Tamil Bayan Points

17) அஜ்வா பேரிச்சம் பழம் பற்றிய செய்தியின் உண்மை நிலை?

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

Last Updated on May 25, 2022 by

17) அஜ்வா பேரிச்சம் பழம் பற்றிய

செய்தியின் உண்மை நிலை?

சூனியத்திற்குத் தாக்கம் உண்டு என்றும், அதனால் நினைத்த நேரத்தில் நினைத்தவாறு, தான் நினைத்தவர்களுக்கெல்லாம் தாக்கத்தை உண்டாக்கலாம் என்றும் பிரச்சாரம் செய்வோர் தமது கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக எடுத்து வைக்கும் ஆதாரங்களில் கீழே நாம் விளக்கவுள்ள அஜ்வா பற்றிய செய்தியும் ஒன்றாகும். யார் தினமும் காலையில் 07 அஜ்வா வகை பேரீச்சம் பழங்களை உண்டு வருகின்றாரோ அவருக்கு எந்த விஷமோ, சூனியமோ தாக்காது என்பதே குறித்த செய்தியின் உள்ளடக்கமாகும்.

صحيح البخاري
5445 – حَدَّثَنَا جُْعَةُ بْنُ عَبْدِ الَّلِ، حَدَّثَنَا مَرْوَانُ، أَخْبََنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ،
مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ « : أَخْبََنَا عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ الَّلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعَ تََرَاتٍ عَجْوَةً، لَْ يَضُرَّهُ فِ ذَلِكَ اليَوْمِ سُمٌّ وَلاَ سِحْرٌ »

 

தினந்தோறும் காலையில் ஏழு “அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாளில் எந்த விஷமும் தீங்களிக்காது: எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (5445)

முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி மேலதிக சில தகவல்களுடன் பதியப்பட்டுள்ளது.

صحيح مسلم 2645
– وَحَدَّثَنَا يَْيَى بْنُ يَْيَى وَيَْيَى بْنُ أَيُّوبَ وَابْنُ حُجْرٍ قَالَ يَْيَى بْنُ يَْيَى أَخْبََنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا إِسَْاعِيلُ – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنْ شَرِيكٍ – وَهُوَ ابْنُ أَبِى نَِرٍ)صدوق يخطئ( – عَنْ عَبْدِ الَّلِ بْنِ أَبِى عَتِيقٍ
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ الَّلِ -صلى الله عليه إِنَّ فِى عَجْوَةِ الْعَالِيَةِ شِفَاءً أَوْ إِنَّهَا تِرْيَاقٌ أَوَّلَ الْبُكْرَةِ « .“ وسلم- قَالَ

 

“மதீனாவின் ஆலியா| என்ற பகுதியில் காணப்படும் அஜ்வா ஈத்தம் பழத்தில் நோய்க்கு மருந்திருக்கின்றது. அல்லது ஒவ்வொரு காலையிலும் அதைச் சாப்பிடுவது நஞ்சுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.” (முஸ்லிம் : 5462)

மேற்கண்ட செய்தி புஹாரி : 5445, 5768, 5769, 5779, முஸ்லிம் 5460, 5461, 5459, அபூதாவூத் 3876 இன்னும் பல கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஜ்வா பேரிச்சம் பழம் தொடர்பாகப் பேசும் இந்தச் செய்தி நபியவர்கள் சொல்லவில்லை என்றும் இது தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு செய்தி என்றும் நாம் பிரச்சாரம் செய்து வருகின்றோம். காரணம் இந்தச் செய்தி சொல்லும் தகவல் புனித குர்ஆனில் கருத்துக்கு மாற்றமாக உள்ளது.

குர்ஆன் கூறும் நிதர்சன உண்மைக்கு மாற்றமானதாகும்

ஒரு பொருளுக்கு இல்லாத ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாக யாராவது கூறினால் அந்த ஆற்றலை அவர் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் ஒரு மன்னன் இறைவனுக்குரிய ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிட்டான். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவன் பொய்யன் என்பதை நிரூபிக்க ஒரே ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள். என்னுடைய இறைவன் சூரியனை கிழக்கே உதிக்கச் செய்கிறான்.

மேற்கே மறையச் செய்கிறான். உனக்கு இறைத்தன்மை இருந்தால் கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்குமாறு செய். மேற்கே மறையும் சூரியனை கிழக்கில் மறையுமாறு செய். என்று கேட்டார்கள். அந்த மன்னன் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப்போனான்.

2:258 اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ‌ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُ‌ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‌ۚ‏

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்: மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்: மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்:2:258.)

