Tamil Bayan Points

34) சூனியத்தை நம்பியவன் சுவர்க்கம் புகமாட்டான் என்ற செய்தி பலவீனமானதா?

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

Last Updated on August 11, 2022 by Trichy Farook

34) சூனியத்தை நம்பியவன் சுவர்க்கம் புகமாட்டான்

என்ற செய்தி பலவீனமானதா?

சூனியம் தொடர்பாக இடம் பெரும் செய்திகளில் எதிர் தரப்பினரின் போலி வாதங்களுக்கு பதிலாக அமைந்த தெளிவான ஒரு செய்தி தான் சூனியத்தை உண்மைப் படுத்தியவன் சுவனம் நுழைய மாட்டான் என்ற கருத்துப்பட பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியாகும்.

குறித்த செய்தி தமது சூனியக் கருத்துக்கு பலத்த அடியாக அமைந்திருக்கின்றது என்பதை புரிந்து கொண்ட சூனியக் கூட்டத்தினர் தற்போது குறித்த செய்தியையும் பலவீனம் என்று தட்டிக் கழித்து தப்பித்து விட முயற்சி செய்கின்றனர். சூனியத்தை உண்மைப் படுத்துபவன் தொடர்பான செய்தியின் அறிவிப்பாளர் தொடர் தொடர்பில் தற்போது அலசுவோம்.

(مسند أحمد – )
 حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ – 26212 سَِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ الَّلِ عَنْ أَبِي الدَّرْدَاءِ
«لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ، (وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ) وَلَا مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

நூல்: அஹ்மத்-27484 (26212)

சூனியத்தை ஒருவன் நம்பினால் அவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்பதைத் தெளிவான முறையில் இந்த நபிமொழி சொல்கிறது. எந்த வியாக்கியானமும் கொடுக்க முடியாத வகையில் இதன் வாசக அமைப்பு அமைந்துள்ளது. சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற இணைவைப்பை கொள்கையாகக் கொண்டவர்களுக்கு சவுக்கடி தரும் வகையில் இந்தச் செய்தி அமைந்துள்ளது.

சுலைமான் பின் உத்பா பலவீனமானவரா? சூனியத்தை உண்மை என்று நம்புபவன் சொர்க்கம் புகமாட்டான் என்ற நபிமொழி பின்வரும் அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது. நபியவர்களிடமிருந்து அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்களிடமிருந்து அபூ இத்ரீஸ் என்பார் அறிவிக்கின்றார். அபூ இத்ரீஸ் என்பாரிடமிருந்து யூனுஸ் இப்னு மய்ஸரா என்பார் அறிவிக்கின்றார்.

யூனுஸ் இப்னு மய்ஸரா என்பாரிடமிருந்து சுலைமான் பின் உத்பா என்பார் அறிவிக்கின்றார். சுலைமான் பின் உத்பா என்பாரிடமிருந்து அபூ ஜஃபர் அஸ்ஸ_வைதி என்பார் அறிவிக்கின்றார். அபூ ஜஃபர் அவர்களிடமிருந்து இமாம் அஹ்மத் இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்.

மேற்கண்ட அறிவிப்பாளர் தொடரில் உள்ள அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்கள் என்று ஏற்றுக் கொள்ளும் சூனியக் கட்சியினர் “சுலைமான் பின் உத்பா” என்ற அறிவிப்பாளர் மட்டும் பலவீனமானவர் என்று கூறித் திரிகின்றனர். ஆனால் இவர் பலவீனமானவர் அல்ல என்பதே உண்மை. இவர் நம்பகமானவர் என்று பலர் நற்சான்று அறிவித்துள்ளனர்.

