Tamil Bayan Points

06) சாகாவரம் பெற்றவர்

நூல்கள்: இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்

Last Updated on April 25, 2023 by

5. சாகாவரம் பெற்றவர்

“ஐனுல் ஹயாத்” என்று ஒரு நீருற்று உண்டு. அதில் சிறிதளவு நீர் அருந்தியவர் கியாமத் நாள் வரை உயிருடன் இருப்பார். அதை ஹில்று (அலை) அவர்கள் அருந்தும் பேறு பெற்றார்கள். அதனால் இன்றளவும் உயிருடன் உள்ளார்கள்.

ஆண்டு தோறும் ஹில்று (அலை) அவர்கள் ஹஜ்ஜுச் செய்ய வருகின்றார்கள். எவருடைய ஹஜ்ஜு அங்கீகரிக்கப்படுமோ அவருடன் முஸாபஹா (கைலாகு) கொடுக்கிறார்கள்.

ஹில்று (அலை) அவர்கள் கடற்கரையில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். கடலில் ஏற்படுகின்ற துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அவரிடம் விடப்பட்டுள்ளது.

வலி என்ற பட்டத்தை அல்லாஹ் ஒருவருக்கு வழங்க நாடினால், ஹில்ரு (அலை) அவர்கள் மூலமாகவே அதனை அளிக்கின்றான்.

மேற்கூறிய கதைகள் உலமாக்களில் பலரால் கூறப்படுபவை. மக்களிடம் மிகவும் ஆழமாக வேரூன்றியவை. இது போல் இன்னும் ஏராளமான கதைகளும் ஹில்று (அலை) அவர்கள் பெயரால் உலா வரலாம். இப்படிக் கூறப்படும் எல்லாக் கதைகளும், “ஹில்று (அலை) அவர்கள் இன்றளவும் உயிருடன் உள்ளனர்” என்ற நம்பிக்கையில் தோற்றுவிக்கப்பட்டவைகளாகும்.

ஹில்று (அலை) அவர்கள் இன்றளவும் உயிருடன் இருக்கின்றார்களா? என்று குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நாம் ஆராய முற்படும் போது குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும் கிடையாது. அவர்கள் இன்றளவும் உயிருடனிருக்க முடியாது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருக்கக் கூடியவர்களா?

(திருக்குர்ஆன் 21:34)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எவருக்கும் நிரந்தரமாக இந்த உலகில் வாழ்கின்ற உரிமையைத் தரவில்லை என்று மனிதனைப் படைத்த அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த எவரும் நிரந்தரமாக இருக்க முடியாது என்று தெளிவாகின்றது.

இந்தப் பொது விதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அது பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

“ஹில்று (அலை) இன்னும் உயிருடனே வாழ்ந்து வருகின்றனர்” என்பது மேற்கூறிய குர்ஆன் வசனத்துக்கு முரணானது. ஈஸா (அலை) மட்டுமே குர்ஆன், ஹதீஸ் மூலம் இந்த விதியில் இருந்து தற்காலிகமாக விலக்குப் பெறுகின்றார்கள். “உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதி மொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.

(திருக்குர்ஆன் 3:81)

ஹில்று’ நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்படுகிறார்கள் என்றால் நபிமார்களிடம்

எடுக்கப்பட்ட உறுதி மொழியின் படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

நபிகள் நாயகத்தைத் தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும். பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இவ்வசனத்திருந்தும் ஹில்று’ நபி உயிருடன் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஹில்று (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உயிருடன் இருந்திருந்தால், கட்டாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து ஈமான் கொண்டிருக்க வேண்டும்.

இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு எண்ணற்ற சோதனைகள் வந்த போதும், பல போர்க்களங்களில் உயிரைப் பணயம் வைத்து சஹாபக்கள் போராடிய போதும், ஹில்று (அலை) அவர்கள் அந்தப் போராட்டங்களில் பங்கெடுத்திருக்க வேண்டும். இந்தச் சோதனையான காலங்களில் அவர் ஏன் சத்தியத்திற்குத் துணை செய்யவில்லை? உயிருடன் வாழ்ந்தும் அவர் இதனைச் செய்யத் தவறி இருந்தால் அவர் கடமை தவறியவராக ஆகின்றார். (அல்லாஹ் அப்படி நினைப்பதை விட்டும் காப்பானாக!)

