Tamil Bayan Points

32) நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதா? -2

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

Last Updated on June 11, 2022 by

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநோய் வராது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்க மறுத்தவர்கள் அவர்களைப் பைத்தியம் என்று சொன்னார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்கள் அதைத் தான் வேறு வார்த்தையில் சொல்கிறார்கள்.

ஒரு செய்தி பல சொல்லமைப்புகள் மூலம் சொல்லப்படுவது வழக்கத்தில் உள்ளது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநோய் ஏற்பட்டது என்ற சொல் நேரடியாக அந்தச் செய்தியில் இல்லாவிட்டாலும் அந்தக் கருத்தைத் தவிர வேறு கருத்து அதில் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் செய்யாததைச் செய்ததாக ஆறுமாத காலம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் என்பதும் ஆறுமாதம் மனநோயாளியாக இருந்தார்கள் என்று சொல்வதும் ஒரே கருத்தைச் சொல்லும் இருவேறு சொல் வடிவங்கள் தான்.

நபி அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துள்ளது என்று மக்கள் சொன்னவுடன் அல்லாஹ் கோபப்படுகின்றான்.

எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.

(திருக்குர்ஆன்:52:29.)

நபி அவர்களை அல்லாஹ் பைத்தியமாக ஆக்க மாட்டான் என்று இவ்வசனத்தில் தெளிவாகச் சொல்லியுள்ளான்.

நூன். எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக, (முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

(திருக்குர்ஆன்:68:1-6.)

அவர்களின் தோழருக்கு (முஹம்மதுக்கு) எந்தப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் தெளிவான எச்சரிக்கை செய்பவரே.

(திருக்குர்ஆன்:7:184.)

இவ்வசனங்களை ஊன்றிக் கவனியுங்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடிக்காது என்றும், இது அவர்களுக்கு அல்லாஹ் செய்த அருள் என்றும் இவ்வசனங்கள் கூறுகின்றன. யாருக்காவது சந்தேகம் இருந்தால் அவரைக் கவனித்து அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் சிந்தித்துப் பார்க்கட்டும். அவருக்கு எந்த வகையான மனநோயும் இல்லை என்று அறிந்து கொள்வார்கள் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் அறைகூவல் விடுக்கிறான்.

இவர்களுக்கு மரண அடியாக அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

“நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் “உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை: கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன்” எனக் கூறுவீராக!

(திருக்குர்ஆன்:34:46.)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அவர்கள் மனநோயாளியாக ஆனார்கள் என்று சொல்பவர்களே! ஒவ்வொருவராக வந்து, அல்லது இருவர் இருவராக வந்து முஹம்மது நபியைச் சோதித்துப் பாருங்கள். ஒவ்வொருவரும் அவரிடம் எந்த வகையான கேள்வியையும் கேட்டுப் பாருங்கள். அவர் மனநோயாளி போல் பதில் சொல்கிறாரா? மாமேதை போல் பதில் சொல்கிறாரா? என்று சோதித்துப் பார்த்தால் அவருக்கு எந்த வகையான மனநோயும் இல்லை என்று அறிந்து கொள்வீர்கள் என்று அல்லாஹ் அறைகூவல் விடுக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதால் அவர்கள் மனநோயாளியானார்கள் என்ற செய்தி கட்டுக்கதை என்பதற்கு இந்த ஒருவசனமே போதிய ஆதாரமாக உள்ளது.

யூதர்கள் எப்படியாவது இஸ்லாத்தை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும் அதற்குப் பயன்படுத்தத் தயாராக இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறு மாத காலம் மனநோயாளியாக இருந்தார்கள் என்றால், அந்த மனநோய் யூதர்களின் மந்திர சக்தியால் ஏற்பட்டது என்றால் இந்த வாய்ப்பை அவர்கள் ஒருக்காலும் நழுவ விட்டிருக்க மாட்டார்கள்.

நாங்கள் உங்களது இறைத்தூதரை எப்படி ஆக்கிவிட்டோம் பார்த்தீர்களா? இன்னுமா அவரை இறைத்தூதர் என்று நம்புகிறீர்கள்? என விமர்சித்திருப்பார்கள். இப்படி ஒருவர் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விமர்சிக்கவில்லை.

இப்படி நாம் கேள்வியெழுப்பினால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கருத்துடையோர் இதற்கும் ஒரு பதிலைச் சொல்லி நபியவர்களை மனநோயாளியாகக் காட்டியே தீர்வது என்பதில் குறியாக உள்ளனர். நபியவர்களுக்கு ஏற்பட்ட மனநோய் மனைவிமார்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருந்தது. மக்களில் யாருக்கும் தெரியாததால் இது போன்ற விமர்சனம் வரவில்லை என்கிறார்கள்.

சூனியம் வைத்து மனநோயாளியாக ஆக்கினானே அந்த யூதனுக்குக் கூடவா தெரியாமல் போய் விட்டது? அவன் தனது கூட்டத்தாரிடம் சொல்லி பெருமையடித்து இருக்க மாட்டானா? இதைக் கூட அறியாத ஞானசூன்யங்களாக மாறி இக்கேள்வியைக் கேட்கிறார்கள்.