இப்றாஹீம் நபியவர்கள் எந்த விதத்தில் கேள்வி கேட்டு மன்னன் சொல்வதை அசத்தியம் என்று நிரூபித்தார்களோ அதே விதத்தில் தான் அஜ்வா தொடர்பான செய்தி பற்றியும் நாம் கேள்வி கேட்கின்றோம். குறித்த செய்தி உண்மையானது, சத்தியமானது, புகாரி இமாம் பதிந்து விட்டால் அது அணைத்தும் உண்மை தான் என்றெல்லாம் பேசுபவர்கள் இதனை நிரூபித்துக் காட்டுவதற்கு பயப்படுவது ஏன்?

இந்தச் செய்தியை சரியான செய்தி என்று வாதிடும் பலரும் இதனை நிரூபித்துக் காட்ட பின்வாங்குவதிலிருந்து, இவர்கள் யாரும் இதனை உளப்பூர்வமாக நம்பவில்லை, நம்மை எதிர்ப்பதற்காக வெற்று வார்த்தைகளை கூறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ள முடிகின்றது. அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ நிதர்சனத்திற்கு மாற்றமாக பொய் கூற மாட்டார்கள் என்று திருமறைக் குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِيْثًا

அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

(அல்குர்ஆன்:4:87.)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை) க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் – 15478

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜூன்தப் (ரலி)

நூல்: முஸ்லிம் – 01

எனவே தான் நடைமுறைப்படுத்த இயலாத இதுபோன்ற ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ளது.

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று: விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவுக்கு அச்செய்தி மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276

விமர்சனங்களுக்கான விளக்கங்கள்

அஜ்வா தொடர்பாக மேற்கண்ட செய்தியை உண்மை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பவர்கள் நமக்கு மறுப்பு சொல்வதாகக் கூறிக் கொண்டு சில விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். அந்த வகையில் அவர்களின் விமர்சனங்களுக்குரிய பதில்களையும் நாம் இங்கு பார்க்கலாம்.

விமர்சனம்

அஜ்வா பேரிச்சம் பழத்தைச் சாப்பிட்டால் விஷமோ, சூனியமோ தாக்காது என்றால் அதனை வெறுமனே நினைத்தவாறு சாப்பிடுவது என்று அர்த்தமல்ல, குறித்த செய்தியில் சில நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளின் படி அதனை சாப்பிட்டால் தான் விஷமோ, சூனியமோ தாக்குவதை விட்டும் நாம் தப்பிக்க முடியும்.

  •  குறித்த பேரிச்சம் பழங்களை காலையில் சாப்பிட வேண்டும்.
  •  ஏழு பேரிச்சம் பழங்கள் சாப்பிட வேண்டும்.
  • அவை அஜ்வா வகை பேரீச்சம் பழங்களாக இருக்க வேண்டும்.
  •  குறித்த அஜ்வா வகை பேரிச்சம் பழங்கள் மதீனாவின் நஜ்த் பகுதியை நோக்கிய ஆலியா பகுதியில் விளைந்திருக்க வேண்டும்.
  •  ஹர்ரா என்றழைக்கப்படும் இரண்டு கருங்கல் பாறைகள் நிறைந்த இடத்தில் அது விளைந்திருக்க வேண்டும்.

அப்படி சாப்பிட்டால் தான் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று இவர்கள் வாதிடுகின்றார்கள்.

நமது விளக்கம்

அஜ்வா பற்றிய செய்தியில் அஜ்வா பேரிச்சம் பழத்தைச் சாப்பிட்டால் விஷமோ சூனியமோ தாக்காது என்று இடம் பெற்றுள்ளது. அஜ்வா பற்றிய அனைத்து செய்திகளையும் ஆய்வு செய்து பார்த்தால் மேலே இவர்கள் குறிப்பிடுவதைப் போல சில நிபந்தனைகளை நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்த அனைத்து நிபந்தனைகளின் படி ஒருவர் சாப்பிட்டாலும் நாம் கேட்கும் கேள்வி பதிலில்லாமல் நிற்கத்தான் போகின்றது என்பதை இவர்கள் விளங்கவில்லை.

இவர்களின் வாதப்படி ஒருவர்

  • குறித்த பேரிச்சம் பழங்களை காலையில் சாப்பிடட்டும்.
  • ஏழு பேரிச்சம் பழங்கள் சாப்பிடட்டும்.
  • அவை அஜ்வா வகை பேரீச்சம் பழங்களாகவே அவை இருக்கட்டும்.
  •  குறித்த அஜ்வா வகை பேரிச்சம் பழங்கள் மதீனாவின் நஜ்த் பகுதியை நோக்கிய ஆலியா பகுதியில் விளைந்ததாகவே இருக்கட்டும்.
  • ஹர்ரா என்றழைக்கப்படும் இரண்டு கருங்கல் பாறைகள் நிறைந்த இடத்தில் அது விளைந்திருக்கட்டும்.