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே “ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை” என்றால் “நமது காலத்தில் நிச்சயம் உயிருடன் இருக்க முடியாது” என்ற முடிவுக்கு நாம் உறுதியாக வர முடிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இஸ்லாமியச் சமூகத்தில் உட்பூசல்கள், கருத்து மோதல்கள் தோன்ற ஆரம்பித்தன. இன்றளவும் அந்த நிலை தொடர்கின்றது. உண்மையான இஸ்லாம் பெரும்பாலும் மறைக்கப்பட்டு உள்ளது.

ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இன்றளவும் இருந்தால், இந்த நிலையை மாற்ற அவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை? சரியான நபி வழியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஏன் ஓரணியில் மக்களைத் திரட்டவில்லை? எல்லா உலமாக்களையும் சந்தித்து அவர்களிடம் உண்மையைக் கூறி ஏன் ஒன்று படுத்தவில்லை? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நேரடியாக அவர்களுக்கு அவர் பக்க பலமாக இல்லாவிட்டாலும் அவர்களின் தீனுக்காவது துணை நின்றிருக்க வேண்டாமா?

தன்னை ஒரு நபி என்று வாதாடிக் கொண்டு “குலாம் அஹ்மத்” தோன்றி பல முஸ்லிம்களை வழி கெடுத்த போது ஏன் அவனிடம் வந்து வாதாடவில்லை?

இதில் எதனையும் ஹில்று (அலை) அவர்கள் செய்யவில்லை. உயிருடன் அவர் இந்த மண்ணுலகில் இருந்தால் இத்தனை காரியங்களையும் அவர் செய்வது அவர் மீது கட்டாயக் கடமை அல்லவா?

ஈஸா நபி அவர்கள் என்று இந்த மண்ணுக்கு வருவார்களோ அன்றே நபிகள் நாயகத்தின் உம்மத்தாகச் செயல்பட்டு எல்லாத் தீமைகளையும் களைவார்கள். ஒரு கொடியின் கீழ் அத்தனை மக்களையும் ஒன்று திரட்டுவார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்து விளங்கும் போது, இந்த மண்ணில் வாழ்ந்து வரும் ஹில்று (அலை) அவர்கள் இவற்றில் எந்த ஒன்றையும் செய்யவில்லையே! ஏன்? எனவே அவர்கள் நபிகள் நாயகம் காலத்திலேயே உயிருடன் இல்லை என்று தெரிகின்றது.

ஒரு நாள் இஷாத் தொழுகைக்குப் பின் சஹாபாக்களை நோக்கி “இன்று உயிருடன் உள்ள எவரும் இந்த பூமியில் நூறு

ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் இருக்க மாட்டார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 116, 564, 601

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹில்று (அலை) உயிருடன் இருந்ததாக வைத்துக் கொண்டாலும் “100 ஆண்டுகளுக்குப் பின் இன்றைக்கு இந்த மண்ணுலகில் வாழும் எவரும் இருக்க மாட்டார்கள்” என்ற நபி மொழி மூலம் நூறு ஆண்டுகளுக்குப் பின் ஹில்று (அலை) நிச்சயம் மரணித்தே இருக்க வேண்டும். இன்றளவும் நிச்சயம் அவர் உயிருடன் இருக்க முடியாது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று ஒரு போதும் பொய்யாகாது. ஹில்று (அலை) உயிருடன் இருப்பதாகக் கூறுவது முழுக்க முழுக்க கற்பனையேயன்றி வேறில்லை.

பல பெரியவர்களை ஹில்று (அலை) அவர்கள் சந்தித்துள்ளதாகக் கூறப்படுவதும், பல கப்ருகளை ஜியாரத் செய்ய வருவதாகக் கூறப்படுவதும் மேற்கூறிய அல்லாஹ்வின் திருவசனங்களுக்கும், நபிகள் நாயகத்தின் அமுத மொழிகளுக்கும் முரண்படுவதால், அவை யாவும் பச்சைப் பொய்களே.

எவன் இது போன்ற கதைகளைச் சொல்கிறானோ, அதனை நம்புகின்றானோ, அல்லாஹ்வின் திருவேதத்தையும், அவன் தூதரின் பொன் மொழிகளையும் நம்ப மறுத்தவனாகவே கருதப்படுவான்.

இமாம் புகாரி, இப்ராஹீம் அல்ஹர்பி, இப்னு ஜவ்ஸீ, காழீ முகம்மது பின் ஹுஸைன், அபூதாஹிர், இப்னு கஸீர் போன்ற பேரறிஞர்களும் ஹில்று (அலை) அவர்கள் மரணமடைந்து விட்டதாகவே கூறியுள்ளார்கள்.

இது போன்ற கற்பனைக் கதைகளை நம்புவதை விட்டு அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக.