சிலரின் நிலைபாடாக இருந்தது.

ஆயிஷா (ரலி), முஆவியா (ரலி) போன்றவர்கள் இந்த நிலைபாட்டில் இருந்தனர். அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களின் நிலையும் ஒன்றுபட்டதாக இருக்கவில்லை. அலீ (ரலி) அவர்களின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்களைத் தகுதியான தலைவர் என நம்பியவர்களும் அவர்களில் இருந்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் சம்மந்தப்பட்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆதரவாளர்களாக நடித்தவர்களும் இருந்தனர். உஸ்மான் (ரலி) அவர்களின் உறவினரும், அவர்களால் சிரியாவின் ஆளுனராக நியமிக்கப்பட்டவருமான முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் தலைமையை ஏற்க மறுத்தார்கள்.சிரியாவைத் தனி நாடாக்கி அதன் அதிபராகத் தம்மை அறிவித்துக் கொண்டார்கள்.

முஆவியா (ரலி) அவர்களின் கீழ் உள்ள நிலப்பரப்புக்களை வென்று ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்காக அலீ (ரலி) அவர்கள் போர் தொடுத்தனர். “சிஃப்பீன்’ என்ற இடத்தில் இரு படையினருக்கும் இடையில் போர் நடைபெற்றது. இப்போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதனைக் கண்டு கவலை கொண்ட நல்லவர்கள் இரு தரப்பிலும் இருந்தனர். இரு தரப்பும் ஒன்றுபடுவதற்கான சமாதான உடன்படிக்கை செய்து போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர்கள் முயற்சி செய்தனர்.

“இரண்டு தரப்பிலும் தலா ஒரு நடுவரை நியமித்து, அவ்விரு நடுவரும் பிரச்சனையை அலசி ஆராய்ந்து கூட்டாக நல்ல முடிவை எட்ட வேண்டும். அந்த முடிவை இரு தரப்பும் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்பது தான் அந்த சமாதானத் திட்டம். இத்திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.

அதன் படி அலீ (ரலி) தரப்பில் அபூ மூஸா (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) தரப்பில் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் இருந்த நன்மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்று விட்டு அலீ (ரலி) அவர்கள் அணியில் கலந்திருந்த கொலையாளிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது.

“இந்த ஒப்பந்தம் மூலம் சமுதாயம் ஒன்றுபட்டால் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்ற நாம் தப்பிக்க முடியாது” என அவர்கள் அஞ்சினார்கள். அதே நேரத்தில் சமாதான முயற்சியை நேரடியாக எதிர்த்தால் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.

எனவே சமாதான முயற்சியை வேறொரு முகமூடி அணிந்து எதிர்க்கத் திட்டமிட்டார்கள். இஸ்லாமிய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்கு கொள்கைச் சாயம் பூச வேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டது. இந்தச் சமாதான உடன்படிக்கை இஸ்லாத்துக்கு எதிரானது என்ற வாதத்தை எடுத்து வைத்து அலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர இவர்கள் எதிர்க்கலானார்கள்.

இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் காரிஜிய்யாக்கள் (கலகக்காரர்கள்) எனப்படுகின்றனர். இந்த விஷக் கருத்துக்கு இவர்கள் எப்படி மார்க்கச் சாயம் பூசினார்கள் என்பதையும் விபரமாக அறிந்து கொள்வோம்.

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை.

(திருக்குர்ஆன்:6:57, 12:40, 12:67.)

இந்த வசனங்களை ஆதாரமாகக் கொண்டு சமாதான உடன்படிக்கையை இவர்கள் எதிர்த்தனர். “அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று குர்ஆன் கூறும் போது இரண்டு நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கி அவர்களின் முடிவை ஏற்பது குர்ஆனுக்கு முரண்” என்பது இவர்களின் வாதம். “அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை” என்று குர்ஆன் கூறுவது உண்மை தான்.

ஆனால் இவர்கள் திசைதிருப்பும் கருத்தைத் தான் இவ்வசனங்கள் தருகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை. எந்த அதிகாரம் தனக்கு உரியது என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறானோ அந்த அதிகாரம் பற்றியே இவ்வசனங்கள் கூறுகின்றன. எந்த அதிகாரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறானோ அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவது இவ்வசனங்களுக்கு முரணாகாது.

மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும் போது மற்ற மனிதர்கள் தலையிட்டு தீர்ப்பு வழங்குவதையும், தீர்த்து வைப்பதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். பல்வேறு பிரச்சனைகளில் இவர்கள் கூட இதன் அடிப்படையில் செயல்படக் கூடியவர்களாக இருந்தனர். ஆயினும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக மனசாட்சிக்கு விரோதமாக அவர்கள் இவ்வாறு வாதிட்டனர்.

இவர்களின் வாதம் மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்று சிலர் எண்ணி அவர்கள் பின்னே சென்றது தான் இதில் வேதனையான விஷயம். இவர்கள் வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பின் வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

(திருக்குர்ஆன்:4:35.)

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

(திருக்குர்ஆன்:4:58.)

அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

(திருக்குர்ஆன்:5:42.)

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும்.

(திருக்குர்ஆன்:5:95.)

ஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்) விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும், ஸூலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக! அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்.

(திருக்குர்ஆன்:21:78.)

வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா? தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். “பயப்படாதீர்!’ நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக!” என்று அவர்கள் கூறினர்.

(திருக்குர்ஆன்:38:21, 22.)

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

(திருக்குர்ஆன்:49:9.)

மனிதர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும் போது சக மனிதர்கள் தலையிட்டு நீதியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என இவ்வசனங்கள் தெளிவாக அனுமதிக்கின்றன. ஆயினும் இவர்கள் தமது மனசாட்சிக்கு எதிராகவும், குர்ஆனுக்கு எதிராகவும் குர்ஆன் வசனத்தைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி மக்களை வழிகெடுத்தனர். இதைத் தொடர்ந்து ஹதீஸ்கள் எதுவும் தேவையில்லை. குர்ஆன் மட்டும் போதும் என தங்களின் கொள்கையை விரிவுபடுத்திக் கொண்டனர்.

அலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர எதிர்த்த இவர்கள் ஹரூரா என்ற இடத்தில் தளம் அமைத்துக் கொண்டனர். “அல்லாஹ்வின் தீர்ப்பைப் புறக்கணித்து மனிதர்களை நடுவர்களாக நியமித்த அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகிய இருவரும், இவ்விருவருடன் இருந்த மக்களும் காஃபிர்கள்” எனவும் இவர்கள் ஃபத்வா கொடுத்தனர்.

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள்.

(திருக்குர்ஆன்:5:44.)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

(திருக்குர்ஆன்:5:45.)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

(திருக்குர்ஆன்:5:47.)

இந்த வசனங்களையும் தவறான இடத்தில் பயன்படுத்தி நன்மக்கள் அனைவரையும் காஃபிர்கள் என்றனர். அனைவரையும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்ததுடன் “காஃபிர்களுடன் போர் செய்ய வேண்டும்: காஃபிர்களைக் கொல்ல வேண்டும்: அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகியோரைக் கொல்வது ஜிஹாத்” என்றெல்லாம் அடுத்த நிலைபாட்டை எடுத்தனர். ஜிஹாத் பற்றிய வசனங்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டி இதை நியாயப்படுத்தினர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் இவர்கள் கூறுவது தவறு என்று அறிஞர்கள் விளக்கம் அளித்த போது “குர்ஆன் மட்டுமே மார்க்க ஆதாரம்” என்று கூறி ஹதீஸ்களை மறுக்கலானார்கள். இவர்கள் குர்ஆனுக்குத் தம் இஷ்டம் போல விளக்கம் கூறி ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்களைக் கொல்லத் துணிந்ததால் ஹிஜ்ரீ 38 ஆம் ஆண்டில் அலீ (ரலி) அவர்கள் ஹரூராவின் மீது படையெடுத்துச் சென்று அவர்களின் கொட்டத்தை அடக்கினார்கள்.

பின்னர் முஆவியா (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்கள் மீது போர் தொடுத்து அவர்களை முற்றிலுமாக அழித்தார்கள். இவர்களைப் போல் ஒவ்வொரு கால கட்டத்திலும் “குர்ஆன் மட்டும் போதும்’ என்ற கூட்டத்தினர் தோன்றிக் கொண்டும் அழிந்து கொண்டும் வருகின்றனர். காரிஜிய்யாக்கள் எவ்வாறு மடமையின் மீது தங்கள் அடித்தளத்தை அமைத்துக் கொண்டும், குர்ஆன் வசனங்களைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தியும் வந்தார்களோ அந்த வழிமுறை மட்டும் மாறவில்லை.

“குர்ஆன் மட்டும் போதும்’ என்று இப்போது வாதிடுபவர்களும் குர்ஆன் வசனங்களைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி அதன் மீது தான் தங்களின் அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறார்கள் என்பதைக் காணலாம். தங்களை வளர்த்துக் கொள்ள இந்தத் தீய கொள்கையைத் தீய நோக்கத்துடன் இவர்கள் பிரச்சாரம் செய்தது போலவே எப்போதெல்லாம் இத்தீய கொள்கையை யாரெல்லாம் தூக்கிப் பிடித்தார்களோ அவர்களும் தங்களை வளர்த்துக் கொள்ளவே இந்தத் தீய கொள்கையைப் பிரச்சாரம் செய்தனர்.

குர்ஆன் மட்டும் போதும் என்ற நிலைபாட்டை எடுத்தவர்கள் குர்ஆனை வாசிக்கும் போது அதன் முழு விளக்கம் குர்ஆனில் கிடைக்காமல் இருப்பதை உணர்கிறார்கள். நபி வழியின் துணையுடன் தான் குர்ஆணை விளங்க முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டாலும் அதை வெளிப்படையாக அறிவிக்க அவர்களின் சுய கவுரவம் தடுக்கிறது. எனவே சத்தியத்தை நோக்கித் திரும்பாமல் குர்ஆனையும், இஸ்லாத்தையும் புறக்கணித்து கடவுள் மறுப்பாளர்களாகி விடுகின்றனர்.

இவர்களில் சிலர் இஞ்சீலைப் பற்றி புகழ்ந்து பேசும் 3:65, 5:46, 5:66, 5:68, 9:111, 57:27 ஆகிய வசனங்களைப் படித்து விட்டு பைபிளைப் பின்பற்றுவதும் நமக்குக் கடமை எனக் கூறி தடம் புரண்டதை நாம் பார்த்துள்ளோம். நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவை இல்லை என்று கூறிய இவர்களை மத்தேயு, மாற்கு கூறியதை ஏற்கும் நிலைக்கு தள்ளி அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டான். “குர்ஆன் மட்டும் போதும்: நபிவழி அவசியமில்லை” என்ற கருத்து இஸ்லாத்தின் அடிப்படைக்கே நேர் முரணானதாகும்.

இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாக சென்று நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் அனைத்தையும் புறக்கணித்த இந்த வழிகெட்ட “அஹ்லுல் குர்ஆன்” இயக்கத்தினரின் கொள்கைகளைத் தான் இன்று தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்வதாக ஸலபி நோய் பிடித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.

ஹதீஸ்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கொடுத்து வரும் முக்கியத்துவம், அதனை பின்பற்ற வேண்டும், மற்றவர்களையும் பின்பற்றச் செய்ய வேண்டும் என்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத் எவ்வகையான பிரச்சினைகளையெல்லாம் சந்தித்தது, இன்றும் சந்தித்துக் கொண்டிருகின்றது என்பதை அனைவரும் அறிவோம். அவ்வாரிருக்கையில் ஹதீஸ்களை மறுக்கும் அஹ்லுல் குர்ஆன் என்ற வழிகெட்டவர்களுடன் நம்மை ஏன் இவர்கள் இணைத்துப் பேசுகின்றார்கள்?

அல்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறும் விதி சரியானதா? தவறானதா? என்பதையெல்லாம் பார்க்காது, நாம் எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்கு பதிலில்லாமல் தத்தளிக்கும் இவர்கள் தமது சுய இலாபத்திற்காகவே இந்த விமர்சனத்தை முன் வைக்கின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவையில்லை என்று வாதிடுபவர்களுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் “குர்ஆன் மட்டும் போதுமா?” என்ற தலைப்பில் தனியானதொரு நூலே வெளியிடப்பட்டுள்ளது. அஹ்லுல் குர்ஆன் இயக்கவாதிகளுக்கு எதிராக பாரியளவில் பிரச்சாரத்தை செய்து, ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே என்பதை நிரூபித்துக் காட்டிய தவ்ஹீத் ஜமாஅத்தை “அஹ்லுல் குர்ஆன் வாதிகள்” என்று இவர்கள் விமர்சிப்பது நகைப்பிற்குரியதாகும்.

ஹதீஸ்கள் எப்படியான முறைகளில் பாதுகாக்கப்பட்டன என்பதை “ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட முறை” என்ற தலைப்பில் விரிவாக விளக்கியுள்ளோம்.