இவற்றினால் எந்தப் பிரச்சினையும் இல்லை. குறித்த நிபந்தனைகள் அடங்கிய பேரிச்சம் பழத்தை ஒருவர் சாப்பிட்டு விட்டு விஷத்தை அருந்தினால் அவருக்கு விஷம் பாதிக்குமா? இல்லையா? என்பதுதான் கேள்வி.

இவ்வளவு நிபந்தனைகளையும் நடைமுறைப்படுத்தி, விஷத்தை குடித்துக் காட்டி குறித்த அஜ்வா பற்றிய செய்தி உண்மை தான் என்று யாராவது நிரூபித்து விடலாமே?

உண்மை என்பவர்கள் உளப்பூர்வமாக நம்பவில்லை

அஜ்வா பற்றிய செய்தி உண்மையானது, புகாரியில் இடம் பெற்றுள்ளது, முஸ்லிம் இமாம் பதிந்துள்ளார், அது சத்தியமானது, அறிவிப்பாளர் தொடர் சரியானது ஆகவே அதனை நாம் நம்ப வேண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேசியும், எழுதியும் வருபவர்கள் யாரும் இதனை நிரூபித்துக் காட்ட தயாராக இல்லை.

உண்மை என்று வாயளவில் பேசுபவர்கள், இதனை உளப்பூர்வமாக உண்மை என்று நம்பவில்லை என்பதனை இவர்கள் “நிரூபித்துக் காட்ட பயப்படுவதிலிருந்து” தெளிவாக அறிய முடிகின்றது. அல்லாஹ்வின் தூதர் அஜ்வா விஷத்தை முறிக்கும் என்று சொல்லியுள்ளார்கள் என்று பேச முடியும் என்றால் அதனை நிரூபிக்க ஏன் தயக்கம்?

அல்லாஹ்வின் தூதர் உண்மை மாத்திரமே பேசுவார்கள், அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். அப்படியிருக்கும் நிலையில் அஜ்வா பற்றிய அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருப்பது உண்மை என்றால் அதனை நிரூபித்துக் காட்டுவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்.

இறைவனின் தூதர் உண்மை மாத்திரம் தான் பேசுவார்கள் அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள், அவர்கள் சொன்னால் அது சத்தியம் தான் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அஜ்வா பற்றிய மேற்கண்ட செய்தியை நபியவர்கள் சொல்லவில்லை, நபிக்கும் மேற்கண்ட செய்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தான் எமது வாதமாகும்.

விமர்சனம்

நிரூபித்துக் காட்டுங்கள் என்பது தற்கொலைக்குத் தூண்டுவதாகுமா?

அஜ்வா பற்றிய செய்தி உண்மை என்றால் அதனை நிரூபித்துக் காட்டுங்கள் என்று நாம் வாதிடும் போது, தற்கொலை செய்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்று இவர்கள் வாதிடுகின்றார்கள். அதற்கு ஆதாரமாக தற்கொலை தொடர்பான கீழுள்ள செய்தியை எடுத்துக் காட்டுகின்றார்கள்.

மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார்.

ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) 

நூல் : புகாரி – 5778

நமது விளக்கம்

தற்கொலை செய்வது கூடாது அது நிரந்தர நரகத்திற்கு உரிய செயல் என்பதில் நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் அஜ்வா பற்றிய செய்தியை நிரூபித்துக் காட்டுங்கள் என்பது தற்கொலைக்குத் தூண்டுவதல்ல, உண்மை என்று அவர்கள் நம்புவதை அவர்களே நிரூபித்துக் காட்டுவது எப்படி தற்கொலையாகும்?

அஜ்வா பற்றிய செய்தி உண்மையானது, நபியவர்கள் தான் அப்படி சொன்னார்கள் என்று நம்புபவர்கள் அதனை நிரூபித்துக் காட்டினால் அதற்குப் பெயர் தற்கொலையல்ல: சத்தியத்தை நிரூபிப்பது. ஆனால் இவர்கள் பாசையில் அதற்கு தற்கொலை என்று பெயர் சொன்னால் இவர்கள் தெளிவான பொய்யர்கள் என்பதை நிரூபிக்கப்படுகின்றது.

காரணம்: அஜ்வா பற்றிய செய்தியை உண்மை என்றும், அது ஹதீஸ் என்றும் ஒரு புறம் கூறிவிட்டு, அதனை நிரூபிக்கச் சொன்னால் தற்கொலை என்கின்றார்கள். இதிலிருந்து அஜ்வாவை சாப்பிட்டு விட்டு விஷத்தைக் குடித்தால் செத்துவிடுவோம் என்பதில் அவர்களுக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆகவே நம்மை எதிர்ப்பதற்காக குறித்த செய்தியை உண்மை என்று வீம்புக்கு வாதிடுகின்றார்களே தவிர, அதனை உளப்பூர்வமாக அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மேலும் நிரூபணமாகின்றது.