பொதுவாக தலைவர்களுக்கு அதிகமான பாதுகாப்பு கொடுக்கப்படுவது உலகத்தில் வழக்கம். மக்கள் அவர்களை எளிதில் அணுக முடியாது. இந்த நிலையில் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்தால் அதை மக்களுக்குத் தெரியாமல் மறைக்க முடியும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதுபோல் மக்களால் அணுக முடியாத நிலையில் இருந்தார்களா? நிச்சயமாக இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள். தினமும் ஐந்து வேளைத் தொழுகைக்கும் பள்ளிவாசலுக்கு வருவார்கள். யார் வேண்டுமானாலும் அவர்களைச் சந்திக்கலாம். முனாபிக்குகள் கூட பள்ளிவாசலுக்கு வந்து தொழக் கூடியவர்களாக இருந்தனர்.

இப்படியிருக்கும் போது இந்த ஆறுமாத பாதிப்பு மக்கள் அனைவரையும் எளிதில் சென்றடைந்திருக்கும். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட மனநோய் மக்களுக்குத் தெரிந்திருக்கும்.

இதற்கு முன்பு ஆதாரமில்லாமல் தான் முஹம்மது நபியைப் பைத்தியம் என்று சொன்னோம். இப்போது அவர்களின் மனைவியே சொல்லி விட்டார்கள் என்று ஆட்டம் போட்டிருக்க மாட்டார்களா? மக்களை இஸ்லாத்திற்கு வராமல் தடுக்க முயற்சித்திருக்க மாட்டார்களா? இஸ்லாத்தில் உள்ள மக்களில் சிலராவது மீண்டும் பழைய நிலைக்கே சென்றிருப்பார்களே?

இது போன்று எந்தச் செய்தியும் எந்த நூலிலும் பதிவு செய்யப்படவில்லை.

குர்ஆனை நாமே இறக்கினோம். நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

(பார்க்க – 15:9)

குர்ஆனைப் பாதுகாப்பது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் உள்ளம் சிதைந்து விட்டது என்று சொன்னால் செய்திகளும் சிதைந்து விடும். அப்போது குர்ஆனைப் பாதுகாப்பதாக இறைவன் சொன்னதில் இது சந்தேகத்தை ஏற்படுத்தும்.

மாபெரும் அற்புதமாகத் திகழும் திருக்குர்ஆன் மீது எத்தகைய சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் எனக்குக் கவலை இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகவும், அதனால் அவர்கள் மனநோயாளியாக ஆனதாகவும் நம்ப முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் செய்து அவர்களை மனநோயாளியாக ஆக்கி விட்டார்கள் என்று அறியும் முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தை ஏற்பார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட அற்புத சக்தி பெற்ற யூதர்களிடம் செல்வார்களா?

ஒரு தந்தை தனது சொத்தை ஒரு மகனுக்கு எழுதி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது மற்ற மகன்கள் தனது தந்தைக்குப் பைத்தியம் பிடித்து இருந்த போது தான் எழுதிக் கொடுத்தார் என்று ஒரு ஆதாரத்தை உருவாக்கி நீதிமன்றம் நம்பும் வகையில் எடுத்து வைத்தால் அந்த மகனுக்கு சொத்தை எழுதி வைத்தது செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்படும்.

உலக நாடுகள் அனைத்திலும் இதுதான் சட்டம். முஸ்லிம் நாடுகளிலும் இதுதான் சட்டம்.

பைத்தியம் என்ற நிலையை ஒருவர் அடைந்தால் அவரது எல்லா கொடுக்கல் வாங்கலும் செல்லத் தகாததாக ஆகிவிடுகிறது. சொத்து விஷயங்களில் சரியாக இதைப் புரிந்து வைத்திருக்கும் நாம் மார்க்க விஷயத்தில் மட்டும் மூளையை அடகு வைத்து விட்டு ஏறுக்கு மாறாகச் சிந்திப்பது சரிதானா?

குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதையும் நான் நம்புவேன். பாதுகாக்கப்படவில்லை என்பதையும் நம்புவேன் என்று ஒருவன் கூறமுடியுமா?

அல்லாஹ்வைப் போல் எவனும் எந்த விஷயத்திலும் செயல்பட முடியாது என்றும் நம்புவேன். அவ்வாறு சூனியக்காரன் மட்டும் செயல்படுவான் என்றும் நம்புவேன் என்று அறிவுள்ள யாராவது சொல்வார்களா?

திருக்குர்ஆன் மீது அதிகளவு நம்பிக்கை வைத்திருப்பவனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிக அளவு மரியாதை வைத்திருப்பவனும் அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று எப்படி நம்புவான்?

இப்படி நாம் கேட்கும் போது சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கொள்கையுடையோர் எதிர்க்கேள்வி ஒன்றை எழுப்புவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறதி இருந்திருக்கிறது. மறதியின் காரணமாக குர்ஆன் வசனங்களை மறந்திருக்க மாட்டார்களா என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி கேட்க மாட்டார்களா? இதன் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்படவில்லை என்று சொல்வீர்களா? என்பது தான் அந்த எதிர்க்கேள்வி.

ஒருவருக்குப் பைத்தியம் பிடிப்பதும், சில விஷயங்களை ஒருவர் மறந்து விடுவதும் இவர்களுக்குச் சமமாகத் தெரிகின்றது. மறதி என்பது உள்ளதில் குறைவு ஏற்படுத்துவது. மனநோய் என்பது இல்லாததை இருப்பதாகக் கூறுவது.

இத்தகைய மனநோய் தான் நபியவர்களுக்கு ஏற்பட்டது என்று சூனியக் கட்சியினர் கூறுகிறார்கள். வஹீ வராமல் இருந்து வஹீ என்று சொல்லி இருப்பார்கள் என்பது மறதியைப் போன்றதா?

மறதி ஏற்பட்டால் அல்லாஹ்வின் வசனங்களில் எது நமக்கு சேர வேண்டும் என அல்லாஹ் நாடினானோ அது வந்து சேர்ந்து விடும்.

மனநோய் என்பது அல்லாஹ் சொல்லாமல் இருந்தும் அல்லாஹ் சொன்னதாக நபியவர்களுக்குத் தோன்றி அதைக் குர்ஆன் என்று சொல்லி இருக்கலாம் என்று ஒவ்வொரு வசனத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்பட்டால் இப்போது குர்ஆனில் உள்ள எந்த வசனத்திலும் சந்தேகம் வராது.

இந்த வித்தியாசத்தை இவர்கள் உணர வேண்டும். இதை அல்லாஹ்வும் தெளிவாக கூறுகிறான்.

2:106 வசனத்தில் எந்த வசனத்தையாவது நாம் மாற்றினால் அல்லது மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததை அருளுவேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி சிலதை மறந்து விட்டால் அவர்கள் மறக்காமல் எதை மக்கள் மத்தியில் வைத்தார்களோ அதுதான் குர்ஆன் என்று இவ்வசனம் தெளிவாகக் கூறுகிறது. அவர்கள் மக்களிடம் சொல்லாதது குர்ஆன் அல்ல என்று கூறுவதில் எந்தக் குழப்பமும் இல்லை.

சூனியம் செய்யப்பட்டதை மறுக்கும் திருக்குர்ஆன்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், முந்தைய நபிமார்களும் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொன்னபோது, அதை ஏற்க மறுத்த எதிரிகள் சொன்ன காரணங்கள் என்ன?

சாப்பிடுகிறீர்கள்,

பருகுகிறீர்கள்,

எங்களைப் போல் மனிதர்களாக இருக்கிறீர்கள்,

நீங்கள் சோதிடக்காரர்கள்

திறமை வாய்ந்த புலவர்கள்

உங்களுக்கு யாரோ சூனியம் வைத்ததால் இப்படி புத்தி பேதலித்து உளறுகிறீர்கள் என்று சொன்னார்கள்.

இவர்களின் மற்ற விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் நபிமார்களுக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவதையும், சோதிடக்காரர், புலவர் என்று கூறுவதையும் கடுமையான சொற்களால் மறுக்கிறான். இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

17:94, 21:3, 23:33, 23:47, 25:7, 26:154, 26:186, 36:15 ஆகிய வசனங்களில் நபிமார்கள் எங்களைப் போன்ற மனிதர்களாக உள்ளனர். அவர்களை எப்படி இறைத்தூதர்கள் என்று நாங்கள் நம்ப முடியும் என மக்கள் கேட்டதை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

மக்கள் இப்படிக் கூறியதற்கு அல்லாஹ் பதில் கூறும்போது, அவர்களை மனிதர்கள் என்று எப்படி சொல்லலாம் என்று கண்டிக்கவில்லை. மாறாக அவர்கள் மனிதர்கள் தான். மனிதர்களைத் தான் தூதர்களாக அனுப்புவோம் என 14:11, 17:93, 22:7,8, ஆகிய வசனங்களில் பதிலளித்தான்.

சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புபவர்களாக மக்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கம், நரகம் போன்றவற்றை மக்களுக்குச் சொன்னபோது அது அவர்களின் அறிவுக்கு எட்டாமல் இருந்ததால் இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறினார்கள்.

நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று சொல்லப்பட்ட போதும், நபிமார்களுக்கு மனநோய் ஏற்பட்டது என்று சொல்லப்பட்ட போதும் அல்லாஹ் அதைக் கடுமையாக மறுக்கிறான்.

“சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள்” என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

(திருக்குர்ஆன்:17:47.)

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?” என்றும் “சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

(திருக்குர்ஆன்:25:8 272 273.)

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது” என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன.

“இறைத்தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விஷயம்: அதனால் அவரது தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.

இறைத்தூதர் சாப்பிடுகிறார்: குடிக்கிறார் என்று விமர்சனம் செய்யப்பட்ட போது, சாப்பிடுவதாலோ, குடிப்பதாலோ தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத்தான் செய்தார்கள் என்று பதிலளித்தான்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது, அநியாயக்காரர்கள் இப்படிக் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத்தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப்பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான்.

“இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?” என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும்.

பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்குச் சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை.

மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.

(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழிகெட்டு விட்டனர். அவர்கள் நேர்வழி அடைய இயலாது.

(திருக்குர்ஆன்:25:9.)

உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழிகெட்டனர். அவர்கள் நேர்வழியை அடைய இயலாது.

(திருக்குர்ஆன்:17:48.)

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்” என்று விமர்சனம் செய்தவர்களை வழிகெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். அவர்கள் நேர்வழியை அடைய இயலாது என்றும் கூறுகிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின்படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது என்பது உறுதியாகிறது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் கட்டுக்கதைகள் என்பதில் சந்தேகம் இல்லை.

சூனியத்தை மறுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சூனியத்தை நம்பக்கூடாது தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

நூல் : அஹ்மது (26212)

சூனியத்தை ஒருவன் நம்பினால் அவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்பதைத் தெளிவான முறையில் இந்த நபிமொழி சொல்கிறது. எந்த வியாக்கியானமும் கொடுக்க முடியாத வகையில் இதன் வாசக அமைப்பு அமைந்துள்ளது.

இந்த ஹதீஸ் வேறு சில வழிகளில் வருகின்றது. அந்தச் செய்திகளெல்லாம் பலவீனமானவை.

ஆனால் முஸ்னத் அஹ்மதில் (26212) பதிவு செய்யப்பட்ட மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது.

சூனியத்தை நம்புபவன் என்றால் அதன் சரியான பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சூனியம் என்ற ஒரு பித்தலாட்டம் இருக்கிறது என்பதை நாமும் நம்புகிறோம். இந்த ஹதீஸ் அதைக் கூறவில்லை. சூனியத்தால் தாக்கம் ஏற்படும் என்று நம்புவதையே இது குறிக்கிறது.

இதே அமைப்பில் கூறப்பட்ட பின்வரும் நபிமொழியில் இருந்து இதன் பொருளை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஸைத் பின் காலித் அல்ஜூஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர். அப்போது “என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். “அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்கள் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர்.

இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்கள் என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்’ என இறைவன் கூறினான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி – 1038

இந்த ஹதீஸில் நட்சத்திரத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று சொல்லப்படுகின்றது. நட்சத்திரம் ஒன்று உள்ளது என்று நம்பினால் அது தவறல்ல. அதை இந்த நபிமொழி மறுக்கவில்லை. மாறாக நட்சத்திரத்தால் மழை பெய்யும் என்றும், எதிர்கால விசயங்களை அதன் மூலம் கணிக்க முடியும். அதனால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்றும் நம்புவதை இந்த ஹதீஸ் மறுக்கின்றது.

யாராவது இந்த அடிப்படையில் நட்சத்திரத்தை நம்பினால் அவன் அல்லாஹ்வை நம்பவில்லை. நட்சத்திரத்தையே நம்பிக்கை கொண்டுள்ளான். சூனியத்தை இப்படி ஒருவன் நம்பினால் சொர்க்கம் செல்ல முடியாது. சூனியத்தால் தாக்கம் ஏற்படும் என்று சொல்பவர்களுக்கு மரண அடியாக இந்த ஹதீஸ் உள்ளது.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்று இந்த வாசகம் மற்ற குர்ஆன் வசனங்களுக்கு ஏற்ப மிகத் தெளிவாக அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல்

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றமாக அமைந்துள்ளது. எனவே அது எப்படி என்று பார்ப்போம்.

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். இரண்டு கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ, மூன்று கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ நம்புவது தான் இணைகற்பித்தல் என்று சிலர் நினைக்கின்றனர். இதுவும் இணைகற்பித்தல் தான் என்றாலும் இணைகற்பித்தல் இதை விட விரிவான அர்த்தம் கொண்டதாகும்.

அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவனாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.

இதை 36:78, 42:11, 112:4 ஆகிய வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வைப் போல் கேட்பவன் இல்லை. அவனைப் போல் பார்ப்பவன் இல்லை. அவனைப் போல் செயல்படுபவன் இல்லை என்பது இவ்வசனங்களின் கருத்தாகும். உதாரணமாக நமக்கு கேட்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் கேட்கும் திறன் உள்ளது. ஆனால் நமக்கு உள்ள கேட்கும் திறன் அல்லாஹ்வுக்கு உரிய கேட்கும் திறன் போல் உள்ளது என்று நம்பலாமா? அப்படி நம்பினால் அது அல்லாஹ்வுக்கு இணையாக மனிதனைக் கருதியதாக ஆகும்.

அல்லாஹ்வின் கேட்கும் திறன் எல்லையில்லாதது. நமது கேட்கும் திறன் எல்லைக்கு உட்பட்டதாகும். ஒரு நேரத்தில் ஒருவன் பேசுவதைத் தான் நாம் கேட்க முடியும். சில பயிற்சிகள் மூலம் மேலும் ஒன்றிரண்டு செய்திகளைக் கூடுதலாகக் கேட்க முடியும். ஆனால் உலகில் உள்ள எழுநூறு கோடி மக்களும் ஒரு நேரத்தில் அல்லாஹ்விடம் ஒரு கோரிக்கை வைத்தால் அவை அனைத்தையும் அதே நேரத்தில் அல்லாஹ் கேட்பான்.

சமாதிகளை வழிபடுவோர், மகான்கள் என்று தாங்கள் கருதியவர்களை அழைக்கிறார்கள். அவ்லியாவே எங்களுக்கு இதைத் தாரும் என்று பல ஊர்களில் இருந்து ஒரே நேரத்தில் அழைக்கிறார்கள். அவரால் இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முடியுமா என்பது ஒரு புறமிருக்கட்டும்.

அனைவரது கோரிக்கைகளையும் அவர் அதே நேரத்தில் செவிமடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் அவரை அழைக்கிறார்கள். அப்படியானால் அந்த மகான் ஒரு நேரத்தில் எத்தனை பேருடைய அழைப்பையும் கேட்க வல்லவர் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது. இது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒருவரது அழைப்பை நாம் செவிமடுக்க வேண்டுமானால் அவருக்கும், நமக்கும் குறிப்பிட்ட இடைவெளி இருந்தால் தான் கேட்க முடியும். அதிக தூரத்தில் இருந்து கொண்டு ஒருவர் பேசுவதை நாம் கேட்க முடியாது.

ஒருவர் பேசுவதை நாம் செவிமடுக்க வேண்டுமானால் அந்தப் பேச்சைக் கடத்தக் கூடிய காற்று இருக்க வேண்டும். அல்லது மின் அலைகள் இருக்க வேண்டும். அவர் பேசும் ஒலி குறிப்பிட்ட டெசிபலில் இருக்க வேண்டும். அதை விடக் குறைவாக இருந்தால் நாம் கேட்க முடியாது. ஆனால் அல்லாஹ்வுக்கு இது போன்ற பலவீனங்கள் இல்லை.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எவ்வளவு குறைந்த சப்தத்தில் அழைத்தாலும் அனைத்தையும் ஒருவர் கேட்பார் என்று நாம் நம்பும் போது, அவருடைய கேட்கும் திறன் அல்லாஹ்வின் கேட்கும் திறனுக்குச் சமமாக ஆக்கப்படுவதால் இதை இணைகற்பித்தல் என்று சொல்கிறோம்.

பார்த்தல் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். மனிதர்களாகிய நமக்கும் பார்க்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் பார்க்கும் திறன் உள்ளது. ஆனால் அல்லாஹ்வின் பார்க்கும் திறன் போல் ஒரு மனிதனுடைய பார்க்கும் திறன் உண்டு என்று நம்பினால் அது இணைகற்பித்தலாகும்.

குறிப்பிட்ட தொலைவில் இருந்தால் தான் நாம் பார்க்க முடியும். வெளிச்சம் இருந்தால் தான் பார்க்க முடியும். எந்தத் தடுப்பும் இல்லாமல் இருந்தால் தான் பார்க்க முடியும். ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் தான் பார்க்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் பார்க்கும் திறனுக்கு எந்த எல்லையும் இல்லை.

இந்த மனிதர் எவ்வளவு தொலைவில் உள்ளதையும் பார்ப்பார். எத்தனை தடுப்புகள் இருந்தாலும் அதையும் கடந்து இவர் பார்ப்பார் என்று நம்பினால் அந்த மனிதரை அல்லாஹ்வைப் போன்றவராக நாம் கருதியவர்களாக ஆவோம்.

இஸ்லாத்தை ஏற்காத மக்காவாசிகள் அல்லாஹ் அல்லாத பல குட்டித் தெய்வங்களை வணங்கி வந்தனர். அதே நேரத்தில் எல்லா ஆற்றலும், அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உள்ளது என்றும் அவர்கள் நம்பினார்கள். ஆனாலும் அவர்களை இணைவைத்தவர்கள் என்று தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

10:31, 23:84,85, 23:86,87, 23:88,89, 29:61, 29:63, 31:25, 39:38, 43:9, 43:87 ஆகிய வசனங்கள், இஸ்லாத்தை ஏற்காத மக்காவாசிகள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

தமது குட்டித் தெய்வங்கள் அல்லாஹ்விடம் பரிந்து பேசி எங்களுக்கு உதவுவார்கள் என்பது தான் மக்காவில் இருந்த முஸ்லிமல்லாதாவர்களின் நம்பிக்கையாக இருந்தது என்பதை 10:18, 39:3 வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. இறைவனின் ஆற்றல் தங்களின் குட்டித் தெய்வங்களுக்கு இல்லை என்று ஒரு புறம் நம்பிக்கொண்டு மற்றொரு புறம் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தக் குட்டித் தெய்வங்களுக்கு உண்டு என்று அவர்கள் நம்பினார்கள்.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பது தான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணைவைத்தலாகும். எந்த ஒரு பண்பாவது அல்லாஹ்வுக்கு இருப்பது போல் மற்றவருக்கும் உள்ளது என்று நம்பினால் அதுவும் இணைகற்பித்தல் என்பதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு சூனியத்தைப் பற்றி ஆராய்வோம்.

பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல் என்ற தன்மை அல்லாஹ்வுக்கு உண்டு. மனிதர்களுக்கும் உண்டு. அல்லாஹ் ஒரு மனிதனின் காலை முறிக்க நினைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பெரிய அரிவாளை எடுத்து வந்து அந்த மனிதனின் காலை அல்லாஹ் வெட்ட மாட்டான். அந்த மனிதனைத் தொடாமலே, எந்தக் கருவியையும் பயன்படுத்தாமலே முறிந்து போ என்பான். அது முறிந்து விடும்.

ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலை முறிக்க நினைத்தால் அரிவாளையோ, உருட்டுக் கட்டையையோ எடுத்து வந்து காலைத் தாக்கியே முறிக்க முடியும்.

அல்லாஹ் ஒருவனை மனநோயாளியாக ஆக்க நினைத்தால் மனநோயாளியாக ஆகு என்பான். உடனே அந்த மனிதன் மனநோயாளியாக ஆகிவிடுவான். ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மனநோயாளியாக ஆக்க நினைத்தால் அதற்குரிய மாத்திரைகளை அல்லது மருந்தை அவனுக்குள் செலுத்தி, அல்லது மூளை சிதையும் அளவுக்கு தலையில் தாக்கி மனநோயாளியாக ஆக்க முடியும்.

இந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது. அவன் எதைச் செய்ய நாடுகிறானோ ஆகு என்பான்: உடனே ஆகிவிடும் என்று அல்லாஹ் 2:117, 3:47, 3:59, 6:73, 16:40, 19:35, 36:82, 40:68, ஆகிய வசனங்களில் தெளிவுபடக் கூறுகிறான்.

ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. ஆனால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர் சூனியக்காரனை எந்த இடத்தில் வைக்கிறார்கள்?

சூனியக்காரன் கட்டையால் அடித்து காலை முறிப்பான் என்று நம்புவதில்லை. அல்லாஹ்வைப் போல் ஆகு என்று கட்டளையிட்டு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று தான் நம்புகிறார்கள். சூனியக்காரன் எந்த மருந்தையும் செலுத்தாமல் ஆகு எனக் கூறி ஒருவனைப் பைத்தியமாக ஆக்க வல்லவன் என்று நம்புகிறார்கள்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கவலைப்படுத்த, காயப்படுத்த உலகில் எந்த வழிமுறைகள் உள்ளனவோ அவற்றில் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலமாக ஒருவன் மற்றவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.

உதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கத்தியால் குத்தலாம். அல்லது இருவருமே கத்தியால் குத்திக் கொள்ளலாம். இதனால் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பாதிப்பு ஏற்படும். இது போன்று ஒருவருக்கொருவர் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

ருவர் இன்னொருவரைத் திட்டுகின்றார்: அல்லது அவதூறு சொல்கின்றார் என்றால், யாரைத் திட்டுகின்றாரோ அல்லது அவதூறு சொல்கின்றாரோ அவரைக் கவலையடையச் செய்யலாம். இது போன்ற வழிகளில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதைச் செய்வதற்காக தனியாக கற்றுத்தேறும் அவசியம் இல்லை. யாருக்கு எதிராகவும் யாரும் இதைச் செய்ய முடியும்.

உலகத்தில் மனிதர்கள் சக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் எந்த வழிமுறையை ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிமுறைகள் தவிர மற்ற அனைத்து வழிமுறைகளும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை.

சூனியம் செய்வதாகக் கூறிக் கொள்பவனிடம் போய் ஒருவருக்குச் சூனியம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் பாதிப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய நபரைத் தொடாமல், அருகில் வராமல், அவரைப் பார்க்காமல் எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவான் என்று நம்புகின்றனர்.

யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவரின் சட்டை, வியர்வை, காலடி மண், தலைமுடி, சிறுநீர் போன்றவற்றை வைத்துக் கொண்டு அதனை பொம்மை போல் செய்து பாதிப்பு ஏற்படுத்த வேண்டியவரின் பெயரை அந்தப் பொம்மைக்கு வைத்து அந்த பொம்மையின் வயிற்றில் குத்தினால் அவரது வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படும். அந்தப் பொம்மையின் கண்ணைக் குத்தினால் இவரின் கண்ணுக்குப் பாதிப்பு ஏற்படும். இது தான் சூனியம் என்று மக்கள் நம்புகின்றனர்.

உடலுக்கு மட்டுமின்றி மனதிலும் பாதிப்பை ஏற்படுத்த சூனியக்காரனால் இயலும் என்று நம்புகின்றனர். ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்த எந்த வழிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளானோ அவற்றில் எந்த ஒன்றையும் சூனியக்காரன் செய்ய மாட்டான். கணவன் மனைவியைப் பிரிக்க பணம் கொடுத்தால் சூனியக்காரன் பணத்தைப் பெற்றுக் கொண்டு எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டே கணவன் மனைவியைப் பிரித்து விடுவான் என்றும் மக்கள் நம்புகின்றனர்.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர், சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் திறன் படைத்தவன் என்று தான் நம்புகிறார்கள்.

எனவே லபீத் என்ற யூதன் மந்திர சக்தியால் நபிகள் நாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தினான் என்று நம்புவது அவனுக்கு அல்லாஹ்வின் தன்மை உள்ளது என்று சொல்லாமல் சொல்வதாகும். எனவே நபிகள் நாயகத்துக்கு சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் கட்டுக் கதைகள் என்பதில் சந்தேகம் இல்லை.

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் வகையில் இந்த நம்பிக்கை இருந்தாலும் தங்கள் நம்பிக்கையை நியாயப்படுத்த சில ஆதாரங்களைக் காட்டுகிறார்கள். சில எதிர்வாதங்களையும் வைக்கிறார்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சூனியக்காரன் தனது சுயமான ஆற்றலால் இப்படிச் செய்யவில்லை. அல்லாஹ் அவனுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்துள்ளதால் தான் அப்படிச் செய்ய முடிகிறது. இது எப்படி இணைவைத்தலாகும்? என்பது தான் அவர்களின் முதல் ஆதாரம்.

இந்த வாதத்தைப் பார்க்கும் போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அல்லாஹ் மனிதனுக்கு ஏராளமான ஆற்றலைக் கொடுத்து இருந்தாலும் ஒருக்காலும் தனக்கு இருப்பது போன்ற ஆற்றலை யாருக்கும் கொடுக்க மாட்டான். எனக்கு இணை இல்லை என்று அல்லாஹ் சொல்வதில் இது அடங்கியுள்ளது.

திருக்குர்ஆன் 17:111, 25:2 ஆகிய வசனங்கள் இதைத் தெளிவாகச் சொல்கின்றன.

தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் யாருக்கும் அல்லாஹ் கொடுக்க மாட்டான் என்பதை அழகான உதாரணத்தின் மூலம் அல்லாஹ் மேலும் விளக்குவதைப் பாருங்கள்.

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

(திருக்குர்ஆன்:16:71.)

அல்லாஹ் மனிதர்களுக்கு எந்த அளவு ஆற்றலை அளிப்பான் என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அதாவது தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் அல்லாஹ் யாருக்கும் கொடுக்கவே மாட்டான் என்பதுதான் அந்த அடிப்படை.

இந்த அடிப்படையை விளங்கிக் கொண்ட யாரும் தன்னைப் போன்று செயல்படும் ஆற்றலை அல்லாஹ் சூனியக்காரனுக்கு வழங்குவான் என்று சொல்லவே மாட்டார். இந்த மனிதன் குழந்தையைக் கொடுப்பான்: ஆனால் அவனாகக் கொடுப்பதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றல் மூலம் இதைச் செய்கிறான் என்று சொல்லி விட்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒருவன் சூரியனை வணங்குகிறான். சூரியனுக்குச் சுயமான ஆற்றல் இல்லை. ஆனால் அல்லாஹ் சூரியனுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா? இஸ்லாத்தை ஏற்காத மக்காவாசிகளும் அல்லாஹ்வை நம்பினார்கள். அத்துடன் வேறு சிலரையும் வணங்கி வந்தனர்.

இவ்வாறு மற்றவர்களை வணங்கும்போது அவர்களெல்லாம் கடவுள்கள் என்ற நம்பிக்கையோ, அவர்களுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கையோ அவர்களிடம் இருக்கவில்லை. எனவே இது இணைகற்பித்தலில் சேராது என்று வாதிட்டு அவர்களும் இதே நியாயத்தைத் தான் சொன்னார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை முன்னர் தெளிவுபடுத்தியுள்ளோம்.

சூனியம் உண்மையென்றால் செய்து காட்ட வேண்டும்

மறைவான விஷயங்களை அல்லாஹ் சொல்லிவிட்டால் அதனை நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். மலக்குகள், வனவர்கள், ஜின்கள், ஷைத்தான்கள், சொர்க்கம், நரகம் மீண்டும் உயிர்ப்பித்தல் என அல்லாஹ் பல விஷயங்களைக் கூறுகின்றான்.

இதனைச் சோதனைக்கு உட்படுத்தாமல் அனைத்து முஸ்லிம்களும் நம்புகின்றோம். ஏனென்றால் இது சோதித்து அறியும் விஷயம் அல்ல. அல்லாஹ் சொல்லிவிட்டான் என்ற ஒரே காரணத்திற்காக நம்புகின்றோம். ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்படும் விஷயங்களும் உள்ளன. அவற்றைச் சோதித்துப் பார்த்து அது உண்மையா? பொய்யா என்று ஆராய வேண்டும். குருட்டுத்தனமாக நம்பக் கூடாது.

உதாரணமாக வழுக்கையான ஒருவனுக்கு இந்த எண்ணையைத் தேய்த்தால் முடி வளர்ந்துவிடும் என்று சொன்னால் இதனை சோதனைக்கு உட்படுத்திய பின்னரே நாம் நம்ப வேண்டும். இணை கற்பித்தல் என்ற பிரச்சனை வரும்போது அதைச் சோதித்துப் பார்த்துத் தான் அறிய வேண்டும்.

சூனியக்காரனுக்கு சக்தி இருப்பதாகச் சொன்னால் இப்போதே இதனை சோதனைக்கு உட்படுத்தி பார்க்க முடியும். ஏனெனில் இணைவைத்தலுக்கு எதிராக அல்லாஹ் இந்த வழிமுறையைத் தான் நமக்குக் கற்றுத் தருகிறான்.

“அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன?” என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.

(திருக்குர்ஆன்:35:40.)

“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (முஹம்மதே!) கேட்பீராக!

(திருக்குர்ஆன்:46:4.)

அல்லாஹ்வைப் போல் ஒருவனுக்கு சக்தி உண்டா என்ற பிரச்சனை வந்தால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கேட்பது தான் அல்லாஹ் கற்றுத் தரும் வழிமுறையாகும். சூனியக்காரனுக்கு ஆற்றல் இருந்தால் அதை நிரூபித்துக் காட்டு என்று கேட்பதும், அவ்வாறு நிரூபிக்க இயலவில்லை என்று தெரியும்போது அது பொய் என்று அறிந்து கொள்வதும் இஸ்லாம் காட்டும் வழிமுறையாகும்.

சூனியம் வைக்கும் ஒருவனைக் காட்டுங்கள். நாங்கள் சொல்வதை அவன் செய்யட்டும். அல்லது அவன் தனக்கு என்ன சக்தி இருப்பதாகச் சொல்கின்றானோ அதனைச் செய்து காட்டட்டும் என்று கேட்டால் எவனும் முன்வருவதில்லை. அல்லாஹ் கூறுகின்றான்.

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணைகற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது. (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொருத்த வரை சமமானதே!

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? “உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!” என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன்:7:191- 195.)

சிலைகளுக்கு கைகால்களை அமைத்து அந்தக் கைகளால் அவை மனிதனின் தேவைகளை நிறைவேற்றும் என்று சொல்கிறார்கள். இது எங்கள் நம்பிக்கை என்றும் சொல்கிறார்கள். இதை அல்லாஹ் ஏற்கவில்லை. அந்தக் கைகளால் எதையாவது பிடித்துக் காட்டட்டும். அந்தக் கால்களால் நடந்து காட்டட்டும் என்று கூறி இணைவைப்புக்கு எதிராக நாம் எடுக்க வேண்டிய நிலையை அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு! நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம். யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும் சூனியத்தை நம்புபவர்கள் அறிவு கெட்டவர்களாக இருந்து கொண்டு அறிவுப்பூர்வமாக பேசுகின்றவர்களை கேவலமாகச் சித்தரிக்கின்றனர்.

இஸ்லாத்தில் தர்க்கம் செய்து அறிவார்ந்த முறையில் தான் பேச வேண்டும். இதோ ஹூது நபி விட்ட அறைகூவலைப் பாருங்கள்.

“எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்” என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). “நான் (இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்: நீங்களும் சாட்சியாக இருங்கள்! அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்: எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!” என்று அவர் கூறினார்.

(திருக்குர்ஆன்:11:54, 55.)

ஹூது நபி சொன்னது போல் நாங்கள் சொல்கிறோம். சூனியக்காரனுக்கு ஒரு ஆற்றலும் இல்லை. அப்படி இருந்தால் எனக்குச் செய்து காட்டு என்று அறைகூவல் விடுக்கிறோம். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(திருக்குர்ஆன்:7:194.)

சிலைகளுக்கு ஆற்றல் உண்டு என்று சொன்னால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கேட்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் கற்றுத்தருகிறான் என்று சிந்தியுங்கள். இணைகற்பித்தல் என்ற பிரச்சனை வந்தால் அதற்கான தீர்வு அதை நிரூபித்துக் காட்டச் சொல்வது தான். சூனியமும் இணை கற்பித்தல் என்ற என்ற நிலையில் இருப்பதால் அதையும் சோதனைக்கு உட்படுத்துவது தான் சரியான வழிமுறை.

முஸ்லிம் பெயர்தாங்கிகளும் சூனியக்காரர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆற்றல் இருந்தால் உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லிம்களை அழித்து ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களுக்கு சூனியம் வைத்து சமுதாயத்துக்கு நல்லது செய்திருக்கலாமே?

முஸ்லிம் அல்லாதவர்களிலும் சூனியக்காரர்கள் உள்ளனர். இவர்களை நம் நாட்டு அரசியல்வாதிகள் பயன்படுத்தி யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்தத் தலைவரை ஊமையாக ஆக்கினால் போதுமே? அப்படி ஏதும் நடக்கக் காணோம். இதிலிருந்து சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பது தெளிவாகின்றது.

சூனியம் குறித்து எழுப்பப்படும் எல்லா கேள்விகளுக்கும் உரிய பதிலை அறிந்து கொள்ள பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எழுதிய “பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்” என்ற ஆய்வு நூலை படிக்கவும்.