Tamil Bayan Points

18) நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றார்களா?

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

Last Updated on May 25, 2022 by

18) நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றார்களா?

நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் வஹீ – இறைச் செய்தியை அருள ஆரம்பித்து பின் சிறிது நாட்கள் வஹீ வராமல் இருந்த காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்கள் என்ற கருத்தில் அமைந்த ஒரு செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீண்டதொரு செய்தியின் இறுதிப் பகுதியாகவே தற்கொலை பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது தான் அந்தச் செய்தி (ஹதீஸின் சுருக்கம்)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாட்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?” என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் “ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உமது (பிரச்சாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்” என்று பதிலளித்தார்.

அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்து போனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பலமுறை முனைந்தார்கள்.

அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி, “முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, அல்லாஹ்வின் தூதர்தாம்” என்று கூறுவார்கள். இதைக் கேட்கும்போது நபி (ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். அவர்களது உள்ளம் அமைதியாகிவிடும்.

உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பி வந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும் போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போலவே கூறுவார்கள்.

நூல் : புகாரி : 6982

ஆரம்பமாக இறைச் செய்தி – வஹீ இறங்கியது தொடர்பான செய்தியின் கடைசிப் பகுதியாக இது அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக இந்தச் செய்தி கூறுகின்றது. உலகுக்கு நேர்வழி காட்ட வந்த நபிகள் பெருமானார் அவர்கள் இது போன்ற காரியத்தில் கண்டிப்பாக ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இது தவறான செய்தியாகும். இதனை ஆதாரபூர்வமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது.

அல்குர்ஆனுக்கு மாற்றமான கருத்து

புனித அல்குர்ஆனில் தற்கொலை செய்து கொள்வது, தம்மைத் தாமே அழித்துக் கொள்வது பெரும் பாவம் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். அப்படியிருக்கும் போது, குர்ஆன் பெரும்பாவம் என்று கூறும் ஒரு செயலை நபியவர்களே செய்ய எத்தனித்தார்கள் என்பது நபி மீது அபாண்டம் கூறுவதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பாக இப்படியான செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்று முடிவெடுப்பதே ஒரு முஃமினின் பண்பாக இருக்க முடியும். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதை பாருங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை நரகில் கருகச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது.

(அல்குர்ஆன்:04-29,30.)

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

(அல்குர்ஆன்:2:195.)

மேற்கண்ட வசனங்கள் தற்கொலை செய்வதை எச்சரிப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. தற்கொலை செய்வது பெரும் பாவம் அதில் யாரும் ஈடுபடக் கூடாது என்று இறைவனே கடுமையாக எச்சரிக்கும் போது மனது வெறுத்து நபியவர்களே தற்கொலை செய்ய முயற்சித்தார்கள் என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்?

ஆதாரபூர்வமான மற்ற செய்திகளுக்கு மாற்றமானது

நபியவர்கள் மன விரக்தியில் தற்கொலை செய்ய முயற்சித்தார்கள்

(புகாரி -6982) என்று மேற்கண்ட செய்தி கூறுகின்றது.

ஆனால் தற்கொலை நிரந்தர நரகத்திற்குரிய பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி : 5778

தற்கொலை செய்தவர், தற்கொலை செய்து கொண்ட முறையிலேயே மறுமையில் தண்டிக்கப்படுவார் என்பதற்கும் அவர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார் என்பதற்கும் மேற்கண்ட செய்தி சான்றாக அமைந்துள்ளது.

ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகாரி 6982 வது இலக்க செய்தியோ நபியவர்களே தற்கொலைக்கு முயன்றதாக இடம் பெற்றுள்ளது. அல்குர்ஆனின் கட்டளைகளுக்கு மாற்றமாக நிரந்த நரகத்தைப் பெற்றுத் தரக்கூடிய மிகப் பெரும் பாவமான தற்கொலைக்கு நபியவர்கள் முயன்றார்கள் என்று நம்புவது தவறு என்பதை மேற்கண்ட செய்தியும் நமக்கு உணர்த்துகின்றது.

ஆகவே நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள் என்ற செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதே தெளிவான முடிவாகும்.

வஹீ – இறைச் செய்தியின் ஆரம்பம் பற்றிய

முழுச் செய்தியும் மறுக்கத் தக்கதா?

நபி (ஸல்) அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்தார்கள் என்ற கருத்தில் புகாரி : 6982 வது இலக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த செய்தி, நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும்.

இறைச் செய்தி – வஹியின் ஆரம்பம் தொடர்பாக அறிவிக்கப்படும் குறித்த செய்தியை முழுமையாக நாம் மறுக்கவில்லை. மாறாக தற்கொலைக்கு நபியவர்கள் முயன்றதாக இடம் பெற்றுள்ள பகுதியை மாத்திரமே மறுக்க வேண்டும் என்பதே நமது நிலையாகும்.

குறித்த ஹதீஸில் வஹீ – இறைச் செய்தியின் ஆரம்பம் பற்றிய முழுமையான தகவல்களை ஆயிஷா (ரலி) அவர்கள் தான் அறிவிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வஹீ – இறைச் செய்தியின் ஆரம்பம் பற்றி சொன்னவைகளை நபியிடமிருந்து ஆயிஷா (ரலி) அவர்களும், அவரிடமிருந்து உர்வா அவர்களும், உர்வாவிடமிருந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸ_ஹ்ரி அவர்களும் அறிவிக்கின்றார்கள்.

இப்னு ஷிஹாப் அவர்களிடமிருந்து பலர் இந்தச் செய்தியை அறிவிப்பு செய்கின்றார்கள்.

இதில் 03 வது அறிவிப்பாளரான இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸூஹ்ரி அவர்கள் வஹீ – இறைச் செய்தியின் ஆரம்பம் பற்றிய செய்திகளை அறிவித்த பின்னர் நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றதாக இடம் பெறும் செய்தியையும் இணைத்துச் சொல்கின்றார்கள். தற்கொலை பற்றிய செய்தியை இணைத்து சொல்லும் போது குறித்த செய்தியை தனக்கு அறிவித்தவர் யார் என்ற தகவலை சொல்லாமலேயே அறிவிக்கின்றார்.

“நமக்குக் கிடைத்த தகவலின்படி” அவருடைய வாசக நடையிலிருந்தே இதனை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

மாத்திரமன்றி இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸூஹ்ரி அவர்கள் குறித்த தகவலைத் தனக்குச் சொன்னவர் யார்? தனக்கு சொன்னவருக்கு அறிவித்தவர் யார்? போன்ற அறிவிப்பாளர் தொடர் விபரங்கள் இன்றி அறிவிப்பதினால் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்தச் செய்தி பலவீனமானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

வஹியின் ஆரம்பம் பற்றிய செய்திக்கும் நபியவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற செய்திக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது. ஆகவே, தற்கொலைக்கு நபியவர்கள் முயன்றார்கள் என்ற கருத்தில் இடம் பெற்றுள்ள பகுதியே அல்குர்ஆனுக்கு முரண் என்ற வகையில் மறுக்கப்படுகின்றதே தவிர முழுமையான ஹதீஸ் அல்ல என்பது தெளிவானது.