துஹைம், அபூ ஹாதிம், அபூசுர்ஆ, ஹைஸம் பின் காரிஜா, ஹிசாம் பின் அம்மார், இப்னு ஹிப்பான், இப்னுஹஜர், தஹபீ ஆகியோர் நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர். ‘இவரை நான் அறியவில்லை” என்று இமாம் அஹ்மத் கூறியுள்ளார். பல அறிஞர்கள் ‘சுலைமான் பின் உத்பா” அவர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளதால் இமாம் அஹ்மத் அவர்களின் இந்தக் கூற்று ஏற்கத் தகுந்தது அல்ல என்பது நிரூபணமாகிவிட்டது. இமாம் யஹ்யா பின் மயீன் மட்டுமே இவர் தொடர்பாக ‘லைஸ பிஷையின்” என்றும் சில நூற்களில் ‘லா ஷைஉன்” என்றும் கூறியுள்ளார்.

இமாம் யஹ்யா பின் மயீன் ஒரு அறிவிப்பாளர் விசயத்தில் மேற்கண்ட வார்த்தைகளைக் கூறினால் அவர் பலவீனமானர் என்று நாம் எல்லா இடங்களிலும் முடிவு செய்ய முடியாது. யாராலும் குறைகூறப்படாத மிகக் குறைவான ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களைக் கூட இப்னு மயீன் அவர்கள் ‘லைஸ பி ஸையின்” (இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத்தக்கவரில்லை) என்று விமர்சித்துள்ளார்கள். இதனை இமாம் இப்னு ஹஜர் அவர் தமது ஃபத்ஹ_ல் பாரி என்ற நூலின் முன்னுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

(فتح الباري لابن حجر )
وَذكر بن الْقطَّان الفاسي أَن مُرَاد بن معِين بقوله فِ بعض الرِّوَايَات لَيْسَ بِشَيْء يَعْنِ أَن أَحَادِيثه قَليلَة جدا

 

இப்னு மயீன் அவர்கள் சில அறிவிப்பாளர்கள் தொடர்பாக ‘லைஸ பிஷையின்” என்று கூறினால் ‘அந்த அறிவிப்பாளரின் ஹதீஸ்கள் மிகக் குறைவானவை” என்ற கருத்தையே அவர் நாடுகிறார். இதனை இப்னுல் கத்தான் அல்பாஸி அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : ஃபத்ஹூல் பாரி முன்னுரை

சுலைமான் பின் உத்பா மிகக் குறைவான செய்திகளையே அறிவித்துள்ளார். இதன் காரணத்தினால்தான் இப்னு மயீன் அவர்கள் அவர் தொடர்பாக ‘லைஸ பிஷையின்” வாசகத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனவே” சுலைமான் பின் உத்பா” என்பாரை இப்னு மயீன் குறை கூறவில்லை என்பதே சரியான விளக்கமாகும். மேலும் “இவர் மறுக்கத்தக்க சில செய்திகளை அறிவித்துள்ளார்” என்று ஸாலிஹூல் ஜஸ்ரா அவர்கள் கூறுவதை வைத்து இவரை பலவீனமானவர் என்று கருத முடியாது.

ஏனெனில் எத்தனையோ உறுதியான அறிவிப்பாளர்கள் சில மறுக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளனர். அதனை வைத்து அவர்களை பலவீனமானவர்கள் என்று யாரும் முடிவு செய்யவில்லை. தற்கால அறிஞர்களில் ஒருவரான ‘ஷூஐப் அர்னாவூத்” அவர்கள் சுலைமான் பின் உத்பா அவர்கள் தனித்து அறிவித்தால் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். இது ஏற்கத் தகுந்த விமர்சனம் அல்ல.

ஏனெனில் சுலைமான் பின் உத்பா அவர்கள் மீது எந்த அறிஞரும் குறை கூறவில்லை. இந்நிலையில் அவர் தனித்து அறிவித்தால் ஏற்க முடியாது என்ற விமர்ச்சனம் ஏற்கத்தகுந்தது அல்ல என்பது தெளிவாகிறது. 

எனவே இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஹதீஸ் கலை விதிகளின் அடிப்படையில் ஸஹீஹ் என்ற முதல் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

சூனியத்தை நம்புவது என்றால் என்ன?

சூனியத்தை நம்புபவன் என்றால் அதன் சரியான பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சூனியம் என்று ஒரு பித்தலாட்டம் இருக்கிறது என்பதை நாமும் நம்புகிறோம். இந்த ஹதீஸ் அதைக் கூறவில்லை. சூனியத்தால் தாக்கம் ஏற்படும் என்று நம்புவதையே இது குறிக்கிறது.

அமைப்பில் கூறப்பட்ட பின்வரும் நபிமொழியில் இருந்து இதன் பொருளை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

حَدَّثَنَا عَبْدُ الَّلِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ صَالِِ بْنِ كَيْسَانَ عَنْ عُبَيْدِ الَّلِ بْنِ عَبْدِ الَّلِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الُْهَنِِّ

أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ الَّلِ صَلَّى الَّلُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَةَ الصُّبْحِ بِالُْدَيْبِيَةِ عَلَى إِثْرِ سََاءٍ كَانَتْ مِنْ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الَّلُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ الَّلِ وَرَحَْتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ

ஸைத் பின் காலித் அல்ஜூஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹூதைபியா’ எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹூத் தொழுகை தொழுவித்தார்கள்.-அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, ‘உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூ தருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று கூறினர். அப்போது ‘என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர்.

‘அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்’ என இறைவன் கூறினான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி – 1038

இந்த ஹதீஸில் நட்சத்திரத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று சொல்லப்படுகின்றது. நட்சத்திரம் ஒன்று உள்ளது என்று நம்பினால் அது தவறல்ல. அதை இந்த நபிமொழி மறுக்கவில்லை. மாறாக நட்சத்திரத்தால் மழை பெய்யும் என்றும் எதிர்கால விசயங்களை அதன் மூலம் கணிக்க முடியும். அதனால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்றும் நம்புவதை இந்த ஹதீஸ் மறுக்கின்றது.

யாராவது இந்த அடிப்படையில் நட்சத்திரத்தை நம்பினால் அவன் அல்லாஹ்வை நம்பவில்லை. நட்சத்திரத்தையே ஈமான் கொண்டுள்ளான். இது போல் சூனியத்தை நம்பினால் சொர்க்கம் செல்ல முடியாது.

சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பினாலே அவன் அல்லாஹ்விற்கு இணைவைத்து விட்டான். அவன் சுவனம் புகமுடியாது என்பதுதான் மேற்கண்ட நபிமொழியின் கருத்து என்பதை பின்வரும் ஹதீஸில் இருந்தும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

(مسند أحمد بن حنبل )
حدثنا عبد الله حدثني أبي ثنا يحيى عن عبيد الله بن الأخنس قال حدثنا الوليد – 2000 بن عبد الله عن يوسف بن ماهك عن بن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم قال :

ما اقتبس رجل علما من النجوم الا اقتبس بها شعبة من السحر ما زاد زاد تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح رجاله ثقات رجال الشيخين غير الوليد بن عبدالله

எவர் ஒருவர் நட்சத்திர ஜோசியத்திலிருந்து ஒரு கல்வியைக் கற்றுக் கொள்கிறாரோ அவர் அதன் மூலம் சூனியத்தின் ஒரு கிளையையே கற்றுக்கொண்டார். அதிகப்படுத்த வேண்டியதை அதிகப்படுத்திக்கொள்கிறார். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அஹ்மத் (2000)

ஏனெனில் நட்சத்திரத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவதே இணைவைத்தல் என்பதை முதலாவது நபிமொழியும், அந்த நட்சத்திர ஜோசியத்தை கற்பது சூனியம் என்பதை இரண்டாவது நபிமொழியும் தெளிவுபடுத்துகிறது.

நட்சத்திரத்தினால் பாதிப்புகள் ஏற்படுகிறது என்று நம்புவதினாலேயே ஒருவன் நட்சத்திர ஜோசியம் பார்க்கிறான். எனவே நட்சத்திர ஜோசியம் சூனியம் என்பதின் கருத்து “நட்சத்திரத்தினால் பாதிப்பு ஏற்படும்” என்று நம்புவதே. இதன் அடிப்படையில் சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் புகமாட்டான் என்பது “சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவதையே குறிக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் ஒருவன் “சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவதினாலேயே” சூனியக்காரனிடம் செல்கிறான். எனவே சூனியக்காரனிடம் சென்று சூனியம் வைப்பது கூடும் என்று நம்புபவனும் இணைவைப்பவன்தான். தஜ்ஜால் மூலம் நிகழும் அற்புதங்களை நாம் நம்பவில்லையா அது போன்றுதான் சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவதும். அவ்வாறு நம்பினால் இணைவைத்தால் ஆகாது என்று சிலர் வாதிக்கின்றனர்.

இது மிகவும் முட்டாள் தனமான வாதமாகும்.

தஜ்ஜால் இறைவனைப் போன்று அற்புதம் செய்வான் என்று நாம் நம்பிக்கை கொள்ளவில்லை. தஜ்ஜாலுக்கு இறைவனுடைய ஆற்றல் கடுகளவு கூட கிடையாது என்றே நாம் நம்புகிறோம். மாறாக தஜ்ஜால் மூலம் இறைவன் எதை வெளிப்படுத்த வேண்டும் என்று இறைவன் நாடிவிட்டானோ அவற்றை மட்டுமே அவன் மூலம் இறைவன் வெளிப்படுத்துவான்.

ஒரு குழந்தை உயரமான மாடியிலிருந்து விழுந்து உயிர் பிழைத்து விட்டால் அதனை நாம் அந்தக் குழந்தையின் ஆற்றல் என்று கூறமாட்டோம். மாறாக அந்தக் குழந்தையில் இறைவன் வெளிப்படுத்திய அற்புதம் என்றே நாம் நம்புவோம். இது போன்றுதான் தஜ்ஜாலை நாம் நம்பிக்கை கொள்வதும்.

தஜ்ஜால் இறைவனைப் போன்று அற்புதங்களைச் செய்வான் என்று ஒருவன் நம்பினால், அல்லது தஜ்ஜாலுக்கு இறைவன் அற்புதம் செய்யும் ஆற்றலை இறைவன் வழங்கி விட்டான் என்று ஒருவன் நம்பினால் அதுவும் இணைகற்பிக்கும் நம்பிக்கையே.

ஆனால் சூனியத்தை நம்புபவர்கள் “சூனியத்தினால் அல்லாஹ்வைப் போன்று பாதிப்பு ஏற்படுத்தும் சக்தியை இறைவன் நாடினால் வழங்குவான்” என்றே நம்புகின்றனர். அல்லாஹ் தன்னைப் போன்ற ஆற்றலை யாருக்கும் வழங்கமாட்டான். என்பதே தவ்ஹீத் கொள்கை.

அல்லாஹ்வைப் போன்று சூனியக்காரன் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் நாடுவான் என்பது இணைவைப்புக் கொள்கை. எனவே தஜ்ஜால் தொடர்பான நம்பிக்கையும், சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஒன்றல்ல . இரண்டிற்கும் வானத்திற்கும், பூமிக்கும், மலைக்கும் மடுவிற்கும் அளவிலான வித்தியாசம் உள்ளது.

எனவே சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவதே குர்ஆனுக்கு எதிரான நம்பிக்கையாகும். குர்ஆனுடைய கருத்தை வலுப்படுத்தும் வகையில் மேற்கண்ட நபிமொழிக்கு விளக்கம் கொடுப்பதே சரியான கொள்கையாகும். எனவே சூனியம் செய்வது கூடும் என்று நம்புபவனும், சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புபவனும் சுவனம் புகமாட்டார்கள் என்பதையே மேற்கண்ட நபிமொழி கூறுகிறது.